Monday, June 13, 2022

life lesson

 மனதில் பதியட்டும்  -22 -  நங்கநல்லூர்  J  K  SIVAN



இருப்பது என்னவோ  நாலு  வேதங்கள்  தான்.  ரிக், சாம, யஜுர், அதர்வ வேதம் என்று பெயர். அதில்  யஜுர் வேதம் முக்கியமானது. அதற்குள் தான்  நடு சென்டர் என்று நாம் சொல்வோமே அந்த மத்ய  பாகமாகிய நாலாவது காண்டம் முக்கியமானது.  அந்த நாலாவது காண்டத்திலும்  நடுவே  நாலாவது ப்ரஸ்னம் அதி முக்கியமானது. அதன் பெயர்  ஸ்ரீருத்ரம்.   அதற் குள்ளே   ‘நம: சிவாய’ என்ற பஞ்சாக்ஷர வாக்கியம் மத்தியில் இருக்கிறது. அதன் மத்தியில் ‘சிவ’ என்ற இரண்டு அக்ஷரங்கள் அடங்கியுள்ளன. இதையே ஜீவ ரத்னம் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இந்த அபிப்பிராயத்தை அப்பய்ய தீக்ஷிதர் ப்ரம்மதர்க்க ஸ்தவத்தில் சொல்லியிருக்கிறார்கள். அந்த ப்ரம்மம் சிவஸ்வரூபம் என்று தெரிகிறது. பஞ்சாக்ஷர மந்திரம் ரொம்ப ரொம்ப சக்தி வாய்ந்தது.

உன்னதமான  சிவ  ஸ்வரூபத்தை ஆராதிப்பதற்கு அடையாளமாகச் சிவபக்தர்கள் எல்லோரும் ஐந்து வித காரியங்களைச் செய்ய  வேண்டும். 
 (1) விபூதி  பட்டையாக நெற்றியில் உடலில்  கழுத்து மார்பு வயிற்றில்  இட்டுக்கொள்வது.
 (2) ருத்ராக்ஷம் அணிதல், 
(3) பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபம் செய்வது.
(4)  பஞ்சாக்ஷர மந்திரம் உபதேசமாகாதவர்கள்  ‘சிவ’சிவ''  என்ற பதத்தை ஜபம் செய்தல்,
 (4) வில்வ தளத்தால் பரமேச்வரனைப் பூஜிப்பது 
(5) இருதயத்தில் சதா சிவத்யானம் செய்து கொண்டே இருப்பது.

இவைகள் ஒவ்வொன்றும் ஈச்வரனுக்கு விசேஷப்ரீதியைக் கொடுக்கக் கூடியது.

(குறிப்பு: பஞ்சாக்ஷர மந்திரத்தை உபதேச பெற்று ஜபம் செய்தல் சிறப்பு. எனினும் உபதேசம் பெறாதவரும் இம்மந்திரத்தைத் தாராளம் சொல்லலாம்.
  

''கொல்வாரேனும்,  குணம் பல நன்மைகள் 
இல்லாரேனும் இயம்புவ  ராயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் 
நல்லார் நாமம் நமச்சிவாயவே''   - சம்பந்தர்.

 பரமேச்வரனுடைய கீர்த்தியை நாம் வாக்கினால் சொல்லுவதனாலும் கேட்பதனாலும் பவித்திரர்களாக ஆகிறோம். அவருடைய ஆக்ஞையை யாரும் மீறமுடியாது. அகம்பாவமாக இருக்கும்போது அவர் சிக்ஷிக்கிறார். குழந்தைகள் ஏதாவது தப்பு செய்தால் நாம்அடிக்கிறோம். அது   போல பரமேச்வரன் தேவதைகளை சிக்ஷித்தார்.  ஹாலஹால  விஷம் பாற்கடலில் உண்டானபொழுது அதைச் சாப்பிட்டு ரக்ஷித்தார். சகல தேவதைகளும் பரமேச்வரனுடைய குழந்தைகள்.

 பரமேச்வரன் ஓங்காரம், ஸ்வரூப ப்ரம்மமும் ஓங்காரந்தான். அதனுடைய அர்த்தத்தை விசாரிக்கும் ஓர் உபநிஷத்தே தனியாக இருக்கிறது. அதற்கு மாண்டூக்யோபநிஷத் என்று பெயர். அதில் ‘சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்த்தம் மன்யந்தே’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. சிவஸ்வரூபம் தான் பரப்பிரம்மம். ப்ரதோஷ காலத்தில் ஈச்வர தரிசனம் செய்ய வேண்டும். ஈச்வரன் கோயிலில் ப்ரதோஷ காலத்தில் எல்லாத் தேவர்களும் வந்து ஈச்வர தரிசனம் செய்கிறார்கள்.

 சாங்க்ய சூத்திரத்தில்   பரமேஸ்வரனை மூன்று கண் உள்ளவன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அமரமும் அப்படியே சொல்லுகிறது. லோகத்தில் ஈச்வரன் என்ற சப்தம் சிவனுக்கே வழங்கப்படுகிறது. அவன் மஹாபுருஷன், ப்ரம்ம சூத்திரத்தில் ‘சப்தாதேவப்ரமித’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஈசானன் என்னும் சப்தத்திற்கு எது அர்த்தமோ அது  தான் பரமேச்வர ஸ்வரூபம்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...