Saturday, June 11, 2022

SANDHYA VANDHANAM

 

சந்தியா வந்தனம் -   நங்கநல்லூர்  J K  SIVAN 

நான்  உபாத்யாயர், வாத்தியார், ப்ரோஹிதர் இல்லை.  உபதேசிக்க  அறுகதையில்லாத ஒரு சாதாரணன்.  காயத்ரி மந்திரம் பற்றி நிறைய எழுதிய போது  சிலர்  மற்றவைகளை பற்றி அதாவது சந்தியாவந்தனம்  அதைத் தொடர்ந்து செய்பவை, சொல்பவை, தர்ப்பணம், ப்ரம்ம யஞம், ச்ராத்தமந்த்ரங்கள்  பற்றியும் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டதால் கொஞ்சம் இதைப் பற்றி  தெரிந்துகொண்டு  எழுதுகிறேன். அவ்வளவு தான்.

சாயந்திரம்  இருட்டுவதற்கு முன் உள்ள நேரம் அந்திப்பகல். அரை இருட்டு. பகல் இருட்டை சந்திப்பது தான் சந்தியா காலம்.     அப்போதும், காலை சூரியன்  உதிக்கும் முன்பும்,  ப்ராதஸ் ,அதாவது இரவு பகலை சந்திக்கும் நேரம்,   நண்பகல் உச்சியில் சூரியன் உள்ளபோதும்,  இந்த  மூன்று வேளையும்  சூரியனை வணங்கி செய்யும்  பிரார்த்தனை தான் சந்தியா வந்தனம். வந்தனம் என்றால் வணங்குவது.


காலையில் செய்வது  ப்ராதஸ்  ஸந்த்யா ,  நண்பகல், மத்தியானம் செய்வது   மத்தியான சந்தியா, 
மாத்யான்ஹிகம்,  சாயங்காலம் செய்வது சாயம் சந்தியா. அநேகர்  ஒரு  நாளைக்கு  ஒரு முறை செய்வதே  இப்போது துர்லபம்.   ரெண்டு வேலை செய்வது  ரொம்ப ரொம்ப  ஜாஸ்தி. பகல் நேரத்தில் உத்யோகத்தில் இருப்பதால் செய்ய இயலவில்லை என்பார்கள். 

பிராமணன் ஆத்ம ஞானம் பெற்ற த்விஜன் எனப்படுபவன்.  பூணல் போட்டபிறகு அவன் இரண்டாவது பிறவி எடுப்பவன். பூணல் என்பது   கடைசியில் கட்டையில் உடம்பு ஏறும்வரை   அவன்  மார்பில் இருக்கவேண்டிய பவித்ரமான நூல். கழட்டவே கூடாது.  பழசாக போனதை புதுப்பிக்க ஒரு குட்டி மந்திரம். அதைச் சொல்லி வேறொரு புதிய பூணலை போட்டுக்கொண்டபிறகு பழசைக் கழட்டி கால்  படாமல்  எறிவதற்கு கூட ஒரு குட்டி மந்திரம் உண்டு. எல்லாம் இனி கொஞ்சம் கொஞ்சமாக  அறிவோம். 

  பூணல் முதலில் ஒரு பையனுக்கு  5லிருந்து   11வயதுக்குள் ஒற்றைப்படை வயதில்  போட்டுவிடுவார்கள். அதற்கு உபநயனம் என்று பெயர். காயத்ரி மந்திரத்தை  பையனின் அப்பா முதன் முதலாக மகனின்  வலது காதில் உச்சரிப்பது தான் ப்ரம்மோபதேசம். தந்தை உபதேசிப்பது.  அவருக்கே தெரியுமோ, தெரியாதோ, அதனால் வாத்யார் கூடவே இருந்து சொல்வார். அதை அப்பா திருப்பி பையன் காதில் சொல்கிறார். 

அப்புறம் தான் பையன்  காயத்ரி மந்திரம் சொல்ல தகுதி உள்ளவன்.  வேதகாலத்தில் ப்ராம்மணப் பெண்கள்  கூட  பூணல் தரித்தவர்கள் என்று எங்கோ படித்தேன்.

