Monday, June 6, 2022

THEVITTADHA VITTALA

 தெவிட்டாத விட்டலா -   நங்கநல்லூர்  J K  SIVAN 


''தண்டனையில் பாதி'' 
                                                            
எனக்கு மராத்தி தெரியாது. ஹிந்தி அரைகுறை. ஒருமாதிரி ஒப்பேத்தி  பேசுவேன். மராத்தியில்  அபங்கங்கள் கேட்பேன். அவர்கள் பாடும் விதம், அதில் உள்ள  பாவம் (பாவ) ஹ்ருதயத்தை பிழியும். கண்ணை மூடி கேட்டால் எதிரே  பாண்டுரங்கன் தெரிவான்.  ''விட்டல் விட்டல்''  கோஷம் எழுது கையை தூக்கிக்கொண்டு ஆட வைக்கும் தன்மை கொண்டது. அபங்கங்கள்  ஆழமான  கருத்துக்களை   அருமையான   பாணியில் அள்ளித் தந்து  மனத்தை தொடுபவை.  கிளிசரின்  இல்லாமலேயே  கண்களில் தாரை தாரையாக  ஆனந்த  கண்ணீரை வரவழைப்பவை. 

நாமதேவ், துக்கா ராம்  அபங்கங்கள்  என்றால்  கேட்கவே வேண்டாம்.  மனத்தை கொள்ளை கொள்ளும் சக்தி வாய்ந்தவை. எளிமையானவை.  விலை மதிப்பற்ற பொக்கிஷம். அனேக தற்கால  தமிழ் பாகவதர்கள்   பாடுவதை கேட்கும்போதே   நம்  மனம் ரொம்ப   இன்புறுகிறதே   இதயத்தையே  பிழிந்து, மனதை உருக்கி,   நெஞ்சத்தை  நசுக்கி   பக்தித்தேனில்  நனைத்து  அவற்றை  இயற்றிய   துக்காராமே  விட்டலன் முன்  பாடிய  போது விட்டலன்  எவ்வாறு  அவற்றுக்கு  அடிமையாகியிருப்பான்!!  என்று  யோசிக்கும்போது பாண்டுரங் கனின்  புளகாங்கிதத்தை  வர்ணிக்க  வார்த்தையே வரவில்லையே.  பாண்டுரங்கன் சரித்திரம் 100 கதைகளாக தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினேன். எண்ணற்றவர்கள் வாட்ஸாப்ப், FB  தவிர புத்தகமாகவும்  படித்து மகிழ்ந்தார்கள். 

 விட்டலனின்  நாம  சங்கீர்த்தனத்தில் தன்னை  இழந்து வான்  வெளியில் பறந்த துக்காராமுக்கு  இந்த உலக வாழ்க்கை சிந்தனையே இல்லை.   ஏழையாக  இருக்கிறாரே என்று ஊரில் சிலர்  ஒரு  பலசரக்கு கடை  வைத்து தந்தார்கள். அவர்   குடும்பம் அதன் வருமானத்தில்  பிழைக்கட்டுமே என்று.  ஆனால் அவர் வியாபாரமா செய்தார்?  எவரையும்  பாண்டுரங்கனாகவே பார்த்த  அவர்  யார் எதை கேட்டாலும்  எடுத்து கொடுத்தார். வேண்டியதை  எடுத்துக்  கொள்ளுங்கள் என்று  அனுமதித்தார்.  கடையில் சரக்கு இல்லை.    கையில் பணமும் இல்லை . சரி,   வியாபாரத்தில் மனத்தை  செலுத்துவோம் என்று   பிறர்க்காக அவர்  ஈடுபடும்போது  தெருவில்  எங்கோ  அல்லது  அருகில் விட்டலன்   ஆலயத்தில் பக்தர்கள்  குரலோ கேட்ட அடுத்த கணமே  கடையை அப்படியே   திறந்து போட்டுவிட்டு  தம்புராவோடு ஓடிவிடுவார். பஜனை   முடிந்த  பிறகு தான்  கடை,  வீடு, மனைவி, குழந்தைகள்   ஞாபகம்  வரும்.  கழுகாக காத்திருக்கும்  சமுதாய விரோதிகள்   அவரில்லாத  போது அவர் கடையை சூறையாடி  அகப்பட்டதை சுருட்டினார்கள்.

