Saturday, June 25, 2022

TRUE DEVOTION

 


என்ன தான் உன் ப்ரேமையோ!   -  நங்கநல்லூர்   J K SIVAN 

யாருமே  கிருஷ்ண பக்தியில் ராதைக்கு ஈடாக முடியாது.
ராதைக்கு அப்படி  கிருஷ்ணன் மேல் பக்தி. தலைகீழாக நின்று தவம் செய்து என்னதான் ப்ரயத்தனப்  பட்டாலும் எவ்வளவு படித்தாலும், எழுதினாலும், பேசினாலும், பாடினாலும் , கேட்டாலும்,  ராதா--கிருஷ்ணன் பிரேம பந்தம் விளக்க முடியாதது. புரிந்து கொள்ள புரியாது. புரிய வைக்கவும் முடியாது. பாதம் ஹல்வா என்று அதன் படத்தை பல விதத்தில் வண்ணத்தில் பிரசுரித்தாலும், நாள்  கணக்கில் அதன் ருசியை பற்றி எடுத்துரைத்தாலும், அதன் செய்முறை பக்குவம் பற்றி எழுதினாலும், அதன் உண்மையான தெரியப்போவதில்லை. ஒரு விள்ளல் வாய்க்குள் போனால் அன்றி ருசி அறியமுடியாது. பாதம் ஹல்வா ருசியாக இனித்தது என்று எழுதினால் அதன் ருசி தெரியவா போகிறது?.

இது போல் ராதா-கிருஷ்ண பிரேமையை மனத்தில் உருவகப்படுத்திக்கொண்டு கண் மூடி ரசித்தால் மட்டுமே அதன் ருசி புரிபடும். நாமே ராதாவாக மாறி கண்ணனை நேசித்தால் ஒருவேளை  அப்போது தான்  தூய பிரேமை அன்பு பாசம் நேசம் என்றால் என்ன என்று தெரியவரும். இது அவரவர் அனுபவிக்க வேண்டியது. உனக்காக நானோ எனக்காக நீயோ அனுபவிக்க முடியாது. அளவில்லாமல் எண்ணற்ற இன்ப அனுபவங்கள் பிரவாகமாக ஒவ்வொரு மனத்திலும் வெவ்வேறாக உருவாகும் போது தான் பக்தி என்பதன் உள்ளர்த்தம் புரியும். அப்போது தான் நெருப்பு என்று சொன்னால் அதன் உஷ்ணம் புரியும்.

கடவுளிடம் எதாவது ஒன்று நமக்கு தேவை என்ற போது மட்டும் வேண்டிக்கொள்கிறோம். அவர் எப்படி இதை நிறைவேற்றுவார்?  இது தான் நம்முடைய  ப்ராப்ளம்.   எங்கு, என்றைக்கு, எவர் மூலம் கொடுப்பாய்?  என்று அவனை வேண்டினால் அந்த எதிர்பார்ப்பு முழு மனதுடன், நம்பிக்கையுடன் கடவுளை வேண்டுவது ஆகாது. கடவுளை நாம் சந்தேகிப்பதைத்தான் அது தெரிவிக்கிறது.

ராதா கண்ணனை முழுமையாக   தன்னுடைய உயிர் மூச்சாக நம்பினாள், தானே கண்ணன் என்று உணர்ந்தவள்.   கண்ணா  நீ வேறோ நான் வேறோ  என்று இணை பிரியாதவள். அவள் எண்ணத்தில் அதனால் தான் கண்ணன் பிரதிபலித்தான் .  சரணாகதியின் உச்ச நிலை இது. மீராவின் பாடல்களிலும் இந்த த்வனி எதிரொலிக்கும்.  ஆண்டாளின்  பாசுரங்களும் அவ்வாறே.

ராதை எப்போதும் தன்னை மற்ற கோபியர்களை விட உயர்ந்தவள், சிறந்தவள், தலைவி, எனக் கருதவில்லை. சொல்லவில்லை.  அப்படி ஒரு நினைப்பு அவளுக்குள் எழவே இல்லை . அவளது கிருஷ்ண பக்தியும் பிரேமையும் தானாகவே மற்ற கோபியரை அவளை வணங்கச் செய்தது. அடி தொட்டு பின்பற்றச்  செய்தது.

