Sunday, December 23, 2018

MARGAZHI VIRUNDHU



மார்கழி விருந்து    J.K. SIVAN 
மார்கழி 8ம் நாள் 

                      
                             தேவாதி தேவன்
இந்த வருஷ மார்கழி கொஞ்சம் மழை, நிறைய குளிர், அதிகமான நிகழ்ச்சிகள் என்று என்னை வீட்டிலேயே இருக்கவும் செய் கிறது. 

மார்கழி முப்பது நாள் விருந்தில் இன்று 8வது விருந்து: ஆச்சர்யமாக   2016 லிலும்  இந்த 8 வது நாள் 23.12.16 அன்று வந்தது.

வாழ்க்கையில் சில விஷயங்கள் அலுப்பு தட்டுவதில்லை. காரணம் மனம் தான். பிடித்ததையே பேசுகிறது, பாடுகிறது, நினைக்கிறது, பார்ப்பது. இது போலவே படிப்பதும் தான்.  ஏற்கனவே தெரிந்தது தானே, புதிதல்லவே என்று அப்போது நினைப்பதில்லை. ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்கள் இப்படிப்பட்டவை. எண்ணற்றோர் எத்தனையோ முறை, எத்தனை வருஷங்களாகவோ பக்தியோடு படித்திருக்கிறோம், பாடி இருக்கிறோம், இன்னும் அதில் படிக்க நிறைய இருக்கிறது என்பதை விட அறிந்து கொள்ளவேண்டியது அளவற்றதாக இருக்கிறது. காரணம் முப்பது பாசுரத்தில் மூன்று லோக விஷயங்களையும் அடைத்து வைத்திருக்கிறாள் அந்த சிறுமி ஆண்டாள்.

இன்றும், ஆமாம் இந்த மார்கழி 8 வது நாளும், ஆண்டாள் மற்ற சில பெண்களை துயிலெழுப்பிக்  கூட்டி சென்று பாவை நோன்பை வழக்கம் போல் தொடர்ந்தாள். அந்தச் சிறிய  ஆயர்பாடி கிராமத்தில் என்ன இருக்கிறது? ஒரு பக்கம் உயிர்நாடியாக ஓடும் யமுனை, ஊர்க்கோடியில் பெருமாள் கோயில், அதற்கு அருகாமையில் நந்தகோபன் வசிக்கும் பெரிய மாளிகை, நீண்ட வயல்கள், மரங்கள், செடி கொடிகள், அதை சுற்றிலும் கோபர்களின் மாளிகைகள், வீடுகள்,ஒரு சில வீதிகள், தூர தெரியும் காடு, அங்கே தான் யாரும் செல்வதில்லையே!

''என்னடி இது, ஆண்டாள் வந்து எழுப்பினால் தான் நோன்புக்கு வருவது என்று ஒரு வழக்கமாகி விட்டது  இந்த பெண்களுக்கு. நாம வந்து கதவை தட்டி எழுப்பினா தான் வருவார்கள் போலிருக்கிறது" என்று ஒரு சிறுமி பரிந்து பேசினாள்

''அதனால் என்ன, வாங்க போய் எழுப்புவோம் அவர்களை எல்லாம்'' என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தாள் ஆண்டாள்

''எழுந்திருங்கள், உள்ளேயிருக்கும் எருமைகளே !! கிழக்கே வெளுத்தாகி விட்டது. வெளிச்சம் வந்ததாலே வெளியிலே கறவை எருமை எல்லாம் கூட நிதானமாக அசைந்து மேச்சலுக்கு வந்துவிட்டனவே. . சிலது காத்திருக்கிறது. எங்களைப் போல!! நாம் எல்லோரும் விரதமிருந்து அந்த கிருஷ்ணனை, சாணுரன் என்ற மல்லனை வாய் பிளந்து கொன்றவனை, தேவாதி தேவனை எவ்வளவு போற்றினாலும் மேலும் மேலும் புகழ்ந்து பாட வைக்கிறவனை பூஜிப்போம். எழுந்து வாருங்களேன். 
நேரமாக
வில்லையா?''

ஆண்டாள் மற்ற சில பெண்களுக்காக அவர்கள் வீட்டு வாசலில் காத்திருக்கும் நேரத்தில் நாம் பொடி நடையாக நடந்தே 
ஆயர்பாடியிலிருந்து  நேராக  வில்லிபுத்தூர் வந்து விடுவோம்.

