Thursday, December 13, 2018

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்    J.K. SIVAN 

                     
    நஹுஷனின் தர்க்கம் 

தர்ம புத்ரன் எனப்படும் யுதிஷ்டிரன், தனது வீராதி வீர, பதினாயிரம் யானை  பலம் கொண்ட பீமன் ஒரு பெரிய மலைப்பாம்பினால் கட்டப்பட்டு  சக்தி இன்றி தவிக்கிறான் என்றால் அது நிச்சயம் பாம்பு இல்லை, ராக்ஷஸனும் இல்லை. எந்த ராக்ஷஸனும் பீமனோடு மோதி உயிர் தப்பியதில்லை,  எனவே மந்த்ர சக்தி கொண்ட ஏதோ ஒரு தேவதை என்று யுதிஷ்டிரனுக்கு புரிந்து விட்டது.

நஹுஷன்  யுதிஷ்டிரனைக் கண்டதும், அவன் தன்னை யுதிஷ்டிரன் பாண்டவர்களில் மூத்தவன் என்று அறிமுகப் படுத்திக்கொண்டதும் மிகவும் மரியாதையோடும், சந்தோஷத்தோடும் பேசுகிறான்:

'' யுதிஷ்டிரா,   நான்  உனது முன்னோர்களில்  ஒருவன் . நஹுஷன். வேத சாஸ்திர  நிபுணன்.கர்வத்தால் மதி இழந்து. முனிவர்கள் பிரம்ம ரிஷிகள்,  வேத பிராமணர்கள் ஆகியோரை  எனக்கு  பல்லக்கு சுமக்கச் செய்தேன். அவர்களில் ஒருவர்  அகஸ்தியர். குள்ளமானவர்.  அவர்  மெதுவாக  என்னை  சுமந்து செல்கிறார் என்று  கோபித்து அவரை விரட்டினேன். கை பிரம்பாலும் அடித்ததாக ஞாபகம்.

அதிருக்கட்டும். இன்று  என் உணவான  உன் சகோதரன்  பீமனை  நான் விடப்போவதில்லை. அவனே இன்றைக்கு எனக்கு  ஆகாரம். வேறெந்த ஆகாரமும் எனக்கு தேவையில்லை.  நீ போகுமுன் ஒருவிஷயம். சில சந்தேகங்கள்  எனக்கு. எனவே  என்  கேள்விகளுக்கு  நீ  சரியான விடை அளித்தால்  உன் சகோதரனை பரிசாக விடுவிக்கிறேன்.

 ''சர்ப்பமே   உன்  கேள்விகளைக் கேள். முடிந்தால் பதில் சொல்கிறேன்.
''யுதிஷ்டிரா, நீ  ரொம்பவும் புத்திசாலி  என்று  கேள்விப்பட்டிருக்கிறேன்.  ''பிராமணன்  யார், அவனுக்கென்ன தெரிந்திருக்க வேண்டும்?'' சொல்.

"அறிஞர்கள் சொல்படி, எவனிடம், சத்யம், தர்மம், மன்னிக்கும் தன்மை, நற்குணம், பெருந்தன்மை, தாராள மனம்,  கர்மானுஷ்டானங்களில் சிரத்தை, கருணை  இதெல்லாம்  கூடி இருக்கிறதோ  அவனே  பிராமணன். அவனுக்கு தெரிந்திருக்கவேண்டியது  பிரம்மம்  என்பது சந்தோஷமோ, துக்கமோ அற்ற நிலை. அதை அடையவேண்டும் என்பது தான்''

"நீ  சொன்ன  குணங்கள் எல்லோரிடத்திலும்  இருக்கலாமே? எதற்கு  பிராமணனிடம் மட்டுமே?  என்றது சர்ப்பம்.

'' பிரம்மத்தை உணர்ந்தவனிடம் உள்ள  தன்மை  மற்றவரிடத்தில் இல்லை.  மற்றவரின் குணம்  தன்மை  பிரம்மத்தை உணர்ந்தவனிடம் இருக்க முடியாது  என்பதால்  தானே  இந்த  வித்யாசமே.   நான் சொல்லும்   பிராமணீயம்  ஒருவரின் குலத்தால், பிறப்பினால் மட்டும் வருவது அல்ல.''  என்றான்  தர்மன்.

''சுக  துக்கம்  இல்லாது எதுவும் இல்லையே. இருக்க முடியாதே. அல்லவா? ''  என்றது சர்ப்பம்.

''எப்படி  சூட்டில்  குளிர்  இல்லையோ,  எப்படி  குளிரில்  சூடு  இல்லையோ  அது போல்  இன்பம் இல்லையேல் துன்பம் இல்லை.  துன்பம் இல்லையேல்  இன்பம் இல்லை.  ஒன்றில் மற்றொன்று மறைந்திருக்கிறது.''
 இரண்டுமே  ஒரே சமயம் சேர்ந்திருக்க முடியாதே.   இரண்டையுமே  இல்லாததாக கொண்ட  நிலை  பிரம்மம்''  என்றான்  தர்மன்.

