Tuesday, June 14, 2022

ARUPATHTHU MOOVAR

அறுபத்து மூவர்  -  நங்கநல்லூர்  J K  SIVAN
இளையான் குடிமாறன்

அடியார்க்கும் அடியேன்''

ஆஹா சோழ  ராஜாக்களே, எவ்வளவு  பக்தி உங்களுக்கு என்று  இருகரம் தூக்கி வணங்க வைக்கிறது. அடடா  எத்தனை ராஜாக்கள், அவர்கள் கட்டிய  எத்தனை எத்தனை   கோவில்கள்.  ஒன்றைக்கூட  எங்களால் நன்றியோடு பராமரிக்க முடியாதவர்களா நாங்கள்?   இவ்வளவு அபூர்வ கலைத் திறன்.  பரந்த மனம்..  பேதமில்லாத  சைவ வைணவ பக்தி.

எங்கெல்லாம் இப்படி  அந்தக்கால  ராஜாக்கள் கோவில்கள் கட்டினார்களோ அங்கெல்லாம் அளவில்லாத புராண, சரித்திர பின்னணி. சான்றுகள். நிறைய பேர்களை நாம் தெரிந்து கொள்ளமுடியும் வகையில் கல்வெட்டுகள், அடையாளங்கள் எல்லாம் வேறு விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்.

ராஜேந்திர சோழீஸ்வரம் என்று ராஜேந்திர சோழன் கட்டிய ஒரு கோவில் உள்ள ஊரின் பெயர் இளையான்
குடி.  சிவகங்கை ஜில்லாவில் ஒரு சிறு கிராமம்.  அங்கே  ஒரு அற்புத சிவன் கோவில். ராஜேந்திர சோழீஸ்வரன் என்று பெயர், அம்பாள் ஞானாம்பிகை. உற்சவர் சோமாஸ்கந்தர். வில்வம் தல விருக்ஷம். சிவனுக்கும் அம்பிகைக்கும் தனி சந்நிதி. இங்கே வள்ளி இல்லாமல் முருகன் நுழைவாயில் மண்டபத்தில் சந்நிதியில் தேவசேனாவோடு. சிவனுக்கு பின் புறம் வெங்கடாசலபதி, தட்சிணாமூர்த்தியின் வழக்கமான நாலு சிஷ்யர்களில் இங்கே ரெண்டு பேர் தான். மற்றும் விநாயகர் நவகிரஹ சந்நிதிகள்.

சரித்திரத்தில் இந்த ஊர் இந்திர அவதார நல்லூர். இங்கு பிறந்த ஒரு மகா சிவபக்தர் பற்றி இன்று தெரிந்து கொள்வோம்.

இந்திரன் யாரோ ஒரு ரிஷியிடம் சாபம் வாங்கி கட்டிக்கொண்டு பரிகாரம் தேடி இங்கே வந்தான். சிவ லிங்கங்களை ஸ்தாபித்து பூஜை செய்தான். இந்த சிறப்பு மிக்க ஊர் இளையான்குடி,  காரைக்குடி போகும் பாதையில், பரமக்குடியில் இருந்து 10 கி.மீ. தூரம். அக்காலத்தை போல் இல்லாமல் இப்போது நிறைய பஸ் வசதி. போக வர  கையில் காசும் மனதில் ஆசையும் தான் வேண்டும்.

இங்கு சோழன் கோவில் கட்டுவதற்கு முன்பே மஹாவீரர் தோற்றுவித்த ஜைனர்கள் இருந்திருக்கிறார்கள் என்று தடயங்கள் இருக்கிறது. பௌத்த நடமாட்டமும் இருந்திருக்கிறது. ராஜேந்திரசோழன் கட்டிய சிவன் கோவில் ஏற்கனவே இடிந்திருந்த ஒரு ஜைன கோவில் என்கிறார்கள்.   இந்த ஊரைச்  சார்ந்த மஞ்சுபுதூர் செட்டியார்கள் ஒருகாலத்தில் ஜைனர்களாக இருந்து சைவம் தழுவியவர்கள் என்று அறிந்தால் ஜைனர்கள் இங்கிருந்தது புரியும். நாம் அதற்குள் போகவேண்டாம். கோவிலுக்குள் மட்டும் போவோம். அங்கு ஒருவருக்கு சந்நிதி இருக்கிறது. அவர் தான் இளையான்குடி மாற நாயனார். அன்னதான பிரபு அவர்.

