Monday, June 27, 2022

ORU ARPUDHA GNANI

#ஒரு_அற்புத_ஞானி   -    நங்கநல்லூர்  J K  SIVAN

ஹிந்துக்கள்  நம் எல்லோர் வீட்டிலும்  பெண்கள் மஹா லக்ஷ்மிகள் என்று போற்றப்படுபவர்.  . நிறைய  பெண் குழந்தைகளுக்கு  ''லக்ஷ்மி'' ''மஹா லக்ஷ்மி '' என்றும் அஷ்ட லக்ஷ்மிகள் பெயர்களை வைக்கிறோம்.  ஆனால் பேச்சு வழக்கில் அவர்கள் லட்சுமி, லஷ்மி,  லெஷ்மி, லெஸ்மி , லச்சா,  லக்கி, எச்சுமி, எச்சி என்றெல்லாம் குறைந்து போகிறார்கள்.  லக்ஷ்மியை இப்படி இழிவு படுத்தவேண்டாம்.  வாய் நிறையவே கூப்பிடலாமே .

இப்படி ஒரு லக்ஷ்மி அம்மாள் எச்சம்மாளாக திருவண்ணாமலையில் சேஷாத்ரி ஸ்வாமி கள் ரமணர் இருவருக்குமே .பக்தையாக சேவை செய்தவள்.  அடிமை. பாவம். அடுத்தடுத்து கணவன், பிள்ளை, ரெண்டு பெண்களை இழந்த படிப்பற்ற   இளம் விதவை.அனாதை. குரு கடாக்ஷத்தால் வாழ்வில்  துன்பங்கள் தொடராது என்று நம்பிக்கை கொண்டவள்.  
 படிப்பு வாசனை கிடையாது,  பணமோ சொத்து சுதந்தரமோ இல்லாதவளுக்கு போக்கிடம் எது?  முற்காலத்தில் இப்படிப்பட்ட துர்பாக்கிய சாலிகள் அநேகர் வாழ்ந்தார்கள். சமுதாயத்தின்  கொடுமை.

ஒரு தடவை ஒரு மாத காலம்  எச்சம்மாவுக்கு பித்த வாத ஜுரம். படுக்கையில் போட்டு விட்டது. ஸ்வாமிகள் தினம் தினம்  எந்நேரத்திலும் வரும் அவள் வீட்டுக்கு வருவார். எப்போது  என்று யாருக்கும் தெரியாது. அவரும்  ஏன் ஒரு மாத காலம் அந்த பக்கமே போகவில்லை?  எச்சம்மாள் சுவாமி சுவாமி என்று பிதற்றினாள். அவள் பெண் செல்லம்மாள் ஸ்வாமியை தேடி ஒருநாள் பூத நாராயணன் கோவில் வாசலில் பார்த்து காலில் விழுந்து

''அப்பா ஏன் வீட்டுக்கு வரலே. என் அம்மாவுக்கு ஜுரம் நாரா தோலா ஆயிட்டாளே . உங்களேயே நினைச்சு பிரார்த்தனை பன்னறாளே வாங்கோ'' என்றாள் .

''ஓஹோ நாளைக்கு பார்ப்போம்'' என்ற ஸ்வாமிகள் மறுநாள் காலை 6 மணிக்கே வந்து விட்டார். எச்சம்மாள் படுத்திருந்த கட்டில் ஓரத்தில் உட்கார்ந்தார். செல்லம்மாவுக்கும் விஷ ஜுரம் தொற்றிக் கொண்டது..

''எனக்கு தயிர் சாதம் குடு'' என்று கேட்டார். முடியாமல் செல்லம்மா கொண்டு வந்து கொடுத்தாள் . ஒரு கவளம் சாப்பிட்டார்.

 ''இந்தா. இதை  எச்சம்மாவுக்கு கொடு. நீயும் சாப்பிடு''.  அவள் வாய்க்கு அருகே நீட்டினார். செல்லம்மாள் கொஞ்சம் கொஞ்சமாக அதை எச்சம்மாவுக்கு ஊட்டினாள். தானும் சாப்பிட்டாள். அன்று சாயந்திரம் எச்சம்மா எழுந்து உட்கார்ந்தாள். செல்லம்மாள் மறுநாள் காலை மாட்டை குளிப்பாட்டி கொண்டிருந்தாள்.