"குணம் தான்  பிரதானம்  என்றால்  குலம்,அதன் பெருமை  என்னாவது?''  என்றது சர்ப்பம்.
"குலத்தை பிரதானமாக  எடுத்துக் கொள்ள முடியாதே.  நான்கு வர்ணத்திலும் கலப்பு  உள்ளதே எத்தனையோ ரிஷிகளே  இதற்கு உதாரணம்.. எனவே  குணம் ஒன்றே  பிரதானம், குலம்  இரண்டாம் பக்ஷம் ' என்றான்  தர்மன்.

''யுதிஷ்டிரா, என்ன  தெளிவு உனக்கு.  இவ்வளவு  அழகாக யோசிக்கிறாய்.  உன்  தம்பியை, பீமனை,   நான்  எவ்வாறு விழுங்குவேன் என்று தெரியவில்லையே?

"சர்ப்பமே   நான் கேட்கிறேன்  இப்போது நீ பதில்  சொல்,  வேத வேதாங்கத்தில் கற்றுணர்ந்தவனே, முக்தி  பெற என்ன செய்யவேண்டும்? என்றான் தர்மன்.

"எனக்கு  என்ன தோன்றுகிறதென்றால் பாத்திரமறிந்து  தானம் தர்மம் செய்பவன், கருணையும்,  உண்மையுமே பேசுபவன், எவ்வுயிர்க்கும் தீங்கு மனத்திலும் எண்ணாதவன்  முக்தி அடையலாம் '' என்றது சர்ப்பம்.

"இரண்டில் எது  சிறந்தது.  சத்தியமா, தான தர்மமா?   அதே போல்   எது முக்கியம்?  நல்ல  பண்பா ,எதற்கும் எவருக்கும்  துன்பம் இழைக்காமல் இருப்பதா?''  என்றான்  யுதிஷ்டிரன்

பாம்பு யோசித்தது. "யுதிஷ்டிரா, நீ சொன்னதில் எது நல்ல பயனளிக்கிறதோ, அதுவே சிறந்தது. சமய சந்தர்ப்பங்களை  அனுசரித்து இது தீர்மானிக்கப்படும்.  சில சமயம்,ஒன்றை  விட மற்றொன்று சிறந்ததாக அமையலாம். விளைவுகளைப் பொருத்தது இது. ''

மேலும்  தர்க்கம் தொடர்கிறது.

கடைசியில்  நஹுஷன்  ''யுதிஷ்டிரா  வசதி, பெருமை, அந்தஸ்து, அதிகாரம்  இதெல்லாம்  வந்தால்  ஒருவன் மது மயக்கத்தில் விளைவது போல் மதி இழக்க நேரிடுகிறது. நானே இதற்கு உதாரணம். உன்னுடன்  பேசிய
இன்று  எனது சாப விமோசனம் பெற்றேன். நீ  எனக்கு  நல்லதே  செய்திருக்கிறாய். பிரம்ம ரிஷிக்களை  எனது  பல்லக்கை  தூக்கச் செய்தேன். ''வேகமாக'' என்று பொருள் படும் ''சர்ப்ப சர்ப்ப ''  என்று  ரிஷிகளையும் அகஸ்தியரையும்  விரட்டினேன். அந்த மகரிஷி  ''நீ சர்ப்பமாகவே  போகக் கடவது'' என சபித்ததால்  இதுவரை சர்ப்பகமாக இருந்தேன்.   யுதிஷ்டிரனால்  நீ  சாப விமோசனம் பெறுவாய்  காத்திரு'' என்று சபித்தார். என் நல்ல காலம், இன்று உன்னை எத்தனையோ காலம் காத்திருந்திருந்து இன்று சந்தித்தேன். என் பாக்யம்.''

பாம்பு  மீண்டும்  நஹுஷனாக  உருப்பெற்றான்.   பீமசேனனையும் யுதிஷ்டிரனையும் வாழ்த்தினான். தேவலோகம் திரும்பினான்.

தௌமியரோடு   அவர்கள் ஆஸ்ரமம் திரும்பினார்கள்.  வெயில் காலம் முடிந்து  மழை துவங்கியது.  இடியும் மின்னலும்  வானில் நிறைந்தது.

நதிகள்  நிரம்பியன. பட்சிகள்  மகிழ்ந்தன  என்றாலும்  விலங்குகள்  அஞ்சின.  மறைவை, பாதுகாப்பை நாடி ஓடின.

பாண்டவர்கள் பிரயாணம் தொடர்ந்தது.  காம்யக  வனம் திரும்பினர்

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...