Wednesday, December 5, 2018

PESUM DEIVAM

PESUM DEIVAM:

  தாயும் சேயும்   J.K. SIVAN 

நான் கம்பனை, ஒளவையை, காளமேகத்தை எழுதும்போது தமிழறிஞன் இல்லை. சங்கரரை சுவாமி தேசிகனை ராகவேந்திரரை எழுதும்போது மகா பெரிய பக்தனும் அல்ல, மேதாவி  அல்ல, மகா பெரியவா பற்றி எழுதும்போது  நான் நேரில் கண்ட காட்சியை எழுதவில்லை...எல்லாம் அறிந்தது தெரிந்தது தான். எத்தனையோ பெரியவர்கள், மஹான்கள், அறிஞர்கள் சொன்னதை ரசித்து ஏதோ உங்களிடமும் கொஞ்சம் முடிந்தவரை பரிமாறிக்கொள்பவன்.  
இதுவும்  அப்படியே.

ஒரு  வைதிக ஏழை  பிராமணன், எளிய  திருப்தியான வாழ்க்கை. கோயில் திருப்பணிகளில் ரொம்ப ஈடுபாடு.  தன் கிராமத்திலுள்ள பிள்ளையார் கோவில், சிவன் கோவில், மாரியம்மன் கோவில் எல்லாவற்றுக்கும் அரும்பாடு பட்டுத் திருப்பணிகள் செய்தார்.பெரிய தொகை நன்கொடை கொடுப்பவர்கள் கூட, அவரிடமிருந்து ரசீது எதிர்பார்க்கமட்டார்கள். அவ்வளவு சுத்தம். அவருடைய சேவையை அண்டை கிராமத்திலும் திருதியாக தொடர்ந்தது. 

ஒரு வயற்காட்டில் ஒரு பழைய கால சிவன் லிங்க ரூபத்தில்  தன்னந் தனியாக வெயிலில் காய்ந்து, குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார். இந்த வைதிகர் முயற்சியால் இப்போது அவர் மேல் ஒரு கூரை.    இப்படி எத்தனையோ கோயில்கள் உருவானது..

பெருமைக்கு பேருக்கு ஆசைப்படாத அந்த வைதிகர் எந்தக் கும்பாபிஷேகத்திலும்  முன்னால்  போய் நின்றதில்லை.  எங்கோ  கூட்டத்தில்  கும்பலில் ஒரு மூலையில் ஒண்டிக் கொண்டு நிற்பார்!  இப்படிப்பட்டவர்களை  ஊர் உலகம் தெரிந்துகொள்ளாவிட்டாலும்  மகா பெரியவாளுக்கு  ரொம்ப ரொம்ப நன்றாகத் தெரியும்.  அது தான்  மகா பெரியவா!

அந்த வைதிகர் அடிக்கடி காஞ்சி   மடம்  வருபவர் அல்லர்.  அவருக்கு  ஏது  நேரம்.?  பார்த்தால்  திருநாவுக்கரசர் மாதிரி எப்போதும் ஆலய உழவாரப்பணி.  எப்படியோ  கைக்கடக்கமான  சில  பையன்களை சேர்த்துக்கொண்டு  கோபுரங்களில் திருப்பணி  வேலை.  யாரையும் அவருக்கு உதாரணமாக சொல்ல தெரியவில்லை.

ஒருதடவை  காஞ்சி மடத்தில் பெரியவா தரிசனம்.   நமஸ்காரம் பண்ணிவிட்டு  தூரமாக ஓரமாக நின்றார்.  பெரியவா அவரை ஒன்றுமே கேட்கவில்லை. பேசவும் இல்லை. மற்றவர்களிடம் அவ்வப்போது பேசினார்.  வைதிகர்  ஓரமாக கை கட்டிக்கொண்டு  பெரியவாளை திவ்யமாக தரிசனம் செய்து கொண்டிருந்தார்.

ஒரு பணக்காரத் தம்பதி  பக்தர்கள் வந்து நமஸ்காரம் பண்ணபோது  பெரியவா  பக்கத்திலிருந்த  மட நிர்வாகி தொண்டர் கிட்ட  என்ன சொன்னாரோ,  அவர் ஓடிப்போய் ஒரு  ஒஸ்தியான சால்வையை தட்டில்  கொண்டு வைத்தார்.

பெரியவா அந்த பணக்கார பக்தரை  அருகில் அழைத்து, ''இந்த சால்வையை அதோ ஓரமாக நிற்கிறார் அந்த பெரியவருக்கு போடுங்கோ'' என்கிறார்.  எல்லோர் கவனமும்  கண்களும் ஆச்சர்யமாக  ஓரத்தில் எங்கோ நின்றுகொண்டிருந்த வைதிகர் மேல் பாய்ந்தது.
யார் இவர்? பெரிய பண்டிதரா? யாகம் செய்தவரா? மகா பெரியவா கவனித்துவிட்டு  மரியாதை பண்ணுகிறாரென்றால் ஏதோ ரொம்ப பெரிய காரியம் செய்தவராக செய்பவராக இருக்கவேண்டும்.

“இவரைப் பார்த்திருக்கிறாயோ?”-   பெரியவா  பணக்காரரிடம்.
“இல்லை பெரியவா''
“இவர் அட்ரஸ் தெரியுமோ?”
“தெரியாது”
“எனக்குத் தெரியும்! சொல்லட்டுமா?”
“சாஸ்திரிகள் கேர் ஆஃப் ! (c /o ) 
சிவன் கோயில் . இவர் பெரிய Builder. என்ன? பல சிவன்களுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்..!”

பக்தர்கள் கூட்டம் நெகிழ்ந்து உருகியது. ஒரு பத்திரிகையில் கூட இவர் புகைப்படத்தைப் பார்த்ததில்லையே…
“இவர் சிவப்பழம்… பிரசாதத்தோட நெறய்ய பழங்கள் கொடு…”
அறிமுகமே இல்லாத இவர், தூய சிவப்பணியாளர் என்பது, பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?
அது எந்தவகை ஸித்தி?   எவ்வளவு பெரிய கும்பலாக இருந்தாலும் நிறைய ஆயிரக்கணக்காக குழந்தைகள் இருந்தாலும்  தாய்க்கு  தனது குழந்தையின் அடையாளம் தெரியாமலா போகும். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...