Sunday, December 30, 2018

RAMANUJAR



சரித்திரம் காணாத இணையற்ற ஆசார்யனும் சிஷ்யனும் - J.K. SIVAN

ரொம்ப கஷ்டமான காலத்தில் யாராவது ஒரு மஹானை பூமிக்கு அனுப்புகிறார் காக்கும் கடவுள். நாடெங்கும் வெள்ளைக்காரர்கள் சக்தி கொண்ட ஒரு தீமையாக வளர்ந்து விட்டனர். நமது கலாச்சாரம் துண்டிக்கப்பட்டது. கறை படிந்தது. சம்பிரதாய விரோத காரியங்களை ஆதரிக்க தொடங்கிவிட்டோம். சரியான ஒரு தலைவரோ, ஆச்சர்யரோ நம்மை வழிநடத்த இல்லையே. நாடு இஸ்லாமியர்கள் வசம் பரம்பரை பரம்பரையாக வடக்கே கொடூரங்களை தொடர்ந்து புரிந்து வந்தது.ஆலயங்கள், விக்ரஹங்கள், வழிபாடு, எல்லாமே மதவெறியால் சிதைந்து ரத்த வெள்ளம் பெருகி ஓடியது. டில்லி சுல்தானுக்கு ஐந்து கிளை அதிகாரிகள். பேரார் , பீடார், கோல்கொண்டா, பீஜப்பூர் அஹ்மத்நகர் என்று குட்டி சுல்தான்கள். தர்ம நியாயம் காற்றில் பறந்தது. ஷெர்ஷா சூரி மொகலாய சாம்ராஜ்யத்தை ஆண்ட காலம். வேத சாஸ்திரங்கள் பாதுகாப்பின்றி தடுமாறின போது தான் இனியும் தாங்காது என்று பரந்தாமன் தனது ஆதிசேஷனை நீ போய் நம் பக்தர்களை வழி நடத்து என்று அனுப்பினான். 11ம் நூற்றாண்டு. ஆதிசேஷன் த்ரேதா யுகத்தில் ராமனுக்கு கைங்கர்ய ஸ்ரீமானாக சேவை செய்ய லக்ஷ்மணனாக அவதரித்த பின் சற்று ஒய்வு பெற்று மீண்டும் ராமானுஜனாக பூமியில் ஸ்ரீ பெரும்புத்தூரில் பிறந்தான். ஒரு 120 வருஷ காலம் அசாத்திய சேவை செய்து ஸ்ரீ வைஷ்ணவத்தை பலப்படுத்தினார். இன்னும் அது தாங்குகிறது. ராமானுஜர் யார்? வேதாந்தி என்பதா? கவிஞரா? சமூக சீர்திருத்தவாதியா? தத்துவ சித்தாந்த விற்பன்னரா? அல்லது வெறுமே விஷ்ணு பக்தரா? வைணவ ஆலய நிர்வாகியா? ஆன்மீக ஆச்சார்யனா? ஒரே பதில் தான் கேள்விகளுக்கும். ஆமாம் ஆதிசேஷனுக்கு ஆயிரம் தலைகள் இல்லையா. மேலே சொன்ன எல்லாவற்றையும் தன்னிடத்தே கொண்ட விந்தையான ஒரு அபூர்வ உதாரண புருஷன். இதற்கு முன்பும், இனியும் இணை சொல்லமுடியாத ஒரு மனித தெய்வம். உயிரையே பணயம் வைத்து உலக நன்மைக்காக உழைத்த தயா பாத்திரம். எதிர்ப்புகளிலேயே வளர்ந்த எத்திராஜர். விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை புகட்டிய உடையவர். ஆயிரம் தலை அரவம் அல்லவா, அனைவரையும் அன்பாலே அரவணைத்து வழிநடத்திய எம்பெருமானார்.

''இராமாயண காலத்தில் எனக்கு கைங்கர்ய ஸ்ரீமான் நீ லக்ஷ்மணா. ஆகவே அந்த கடன் தீர்க்கப்படாமல் இருக்கிறதே. ஆகவே நான் உனக்கு வலது கையாக பூமியில் உனக்கு சேவை செய்தால் தான் எனக்கு திருப்தி ஏற்படும்'' என்று ராமானுஜருக்கு பிரதம சிஷ்யனாக கூரத்தில் கூரத்தாழ்வானாக அவதரித்து ராமன் ராமானுஜருக்கு சேவை செய்து த்ரேதா யுக கடனை கலியுகத்தில் தீர்த்தான் கமலக்கண்ணன். ராமானுஜரும் கூரத்தாழ்வாரும் ஸ்ரீவைணவத்தை உயர்ச்சி பெற செய்வதை எழுதி மாளாது.

நேரம் வந்து விட்டது . இனி இருவரும் பிரிய வேண்டும்.
கண்ணற்ற கூரத்தாழ்வான் அரங்கன் முன் நிற்கிறார்.