ஒரு சிறு வேண்டுகோள். எந்த காரணத்தைக் கொண்டும் நம்மிடையே உலவுகின்ற சில படங்களில், நாட்டியங்களில், நாடகங்களில், தொலைக் காட்சிகளில், கதைகளில், கவிதைகளில், சினிமா பாடல்களில் வர்ணிக்கப்படுகின்ற ராதாவை ரசித்து விட்டு இது தான் , '' ராதா கிருஷ்ணன் காதலா , பிரேமையா , அப்பட்டமாக இது தானா'?''  மட்டரகமாக  இருக்கிறதே''  என்று எடை போட வேண்டாம். அறியாமையால் அதெல்லாம் வெளிப் படுத்தப்பட்டவை.

உங்கள் மனதில் நீங்கள் போடும் எடை உங்களுடையதாகவே இருக்க வேண்டும். மற்றவரிடம் கடன் வாங்கிய கருத்தாக அமைய வேண்டாம். அதாவது மேலே சொன்ன, படம் கதை, பாட்டு, நாடகம், நாட்டியம் இத்யாதி இத்யாதி...அவரவர் மனநிலையை பிரதிபலிப்பது. உண்மையை வெளிப்படுத்துவது இல்லை.  அது முடியாது. ஏன் என்றால் அவரவர் அதை அனுபவிக்க வேண்டும் அப்போது சொல்லமுடியாது, எழுத முடியாது. அந்த ஆனந்தத்தை  வார்த்தைகளில் படங்களில் கொண்டுவரமுடியாது.. ஸ்வானுபவம்.  இதை தான்  கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்கிறோம்.

விரகத்தை விரசமாக்க கூடாது. புனிதம் கெட்டுவிடும். பெருமை மங்கிவிடும். உயர்ச்சி தாழ்ந்து விடும். ஆங்கிலத்தில் ஒருவர் எழுதின RADHA என்கிற எழுத்தை திருப்பிப்போட்டால் ARADH என்று வருகிறதே ஓஹோ ராதா என்ற சொல்லே கிருஷ்ண ஆராதனை யின் பிரதிபலிப்போ, தத்துவமோ?  RADHA  தான் ADHAR என்று வருவதால் கிருஷ்ணனுக்கு ராதா தான் ஆதாரமா? ராதா ஒவ்வொரு செயலிலும் சொல்லிலும் எண்ணத்திலும் கண்ணனையே ''ஆராதி''த்தவள், 'ஆதார'' மாக கொண்டவள் என்று இப்படி கூட அர்த்தமாகிறதே.  அறிய முடிகிறதே. இப்படி தான் சிந்திக்கவேண்டும். அப்போது தான் உங்கள் மனதில் ராதா க்ரிஷ்ணன் பிரேமை ஒருவாறு அஸ்திவாரம் பெறும். ராதாவை உண்மையாக உணரமுடியும்.

ஒரு குட்டிக்கதை சொல்லாவிட்டால்  என் மண்டை வெடித்து விடும்.
ராதா ஏதோ ஒரு கிராமத்துக்கு நடந்து போனாள் . நேரம் ஆக ஆக சுடு மணலில் நடந்து கொண்டிருந்த ராதாவிற்கு எங்காவது ஒரு மர நிழலில் சற்று இளைப்பாறலாமே என்று தோன்ற எங்குமே மரமோ நிழலோ எதுவுமே இல்லை. அவள் விடுவிடுவென்று சுடு மணலில் மேலும் நடந்தாள். 
அவள் ஏன் கண்ணனை அப்போது நினைக்கவில்லை? 
கண்ணனை நினைத்தால் கால் சுடாதே. 
ஏன் அப்படிச் செய்யவில்லை? 
காரணம் என்ன தெரியுமா?
'' மாட்டேன், மாட்டவே மாட்டேன், அவனை நினைத்தால் அவன் இங்கு என்னோடு வந்து பாவம் அவனும் இந்த சுடுமணலில் வாடுவான். இந்த  சுடுமணலில் நடக்கும் கஷ்டம் என்னோடு போகட்டும். நிழலில் சென்று அங்கே அவனை நினைக்கிறேன். அவனோடு இளைப் பாருகிறேன்'' -
 இது தான் ராதா. .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...