Saturday, December 22, 2018

MARGAZHI VIRUNDHU



மார்கழி விருந்து    J.K. SIVAN 

மார்கழி 7வது நாள்

            'நாராயணன் மூர்த்தி கேசவன்''

''கோதை கோதை, எங்கேம்மா இருக்கே நீ?''

''இதோ வந்துட்டேன் பா,''

''என்ன பண்ணிண்டு இருக்கே''

''ஒரு புது ரோஜா மொட்டு இன்று காலை மலர்ந்திருக்கிறதே. அதோடு பேசிக்கொண்டிருந்தேன். அதற்கு ரங்கம்மா என்று பேர் வைத்தேன்''.

முகத்தில் சந்தோஷத்தோடு உள்ளே நுழைந்தாள் கோதை. இன்று மழையில்லை, அவ்வளவாக குளிரும் தெரியவில்லை. காற்று சக்தி குறைந்து வீசியதில் அதிக குளிரை தன்னோடு தூக்கி வந்து வீசவில்லை.   நந்தவனத்தில் என்றுமில்லாத அளவுக்கு குண்டு மல்லிகை நிறையவே பூத்திருந்து மணத்தை வாரித் தெளித்தது. கோதை கை நிறைய மல்லிகை
அடர்த்தியாக தொடுத்து ரங்கனுக்கு மாலை தயார். .

''இன்னிக்கி மார்கழி 7வது நாளாச்சே. அந்த கிருஷ்ணன் மேல் என்னம்மா பாடப்போறே?''

அன்று  அதி காலையிலேயே   கோதையின் அருகில் வந்து அமர்ந்துகொண்டு விட்டார் விஷ்ணுசித்தர். அவர் கை அவரது செல்லப்பெண், அந்த புண்யவதி, கோதையின் சிரத்தை தடவிக்கொடுத்தது.   நந்தவனத்திலிருந்து வந்த கோதையின் மேனியிலிருந்து ஒட்டிக்கொண்டு வந்த மல்லிகை மணம் ஆஸ்ரமம் பூரா வீசியது.

''இதோ பாருங்கள் அப்பா. உங்களால் படிக்க முடியாது. நெருக்கி நெருக்கி  ஓலைச்சுவடியில் எழுதியிருக்கிறேன். நானே படிக்கிறேன். அப்பறமா அதை பாடுகிறேன்''.

ஓலைச்சுவடியை வாங்கிப் பார்த்து   விட்டு திருப்பிக்கொடுத்துக்கொண்டே  தலையாட்டினார் சித்தர். பாசுரத்தை வார்த்தை வார்த்தையாக கோதை வாசித்தாள். பிறகு அதை ராகமாக பாடினாள் .

""கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய்! திற ஏல் ஓர் எம்பாவாய்.''

கண்களை மூடிக்கொண்டு இந்த பாவைப்பாடலில் வரும் காட்சியை ஆயர்பாடியில் மனக்கண்ணால் கண்டு களித்தார் பெரியாழ்வார் என்று பின்னால் உலகம் போற்றப்போகின்ற விஷ்ணு சித்தர்.

இவர்களை அப்படியே விட்டுவிட்டு ஆயர்பாடி சென்று அங்கே நடப்பதை   நாம் பார்க்கவேண்டாமா?

++

பொழுது விடிந்து விட்டதே. ஆண்டாள் தான் வேக வேகமாக வருகிறாள். தோழிகளைத் தேடுகிறாள்.

''அதற்குள், இன்னியோடு மார்கழி 7 நாள் ஆயிட்டுதே!! இன்னிக்கும் நாம போய் கதவை தட்டினால் தான் இந்த பெண்கள் எழுந்திருப்பார்களோ ! சரி வீடு வீடாக ஏறி கதவைத் தட்டுவோம் ''

