Thursday, June 16, 2022

LIFE LESSON

 கருமமே கண்ணாயினார். --   நங்கநல்லூர்  J K   SIVAN 


வாழ்க்கையில்  தொய்ந்து  போக தேவையே இல்லை.  நொந்து கொள்ளவேண்டாம்.  வந்த துன்பம் இடுக்கண் யாவுமே  தூசி.  சூரியன் முன் பனித்துளி.  எந்த காரியத்திலும் நம்மை நம்மை எப்போதும்  இன்பமும் வெற்றியும் வரவேற்கிறது என்ற எண்ணம் அவசியம் வேண்டும்.  

இதற்கு அடிப்படியாக  என்ன தேவை நம்மிடம்?
தன்னம்பிக்கை. அது  தோன்றும் இடம் மனம். ஒவ்வொருவனும் ஏதோ ஒரு லக்ஷியத்தை  தேடி தான் ஓடுகிறான். அதை அடைய முடியும். அதற்கு முதலில் அவனுக்கு தன் மேல் நம்பிக்கை வேண்டும்.  உன் திறமையை  நீ அறியவில்லை.  கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் நழுவ விட்டால் எப்படி  அது வெளிவரும்?. ''உன்னால் முடியும் தம்பி''  ஒரு அற்புதமான வாக்கியம்.. 

ஏனோ தானோ என்று எதிலும் ஈடுபடக்கூடாது.  என்ன செய்ய முயற்சிக்கிறோம், அதற்கு வழிகள் என்ன 
என்று ஆய்ந்து  நேரம் வீணாக்காமல் முழு நம்பிக்கையுடன் முயன்று பார்த்தால்  வெற்றி உனதே.  நமக்கு எது வேண்டும் என்றே தெரியாதவர்களாக   நாம் வாழ்ந்து முடிகிறோம். 

செய்யும் எந்த காரியத்துக்கும் ஒரு  லக்ஷியம் வேண்டும். அது   எளிதில் அடைய முடிவதாக இருக்க அதைப் பற்றி நாம் முன்பே  யோசித்து  தீர்மானிக்க வேண்டும். எதுவும்  எளிதல்ல என்பது புரியவேண்டும். பாதியில் நிறுத்தி விட்டு இன்னொன்றை தேடி ஓடக்கூடாது. அதற்கு முடிவே இல்லை. வெட்டி வேலை.
சூரியனின் ஒளிக்கதிர்  ஒரு காகிதத்தின் மேல் விழுந்தால்,  அந்த உஷ்ண கதிரை ஒரு  பூதக் கண்ணாடி யால் காகிதத்தின் மேல் படும்படி  செலுத்தினால்,  காகிதம் தீப்பற்றி எரிவதை நாம் சின்ன வயதில் விளையாடி இருக்கிறோமே.   ஒளிக்கதிர்  பேப்பரின் மேல் முழுமையாக குவித்தோம். உஷ்ணம் வேலையை முடித்தது. அதுபோல் நமது செயல்களில் முழு கவனமும் கொண்டு முயன்றால் வெற்றி நிச்சயம்.

எதுவும் சுலபமல்ல. உழைப்பு தான் ஊதியம் தரும். சுருக்கு வழி  தேடுவது பயனற்றது.நிழலைப் பிடிக்கும் கதை.

''பத்தில் பாதிக்கு பழுதில்லாமல்'' என்று கிராமத்தில் சொல்வோம்.  எடுத்த காரியம் எல்லாவற்றிலும் வெற்றி சுலபமாக வரும் என்று  எதிர்பார்ப்பது  மனப்பால் குடிப்பது.  ரிஸ்க் எடுக்க வேண்டிய விஷயங்களில் தீர ஆலோசித்து கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு துணிந்து முடிவெடுத்து அதன் பலனை  ஏற்கவேண்டும்.  விழுந்து விழுந்து தான் குழந்தை எழுந்திருந்து நடக்க  வேண்டும்.

''செய்வன திருந்தச் செய்''  என்று ஒரு வாக்கியம். எத்தனை வழிகள் நமக்கு எதிரே உள்ளன. எது நம்மை லட்சியத்துக்கு கொண்டு சேர்க்கும். வழியில் என்ன இடையூறுகள் எல்லாம்  நேரிடலாம் என்று முன்னெச்சரிக்கையாக யோசித்து தீர்மானித்தால்  நம் வழி நல்வழியாகும்.

''நெற்றி வியர்வை நிலத்தில் விழ''     ''உயிரை விட்டு உழைச்சு'    போன்ற வார்த்தைகள்  நாம் எடுத்த காரியத்தை நாம் எவ்வளவு  ஈடுபாட்டுடன் கைக்கொள்ளவேண்டும் என்று புரியவைக்கும். 

பொறுப்புணர்ச்சி அவசியம். ''கல்லை விட்டெறிவோம், மாங்காய் விழுகிறதா என்று பார்ப்போம்'' என்பது எதிர்பார்த்த பயனை அளிக்காது. ''ஒத்தையா ரெட்டையா '' விளையாட்டு  வாழ்விற்குதவாது.
 
தோல்விகள், இடையூறுகள், எதிர்ப்புகள்,  எதிர்பாராத தடைகள் நிச்சயம் எந்த காரியத்திலும் உண்டு. அதை எதிர் கொள்ள மனோதிடம் வேண்டும்.  நெஞ்சில் உரத்துடன் எடுத்த காலை முன்னோக்கி வைக்கவேண்டும். நம் முயற்சியோடும் தன்னம்பிக்கையோடு,  இறைவனின் அருளும் வேண்டும்.   கடவுள்  பக்தி எல்லா
வற்றுக்கும்  ஒரு  பலமான  அஸ்திவாரம்.  இப்படிச் செயல் புரிபவன் கர்ம யோகி.
 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...