Wednesday, December 19, 2018

thiruvembavai


திருவெம்பாவை J.K. SIVAN

ஆதியும் அந்தமுமில்லா அரும்பெரும் சோதி .

வாளாடியில் பல்லவர் கால ஒரு பழைய சிவன் கோவில் பார்த்தேன். ஆனந்த வல்லி சமேத கைலாச நாதர் கோவிலை நன்றாக ஆறு ஏழு தலைமுறையாக ஒரு அர்ச்சகர் குடும்பம் பராமரித்து வருகிறது. இப்போது இருப்பவர் கைலாச குருக்கள். நல்ல குரல், தேவாரம், ஸ்லோகங்கள் சொல்லும்போது பக்தி பாவத்தோடு கணீரென்று குரல் ஒலிக்கிறது.

இங்கே ஒரு வாழும் பாம்பு ஒன்று பல காலமாக தினமும் சிவன் மேல் வந்து படுத்துக் கொள்ளும். போடா அப்புறம் வா என்று சொல்வேன் போய்விடும் என்று அவர் சர்வ சாதாரணமாக சொல்கிற போது என் காலடியில் ஏதோ முதுகின் மேல் ஏறுவது போல் உடல் சிலிர்த்தது. சின்ன கர்பகிரஹத்தில் மேலே பழைய கருங்கல் கூரையில் ராகு சந்திரனை சூரியனை விழுங்கும் முயற்சி பல்லவ காலத்தில் செதுக்கப்பட்டு பாம்பு இன்னமும் சூரியனை பிடித்து முழுசாக விழுங்கவில்லை..

மார்கழி சைவர் வைணவர் இரு பாலாருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி தரும் மாதம். மார்கழிச் செல்வி ஆண்டாள் திருப்பாவை தந்தாள். மணி வாசகர் திருவெம்பாவை தந்தார். ரெண்டுமே பாவை தான். பரமனையும் பரம சிவனையும் போற்றி பாடுபவை.
திரு பாவை ஒன்று திரு எம் பாவை மற்றொன்று. எமது பாவையே, நீ விரதம் இரு. பரமேஸ்வரன் திருவருள் பெறுவாய்'' என்று மணி வாசகர் தானே ஒரு பெண்ணாக மாறி பக்தி பூர்வ உணர்ச்சிகளை கொட்டும் பாடல்கள். அருணாசலேஸ்வரர் மீதும் சிதம்பர நடராஜர் மீதும் பாடப்பட்டவை.

உத்தராயணம் தை முதல் ஆறுமாதம் ஆனி வரை தொடரும். அத்தனையும் ஒரு பகல் வேளை --தேவர்களுக்கு! தக்ஷிணாயனம் மற்ற ஆறுமாதம். ஆடி முதல் மார்கழி வரை... அது தேவர்களின் ஒரு இரவு வேளை-- அதாவது நமது ஒரு வருஷம் அவர்களுக்கு ஒரு நாள்!

ப்ரம்ம முஹூர்த்தம் நேரமே பார்க்க தேவையில்லை. விடிகாலை 4லிருந்து காலை 6 வரை. சூரியன் தலை தூக்கும் முன்பு. அதுவும் மார்கழியில் இது உசத்தி.

அற்புதமாக முதல் திருவெம்பாவையை மணிவாசகர் எப்படி பாடுகிறார்?

கல்வி வேறு. அருள் வேறு. முதலாவதை வைத்து இறைவனை தேட வேண்டும். இரண்டாவது இறைவனால் பெறப்படும் பரிசு. இப்படி அருள் பெற்றவர்களில் முதன்மையானவர் சைவ சமயத்தில் மணிவாசகர். திருவாதவூரர் . அருள் பொதிந்த வார்த்தைகள் மணி மணியாக கோர்க்கப்பட்டவை. அவருடைய வாசகம் அதனால் திரு வாசகம் என்று பெயர் தாங்கி அவரை மணி வாசகராக்கியது. கடல் மடையென்ன அவர் பாடல்களில் சிவபெருமானையே தலைவனாகக் கொண்டு பக்திப் பாடல்களை நமக்கருளியவர். நெஞ்சை உருக்கும் பக்தி கொண்ட வார்த்தைகள். ஆகவே தான் திருவாசகம் என்ற பக்தி பாடல்களை பற்றி ''திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்'' என்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. .

