Wednesday, June 29, 2022

RAMADAS DEVOTION

காருண்ய ஸிந்தோ   ஸ்ரீ ராமா -- நங்கநல்லூர் J.K. SIVAN

பகவான்  பக்தர்களை சோதனை செய்வதற்கு காரணம்  நமது மனசு கூட தங்கம் என்பதால்.   நெருப்பில்  காய்ச்சி ஸ்புடம் போட்டால் தான்  தங்கம்  மாசுகள் நீங்கி பொன்மயமாக  ஒளிரும்.  சூட்டோடு அதை அடித்தால் தான் அதன் கடினம் நீங்கி  வளைக்கிறபடி  வளையும்.

 கோபன்னா  என்கிற  பத்ராசல  ராமதாஸர்  அப்படி ஒரு ராம பக்தர் சிறையில் வாடி பாடிய பாடல்கள்   நம் கண்முன்னே  ராமனைக்  கொண்டு நிறுத்துபவை.  

கோபன்னாவின்  மாமா மத்தன்னா கோல்கொண்டா சுல்தான் அப்துல் ஹசன் தானாஷா வின்  மந்திரி.    அவர் செல்வாக்கால் சுல்தானிடம் கோபன்னாவுக்கு உத்யோகம் கிடைத்து, கஜானா விலிருந்து பணம் எடுத்து சிதைந்து போயிருந்த பத்ராசலம் ராமர் கோவிலை புதுப்பித்தார். விஷயம்  சுல்தான் காதுக்கு எட்டி  தானா ஷா கொதித்தான்.
''கோபன்னா, உடனே  எடுத்த  பணத்தை கஜானாவில் கட்டு. உன் தலையை காப்பாற்றிக்கொள்''.  மத்தன்னா  கெஞ்சி உயிர் தப்பியது ஆனால்  பன்னிரண்டு வருஷம் கோல்கொண்டா சிறையில் ஜெயில் தண்டனை''.

சிறையில்  ''ராமா  உன்னை பார்க்க முடியவில்லையே என்று  கோபன்னா வாடி ராமனையே நினைந்து உருகி பாடினார்.   கோபன்னாவின் குரல் கோதண்ட ராமனுக்கு கேட்காமலா போகும்?

ஒருநாள் காலை தானா ஷாவின் அரண்மனை வாசலில்  சுல்தானைப் பார்க்க  இருவர். ஒருவர் கையில் பெரிய மூட்டை ஒன்று.
வாசல் காவலர்கள் சுல்தானின் அனுமதி பெற்று உள்ளே  சென்றார்கள்.
''யார் நீங்கள் ? என்ன விஷயம்? என்றான் தானாஷா '
''நாங்கள் கோபன்னாவின் பணியாளர்கள்''
''ஓ அப்படியா. என்ன விஷயமாக வந்தீர்கள்?
''அவர் உங்களுக்கு பணம் திருப்பி தரவேண்டுமாம். அதை வட்டியோடு சேர்த்து கொண்டு வந்திருக்கிறோம். எண்ணி  சரி பார்த்து பெற்றுக்கொண்டு அவரை உடனே சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும்.
''அப்படியா? என் கஜானாவிற்கு சேரவேண்டிய பணம் வந்து சேர்ந்துவிட்டால் எனக்கு கோபன்னா வை விடுதலை செய்வதில் தயக்கம் இல்லை. எங்கே பணம்?
ஒரு பெரிய பாத்திரம் கொண்டுவரப்பட்டது. அதில் மூட்டையிலிருந்த  தங்க மோஹராக்களை  கலகலவென்று  வந்த இருவரும் கொட்டினார்கள்.
''அளந்து கொள்ளுங்கள், எண்ணிக் கொள்ளுங்கள்'' .
சுல்தானின்  ஆட்கள் மொத்த பணத்தை எண்ணினார்கள். வந்த இருவரும் உட்காரக் கூட இல்லை. நின்று கொண்டே இருந்தார்கள். பணத்தை எண்ணினதில்   சுல்தானுக்குச்  சேர வேண்டிய தொகையை விட அதிகமாகவே ரொக்கம் இருந்தது. சுல்தானுக்கு பரம சந்தோஷம்.

