Thursday, June 9, 2022

LIFE LESSON

 


வாழ சில வழிகள் .    நங்கநல்லூர்  J K  SIVAN 


மானிட  வாழ்க்கை  தாமரை இலை மேல் தண்ணீர்த் துளி. இருக்கும்   சிலநாட்களை சந்தோஷமாக ஏன் வாழக்கூடாது?  அதற்கு சில வழிகள் இருப்பது தெரியாமல் அநேகர்  வாழ்க்கையை நரகமாக்கி  தானும் துன்புற்று பிறரையும் இம்சிக்கிறார்கள். 


அதென்ன  ''சில  வழிகள்'' என்று கேட்டால்  நான் அறிந்து கொண்டது இது தான்.  முக்கால்வாசி கடைப்பிடிக்கிறேன் சுவாமி.

எதற்கு கோபம்?  சிரித்துக்கொண்டே இரு.  எதையும் எவர் மேலும் குறை சொல்லாதே. அது அப்படித்தான் என்று ஒப்புக்கொள். அப்புறம் பார்  எல்லோருக்கும்  உன்னை பிடிக்கும்.  நீ தான் ராஜா.

நண்பர்கள்  உறவினர்  எல்லோரோடும்  அகம்பாவம், கர்வம் இன்றி சகஜமாக  இயற்கையாக  வேஷ மில்லாமல் பழகு.  உன்னை தலையில் தூக்கி  கொண்டாடுவார்கள். 

வீட்டில்  அந்நியன் போல்  இருக்காதே.  எல்லோருடனும் சேர்ந்து பேசு, சாப்பிடு.   நிறைய  நேரம்  அவர்களோடு செலவிடு.  நீ எங்கே என்று தேடுவார்கள்.

யாருக்காவது உதவி ஏதாவது தேவைப்பட்டால்  உடனே  வலிய  சென்று உடலாலும் உள்ளத்தாலும் உண்மையாக உன்னால் முடிந்த அளவு உதவு. 

வாழ்க்கை வாழ்வதற்கு என்பதை மறவாதே.. ஒரு கணமும் வீணாக்காதே. வாழ்க்கையில் சலிப்பு தேவையற்றது. ஒவ்வொரு வினாடியும் அற்புதம். ஆனந்தம். உனக்காக காத்திருக்கிறது.  அது உன்கையில் இருக்கிறது. 

குண்டு சட்டியில் குதிரை ஒட்டாதே.  நாலு இடம் சென்று பார்.  ஒழிந்த  நேரத்தில் புது இடங்களைச்  சென்று பார். ரசித்து அனுபவி.  ஆகாய விமானத்தில் சிம்லா, டார்ஜீலிங் அவசியமில்லை, அடுத்த கிராமம் அதைவிட அழகானது  இயற்கையை ரசிக்க தெரிந்தால். நடந்தும், பஸ்ஸிலும் கூட  போவதும் சுற்றுலா தான். 
பிறரின் குறை, தவறை மன்னித்துவிடு, மறந்துவிடு.  மறப்போம் மன்னிப்போம் அருமையான  மந்திரம்.  வாழ்க்கை சுகமாகும்.
புதிது புதிதாக  ஒரு லக்ஷியம் அமைத்துக் கொண்டு  பிறர்க்கு உதவலாம்.  அதை அடைவதற்கு முயன்று கொண்டுவா. வாழ்க்கை ருசிக்கும். 

யோகா  தியானம்  எல்லாம் ரொம்ப நல்ல பழக்கம். உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆரோக்யம். 
உன்னைச் சுற்றி சுற்றி வரும் நாய்க்குட்டி, பூனைக்குட்டி, கிளி, புறா  இதெல்லாம் உண்மையான உறவுகள். பேசத்தெரியாது. அதனால் பொய் சொல்லாமல் அன்பை தரும்.

வேலைகளுக்கு நடுவே சற்று ஓய்வெடு.   நடப்பது, ஓடுவது தினமும்கொஞ்சம்  இருந்தால் உடல் கட்டுக்கோப்போடு சீராக உனக்கு உதவும்.  ஆரோக்கியமான மனிதன் அழகான மனிதன்.  அது நீ. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...