Tuesday, December 4, 2018

ORU ARPUDHA GNANI



ஒரு அற்புத ஞானி J.K SIVAN
சேஷாத்திரி ஸ்வாமிகள்

கண்ட விதேக யோகம்

என்னைப்போலவே எத்தனையோ பேருக்கு ஷீர்டி சாய் பாபா பற்றி ஒரு ஆச்சர்யமான விஷயம் தெரிந்திருக்கும். அவர் தங்கியிருந்த மசூதியில் மேலே ஊஞ்சல் மாதிரி ஒரு தொங்கும் சிறிய பலகையில் படுத்திருப்பார். ஆனால் நம்மைப் போல் கை கால்களோடு,தலையோடு முழுசாக இல்லை. அவர் இருந்த அந்த சிறிய அறையின் நாலா பக்கங்களிலும் அவரது கை, கால், தலை எல்லாம் மூலை மூலையாக சிதறி கீழே இருக்குமாம். எஞ்சிய உடல் மேலே தொங்கும் பலகையில். அறையில் எங்கும் அக்னி.

இது ஒரு வித யோகம். கண்ட விதேக யோகம் என்பார்களாம். போளூர் விடோபா ஸ்வாமிகளும் இப்படித்தான் படுப்பார். இது முக்கியமாக ரகசியமாக தான் நடக்கும். எங்கோ எப்போதோ சிலர் பார்த்துவிட்டு விஷயம் வெளியே வருமே தவிர ஒவ்வொருநாளும் படுக்கும்போது இப்படி அல்ல.

தெல்லாகுளம் வெங்கட்ராம செட்டியார், ஈயகுளத்தூர் ஸ்வாமிகள், மொளவ நாயக்கர் ஆகியவர்கள் விடோபா ஸ்வாமிகளின் பக்தர்கள். இவர்களை எல்லாம் பற்றி எவருக்காவது தெரிந்திருந்தால் முழு விவரமும் எனக்கு அனுப்புங்கள்.

போளூரில் விடோபா ஸ்வாமிகள் தங்கி இருந்த இடத்தில் அவரோடு சேர்ந்து மூன்று பக்தர்கள் ஒரு இரவில் படுத்துக் கொண்டிருந்தார்கள். நடு ராத்திரி மூவரில் யாரோ ஒருவர் எழுந்து அருகிலே பார்த்தபோது விடோபா ஸ்வாமிகளைக் காணோம். மற்றவர்களை எழுப்பி விஷயம் சொல்லி மூவரும் விடோபாவை தேடினார்கள்.

அந்த நடுநிசியில் எங்கோ ஒரு சப்பாத்தி கள்ளி புதர் அருகில் விடோபா ஸ்வாமிகள் கால் அங்கொன்றும் இங்கொன்றுமாக, சற்று தள்ளி புதர் ஓரத்தில் தலை, மற்றும் சற்று தள்ளி கைகள் துண்டாக கிடக்க பயந்து அலறினார்கள்.

''யார் இப்படி ஸ்வாமிகளை கொலை வெறியோடு தாக்கியது?'' என்று ஓவென்று கத்தி அலறி ஊரைக் கூட்டிவிட்டார்கள். பாவம் சாது,பணம் நகை எதுவுமே இல்லாதவர், வாய் வார்த்தையில் கூட யாரையும் துன்புறுத்தாதவர் அவருக்கு இவ்வாறு ஒரு கோர முடிவா?

ஊரே திரண்டு வந்துவிட்டது. ஹரிக்கேன் விளக்குகள் எடுத்து தேடிக்கொண்டு சப்பாத்தி கள்ளி காட்டுக்கு வந்து பார்த்தனர். எங்குமே அவர் உடல் முழுதாகவோ துண்டாகவோ காணோம்.

