Thursday, June 23, 2022

PANCHA SABA


 பஞ்ச சபை  -  நங்கநல்லூர்  J K  SIVAN 


வேறு யாருக்கும் இல்லாத ஒரு அற்புதம் சைவர்களுக்கு கிடைத்த பஞ்ச சபைகள்.
சிவன்  விஷ்ணுவைப் போல் அவதாரங்கள் அவ்வப்போது எடுப்பதில்லை.  உருவத்தை மாற்றிக் கொண்டு பக்தர்களை சோதனை செய்தருள்பவர். அறுபத்து நாலு உருவங்கள் பற்றிய  விஷயங்கள் தான்  திருவிளையாடல்கள்.  

அதில் ஐந்து உருவங்கள் அதி முக்கியமானவை.கோபம் நிறைந்த பைரவர்,  சாந்தமே உருவான   தக்ஷிணாமூர்த்தி,   எளிமையும் இனிமையும் கொண்ட  மூர்த்தியாக பிக்ஷாடனர், ஆனந்த மூர்த்தியாக நடராஜன்.  கருணா மூர்த்தியாக சோமாஸ்கந்தர்.

அநேகமாக எங்கும் சிவாலயங்களில் நாம்  கண்டு மகிழ்ந்து தரிசித்து அருள் வேண்டுவது லிங்க வடிவத்தில் தான்.  லிங்கத் திருமேனிக்கு ஈடு இணை கிடையாது. 
அடுத்தது உருவத்தில் நடராஜராக. 
நடராஜரைப் பற்றி நிறைய  விவரங்கள் முன்பே நிறைய  கொடுத்திருக்கிறேன். அவன் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே. அவன் ஆட்டத்தில் தான் சதா ஸர்வ காலமும் பிரபஞ்சம் அசைகிறது. இந்த நடராஜன் ஆடலைத் தான்  மானாட, மயிலாட, மங்கை சிவகாமியாட  என்ற பாடல் உணர்த்துகிறது. வலது  காலை ஊன்றி இடது  பதம் தூக்கி ஆட,  வலக்  கரம் அருளாதரவு தர,  நாட்டிய பாவனையில் இருக்கும் சிவ வடிவம் தான் நடராஜன்.  நாட்டியத்துக்கு ராஜா.  அபஸ்மராவை  (முயலகன்) வதம் செய்த கோலத்தில் காட்சியளித்தாலும், மிகவும் பாசம்  நிறைந்த இதயம் கொண்டவர்.   இசை, நடனத்தில் கை தேர்ந்தவர்.   நமது அஞ்ஞானத்தை ஆடல், பாடல்களால்  போக்குபவர்,  இல்லையென்றால்  ரிஷிகள்  தேன் வந்து  மலரை மொய்ப்பது போல் அவரைச்  சுற்றியே காண்பார்களா?

ஜடாமுடியில் கங்கை,   வளமை , சுபிக்ஷம் தருவது. கையிலிருக்கும் டமருகம் எனும் உடுக்கை, ஓம் என்ற ஒலியே உலகம் உருவாக காரணம். 
சிவன் உடம்பிலிருக்கும் நாகாபரணம். நெற்றிக்கண், சர்வ வல்லமை பொருந்தியிருந்தாலும் அடக்கத்தை காட்டுகிறது. 
 அபய வரத முத்திரை காட்டும் ஹஸ்தங்கள், கரங்கள். பவழம் போல் மேனியில் பால் வெண்ணீறு, குனித்த புருவம், கொவ்வைச் செவ்வாய், நானிருக்க பயமேன் என்கிறது.  பத்ம பீடம்,  சரணடைந்தவனுக்கு மறு  பிறவி இல்லை என்கிறது.  
அர்த்த சந்திரன், பாதிமதி சூடியிருப்பது வாழ்வின் ஏற்ற இறக்கம் பற்றி கவலை வேண்டாம் என்கிறது ஒருகரத்தில்  உள்ள அக்னி தீயவைகளை, அழிப்பதை குறிக்கிறது. ஆணவ மலம் வேண்டாம் என்று காட்ட காலடியில் முயலகன்.
நடராஜன் ஒரு  உயர்ந்த தத்வம். 

