Monday, June 27, 2022

THARPANAM

 


தர்ப்பண சமாச்சாரம்   -  நங்கநல்லூர்  J K  SIVAN

பக்தி வேறு கடமை வேறு.  வீட்டில்  பெற்றோரை  பட்டினி போட்டுவிட்டு  வெளியே பெருமைக்கு  பேர் பெறுவதற்கும் செய்யும்  தான தர்மத்தால் எந்த பயனும் இல்லை.   பித்ரு சாபம், பித்ரு தோஷம் ரொம்ப கடுமையானது.  பித்ரு தர்ப்பணம் செய்யவேண்டிய மாதத்தில் வேறு பூஜைகளோ, ஹோமமோ செய்யமாட்டார்கள்.  வேறு மங்கள நிகழ்ச்சிகள் வைத்துக் கொள்ளமாட்டார்கள். அந்த மாதத்தில் வேறு எந்த ஹோமத்திலோ, , ஆலய நிகழ்ச்சியிலோ கலந்து கொண்டு சங்கல்பம் செய்து கொள்ளமாட்டார்கள்.

தர்ப்பணம் செய்யும் நாளில்  தர்ப்பணம் முடியும் வரை நித்ய பூஜை கிடையாது.
அமாவாசை அன்று  பித்ருக்கள் ரொம்ப பசியோடும் தாகத்தோடும்  வீட்டு வாசலில் காத்துக் கொண்டு இருப்பார்கள், எள்ளும் நீரும் தர்ப்பண மந்திரத்தோடு அளிக்க வேண்டும்.  அமாவாசை அதனால் பித்ரு திதி எனப்படுகிறது.அவர்கள் ஆசியோடு தான் குடும்பம் தழைக்க முடியும். க்ஷேமமாக இருக்க முடியும்

 மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய 4 மாதங்களிலும் கிருஷ்ணபக்ஷ அஷ்டமி திதியன்றும்  அஷ்டகை எனப்படும் சிராத்தம் செய்வது வழக்கம்.

 தமிழ் மாத பிறப்பன்று பித்ருக்களை வழிபட்டு சூரியனை வணங்குவதற்கு மிகச் சிறந்த நாள். அன்று சூரியனுக்குச் செய்யும் பூஜை மற்றும்  ஏழைகளுக்குச் செய்யப்படும் தானம் ஆகியவை அளவற்ற பலனைத்தரும்.

ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதிநாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மஹாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4,அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்ய வேண்டியது தவிர்க்க முடியாதது. சிராத்தம் செய்யும் நாட்களும் மிகவும் புண்ணியங்களைத்தரும்.

''அம்மா  அப்பாவுக்கு ஸ்ராத்தம்  பண்ணாமல் எங்களுக்குச்  செய்யும் பூஜையை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று விஷ்ணு சிவன் ரெண்டு பேருமே  சொல்கிறார்கள்.
ஸாஸ்த்ர  பிரகாரம் சமைத்து,  ஹோமம், பிண்டதானம் செய்து, நடத்தப்படும் ஸ்ராத்தத்துக்கு பார்வண சிராத்தம் என்று பெயர்.
ஹோமம் பிண்டதானம்   இல்லாமல்  வெறுமே  சமைத்து  பரிமாறும்  ஸ்ராத்தம்  சங்கல்ப ஸ்ராத்தம்.
ஒருத்தருக்கு சமைத்துப்போட  தேவையான பொருட்களை மட்டும் கொடுத்து   அரிசி, வாழைக்காய், காய்கறிகள், பருப்பு போன்ற பொருட்கள்  மட்டும்   தக்ஷணையோடு  தரும் ஸ்ராத்தம் ஆம ஸ்ரார்த்தம்.
ஸ்ராத்தம்  பண்ண  எவ்வளவு செலவாகுமோ அந்த பணத்தை விட நாலு மடங்கு கூட தக்ஷணை யாக தந்து செய்யும்  ஸ்ராத்தம் ஹிரண்ய ஸ்ராத்தம் .
ஸ்ராத்தம்  பண்ணவே  ஒரு வசதியும் இல்லாதவன் கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணமாக செய்யலாம்.
 பித்ரு  ஸ்ராத்தம்  அன்று  முறையாக ஹோமம் பண்ணி, சாப்பாடு போட்டு  ஸ்ராத்தம்  செய்து பிராமண போஜனம் அளித்து  பித்ருக்களாக ஆவாஹனம் பண்ணி அந்த பிராமணர்களை திருப்தி செய்தால்,  அந்த குடும்பத்தினருக்கு   நீண்ட ஆயுள்,  உடல் வலிமை,செல்வம், பசுக்கள், சுகம், தானியங்கள் ஆகியவற்றை பித்ருக்கள் அளிக்கிறார்கள் என்று நம்பிக்கை.

ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் ஸ்ராத்தம்  பண்ணுகிறார் களே, அந்த ஸ்ராத்த உணவு  பித்ருக்களுக்கு சரியான முறையில் சென்றடைகிறதா?  சரியான பித்ருவை அடையவேண்டும் என்பதற்காகத்தான், பித்ருவின்  நாமம்  கோத்ரத்தையும் அந்த  குறிப்பிட்ட திதியில் தர்ப்பணம் செய்து ஸ்ராத்தம் பண்ணுகிறோம்.  சரியான அட்ரஸ் இருப்பதால் ஒருவருக்கு பெறவேண்டியது மற்றவருக்கு தப்பாக போய் சேராது.

சில சம்பிரதாய விதிகள் சொல்கிறேன
வருஷ சிராத்தமும் மாதப்பிறப்பும்  ஒரே நாளில் வந்தால் மாதப்பிறப்பை முதலில் செய்து விட்டு பிறகு பித்ரு ஸ்ரார்த்தம் பண்ணவேண்டும்.

 அமாவாசையும் மஹாளயமும் ஒரே நாளில் வந்தால் முதலில் அமாவாசை தின தர்ப்பண பூஜைகளை செய்து விட்டு பிறகு மஹாளயத்தைசெய்ய வேண்டும்.

 பெற்றோர்களின் வருஷாந்தர சிராத்தமும் மன்வாதி அல்லது யுகாதியும் ஒன்று சேர்ந்தால் முதலில் மன்வாதி அல்லது யுகாதிதர்ப்பணங்கள் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷ சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.

தாய் தந்தை இருவரில் ஒருவருக்கு மாஸிகமும் மற்றொருவருக்கு வருஷாந்திர சிராத்தமும் ஒரே நாளில் நேர்ந்தால், முதலில்   வருஷசிராத்தம் செய்து விட்டு பிறகு மாஸிகத்தை செய்ய வேண்டும்.

 தாய் தந்தை இருவருக்கும் ஆண்டு தோறும் செய்யும் சிராத்தம் ஒரே நாளில் வந்தால் முதலில் தந்தைக்கு சிராத்தம் செய்ய வேண்டும்.பிறகு தாய்க்கு அதே நாளில் சிராத்தம் செய்ய வேண்டும்.
 பெற்றோர் இறந்த மாதம் பட்ச திதியன்று உறவினர்களின் இறப்புத்தீட்டு அல்லது உறவினர் களுக்குக் குழந்தை பிறந்த தீட்டு ஏற்பட்டுவிட்டால், தீட்டு எப்போது முடிவடைகிறதோ அன்று பிராயசித்தம் செய்தல் வேண்டும். பிறகு விட்டுப்போன சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.

இன்னும் நிறைய இருக்கிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...