+++

வில்லிபுத்தூர் விஷ்ணு சித்தரின் ஆஸ்ரமத்தில் வழக்கம் போலவே வாயிலில் பெரிய கோலம் போட்டு வைத்திருக்கிறாள் கோதை. அதன் அருகே மான் விழியோடு ஒரு இளம் பொன்னிற பசுங் கன்றுக்குட்டி ''அம்மா'' என்று நின்ற வாறே  குரல் கொடுத்தவாறே தனது அம்மாவைத் தேடுகிறது. ஆயர்பாடியில் எருமையும் இங்கே பசுவுமா? ''பலே பலே'' நல்ல காம்பினேஷன் (COMBINATION) இல்லையா.

உள்ளே விஷ்ணு சித்தர் முகம் அந்த சிறிய அகல் எண்ணெய் விளக்கொளியிலும் மலர்ந்து காண்கிறதே. தலை ஆடுகிறதே அவ்வளவு சுகமாக ரசிக்கிறார், அன்று அவர் மகள் கோதை எழுதிய பாசுரத்தின் அர்த்தத்தையும் அவள் பாடும் இனிமையும் சேர்த்தே.

ஆயர்பாடி ஆண்டாளின் துயிலெழுப்பலை வில்லிப்புத்தூர் கோதை பல ஆயிரம் வருஷங்கள் கழித்து எப்படி யூகித்து பாசுரமாய் எழுதினாள் என்று யோசிக்கவே ஆச்சர்யமாக இருக்கிறதே! எவ்வளவு அழகாக அந்த கண்ணனின் வீரத்தை, அவன் சாணூரனை வதம் செய்த காட்சியை மனதில் கொண்டு போற்றி, அந்த சிறுமியரின் நோன்பு சிறப்பாக நடைபெற மாதவனைப் போற்றி பாட அழைக்கிறாள். இதோ அந்தப்பாடல்.

''கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண்; மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய
பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.''

விஷ்ணு சித்தர் இந்த பாடலைத் தானே படித்து மகிழ்ந்து அதன் உள்ளர்த்தத்தை அழகாக புரிந்து புளகாங்கித மடைகிறார்:

ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமானால் இதைவிட பரமனிடம் சரணாகதி அடைவதைப்பற்றி யாரும் சுருக்கமாக சொல்லமுடியாது. ''தூக்கத்தை விட்டு எழுந்திரு'' என்பதே உலக மாயையிலிருந்து விடுபடு, பரமனடி பாடு. மோக்ஷம் பெறு என்கிற விஷயம் தான். 'வெளிச்சம் வந்துவிட்டது' என்பதே உன்னை நீ புரிந்துகொண்டாய் என்று பொருள் கொள்ளலாம். இருட்டு என்பதே இந்த பாசுரங்களில் அஞ்ஞானம் தான். கிழக்கே வெளுத்தது என்பது பனியைப்போக்கும் சூர்யன்.
மாயையிலிருந்து நம்மை நீக்கும் கண்ணன் பாதங்களின் சுடரொளி, ஆஹா பிரமாதம். அந்த பாடலை மனதிற்குள் தானே அசை போட்டு ரசித்தவாறு அவர் பூக்குடலையைத் தேடினார். விடிந்துவிட்டதே. நந்தவனத் திற்கு சென்று புத்தம் புதிய வண்ண வண்ண மலர்களை பறித்து, ரங்கனுக்கு மாலை தயாராக வேண்டுமே! கோதையின் பாமாலையோடு கோவிந்தனுக்கு பூமாலையும் சூட்டவேண்டுமே!.

இந்த பாசுரத்தை என்னுடைய வாழ்நாளில் இதுவரை எண்ணிலடங்காமல் MLV குரலில் தன்யாசியில் செவியுற்று மகிழ்ந்து வருகிறேன். இன்னும் நிறைய கேட்பேன் இருக்கும் வரை. சந்நியாசி போல்  எல்லா ஆசையை விட்டாலும் தன்யாசி மேல் உள்ள ஆசை மட்டும்  என்னை விடவே இல்லை.  இது  தான் அந்த லிஙக் :   https://youtu.be/T7DWKTNoWzc


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...