கடையில் சாமான்களே இல்லாமல் போய்விடும்.  மனைவி  ஜீஜா பாயிக்கு கைச்செலவுக்கு,  குடும்ப  செலவுக்கு,  எப்படி பணம் தேறும்?  சரக்கு வாங்கி விற்றால்  தான் வருமானம்.

பாவம்,  கணவன் மேல்  மிகுந்த பக்தியும்  மரியாதையும்  கொண்ட பெண்மணி ஜீஜா பாய், வறட்சி நிலையில் எஞ்சி யிருந்த கொஞ்ச  நகைகளையும்  கழட்டி அவரிடம்  கொடுத்து  விற்று வந்த  பணத்தில் கடைக்கு சரக்கு  வாங்கி  வாருங்கள்” என்று அனுப்பினாள்.   நல்ல பிள்ளையாக தலையாட்டி நகைகளை  ஜாக்ரதையாக பைக்குள் போட்டுக்கொண்டு விற்க கிளம்பிவிட்டார் . வழியில்  விட்டலபக்தர்கள் ஒரு   இடத்தில்  கூட்டமாக  பஜனை செய்து கொண்டு வந்ததை  பார்த்து விட்டார் துக்காராம் .  தாய்ப்பசுவை கண்ட   கன்றுபோல் துள்ளி ஓடினார். பையில்  இருந்த நகை  விற்ற  பணம்  பூரா பக்தர்களுக்கு காணிக்கையாக வாரி  வழங்கினார்.   பரம சந்தோஷம் அவருக்கு.   இப்படி ஒரு பாக்கியம் நமக்கு   கிடைக்க விட்டலன்   அருளினானே என்று.!  கடையோ,  ஜீஜாபாயோ,  அவள்  நகையோ, அதை விற்ற  பணமோ, கடை  சரக்கோ, எதுவும்  நினைவில் இல்லையே!.  

கடையை  மூடிவிட்டாள்  ஜீஜாபாய். கணவனை போற்றும்  சிறந்த மனைவி அவள்.   அடுத்ததாக  குடும்பத்துக்கு  செலவுக்கு வருமானம்  எப்படி?  அதிகாலையில் எழுந்தாள்.   அண்டை  அசல் வீடுகளில்  பாத்திரம்  தேய்த்து ஆற்றுக்கு  சென்று  துணி தோய்த்து, வீடு பெருக்கி,  குழந்தைகளை  பராமரித்து,  சில வீடுகளில் சமையலும் செய்து  அவர்கள்  கொடுக்கும்  சிறு பணத்தில் வீட்டில் அடுப்பு எரிந்தது.  கொஞ்ச
நாள் இது  துக்காராமுக்கு தெரியவில்லை.  ஒருநாள் விடியற்காலை  விட்டலனை  பற்றி ஒரு   அபங்கம் எழுத  வேண்டும் என்ற ஆசையில்  எழுந்த  போது தான்  ஜீஜா பாய்  எங்கோ கிளம்பிக் கொண்டிருந்ததை பார்த்து என்ன  விஷயம் என்று கேட்டார்.

'குழந்தைகள் பட்டினி. வீட்டில் உணவில்லை. யாசகம்  செய்ய மனமில்லை,  ஏதோ   உழைத்து ஒரு  சில காசு  கொண்டுவந்து   குழதைகளையும்  நாமும்  ஜீவனோடு  இருக்க இது தான் எனக்கு தெரிந்த  உபாயம்"  என்று  சொல்லி  தான்  பல வீடுகளில் வேலைக்காரியாக  இருப்பதை சொன்னாள்.

 "நான் கல்லு குண்டு மாதிரி இருக்கும்போது நீயாவது வேலைக்கு  போவதாவது  ஒன்றும் வேண்டாம்.  பேசாமல் உள்ளே போ. நான் போய்  எங்காவது  வேலை  தேடி சம்பாதித்துக்   கொண்டு   வருகிறேன்"  என்று  புறப்பட்டார் துக்காராம்.

ஒவ்வொரு வீடாக சென்றார்.  "அய்யா, எனக்கு ஏதாவது வேலை கொடுத்து கொஞ்சம் சம்பளம் கொடுங் களேன்" என்று அவர் கேட்டபோது தேஹூ என்ற அவர்  இருந்த ஊரில் ஒருவரும் அவருக்கு  வேலை கொடுக்கவில்லை!  