''சரி, கோபன்னாவை விடுதலை செய்யுங்கள் நாங்கள் வருகிறோம்'' - வந்த வீரர்கள் இருவரும் புறப்பட்டு விட்டார்கள்.
சிறையில் வாடி ராமனை வேண்டி உருகிக் கொண்டிருந்த கோபன்னாவின் முன்னால் சுல்தானின் ஆட்கள்.
''வாருங்கள் எங்களோடு. சுல்தான் உங்களை அழைத்து வர கட்டளை இட்டிருக்கிறார்.
''ஓஹோ, எனக்கு சிரச்சேதமா? அதற்கு தான் தான் அழைப்பா? எதுவானால் என்ன. எல்லாம் ராமனின் சித்தம்.''
சுல்தான் முன்னே நின்றார் கோபன்னா.   சுல்தான் முக மலர்ச்சியாக இருந்தான்.

'கோபன்னா, நீங்கள் எவ்வளவு பெரிய செல்வந்தர் என்பது தெரியாமல் உங்களை அவமானப் படுத்தி விட்டேன். எனக்குச்  சேரவேண்டிய பணம் எல்லாம் அதிகமாகவே திரும்ப தந்து விட்டீர்கள். நீங்கள் தாராளமாக இனி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். உங்களை விடுதலை செய்தாகிவிட்டது. இனி நீங்கள் என் விருந்தாளி''.

கோபன்னாவுக்கு  ஒன்றுமே  புரியவில்லை.
'சுல்தான்,  என்ன சொல்கிறீர்கள்?  நானா? செல்வந்தனா? என்னுடைய ஆட்களா?   யார் அவர்கள்? உங்களுக்கு சேரவேண்டிய பணத்தை தந்தார்களா? யார் அவர்கள்?, எனக்கு அப்படி யாருமே கிடையாதே, என்னிடம் செல்வமே இல்லையே? - குரல் தழுதழுக்க தட்டு தடுமாறி கேட்டார் கோபன்னா.

'என்ன விளையாட்டு,  வேஷம்,   இது  கோபன்னா?  இரண்டு வீரர்கள் ஆஜானுபாகுவாக பொன்னிற சரீரத்தோடு, காதில் குண்டலம், ஜடாமகுடம் தரித்து, கையில் நீண்ட வில் வைத்துக் கொண்டு இங்கே வந்து  என்னை சந்தித்தார்களே, அதில் கொஞ்சம் பெரியவன் நீல நிறத்தில் இருந்தான். மற்றவன் பளபளக்கும் பொன்னிறமாக இருந்தான். இளையவன் தான் கையில் தங்க மோஹராக்கள் கொண்ட மூட்டை இருந்தது.

''சுல்தான் சுல்தான்.....என்ன சொல்கிறீர்கள். எனக்காக  யார் வந்து யார் பணம் கட்டியது?  அவர்கள் யார் ?
''என்ன கோபன்னா, உங்களது பணியாளர்கள் என்றார்கள்,   தெரியவில்லை என்கிறீர்களே. நான் அவர்கள் பெயரைக்   கேட்டேனே.''
கோபன்னாவுக்கு உடல் நடுங்கியது.

''சுல்தான் யாரும் எனக்கு அப்படி இல்லையே. என்ன பெயர் சொன்னார்கள் ? ஸ்ரீ ராமா இது என்ன சோதனை!
''கொஞ்சம் இருங்கள் எனக்கு அவர்கள் பெயர் மறந்து விட்டது. இதோ என் சேனாபதி. அவர் அப்போது அருகில் இருந்தார் அவர் நினைவு வைத்திருப்பவர். சேனாபதி கை கட்டிக்கொண்டு அருகே வந்தான்.
 ''அஹமத், இங்கே வந்தவர்கள் என்ன பெயர் சொன்னார்கள்?''
' நீல நிறமாக கொஞ்சம் பெரியவராக இருந்தவர் பெயர் 'ராமோஜி, மற்றவர் லக்ஷ்மோஜி''

