Monday, June 13, 2022

SPATIKA MANI


 ஸ்படிக மணி மாலை...  நங்கநல்லூர்  J K  SIVAN   


`பால் போல் நிலவு   நிர்மலமான  நீல  ஆகாயத்தில்  பளிச்சென்று  நெற்றிக்கு பொட்டு  இட்டது போல்  காண்கிறது.  எங்கும்  அமைதி. மயான அமைதி என்று தாராளமாக சொல்லலாம்.  குருக்ஷேத்ரம் தான் மயான பூமி ஆகி விட்டதே. 

பீஷ்மன் அம்புகளான அம்பு படுக்கையில் கிடந்து ஆகாயத்தைப்  பார்க்கிறான். இன்னும் எத்தனை நாள் இந்த பூமியில்?  .  உத்தராயண புண்யகாலம் வந்தும்  நான் ஏன் விண்ணுலகில் பழைபடி  ப்ரபாஸனாக போக முடியவில்லை.  எங்கோ நான் செய்த தவறுகள்  என் எண்ணத்தை பூர்த்தி செய்ய தடையாக நிற்கிறது.

என் தாயின்  நினைவு வருகிறது.. ஆம்  கங்கா மாதா என்  தாயாக என்னை பூமியில் வாழ விட்டவள் .  பவித்ர மானவள்.   அவள் சாபம் என் சாபம் இரண்டுக் கும் ஒரே பயனாக அவள் எனக்கு தாயானவள். என் வாழ்வு . பிறருக்கெனவே வாழ்ந்தவனாக வைராக்கியம் கொண்டேன்.  குருவம்ச பிதாமகன். எவராலும் வெல்ல முடியாதவன் என்று பெயர் பெற்றேன். என் குழந்தை அர்ஜுனன். வீரத்தின் மறுபெயர் அவன் கைகளால் முடிய விருப்பம் எனக்கு. ஆனால்  விதி வேறு விதமாக  முடிவு செய்தது.

அம்பையை நான் வீரனாக கடத்தியது எனக்கல்லவே.  ஆனால்  என்  பலத்தில்  அவள் ஒரு பகடைக் காயானாள் .அவள் வாழ்வு சிதறியது. அவள் கனவெல்லாம் கலைந் தது.  அந்த கோபம்  சாபமாக  தவமாக எனக்கு எமனாக உருவெடுத்தது.  சிகண்டி.. ஆணா  பெண்ணா ? பெண்ணாக இருந்தால் நான் அவளை எதிர்க்கவோ கொல்லவோ மாட்டேனே. பெண்ணே ஆணாக  தவவலிமையால் உருவெடுத்தால் அவளை ஆண்  என்று நான் எவ்வாறு  ஏற்பேன் ?  என் வரையில்  அவள் பெண்ணே. 

அவளை முன்னிறுத்தி என்னை வேட்டை யாடினானே  அர்ஜுனன்,   அவனைக்  கொல்ல  எவ்வளவு நிமிஷம் ஆகும் எனக்கு?  அங்கு தான் ஸூக்ஷ்மம்  இருக்கிறது.  அர்ஜுனன் வில்லுக்கு விஜயன் என்று பேர் கொண்டு என் மார்பிலும் தோளிலும்  வளர்ந்த மஹா வீரன்.  அவனால் என்னை வெல்லமுடியாது. அவனுக்கும் எனக்கும் இடையே  கனமான ஒரு பாசத்  திரை 
உண்டே.  நான் துரியோதனனுக்கு  நன்றிக்  கடன் பட்டவன். அவன் வம்சத்தை வாழ வைப்பேன் என்று முடிவெடுத்து  என் மனதுக்கினிய பாண்டவர்களையும்  அவர்கள் படைகளையும் இன்றே  நிர் மூல மாக்க கிளம்பினேன். அது எனக்கு சுலபம்.  ஆனால் அங்கே  தான் மறுபடியும் ஸூக்ஷ்மம் .

கௌரவர்களுக்கு  நான்  ஒரு பீஷ்மன் தான். ஆனால் பாண்டவர்களுக்கு பல பீஷ்ம த்ரோணர்களைக் கொண்ட ஒரே ஒருவன்  கிருஷ்ணன்.. அவன் துணை யிருக்க எவர் பாண்டவரை அணுக முடியும்?.  அவன்  ஆயுதம் தொடவில்லை.  பார்த்தசாரதி......  என் அம்புகள் பாணங்கள்  அனைத்தையும் தன்  முகத்தில் வாங்கிக்  கொண்ட பரமாத்மன்.   அவன் முடிவுக்கு முன் எவர் முடிவும் நிற்காது என்பது எனக்கு நன்றாக தெரியும். 