''என்ன கூரேசா என்னிடம் ஏதாவது சொல்ல விருப்பமா, உன்னிடம் தயக்கம் காண்கிறேனே ''

'''அரங்கா, குறையொன்றுமில்லை கோவிந்தா. உன் நினைவில் இன்பம் துய்க்கிறேன். ஏதோ உன் எதிரில் சற்று அதிகமான நேரம் நிற்க தோன்றியது. பார்க்க முடியவில்லை, உன்னை ஆனந்தமாக சுவாசிக்கிறேன். சில பிரபந்தங்களை நா மணக்க உச்சரிக்க எண்ணம்.''

''ரொம்ப சந்தோஷம் கூரேச. சரி என்னிடம் ஏதாவது கேளேன்?''

''அரங்கா தீராத விளையாட்டு பிள்ளை நீ. நான் தான் சொன்னேனே எனக்கு ஒரு குறையும் இல்லை என்று.. உன்னிடம் எனக்கு கேட்க ஒன்றுமில்லையே''

'' ஓஹோ அப்படியா, சரி உனக்கு இல்லையென்றால் உன் அருமையான குரு ராமானுஜனுக்காவது ஏதாவது கேளேன்.''

“ ஒரு ஆசை திடீரென்று வந்து விட்டது ரங்கா. என்னை இந்த உடலிலிருந்து விடுவிக்கிறாயா? உன் தாமரைத் திருவடிகளைச் சேர உதவுகிறாயா?''

'' அது முடியாது கூரேசா. வேறு ஏதாவது கேள் ''

''வேறு ஒன்றும் தோன்றவில்லையே அரங்கா''
..............
சற்று மௌனத்திற்கு பிறகு அரங்கன் பேசினான்

''கூரேசா, உன் விருப்பத்தை பூர்த்தி பண்ணுகிறேன். ஒரு வரம் தருகிறேன். உன்னையும் உன்னை சார்ந்தவர்களையும் என்னோடு வைகுண்டத்தில் சேர்த்துக் கொள்கிறேன். இப்போது திருப்தியா'?'.

'' ஆஹா ப்ரபோ ஸ்ரீ ரங்கநாதா இதைவிட பெரும் பாக்யம் எது?''

ரங்கனுக்கும் கூரேசனுக்கும் நடந்த சம்பாஷணை ராமானுஜர் செவிக்கெட்டியது. சந்தோஷத்தில் கூத்தாடினார். தனது காவி மேல் அங்கவஸ்திரத்தை ஆனந்தத்தில் மேலே தூக்கி வீசினார். அவரருகே இருந்த ஒரு பக்தர் '' சுவாமி என்ன சந்தோஷம் அப்படி உங்களுக்கு ?''

''என் குழந்தை கூரேசனோடு சம்பந்தப்பட்டதால் எனக்கு வைகுண்டம் காத்திருக்க நான் என்ன புண்யம் செய்தேன் கிடைக்காது என்று சந்தேகம் இருந்தது. என் குரு திருக்கோட்டியூர் நம்பி அவரது வாக்கை மீறியதால் நரகம் செல்வேன் என்று சொன்னது என்னை இதுகாறும் உறுத்திக் கொண்டிருந்ததே.''

ராமானுஜர் கூரேசனை காண ஓடினார். மனதார அணைத்துக் கொண்டார்.

''ஆமாம், கூரேசா, நான் உன் குரு அல்லவா, என்னைக் கேட்காமல் நீ ஏன் எனக்கு முன்னால் உலகைத் துறக்க முடிவு செய்தாய்''

''குருநாதா, அது தான் முறை என்று தான் ரங்கநாதனை அவ்வாறு கேட்டேன்''

''எதற்காக?''

''பெரியவர் குருநாதன் உங்களை வரவேற்க சிறியவன், சீடன் நான் முன்பே சென்று உங்களை தக்க மரியாதையோடு வணங்கி வைகுண்டத்தில் வரவேற்க வேண்டாமா?

ராமானுஜரின் ஆனந்த கண்ணீர் கூரேசனின் பதிலை ஏற்றுக் கொண்டது. கூரேசன் குருவின் பாத கமலத்தை வணங்கினார் தனது புத்திரன் பராசர பட்டரை ஆச்சர்யன் பாதங்களை வணங்க செய்து இனி எனக்கு பதிலாக நீ ஆ்சார்யனுக்கு துணையாக நின்று சேவை செய்'' என உத்தரவிட்டார். மனைவி ஆண்டாளை அழைத்து '' ஆண்டாளு நீ என்ன சொல்கிறாய்? என வினவ ''நான் உங்களை தொடர்வேன் நாதா'' என்றாள் அந்த அம்மை. மெதுவாக அமர்ந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதன் ஆலயத்தை நோக்கியவாறு மெதுவாக சாய்ந்து பிள்ளை பிள்ளை ஆழ்வான் மடியில் சாய்ந்து கால்களை மனைவி ஆண்டாளுவின் மடியில் கிடத்தியவாறு கூரேசன் தனது ஆசார்யனின் ஆசார்யனான யமுனாச்சார்யரின் திருவடிகளை போற்றியவாறு ஒரு நீண்ட பெருமூச்சு அவரை பூலோகத்திலிருந்து பிரித்தது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...