செக்குமேட்டில் சாக்கடைக்கு அருகே வழக்கம்போல் விடோபா அமர்ந்திருந்தார். அவர்களைக் கண்டதும் ஒரு மெல்லிய புன்சிரிப்பு. தலை அசைப்பு. ஊர்மக்கள் கோபமாக அந்த மூன்று பக்தர்களையும் பார்த்த பார்வையில் ''இப்படி நடு ராத்திரி எங்களை தூக்கத்திலிருந்து எழுப்பி ஒரு அதிர்ச்சி கொடுத்து விளையாடியதற்கு உங்களுக்கு கை கால் வேறு தலைவேறு தண்டனை தரலாமோ ?''என்று யோசிப்பது போல் இருந்தது.

இன்னொரு அற்புத சம்பவம் சொல்கிறேன்.

சென்னையில் (அப்போது மதராஸ்) சுப்பராய முதலியார் என்று ஒருவர் வயிற்று வலியில் வாடி வருந்துபவர். எந்த மருந்தும் குணப்படுத்தவில்லை. ஒருநாள் அவருடைய கனவில் யாரோ ஒரு சுவாமியார். யாரென்றே தெரியவில்லை. ''போளூருக்கு என்னிடம் வா'' என்ற செய்தியோடு அந்த கனவு கலைந்தது.

முதலியாருக்கு ஆச்சர்யம். போளூர் எங்கிருக்கிறது என்றே தெரியாது. யார் அந்த சாமியார் என்றும் தெரியாதே. சிலரிடம் தனது அதிசய கனவை சொன்னார்.யாரோ ஒருவர் போளூர் எங்கிருக்கிறது என்று சொன்னதும் வயிற்றில் வலியோடும் மனதில் நம்பிக்கையோடும் தேடி விசாரித்துக்கொண்டு நடந்தார், போளூர் வந்து சேர்ந்தார். . போளூரில் தேடி விசாரித்ததில் விடோபா ஸ்வாமிகள் பற்றி அறிந்து கொண்டு அங்கே வந்து தரிசித்தபோது தான் ஆச்சர்யம் அதிகமாயிற்று. ஆம், அதே உருவம், முகம். . கனவில் கண்ட சுவாமியார். வயிற்று வலியோ தாங்கவில்லை . துடித்துக் கொண்டே வணங்கினார். விடோபாவின் கண்கள் அவரை அளவெடுத்தன. ஒரு புன்சிரிப்பு. காலையிலிருந்து மாலை ஐந்து மணி வரை பேசவோ கிட்டே அழைக்கவோ இல்லை.

வேலு முதலியார் என்ற இன்னொரு பக்தர் விடோபாவிடம் "' சுவாமி இந்த ஜீவன் இப்படி வலியால் புழுவாக துடிக்கிறதே தங்களின் அருளுக்கு காத்திருக்கிறதே...தயை புரியுங்களேன்... என்று கெஞ்சினார்.



ஸ்வாமிகள் ஜாடையால் சுப்பராய முதலியாரை அருகே அழைத்து வர சொன்னார். தனது இடது பாதத்தை சுப்பராய முதலியார் வயிற்றில் வைத்து அழுத்தினார். ரெண்டு மூன்று நிமிஷத்திற்குப் பிறகு பாதத்தை எடுத்து விட்டார். அந்த கணமே சுப்பராய முதலியாரின் வயிற்று வலி மறைந்து விட்டது. அப்புறம் என்ன ? சுப்பாராய முதலியார் ஒரு சுதந்திர பறவை. பத்து நாட்களுக்கு மேலே அங்கேயே ஸ்வாமிகளோடு நிழலாக இருந்து சிச்ருஷைகள் செய்தார். ஊருக்கு திரும்பும் முன்பு அந்த ஊரைச் சேர்ந்த மராத்தி பெண்மணிகள் பார்வதிபாய் , சின்ன பிட்டம்மா ஆகிய இருவரை கண்டுபிடித்து தினமும் விடோபா ஸ்வாமிகளுக்கு மூன்று வேளைகளிலும் ஆகாரம் அளிக்க ஒரு நிரந்தர ஏற்பாடு செய்துவிட்டு தான் சென்றார். விடோபா ஸ்வாமிகள் சித்தி அடையும் வரை இந்த கைங்கர்யம் தொடர்ந்து நடந்தது..

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...