Friday, December 14, 2018

PESUM DEIVAM



பேசும் தெய்வம் J.K. SIVAN

காப்பு கட்டின லம்பாடி

வாயு பகவானாக தூர இருந்தாலும், தென்றலாக வந்து மகிழ்வித்தாலும் நன்றி சொல்லலாம். அவர் முழங்கால், வயிறு பகுதிகளில் குடி கொண்டால் உபத்திரவம். முழங்கால் வாயுவானது அனுபவிக்கும் மனிதருக்கு மட்டும் துன்பம். தரும். வயிற்றில் கடபுடா பண்ணி வாயு பகவான் வெளியேறினால் பக்கத்தில் இருப்பவர்
களுக்கு ரொம்ப சங்கடம்...!

ஸ்ரீமடத்தில் அத்யாபகராக இருந்த ஸ்ரீ சந்திரமௌலி ஸ்ரௌதிகளுக்கு உடலில் திடீரென்று வாயுத்தொல்லை. பொறுப்புகளை விட்டுவிட்டுப் போகமுடியாத சூழ்நிலை. பெரியவாளையே தியானம் பண்ணிக் கொண்டிருந்துவிட்டு படுத்துக் கொண்டார்.

இரவு கனவில் ஒரு சந்நியாசி கையில் தண்டமில்லாமல் வந்தவர் "என்னுடன் வா" என்று ஸ்ரௌதிகளை அழைத்துக்கொண்டு, பெரியவா சிவாஸ்தானத்தில் வழக்கமாக தங்கும் இடத்துக்கு சென்று அங்கே விட்டு விட்டு, ஒரு இடுக்கு வழியாக போய் மறைந்து விட்டார். உள்ளே பெரியவா வெறும் துண்டு மட்டும் கட்டிக் கொண்டு படுத்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் வேறு சில சன்யாசிகள்.

பெரியவா சந்திரமௌளியைப் பார்த்ததும் 'இங்கே வா'' என்று கூப்பிட்டு ஒரு யந்திரத் தகட்டை குடுத்து படிக்கச்சொன்னார்.

''பெரியவா எனக்கு இந்த பாஷை தெரியாதே
'
''இப்போ பாரு என்று அதை அழித்து ஸம்ஸ்க்ருதத்தில் எழுத்துக்கள் வரும்படி பண்ணி '''இப்போ படி '' என்கிறார்

, ஓம் துர்காயை நமஹ"

"இதுதான் ஒனக்கு நான் செய்யற உபதேசம். இதையே ஜபம் பண்ணு" - பெரியவா.

கனவு கலைந்தது. சந்த்ரமௌளி ஸ்ரௌதிகளுக்கு முழிப்பு மட்டும் வரவில்லை. வியர்த்து கொட்டி உடல் நடுங்கியது.

மறுநாளிலிருந்து அந்த மந்த்ரத்தை விடாமல் ஜபம் பண்ண ஆரம்பித்து விட்டார். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தது. சில தினங்கள் ஆயின. மறுபடி ஒரு கனவு.

இந்த தடவை கனவில் வந்தது திரிசூலத்தை வைத்துக் கொண்டு ஒரு லம்பாடி மாதிரி வடக்கத்தி பெண் ஒருத்தி. அவளைப் பார்த்ததும் இவர் விடுவிடுவின்றி எங்கோ வேகமாக திரும்பி போகிறார். அவளும் விடவில்லை. அவர் போகுமிடமெல்லாம் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள். மௌளிக்கு பயத்தில் முழிப்பு வந்து விட்டது. யார் அவள்? அதற்கு என்ன அர்த்தம்?

ஸ்ரௌதிகள் மனதில் இந்த கேள்வி அரித்துக் கொண்டிருந்தது. ஒருநாள் கும்பகோணத் திலிருந்து வந்த ஸ்ரீவித்யா உபாசகரான தினகர சாஸ்த்ரிகளிடம் இதைப் பற்றி அர்த்தம் கேட்டார்.