அவனைத் தாக்கின  மஹா பாபம் ஒன்றே  என்னை தடுத்து மேலே சொல்ல முடியாமல் செய்துவிட்டது.
சகலமும் தெரிந்த அவன் சிகண்டியின்  சபதம் தெரியாதா? அவனை, இல்லை,  அவளை,  முன் நிறுத்தி என்னை துளைத்தான் .  அர்ஜுனன் ஒரு பக்கம் என்னை துன்புறுத்தினான். நான் அர்ஜுனனைத்  தாக்கும் போது ஒரு அம்பு கூட  சிகண்டியின் மேல் படக்கூடாது. அது என் வைராக்கியத்திற்கு எதிரானது. ஆகவே அர்ஜுன னை என்னால் தாக்க முடியாமல் இரண்டு  இரும்புத் திரைகள்.. ஒன்று  பார்த்த சாரதி, இன்னொன்று  பாதி பெண்  சிகண்டி..

''முழு நிலவே  என்ன பார்க்கிறாய்?'''
'பீஷ்மா  நீ செய்ததெல்லாம் தியாகமா , கடமையா?  ''எனக்குத் தெரியவில்லை. நீயே சொல், ஏன் நீ இப்படி அவஸ்தை பட விரும்பினாய்?''
''பூர்ண சந்திரா, பௌர்ணமியே,  முழு நிலவே.  நீ குளிர்ச்சியாக இருக்கிறாய். என் உடல் எரிச்சலுக்கு இதமாக இருக்கிறாய். குளிர்ந்த காற்றில் உன்னை அனுபவிக்கிறேன்.  நீ  உலகெல்லாம் மயங்க  ஒளி வீசி தேய்ந்து வளர்பவன்.   சந்திரா, நான்  வளர்ந்து தேய்ந்தவன் . என்னால் மீண்டும் வளர முடியாது.  மனதை மாற்றிக்கொண்டு மீண்டும் வாழ முடியாது. கங்கையில் மூழ்கி தாயோடு கலந்து விண்ணுலகம் போக தான் எனக்கு விருப்பம். ஆனால்  நான் கொண்ட வைராக்கியம்,  ஒரு சுத்த வீரன் மார்பில் அம்போடு  மரணமடைவது யுத்த களத்தில் தான் நிகழவேண்டும்.

''நான் வென்றவன் இல்லையே.  தோற்றவன்.  சிகண்டி யால் கொல்லப்பட்டவன் என்று தான் சரித்திரம், இந்த பாரதமும்  மஹா பாரதமும்  சொல்லப்போகிறது.

அதற்கு முன்  இன்று நான் ஒரு முக்கியமான பரிகாரம் செய்யப்  போகிறேன். என் தவறுகளுக்கெல்லாம்   அது ஒன்றே  பரிகாரம்..  

நான் நன்றாக உணர்ந்த அறிந்த  கிருஷ்ணன்  மனித
னல்ல. மற்றவர்க்கு அவன் மனிதனாக தெரியலாம்.  இந்த  மா மனிதன் மஹா விஷ்ணு. அவன் பெருமை, புகழைப்  பாடப் போகிறேன்.  நான் மட்டும் பாடினால் இந்த மயான பூமியில் என்ன பிரயோஜனம்? அதை இன்னொரு மாமனிதன் மூலம்  மூவுலகும் அறிய செய்வேன். நான் முடிவெடுத்தால் மாற்றாதவன். பீஷ்மன். வைராக்கியன்.  

''பூர்ண சந்த்ரா,  போ   நீ போய்  ஓய்வெடுத்துக் கொள் . சூரியன் உதயமாகட்டும். எங்கும் ஒளி பரவட்டும். என் மனதில் புத்துணர்ச்சி பெருகிவிட்டது.  நான் செய்த தவறுகளுக்கெல்லாம், முடிவு ஒரு உபதேசம்.. அதுவும் தர்மமே  உருவான யுதிஷ்டிரனுக்கு.  அவனுக்குச்  சொன்னால் உலகுக்கே சொன்னது போல...ஹும்ம் ..''

 பீஷ்மன் சற்று கண்ணை மூடி  மஹா விஷ்ணுவை நினைக்க தொடங்கினான்..
.  பொழுது விடிந்தது ... யுதிஷ்டிரன்  இங்கே வருவானா?  எப்படி சொல்லி அனுப்புவது? பீஷ்மன்  யோசித்த்த்தான்.