மாற நாயனார்  எட்டாவது நூற்றாண்டில் சுந்தரர் திருத்தொண்ட தொகையில் பாடிய ஒரு சிவ பக்தர். ளையான்குடியில் பிறந்தவர். அவர் இயற் பெயர் என்னவோ தெரியவில்லை. எல்லோராலும் அவர் அறியப்படுவது இளையான்குடி மாறனார் என்ற அறுபத்துமூவரில் நான்காவது நாயன்மார்.

மாறனார் விவசாயி. பயிர்த்தொழில். நிறைய நிலம். அமோகமாக பயிர்கள் விளைந்து செல்வம் சேர்ந்தது. அவர் சிறந்த சிவபக்தர் என்பதால் ஒரு விரதம். எந்த சிவ பக்தர், பசியாக வந்தாலும் அவருக்கு அன்ன தானம் செய்ய  வேண்டும். ஒரு நாளாவது இது தவறக்கூடாது. இதற்கு பெரிதும் ஒத்துழைத்தவர் அவர் மனைவி புனிதவதி. பெயருக் கேற்ற  புண்யவதி. 

ஒரு நல்ல மழைக்காலம். மேகங்கள் சூரியனை மறைத்து பகலே இரவு போல் இருட்டாக இருக்கும்போது இருட்டி லேயே ஒருவர் வந்தால் தெரியுமா? விடாது பெய்த மழையில் ஊரே வெள்ளமாக நீர் நிறைந்து எங்கும் குளமாக காட்சியளித்தது. ஜன  நடமாட்டமே இல்லை. பறவைகள் வண்டுகள் சில விலங்குகளின் அலறல் தான்.  
அன்று மாறனார் வீட்டில் அவருக்கும் மனைவிக்கும் கூட உணவில்லை. நெல் ஒரு மணி கூட இல்லை. வெளியே எங்கும் கிடைக்க வழியில்லை. பட்டினியாக படுத்தார்கள். அப்போது என்ன நடந்தது?
மழையை, இருளை, லக்ஷியம் செய்யாமல் பசித்த வயிறோடு உணவு தேடி ஒரு வயதான கிழவர் கம்பு ஊன்றிக்  கொண்டு தொப்பமாக மழையில் நனைந்தவாறு மாறனார் வீட்டு வாசலுக்கு வந்தார்.

”யாரோ இந்த அகால வேளையில் வந்திருக்கிறார்கள்'' என்று புனிதவதி கூற மாறனார் கை விளக்கோடு வாசல் வருகிறார். தொண்டு கிழவரை மழையில் நனைந்தவாறு நிற்பவரை பார்க்கிறார்.

யார் என்று கேட்கும் முன்பே அந்த கிழவர் ''ஐயா உம்மை பற்றி கேள்விப்பட்டேன். பசி காதை அடைக்கிறதே. ஏதாவது உணவு கிடைக்குமா?' என்கிறார்.

''ஆஹா,  ஏதாவது தயார் செய்து உடனே கொண்டு  வருகிறேன்'' என்கிறார் மாறனார். உள்ளே சென்று மனைவியை  ஏதாவது  உணவு இருக்கிறதா என்று  கேட்கிறார்.

''நாதா, உணவு தீர்ந்து பாத்திரங்களை கழுவி வைத்து ரெண்டு நாளாகி விட்டதே. இந்த அகால இருட்டில் என்ன செய்வது. சில  நாளாக தொடர்ந்து பெய்யும் மழையில் காய்கறிகள் கிழங்குகள் கூட நமக்கே இன்று கிடைக்க வில்லையே.''

''பார்ப்போம் ஏதாவது செய்தாகவேண்டும்''

''ஐயா சிவனடியார், பெரியவரே, வாருங்கள், இந்த காய்ந்த வஸ்த்ரங்களால் உடம்பை துடைத்துக் கொள் ளுங்கள், இந்த கயிற்றுக் கட்டிலில் அமருங்கள். கொஞ்சம் இளைப்பாருங்கள், உணவு தயார் செய்கிறோம். உடனே. ''சிவோஹம்'' என்று பெரியவர் கட்டிலில் சாய்கிறார் .

அவசரத்தில் நிர்க்கதியாக கையைப்  பிசையும்போது  எப்போதுமே  ஏதாவது ஒரு வழி தோன்றுவது வழக்க
மாயிற்றே. றாதா? பொடேர் என்று புனிதவதிக்கு ஒரு எண்ணம் தோன்றியது.