அவன் ஆடும் ஐந்து சபைகளை பற்றிச்  சொன்னேன். அவற்றை தரிசிக்கும் பாக்யம் எனக்கும் உண்டு

சிவபெருமான் நடனமாடும்  ஐந்து  ஸ்தலங்கள் பஞ்சசபைகள், ஐம்பெரும் சபைகள் எனப்படும்

பொற்சபை, பொன்னம்பலம் கனகசபை  சிதம்பரத்தில் ,
ரஜித சபை, வெள்ளி சபை, எனும் வெள்ளியம்பலம் ஆலவாய் எனும் மதுரையில், ரத்ன சபை, திருவாலங்காட்டில்,  தாமிர சபை திருநெல்வேலியில்,  சித்ர சபை  குற்றாலத்தில் உள்ள   சிறப்பு சிவாலயங்களில் காணலாம். .மார்கழி திருவாதிரை திருவிழா, ஆனி திருமஞ்சனம் உள்ளிட்ட ஆறு நாட்கள் நடராசருக்கு  கோலாகலமாக  அபிஷேகங்கள், அர்ச்சனைகள் விமர்சையாக நடக்கும். 

கனகசபை  கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில்  நடராஜன  தாண்டவத்தை கண்ணாரக் கண்டவர்கள்  பதஞ்சலி  மற்றும் வியாக்கிரபாத ரிஷிகள். சிதம்பரத்தில்  நடராஜனின் தாண்டவத்துக்கு பெயர்  ஆனந்த தாண்டவம். 

மதுரை  மீனாக்ஷி  சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில்  வெள்ளியம்பல நடராஜனைக் காணலாம். இங்கு ஒரு இடத்தில் தான் இடது காலை ஊன்றி வலது காலை தூக்கி கால்மாறி ஆடிய தாண்டவம்.  ராஜசேகர பாண்டியனின் வேண்டுகோளினை ஏற்று கால் மாற்றி நடனம் ஆடின  ஸ்தலம். இங்கு ஆடிய  நடனத்தின் பெயர்  சந்தியா தாண்டவம்.  ஞானசுந்தர தாண்டவம் எனப்படும்.  சிவனுக்கு இங்கே  சொக்கநாதர், சோமசுந்தரர் என்ற பெயர்கள் .

திருவாலங்காட்டுக்கு  ஸமஸ்க்ரிதத்தில்   வடாரண்யம் என்று பெயர்.  திருவள்ளூர் ஜில்லாவில்,  திருவாலங்காட்டில் உள்ள  பழம் பெரும் கோவிலில் காளியை  போட்டியில் வென்ற ஊர்த்தவ தாண்டவம், அனுக்ரஹ  தாண்டவம் ஆடிய நடராஜன்  உள்ள இந்த ஸ்தலம் தான்  ரத்ன சபை.   சிவனுக்கு இங்கே   எட்டு கரங்கள், வலது காலை, ஊன்றி இடது காலால் காதணியை மாட்ட ஆயத்த மாவது போல்  தரிசனம் பெறுகிறோம். 

மிகப்பெரிய  ஒரு அற்புதமான கோவில் நெல்லையப்பர் கோவில், சிறந்த கலைச் சிற்பம் நிறைந்த பிரம்மாண்ட ஆலயம்.  இங்கு  தாமிரத்தினாலான, செம்பிலான, அம்பலத்தில் நான்கு கரங்களுடன்  நடராஜன் ஆடும் நடனம் தான்   முனித்திருத்தாண்டவம், காளிகா தாண்டவம்  என்றழைக்கப்படுவது. இது தான் தாமிரசபை. சந்தன சபாபதி  என்று நாராஜனுக்கு இங்கே ஒரு பெயர். 

மலைச்சாரல் நிறைந்த இயற்கை வளம் கொழிக்கும்  குற்றாலநாதர் கோவில் தான் சித்ர சபை   திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் உள்ளது. இங்கே சிவன் ஆடிய தாண்டவம்  திரிபுர தாண்டவம். ப்ரம்மா   நேரில் கண்டு அனுபவித்து இந்த நடராஜ தரிசனத்தை ஓவியத்தில் வடித்தான் என்பார்கள். அதனால் சித்ரசபை என்று பெயர். 

எப்போது முடிந்தாலும் இந்த பஞ்ச சபைகளையும் ஒருதரமாவது வாழ்வில் தரிசிக்க வேண்டும். இன்னொரு முறை சான்ஸ் கிடைத்தால் நான் விடவே மாட்டேன். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...