திருப்பாவை, திருவெம்பாவை இரண்டிலுமே மார்கழி மாதம் விடியலில் எழுவதும், நீராடுவதும், திருக்கோயில் சென்று வழிபடுவதும் முக்கியமாக சொல்லப்படுகிறது. மணமாகாத கன்னிப்பெண்கள் காத்யாயினி விரதம் இருந்து , அதிகாலையில் ஒருவரை ஒருவர எழுப்பி, ஒன்றாகக் கூடிக்கொண்டு நீர்த்துறை சென்று நீராடித் தமக்கு இறையன்பு மிக்கவரே கணவராக வாய்க்க வேண்டும் என்று இறைவனை நோக்கிப் பாடியும் வணங்கும் நிகழ்வு. .

மாணிக்க வாசகர் திருவெம்பாவை யில் இலக்கிய ரசத்தை பிழிந்து பக்திரசத்தோடு சேர்த்து சுவை கூட்டி அளிக்கிறார். சிவபெருமான் மீது எல்லையற்ற பக்தி ஒருபுறம். அவனது அருள் அதனால் .விளைவது மறுபுறம். மொத்தமே திருவெம்பாவைப் பாடல்கள் 20 தான்.

பதினெட்டாவது பாடலில் '' அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்'' என ஆரம்பிக்கிறார். மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் தான் திருவெம்பாவை இயற்றி பாடினார் என்று தோன்றுகிறது. சிவனது செம்பொற் திருவடிகள் அனைத்திற்கும் முதலும் முடிவும் ஆகும் என கூறுகிறார். .

தேவர்கள் சிவன் திருவடிகளில் அடி பணிந்து வணங்க, அவர்கள் சிரங்களில் இருந்து மாணிக்க கற்கள் எல்லாம் ஒளி வீச சிவனின் திருவடிகளே பேரொளி வீசுகிறது என்கிறார். "விண்மீன் ஒளிகள் கதிரவன் ஒளியால் மறைவதற்கு முன் நீராட வேண்டும்' என்பதைக் குறிக்கிறது.

திருவெம்பாவையில்மு முதல் 8 பாடல்கள் விடிகாலை எழுந்து நீராட செல்வது குறித்து. தூங்குபவர்களை தட்டி எழுப்பி ''வா நீராட'' என்று அழைப்பவை.

முதலாவது திருவெம்பாவை:

''ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனு மாகாள் கிடந்தாள்என் னேயென்னே
ஈதேஎந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.

முதலும் முடிவும் இல்லாத, காணுதற்கு அரிய பெருமையையுடைய ஒளியான சிவபெருமானை நாங்கள் பாடுவதைக் கேட்டும், வாள்போலும் பெரிய கண்களைக் கொண்ட பெண்ணே, இன்னுமா தூங்குகிறாய்? உன் காது கேட்காதோ? மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளைப் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் சப்தம் தெருவெல்லாம் எதிரொலிக்கிறது. உன் டமார செவியில் மட்டும் புகவில்லையோ? இதோ பார் எங்கள் தோழி ஒருத்தி பக்தி மேலீட்டால் பொருமி அழுது, உடம்பை மறந்து மலர் நிறைந்த படுக்கையின் மீதிருந்து புரண்டு அப்படியே ஸ்தம்பித்து சிறிதும் தனது நினைவின்றி கிடக்கிறாள். இது என்ன அற்புதமான நிலைமை பார்! என் கண் போன்றவளே , இவளது பக்தியின் பெருமை உணர்வாய்.?











No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...