''நாதா, சிலநாள் முன்பு நமது நிலத்தில் நாம் செந்நெல் விதைத்தோமே அது முளைவிட்டு இருக்காது. அதை சேகரித்து எடுத்து வாருங்கள் உடனே, அதை இடித்து சுத்தப்படுத்தி, களைந்து சோறாக்கி பெரியவருக்கு அளிப்போம். வேறு வழியே இல்லை''
''அடடா என்ன அற்புத சிந்தனை உனக்கு புனிதவதி, நீ பெயருக்கு ஏற்றவள் தான். இதோ ஓடுகிறேன்.''
கொட்டும் மழையில் தலையில் ஒரு கோரைப்  பாயை போர்த்திக்கொண்டு மாறனார் வயலுக்கு ஒடி, கூடை நிறைய சேற்றில் துழாவி எடுத்த நெல் விதைகளை சேகரித்து மழைநீரில் அவற்றை கழுவி புனிதவதி அதை ஒருவாறு வாணலியில் சூடேற்றி வறுத்து ஈரம் போக்கி, இடித்து உமி அகற்றி சோறாக்கினாள். கிட்டத்தட்ட கஞ்சி மாதிரியான சாதம். அதற்கு எதை குழம்பாக்குவது. காய் கறிகள் இல்லையே. கிடைக்காதே எங்கும்.

மறுபடியும் புனிதவதியின் யோசனை வென்றது. கொல்லைப்புறத்தில் நீர் வெள்ளத்தில் தலை நீட்டிய சிறிது வளர்ந்திருந்த கீரைத்தண்டு தான் உபாயம். அவ்வளவையும் பிடுங்கி வெட்டி நறுக்கி, குழம்பாக்கினாள் புனிதவதி. சுடச் சுட அந்த கொட்டும் மழை நேரத்தில், நள்ளிரவில், சூடான சாதம் கீரைக் குழம்போடு இலையில் விழ முதியவர் வயிறார உண்டார். பசித்தவனுக்கு எதுவுமே ருசி தானே.

''இதோ உங்களுக்கு வெற்றிலை பாக்கு தாம்பூலம் கொண்டு வருகிறேன்'' என்று உள்ளே சென்று திரும்பிய மாறனார் வெறும் கயிற்றுக் கட்டிலை மட்டும் பார்க்கிறார். எங்கே முதிய சிவ பக்தர்? இந்த கொட்டும் மழையில் இரவு வேளையில் எங்கே போக முடியும்?

திகைத்துப்  போய் நிற்கிறார்கள் தம்பதிகள். ''மஹா  ப்ரபோ ஓம் நமசிவாயம். இது என்ன சோதனை? பெரியவருக்கு எங்கள் மேல் ஏதாவது கோபமோ? அதிருப்தியோ?   எங்கே சென்றார் பெரியவர், ஏதாவது  தவறு செய்துவிட்டோமோ?

இருளில் பளிச்சென்று அங்கே ஒரு திவ்ய ஒளி தோன்றியது. வேயுறு தோளி பங்கன், விடமுண்ட கண்டன், பொன்னார் மேனியனாய், புலித்தோலை அரைக்கசைத்து, மின்னார் செஞ்சடையோடும் உமை யொரு பாகனாக ரிஷபாரூடனாக காட்சி அளித்தார்.

‘என் அன்பனே! சிவனடியார்க்கு அன்புடன் பூசை செய்து, வயிறார அன்னதானம் செய்யும் உன்னை சோதிக்கவே யாம் வந்தோம். மனம் கோணாமல் சிவனடியார்க்கு சேவை செய்த நீயும் உன் மனைவி மங்கைநல்லாளும் என்னோடு கைலாசத்தில் வந்தடைந்து அடைந்து பேரின்பம் பெறுவீர்களாக'
 என  வரமளிக்கிறார். சிவன் ஜோதியாக காட்சியளித்ததால் இந்த ஊர் ஜோதீஸ்வரம் என்றும் பெயர் கொண்டுள்ளது.

இன்றும் இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வர சிவன் ஆலயத்தில் அன்னதானம் தொடர்கிறது. குரு பூஜை அன்று மாறனாரும் புனிதவாதியும் சப்பரத்தில் சிவனோடு ஊர்வலம் வருகிறார்கள். முளை நெல், கீரைத் தண்டு நைவேத்தியம்.  முடிந்தால் ஒரு நடை போய்வரவேண்டும் என்று ஒரு ஆசை. 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...