Wednesday, June 1, 2022

RIG VEDHAM

 


ரிக் வேதம்  -  நங்கநல்லுர்  JK  SIVAN 


நீங்க  சாமவேதமா? நாங்க  யஜுர்வேதம்.   எங்க சம்பந்தி  ரிக் வேதம்..  இப்படி பேசுபவர்களுக்கு தங்களது வேதம் என்னவென்று தெரியுமா என்றால் நிச்சயம் தெரியாது.  கோத்ரம், வேதம், சாகை, இதெல்லாம் பற்றி நாம் கொஞ்சமாவது  அறிந்துகொள்ளவேண்டும். 

வேதங்கள் எண்ணற்றவை.  இருந்தாலும்  ரிஷிகள் சிலவற்றை தான் '' இந்தா உனக்கு''  என்று அளித்திருக் கிறார்கள்.   நாம் வாழும்  லோகம் சுபிக்ஷமாக நன்றாக   இருக்க நாம்  வேத மந்த்ரங்களை உச்சரிக்க கற்றுக்கொண்டால் போதும்.  ஆகவே முக்யமாக  நாலு வேதத்தை  கிருஷ்ண த்வைபாயானர் என்ற ரிஷி பிரித்துக் கொடுத்திருக்கிறார்.   வேதங்களை இப்படி பகுத்து விளக்கி கொடுத்ததால் அவர்  பெயரே  வேத வியாசராகிவிட்டது. 

நாலு வேதங்களுக்குள்ளும்  பாடாந்தரம், பாட பேதம் உண்டு.   உதாரணமாக கல்யாணி ராகத்தில்   ஒரு கீர்த்தனையை ஒவ்வொரு வித்வானும் ஒவ்வொரு பாணியிலும் பாடவில்லையா?.   சில பாணியில் அதிகம் சங்கதிகள் வீசுவார்கள்.  அது மாதிரி வேதங்களில்  சில ஸூக்தங்கள் ஒரு பாடத்தில் அதிகம் இன்னொன்றில் குறைந்தும்  இருக்கும். ஒன்றுக்கொன்று மந்திரங்கள் முன்பின்னாக இருக்கும்.

இந்த பாடாந்தரம் ஒவ்வொன்றையும் ஒரு சாகை  (கிளை) என்கிறோம்.  வேதம் என்கிற  பெரிய விருக்ஷத்தில் இவை ஒவ்வொன்றும் ஒரு கிளை. அநேக கிளைகளுடன் கப்பும் கவடும் விட்டுக்கொண்டு ஒரு மஹா விருக்ஷம் மாதிரி, அடையாறு ஆலமரம் மாதிரி, வேதம் இருக்கிறது. இத்தனை சாகைகள் இருந்தாலும், இவை  ரிக், யஜுஸ், ஸாமம், அதர்வம் என்ற நாலில் ஒன்றை சேர்ந்ததாகவே பிரித்திருக்கிறது.

இந்த நான்கு வேதங்களில் ரிக்வேதம் முந்தியது. யஜுர்வேதம் பிந்தையது என்றாலும்  சாஸ்திரப்படி எல்லாம்  ரொம்பவே  பழசு தான்.  சிருஷ்டித் தொடக்கத்திலேயே பிரம்மாவால் ஜனங்களுக்குக் கொடுக்கப்பட்டதான யக்ஞத்தில் நாலு வேதங்களுமே பிரயோஜனமாகின்றன என்பதைப் பார்க்கும்போது, இந்த முந்தி பிந்தி ஆராய்ச்சிகளெல்லாம் எடுபடவில்லை.

வேத சாகைகளில்  ஸம்ஹிதை, ப்ராம்மணம், ஆரண்யகம் என்ற பகுதிகளில் இதற்கு இது  பழசு,  இது அப்புறம்  என்கிற ஒப்பிடுதல் இல்லை.  வேதங்கள்  ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது வேதம்.   தவத்தின் மூலம்  ரிஷிகள் கண்டுபிடித்துக் கொடுத்தது வேதம். அதற்கு காலக் கணக்கு ஆராய்ச்சி  எதுவும்  பொருந்தாது..

ரிக் வேதத்திலேயே பல இடங்களில் யஜுர் வேதம், ஸாம வேதம் முதலியவற்றைப் பற்றிய பிரஸ்தாவம் இருக்கிறது. ரிக்வேதம் பத்தாம் மண்டலத்தில் [தொண்ணூறாவது ஸூக்தமாக] வரும்  புருஷ ஸூக்தத்தில், இப்படி மற்ற வேதங்களைப் பற்றி வருகிறது.   சம்ஹிதை  என்பது  செய்யுள் மாதிரி.   ரிக்  என்றால் ஸ்லோகம். மேலே ஏற்றி  கீழே இறக்கு சொல்வது ஸ்வரம். 

வேதங்களில்  முதலாவது ரிக் வேதம்.  அதில் – ஸம்ஹிதையில் – பத்தாயிரத்து சொச்சம் [10170] ரிக்குகள் (மந்திரங்கள்) உள்ளன. [1028 ஸூக்தங்கள்]  பத்து மண்டலங்களாகவும், எட்டு அஷ்டகங்கள்  உண்டு. 

அக்னியைப் பற்றிய ஸூக்தத்தோடு ஆரம்பம். அக்னியிலேயே  முடிவு. அக்னி தான் உபாசனா தெய்வமாக இருந்த வேத  காலம்.  உபக்ரமம் (ஆரம்பம்) , உபஸம்ஹாரம் (முடிவு) இரண்டிலும் அக்னியே . எல்லோரும் சுபிக்ஷமாக இருக்கவேண்டும் என்ற  பிரார்த்தனை.   

அத்தனை தேவதைகளுக்குமான ஸ்தோத்திர மயமாக இருப்பது ரிக்வேதத்தின் பெருமை. சமூக வாழ்க்கை முறைகளையும் அது நன்றாக எடுத்துச் சொல்கிறது.

ரிக் வீதிகளின்  அமாவாஸ்யா  தர்பண மந்த்ரம் பற்றி அடுத்த பதிவில்  இடுகிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...