 கோபன்னா சிலையானார்.இரு கைகளும் சிரத்தின் மேல் சென்றது. கண்களில் தாரை தாரையாக ஆனந்த பாஷ்பம் வழிந்தது. கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய இரு கைகளை தலைக்கு மேலே தூக்கி வணங்கிய வாறு சிலையாக நின்ற கோபன்னா தனக்காக பணம் கொண்டு வந்து கடனைத் தீர்த்தவர்கள் ராம லக்ஷ்மணர்களே என்று புரிந்து கொள்ள வெகு நேரமாக வில்லை.
தானா ஷாவும் அவர் வழிபட்ட தெய்வமே தனக்கு முன் காட்சியளித்தவர்கள் என்று புரிந்து கொண்டு ஆச்சர்யப்பட்டான். அவன் கோபன்னாவை பல்லக்கில் ஏற்றி பத்ராசலம் அனுப்ப, அவர் அங்கேயே தங்கி ''ராமதாசனாக'' சேவை செய்து வாழ்ந்தார். ராமர் கொடுத்த தங்க மோஹராக்கள் சில இன்னும் அங்கே இருக்கிறதாம். நான் சென்றபோது ஆலய அரும்பொருள் காட்சி நிலையத்தில் கண்ணாடி பெட்டகத்தில் சில காசுகள் பார்த்தேன்.
பத்ராசல ராமதாஸ் தெலுங்கு பக்திப் பாடல்கள் மனதை உருக்கக்கூடியவை. தெலுங்கு தெரியவேண்டும் என்பது தேவையில்லை. பக்தி பாவம் ஒன்றே போதும்.அவர் பாடிய பாடல்களில் ஒன்று :

eteeruga nanu dayachoosedavo inavamsottama rama
na tarama bhava sagara meedanu naLina daLekshana rama ॥
Charanam:
sree raghu nandana seeta ramana srita jana poshaka rama
karunyalaya bhakta varada ninu kannadi kanupu rama ॥

kroora karmamulu neraka jesiti neramulenchaku rama
daridryamu pari haramu cheyave daiva sikha mani rama ॥

vasava nuta rama dasa poshaka vandana mayodhya rama
bhasura vara sadguna mulu kalgina bhadradreeswara rama ॥


''ஹே ராமா, ரவிகுல சோமா, ரகுகுல திலகா, நீ எந்த விதத்திலாவது, எப்படியாவது ஒரு வழியில், என் மீது கருணை காட்டமாட்டாயா உத்தமா? தாமரைக்கண்ணா, உன் தயவில்லாமல், அருளில்லாமல், கருணையில்லாமல் என்னால் இந்த கொடிய சம்சார சாகரத்தை கடக்க முடியுமா? நீ தானே தாரக ராமன்.

ராகவா. ரகுராமா, சீதா மணாளா, ரகுநந்தனா, பக்தர்களை அரவணைத்து காக்கும் பக்தவத்சலா.   கருணை நிரம்பிய ஆலயமே, பக்தர்கள் வேண்டும் வரமளிப்பவனே,கோசலைக்கு மகனாக பிறந்து அவளுக்கு வரமளித்தவனே,  ராமா நான் எண்ணற்ற கொடூர குரூர செயல்கள் புரிந்தவன் என்றாலும் உன்னை நம்பி வந்துவிட்டேன் அப்பா, என் கொடுமைகளை புறக்கணித்து, என்மீது கருணை கொள்வாய்.நான் நிரம்ப அவஸ்தை பட்டுவிட்டேன் அதற்கெல்லாம் பரிகாரமாக, என் பக்தியை ஏற்று அருள்வாய்.என் தெய்வ சிகாமணியே. ஓ ராமா என் துன்பத்திலிருந்து என்னை விடுவி.இந்திராதி தேவர்கள் வணங்கும் தசரதன் மகன் தாசரதீ எனக்கு அபயம் அளிக்க வேண்டும். பக்த பரிபாலனம் செய்யும் பட்டாபிராமா''

வழக்கம் போல அவரது தாய் மொழியிலான இந்த தெலுங்கு பத்ராசல ராமதாசர் கீர்த்தனையை அற்புதமாக மனமுருகி பாடி இருக்கிறார் ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா. எத்தனையோ பேர் பாடிஇருந்தாலும் இது மனதை தொட்டதால் நானும் பாடிப் பார்த்தேன். யூ ட்யூப் லிங்க் கிளிக்   

 https://youtu.be/MKXTj0qH42g

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...