Monday, June 13, 2022

ramakrishna parmahamsar

 அருட்புனல் -  நங்கநல்லூர்  J K   SIVAN

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்

''பைத்தியத்துக்கு வைத்தியம்''

எனக்கு உலகில் எதுவும் இனி தேவையில்லை.  என் அம்மா, ஆசை அம்மா, பவதாரிணி எனக்கு காட்சி அளித்துவிட்டாளே . பிறகு வேறென்ன வேண்டும்?  ராமகிருஷ்ணரின்  உதடுகள் திரும்ப திரும்ப நாள் முழுதும்   ''அம்மா, அம்மா '' என்று  பரம  திருப்தியோடு உச்சரித்தன. நடந்தது இனி வரப் போவதற்கு அச்சாரம். இனிப்பின் ருசி தெரிந்த குழந்தை   ''இன்னும் இன்னும் தா''  என கேட்குமே? அம்மாவை  மீண்டும் மீண்டும் நேரில் தரிசிக்க  மனம் விழைந்தது.  தாயைக் காணத் துடிக்கும்  சேயானார் .  ஆடினார்  பாடினார்.  இடைவெளி குறுக்கே  இல்லாத   ''எப்போதுமே''   நிரந்தரமாக பவதாரிணி தேவையானாள். குழந்தை மட்டுமா விளையாடும்?    அம்மாவும் தான்  பாப்பாவோடு கண்ணாமூச்சி விளையாடினாள். தோன்றுவாள், மறைவாள். அழ வைப்பாள். சிரிக்க வைப்பாள். தேடி அழும்போது ''அழாதே கண்ணா'' என்று எதிரில் நின்றாள். பேச்சுக்கு, சிரிப்பதற்கு, ஆள் கிடைத்தாயிற்று அவளுக்கு மட்டுமல்ல அவருக்குமே.  ரெண்டுமே  ப்ரம்மஸ்வரூபம். எல்லாரியில்லாத  ஆனந்த ஸ்வபாவம் கொண்டவை ஆயிற்றே.

தக்ஷிணேஸ்வரத்தில்   எங்கும்  ராமகிருஷ்ணர்  கண் முன்னே ஆயிரக்கணக்கான பளிச் சென்று  ஒளி வீசும்  மின்மினி பூச்சிகள் பறக்கும். எங்கோ முடிவில்லாத, உருவம் காண  முடியாத ஒரு பனித்திரை மூடும். ஆழம் தெரியாத சமுத்திரத்தின் அடியில்... பேயாட்டம் ஆடும் அலைகளின் மேல்,.... மேலே உச்சி வானில்.... எங்கெல்லாம் என்னை அலைக்கழிக்கிறாள்  இந்த  பொல்லாத அம்மாக்காரி.?    சுடச்  சுட வெள்ளியை  உருக்கி வார்த்தது போல் இதோ பாவதாரிணியின்  திருவடிகள், கணுக்கால், தொடை, இடை, மார்பு, முகம் தலை....முழு உருவம்... ஆஹா என்ன தேஜஸ்..அவளது மூச்சு சூடாக அவர் முகத்தில் பட்டது. அவள் குரல் காதில்  தேனாக  லித்தது. பூஜை பண்ணுவார். எண்ணற்ற முறை அவளது தரிசனத்தில் தன்னை மறந்து   மரக்கட்டையாவார்.

இந்த நிலையில் ராமக்ரிஷ்ணரைப்  பார்க்கும்  நம் போன்ற   சாதாரண மானுடர்களுக்கு   அவரது ஆனந்த நிலைப்பாடு தெரியுமா, புரியுமா?  ''பைத்தியம்  வடிகட்டின சுத்த  பைத்தியம்..இந்த   அர்ச்சகருக்கு  சரியாக பூஜை எதுவுமே  பண்ணடக் தெரியவில்லையே ' என்ற சேதி பரவியது.

தட்டில் புஷ்பம். அதை எடுத்து தன் தலை, முகம், கால்களில் எல்லாம் முதலில் போட்டுக்கொண்டு பிறகு அவளுக்கு சாத்துவார். அவள் தாடையை பிடித்து கொஞ்சுவார். பாடுவார், பேசுவார், கெஞ்சுவார்.  அணைப்பார். சிரிப்பார். நர்த்தனம் ஆடுவார்.   பிரசாதம் ஒரு கவளம் எடுத்து அவள் வாயில் வைத்து ''இந்தா நீ சாப்பிட்டால் தான்  உன்னை நான்  விடுவேன்'' என்று பிடிவாதம் பிடிப்பார்.  அவருக்கே அவள் சாப்பிட்டதாக தோன்றினால் தான் விடுவார்.

இரவில் அவளை நித்திரைப்  படுத்திவிட்டு தனது அறைக்கு போவார். ஆனால் அவள் படியேறி மாடிக்கு கோபுரத்தின் உச்சிக்கு போவது தெரியும்.   ''சலங்  சலங்'' ... தண்டையும்  கொலுசும் ஒலிக்குமே. அவர் கண்களில் பவதாரிணி தெரிவாள். ஏன் தலையை விரித்து போட்டுக்   கொண்டிருக்கிறாள்? என்ன செய் கிறாள்? அவள் உருவம் பெரிதானது. கங்கை, இருளில்  ஹோ என்று   ஒலித்தது. வானுக்கும் பூமிக்குமாக அவள்  கங்கைக்கரையில் நிற்கிறது தெரிகிறதே. கரிய பெரிய உருவம். கங்கையையும் , கல்கத்தா முழுவதையும் கண்ணால்  அளக்கிறாளே  விழித்துப் பார்க்கிறாளே''

கோவில் நிர்வாகிகள் சந்தேகமே படவில்லை. இது சரியான முற்றிய பைத்தியம். மாதுர் பாபு சொல்லி சில டாக்டர்கள் வந்து ராமக்ரிஷ்ணரைப் பரிசோதித்தனர்.  எந்த மருந்தும் வேலை செய்யவில்லையே.

''எல்லோரும் சொல்வது போல் நான் பைத்தியமாகி விட்டேனோ?  ராமக்ரிஷ்ணருக்கு  தன்  மேல் சந்தேகமே வந்துவிட்டது.

''எல்லையற்ற கடலில் திசை தெரியாமல் மிதந்து செல்கிறேனே. அம்மா நீ தான் வழிகாட்டி. எனக்கு மந்திரமோ, தந்திரமோ, வேதமோ, சாஸ்திரமோ, ஒன்றுமே தெரியாதே. உன்னை நான் அடைய வழி நீ தான் சொல்லவேண்டும்.''

அவரைப் பைத்தியம் என்று தூற்றியவர்கள்  அவரது சாத்வீகம், அமைதி, எளிமை, பரிபூரண பக்தி ஆகிய வற்றைப்  போற்றினார்கள். அவரைக் கண்டாலே தாங்கள் உயர்வடைவதை உணர்ந்தனர். கோயில்
தோட்டத்து வட மூலையில் ஒரு இடத்தை  தேர்ந்தெடுத்து அதைத்  தனக்கு அமைத்துக் கொண்டார்.
'அடேய் ஹ்ரிதய், இந்த ஐந்து செடிகளை இங்கே நட்டு விடுகிறாயா?'
அவர் சொல்லி  ஹ்ருதய்  நட்டவை தான் இன்று  பெரிய  விருக்ஷங்களாக காண்கிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...