"ஏ பெண்களே எழுந்து வாருங்களடி சீக்கிரமாக . மரத்திலே எல்லா பட்சிகளின் கானம்,வண்டுகளின் கீச் கீச் சத்தம் காதைப் பிளக்கிறதே.    நம் கிராம எல்லா வீட்டிலேயும் கை வளை குலுங்க சர் சர் னு  
 கோபியர்கள்  கயிற்றை மத்தில்  கட்டி தயிர் கடைகின்ற சத்தமோ எதுவுமே உங்கள் காதிலே விழவில்லையா?   டமாரங்களா !   வாருங்களடி அழகிகளா, வழக்கம் போல நாராயணன் பெருமை பாடுவோம், எழுந்திருங்கள் , கதவைச்  சீக்கிரம் திறவுங்கள். சீக்கிரம் “ ஆண்டாள் சிறந்த பொறுப்பான தலைவி அல்லவா. நோன்புக்கு ஆள் சேர்க்கிறாள்.......
+
வில்லிப்புத்தூரில் ...பாசுரமும் அதன் காட்சியும் கோதையின் குரலில் தேனினிக்கும் பாடலாக வெளிவந்து முடிந்தது.

''அப்பா அப்பா '' 


கோதையின் குரல் சித்தருக்குக் காதில் நுழையவில்லை. கண்ணை மூடி ரங்கனின் சிலை முன்னே அமர்ந்திருக்கிறார். அவர் தான் ஆயர்பாடியில் வீடு வீடாக போய் ஆண்டாளோடு சேர்ந்துகொண்டு மனதளவில் ஒவ்வொருவீடாக சென்று கதவைத் தட்டுகிறாரே .

நேரம் நழுவியது. கண் திறந்த விஷ்ணுசித்தர் கோதையை கண்ணாரக் கண்டு இரு கை தூக்கி வாழ்த்தினார். அமைதி நிலவும் அந்த விடியற்போதிலே விஷ்ணு சித்தர் வெளியே சென்று அன்று மலர்ந்த அந்த ரோஜா செடியின் எதிரே கைகட்டி யோசிக்கிறார். பாசுரத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று அலசுகிறார்.

''கிருஷ்ணனை துதிக்க எல்லாப் பெண்களையும் எழுப்புகிறாள் ஆண்டாள்.
''எதுக்குடி ஆண்டாள் இவ்வளவு சீக்ரம் எழுப்பறே. ஒரு பெண் புலம்புகிறாள்
'ஏய் எழுந்திருடி, வெளிச்சமே வந்துட்டுது. வலியன் குருவி கீச் கீச் என்று கத்தறதே கேக்கலையா உனக்கு. ஆகாரம் தேட கிளம்பிட்டுதே. 
பகவானைக்காட்டிலும் பாகவதர்கள், பக்தர்கள் உயர்ந்தவர்கள். நமது கிராம ஆய்ச்சியர் தயிர் கடைய ஆரம்பி விட்டார்களே.  எல்லோருடைய கை வளை, மத்து சத்தம், தலையை அசைக்கும்போது கழுத்தில் மணி மாலைகள் அசைகின்ற சத்தம் எல்லாம் ஒண்ணாக சேர்ந்து வினோதமாக  ஒலிக்கலவையாக  கேட்கலையா உங்களுக்கு . வெண்ணை வாசனை மூக்கை துளைக்கவில்லையா. இவ்வளவு பாலும் வெண்ணையும் எப்படி சேர்கிறது தெரியுமா. அந்த மாயக்கண்ணன் ஆயர்பாடி வந்ததிலிருந்து பசுக்களுக்கு  ஏக போக கொண்டாட்டம். மடி நிறைய பால் சொரிந்து தருகின்றன . அது சரி ஒரு விஷயம் சொல்றேன். கேளு. கேசின்னு ஒரு ராக்ஷசன் குதிரையா வந்து நம்ம கிருஷ்ணனை கொல்ல வந்தது தெரியுமா, நினைவிருக்கிறதா? பாவம் அந்த முட்டாள் ராக்ஷசன்.      யாரைக் கொல்லவந்தானோ அவனிடமே தன்  உயிரை விட்டான். நம்முடைய கிருஷ்ணன் கையால் மரணம் சம்பவிக்கவும் கொடுத்து வைத்திருக்க வேண்டாமா?''

"அப்படியா'' என்று குதித்து எழுந்தாள் ஒரு ஆயர்குலச் சிறுமி.
''அப்பறம்?''
''எழுந்து யமுனைக்கு வா. மீதியை அங்கு சொல்றேன்'' --- ஆண்டாள்..

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...