எச்சம்மாவுக்கு ரமணன் என்று ஒரு பேரன். ஒருநாள்  கீழே விழுந்து கால் சுளுக்கிக் கொண்டு வீக்கம். நடக்க முடியவில்லை. அந்த காலத்தில் எலும்பு முறிவைக் கூட சுளுக்காக பாவித்து மந்திரித்து உருவி குணமாயிற்று. வலி அதிகமாகவே, அழுதான்.  எச்சம்மா  பேரனைத்    தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு நடந்தாள்.   போகும் வழியில் சேஷாத்திரி ஸ்வாமிகளை எதிரே பார்த்துவிட்டாள் . ரமணனை இறக்கி விட்டு வணங்கினாள் . சுளுக்கு விஷயம் சொன்னாள் .
''ஓஹோ ஆஸ்பத்திரிக்கு போறியோ . போ போ'' என்று சிரித்தவாறு சொல்லிவிட்டு ரெண்டு கை மண்ணை வாரி எடுத்து ரமணன் உடம்பு கை கால் பூரா தானே பூசிவிட்டு, துளி மண்ணை அவன் வாயிலும் போட்டு சாப்பிடுடா '' என்றார்.

ரமணனைத் தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரி போனதும், வெள்ளைக் கார டாக்டர் ரமணனை '' இறக்கி நடக்க வை'' என்கிறான். ரமணன் ஜோராக நடக்கிறான். வலி எங்கே போனது?

''கையைப் பிடித்துக் கொண்டு கிட்டே அழைத்து வா''' என்கிறான் டாக்டர். ரமணன் தலையை மாட்டேன் என்று ஆட்டிவிட்டு படு வேகமாக ஆஸ்பத்திரி வாசலை நோக்கி ஓடுகிறான்!!! காலில் தான் ஒன்றுமே ப்ராப்ளம் இல்லையே. எதற்கு வந்தாய்?'' என்று எச்சம்மாவை கோபிக்கிறான் வெள்ளைக்கார டாக்டர்.

இதே போல்  முன்பு ஒரு முறை பித்த ஜுரம் கண்டபோது மூன்று நாள் வாட்டியது. திடீரென்று டு ஸ்வாமிகள் வந்து விளாம்பழம் சக்கரை போட்டு சாப்பிடேன் என்றதும் அவ்வாறே செய்தவள் குணமடைந்தாள் .

என்ன காரணம் சொல்வது இதற்கெல்லாம்?? மந்திரமா, மாயமா? அதிசயமா? தெய்வ சக்தியா? நிச்சயம் பக்தி தந்த தெய்வ சக்தியே. சித்தர்கள் யோக சக்தியே.

ஒருநாள் ஸ்வாமிகள்  எச்சம்மா  வீட்டுக்கு போனார். அவள் பூஜை பண்ணும் நேரம் அது.

  'நீ  என்ன பூஜை பண்றே?''
''உங்க படத்தையும்,  ரமணர் படத்தையும் வைத்து தான் பூஜை பண்றேன் இதோ பாருங்கோ '' என்றாள் .

''எவ்வளோ நாள் இந்தமாதிரி எல்லாம் பூஜை பண்றது.  தியானத்தில் இருக்க வேண்டாமா?''  என்கிறார் சுவாமி.

''எப்படின்னு சொல்லிக் கொடுங்கோ? பண்றேன் ''

'இப்படித்தான்'' என்று சுவாமி தரையில் பத்மாஸனம்  போட்டு அமர்ந்தார்.அவ்வளவு தான். அவர் சிலையாகி விட்டார். காலை பத்துமணிக்கு இது நடந்து  மாலை நாலு மணி கிட்டத்தட்ட அவர்  அசையவே இல்லை.  சமாதி நிலை.    மாலை  நாலரை மணி அளவில் இதுவரை எதிரே அமர்ந்து எத்தனையோபேர் தன்னையே  பார்த்து க்கொண்டிருந்தது எதுவுமே  தெரியாது அவருக்கு.  மெதுவாக கண் திறந்தார்.
''எச்சம்மா, பார்த்தியா. இப்படி தான் தியானம் பண்ணணும்  நீ''
நம்மால் முடியுமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...