"சந்திரமௌளி நீ கொடுத்து வைச்சவன்டா ... நான் பல வருஷங்களா ஜபம் பண்ணியும் எனக்கு துர்காம்பிகையோட தரிசனம் கெடைக்கலை....ஒனக்கு சாக்ஷாத் பெரியவாளோட அனுக்ரகம்தான். கனவுல வந்தது அம்பாளேதான்! அவ வேறே யாரும் இல்லை. துர்கா தேவியேதான்!" என்றார்.

காஞ்சிபுரம் காமாக்ஷி கோவில் த்வஜஸ்
தம்பத்தின் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு ஸ்ரௌதிகள்துர்க்கா மந்திரத்தை ஜபம் பண்ணிக்கொண்டிருந்தார். கோவில் அதிகாரி, காமகோடி சாஸ்த்ரிகளுக்கு அவரை தெரியும்.

''மௌளி , உள்ளே வாங்கோ. இங்கே உட்கார்ந்து பண்றதை, அம்பாள் சன்னதில வந்து ஜபம் பண்ணுங்கோ " என உள்ளே அழைத்துக் கொண்டு போனார். ஸ்ரௌதிகள் அங்கே அமர்ந்து கண்ணை மூடி ஜபித்தார்.

யார் பின்னால் வந்து எதையோ கழுத்தில் ஏதோ கட்டுவது? கண்ணைத் திறந்து பார்த்தால்........காமகோடி சாஸ்த்ரிகள் தன் கையில் கட்டியிருந்த காப்புக் கயிற்றை கழட்டி, "இன்னிக்கி காப்பு கட்டு பூர்த்தி நாள் ! அம்பாள் பிரசாதம்; நீ துர்க்கா ஜபம் பண்றியே. உன் கழுத்துல கட்டி விட்டுட்டேன்'' என்கிறார்.

மறுநாள் மௌலி காமகோடி சாஸ்த்ரிகளை பார்த்த போது,

''வாங்கோ உங்களோடு நேத்திக்கு பேசமுடியலே. ஜெபத்தில் இருந்தேன். என் கனவிலே பெரியவா வந்தா.... என்று எல்லாவற்றையும் ஆதியோடு அந்தமாக சொல்கிறார். நேற்றைக்கு நீங்கள் காமாட்சி சன்னதியில் காப்பு கவசம் கட்டினீர்கள் என்று கழுத்தில் காப்பை காட்டுகிறார் ''

காமகோடி சாஸ்திரிகள் திகைத்தார்.

''மௌளி என்ன சொல்றேள் நீங்க... நம்பவே முடியலே...நேத்திக்கு வந்தது யாரு? நானா? உங்களை வஜ ஸ்தம்பத்து கிட்டே இருந்து உள்ளே சன்னதிக்கு கூட்டிண்டு போனேனா ? என் கையில இருக்கற காப்பை கழட்டி ஒன் கழுத்துல கட்டி விட்டேனா? நான் அங்கே இல்லவே இல்லையே நேத்திக்கு. நீங்க சொல்றது நேக்கு ஒண்ணுமே தெரியாதேப்பா!"''

மௌலி கழுத்தில் காப்பு இருக்கிறதே! எப்படி பொய்யாக முடியும்? எப்படி கனவாக இருக்க முடியும்?

அப்படீன்னா. மௌளி சொல்றது மாதிரி நடந்திருந்தால் ......என்னை மாதிரி வந்து மௌளி கழுத்தில் துர்கா காப்பு கட்டினது யாரு?" காமகோடி சாஸ்த்ரிகள் நடுங்கினார்.. .நம் குருநாதரின் திருவாக்கிலிருந்து எது வருகிறதோ அதுவே ஸத்யம். அதுவே உபதேஸம். அது கனவோ, நனவோ ஸத்யம் ஸத்யமே! அம்பாள் ப்ரத்யக்ஷமாக அனுக்கிரஹம் பண்ணி இருக்கிறாள். கொடுத்து வைச்சவர் மௌளி . பெரியவா ஆசீர்வாதம் பரி பூர்ணமாக இருக்கு. பரிசுத்த ஆத்மா. கண்களில் ஆனந்த பாஷ்பம் . காமகோடி கரங்களை சிரத்துக்கு மேல் தூக்கி ''ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர '' என்றார் .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...