பிராதஸ் சந்தியா   சூரியன் கிழக்கே உதிக்கும் முன்பு சிவப்பு வட்டமாக  அடிவானில் தோன்றுவதற்கு முன் முடிக்க வேண்டியது.  சூரியனை வரவேற்று வணங்குவது என்பதால் சூரியன் வந்த பிறகா வரவேற்பது?
லேட்டாக செய்வது,  வீட்டுக்கு விருந்தாளி வந்து ஹாலில் உட்கார்ந்து காப்பி சாப்பிட்டபிறகு அவரை வாங்கோ என்று கூப்பிடுவது போல். அர்த்தமற்றது.  வாசலில் வண்டியிலிருந்து இறங்கும்போதே வாங்கோ வாங்கோ என்று இரு கை  கூப்புவது தானே முறை?

அதேபோல் சூரியன் விடைபெறும் முன், அஸ்தமனத்துக்கு முன் வணங்கி  விடைகொடுப்பது தான் சாயம் சந்த்யா.  இருள் துவங்கி  வானில் நக்ஷத்திரங்கள் கண்ணில் படுவதற்கு முன் நிறைவேற்றும் வந்தனம் இது.

ஸந்த்யாவனந்தம் செய்ய தேவைப்படுகிற  நேரம்  ஒரு முஹூர்த்தம், ரெண்டு கடிகை என்பது  அதற்கான கால அளவு.  நமது கடிகாரத்தில்  சுமார்  48 நிமிஷத்துக்கு ஈடானது. அர்த்தம் புரிந்து கொண்டால் இந்த மந்த்ரங்கள் அலாதி மதிப்பை பெறும்.

உபநயனத்தின் போது  பையன்  பூணல் தரித்த பிறகு முதலில் செய்வது மத்யான்ஹிகம்,  காயத்ரி மந்திரம் தான் அவன் முதலில் உபதேசம் பெறுவது.  அந்தக்காலத்தில் 5 அல்லது 7 வயதுக்குள் உபநயனம் நடைபெறும், அப்புறம் தான் குருகுலம். ஆசிரியரிடம் மற்ற  வேத மந்த்ரங்களை கற்றுக்கொள்வான். இப்போது கல்யாணத்தன்று வாத்யார் பூணல் போட்டுவிடுவது  கல்யாண விளையாட்டுகளில் ஒன்று.
கல்யாணம் ஆகாத வாலிபன் பிரம்மச்சாரி.  பிரம்மத்தை கற்று அதன்படி ஒழுக்கத்தை கடைப்பிடிப்பவன் என்று அர்த்தம்.

அவனுடைய  தேஜஸ் சூரியனுடைய தேஜஸ் ரெண்டும் ஒன்று என்ற எண்ணம் மனதில் அவனுக்கு நிலைக்கும் அவன் முகம் ஒரு அருமையான  காந்தியோடு ''தேஜஸோடு''  காணப்படும். இன்றும்  பல வேதபாடசாலைகள் செல்லும்போது அங்குள்ள சிறிய  மாணவர்கள் முகத்தில் தேஜஸ் பார்க்கலாம்.
ஆதிகாலத்தில் தனியாக  ஆற்றங்கரையிலோ, குளத்தங்கரையிலோ, காட்டு பக்கங்களிலோ அமர்ந்து சந்தியா வந்தனம் காயத்ரி மந்திரம் தியானித்தார்கள் .

காலையில்  செய்யும் ப்ராதஸ் சந்தியாவந்தனம்  கிழக்கு நோக்கி நின்று செய்யவேண்டும்.  சாயந்திரம் செய்யும் சாயம் ஸந்தியாவை  வடமேற்கு பக்கம் நோக்கி செய்தார்கள். 

நான் சொல்லாமலே தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு குறிப்பு  எல்லாவற்றையும் குளித்த பிறகே  செய்யவேண்டும்.  சந்தியா வந்தனம்  காயத்ரி மந்திரம் தியானம் செய்யும் வேளையில் செல் போன் இருக்க கூடாது, பேசக்கூடாது.  மனம் மந்திரத்தில் லயித்து இருக்கவேண்டும்.
மீதி அப்புறம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...