ஹஸ்தினாபுர  அரண்மனையில் தனது அறையில் இருந்து கிருஷ்ணன் சட்டென்று  எழுந்தான், அருகே  ஒரு அறையில் இருந்த தர்மனைக் கூப்பிட்டான்.

''யுதிஷ்டிரா  இங்கே வா''
''கிருஷ்ணா,  என்னைக்  கூப்பிட்டாயா?'
'ஆம்  உத்தராயணம் துவங்கி  பல  நாட்கள் ஆகி விட்டது.  தனது முடிவைத்  தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளும்  சக்தி வாய்ந்த  பீஷ்ம பிதாமகர்  எந்த நேரமும்  பூமியை விட்டு சென்று விடுவார்.  அவரிடம் வெகு முக்கியமான  ராஜரீக விதிமுறைகள், நெறிகள், நீதிகள் அனைத்தையும் கேட்டு அறிந்துகொள் . இந்த வாய்ப்பு பிறகு கிடைக்காது. இன்னொரு பீஷ்மன் கிடையாது.'

'கிருஷ்ணா,  பீஷ்மரை வணங்கி அவரிடம் அறிவுரை பெற நான் கொடுத்து வைத்தவன். இதோ குருக்ஷேத்ரம் செல்கிறேன்''  

பாண்டவர்கள்,கிருஷ்ணன் எஞ்சியுள்ள  கௌரவர்கள் பீஷ்மனைச் சுற்றி நிற்க,  பீஷ்மனுக்கு பரம சந்தோஷம்
.
''எப்படி  நான் யுதிஷ்டிரனை சந்திக்கவேண்டும் என்று நினைத்தது  அவனுக்கு தெரிந்தது.?'
'யுதிஷ்டிரா,பிதாமகரை  நமஸ்கரித்து  அவரிடம்  நீதி நெறிமுறைகள் அனைத்தையும் உபதேசம் பெற்றுக் கொள் ''
கிருஷ்ணன் குரல் கேட்டதும்  ரஹஸ்யம் புரிந்து விட்டது...எல்லாம் வல்ல இறைவனுக்கு தெரியாதா  என் மனதில் தோன்றிய எண்ணங்களை ?

விஷ்ணு சஹஸ்ரநாமம் கடகடவென்று பீஷ்மன் உரைக்க சகலரும் புளகாங்கிதமடைந்து கேட்டனர்.  பீஷ்மன் பூமியிலிருந்து விடை பெற்றான் மீண்டும் ப்ரபாஸனாக அஷ்ட வசுக்களில் ஒருவனானான்.

''அடாடா... கிருஷ்ணா எவ்வளவு பெரிய  தவறுதல் நிகழ்ந்து விட்டது.  பீஷ்மர் உரைத்த  விஷ்ணு சஹஸ்ர நாமத்தை ஒருவருமே  எழுதி வைத்துக்  கொள்ளவில் லையே....  வியாசரே உங்களால் அதை திரும்பிச்  சொல்லமுடியுமா? என்று  பரிதாபமாக கேட்டான் யுதிஷ்டிரன்.'
'கிருஷ்ணனைக் கேட்டுப்பார்'''
'நான் எப்படி அதை திரும்பிச் சொல்ல இயலும். நானும் உங்களை போல கேட்டுக்  கொண்டிருந்தவன் மட்டுமே''  என்றான் கிருஷ்ணன்.''
ஆஹா  என்ன செய்வது நீயே வழி சொல் கிருஷ்ணா'' என்றான் தர்மன்
.''இதோ இவன் இருக்கிறானே மறந்துவிட்டாயா?".  கிருஷ்ணன் சஹாதேவனைக் காட்டினான்.
''சகாதேவன் கழுத்தில் பார்  சுத்த ஸ்படிகமணி  மாலை. அது சகல மந்த்ரங்களையம்   தன் வசம்  ஈர்த்துக் க் கொள்ளக்கூடியது. அது பீஷ்மர் உரைத்ததெல்லாம் உள் வாங்கி கொண்டிருக்கிறது. அது உள்வாங்கிய சப்தத்தை வேத வியாசர்  கேட்டு எழுதட்டும்;;''

.ஸஹாதேவன் அப்படியே  திருப்பிச் சொல்ல  வேதவியாசர் எழுத  MS  அம்மாள் பாட  நாம் வீட்டிலிருந்தே விஷ்ணு ஸஹஸ்ரநாமம்  கேட்டு அனுபவிக்கிறோம்..

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...