அவரைக் கண்டபோதே அவர்  காலில் விழுந்து வணங்கி  " சுவாமி,  தங்களுக்கு வேண்டியதை  எங்கள்  வீட்டிலிருந்து எடுத்துச் செல்லுங்கள்"  என்றனர்.  அவரை  நடமாடும் பாண்டுரங்கனாகவே மதித்தவர்கள் ஆச்சே.!  அவரோ எவரிடமிருந்து  எந்த பொருளும் விரும்பாதவர்.  எனவே வெறுங்கையோடு தான்  வீடு திரும்பினார்.  பசியும்  பஞ்சமும்  வீட்டில் எல்லோரையும்  வாட்ட என்ன செய்வது என்று  யோசித்த துக்காராம்  "இந்த ஊரில் வேலை கேட்டால் தானே யாரும் என்னை மதித்து வேலை  கிடைக்க வில்லை. வேறு  எங்காவது  சற்று தூரமாக இருக்கும்  தன்னை  யாரென்றே  தெரியாத  வேற்றூரில் வேலை  தேடினால் என்ன என்று அங்கே சென்றார்..  


வேற்றூரில்  அவரைத் தெரியாத   ஒரு  வியாபாரி  அவரை  வேலைக்காரனாக ஏற்றுக்கொண்டான்.
"உமக்கு  என்ன  வேலை தெரியும்?"
"எந்த வேலை கொடுத்தாலும்  செய்கிறேன்."
"என்ன சம்பளம்  கேட்கிறாய்?"
"நீங்கள் எவ்வளவு கொடுத்தாலும் சந்தோஷமாக வாங்கிக்கொள்கிறேன்."
வியாபாரியின்  வயலில்  பரண் கட்டி பறவைகள். மற்றும்  ஆடு மாடு  வயலில் நுழைந்து செடிகளில்  தான்யங்களைத் தின்று விளைச்சலை  நாசம் செய்யாமல்  காவல் காக்கும் வேலை..

"முதலாளி  நீங்கள் தயவு பண்ணி கொஞ்சம்  பணம்  கொடுத்தால் என்  ஊருக்கு  சென்று  மனைவியிடம் கொடுத்து  அவளும் குழந்தைகளும் வாழ்க்கை நடத்த  உதவும்.  நான் உடனே வேலைக்கு உங்களிடம் 
 திரும்பி விடுகிறேன்"

இவ்வளவு  அருமையான  சாதுவான நேர்மையான  வேலையாள் கிடைக்க  தவம் செய்திருக்க வேண்டும்  என்று  சந்தோஷமாக அந்த  வியாபாரி நிறைய தானியங்களும் கொஞ்சம்  பணமும்  கொடுக்க  அவற்றை வீட்டில்  ஜீஜா பாயிடம் கொடுத்துவிட்டு  வேலைக்கு  திரும்பினார் துக்காராம்.  

இவரிடம்  வயலை ஒப்படைத்து விட்டு  வெளியூர் சென்ற  வியாபாரி ரெண்டு மாசம் கழித்து வந்து தனது வயலைப்   பார்த்தான்.   துக்காராம் பரணில் அமர்ந்து வழக்கம் போலவே   விட்டலன் மேல்  அபங்கங்கள் இயற்றி  ஆடிப் பாடிக்  கொண்டிருந்தார்.  வயலில்  நுழைந்த  ஆடு மாடு பறவைகள்  அனைத்தும் விட்டலனாகவே தோன்றியதால் அவற்றை விரட்டவில்லை. செடிகளோ  தானியமோ ஒன்று இல்லை. எல்லாவற்றையும் அவை தின்றுவிட்டன. வயிறு எரிந்தது  வியாபாரிக்கு.  

"என்னடா அயோக்கியா, காவல்காரன் நீ,  உன்னால் எனக்கு ரெண்டாயிரம் ரூபாய்க்கு மேல்  நஷ்டம்.  நீ உடனே  நஷ்ட ஈடு  கொடுக்காவிட்டால் உன்னை ராஜாவிடம் இழுத்து  சென்று  தண்டனை வாங்கித் தருவேன்" என  ஆத்திரத்தில் கத்தினான் வியாபாரி.  

"ஐயா, என்னிடம் அவ்வளவு  பணம் கிடையாதே.  இருந்தால் வேலைக்கே  வந்திருக்க மாட்டேனே.  நீங்கள்  என்னை  அரசனிடம் அழைத்து சென்று  தண்டனை வாங்கி  தரவேண்டாம்.  நீங்களே என்ன தண்டனை கொடுத்தாலும் மனப்பூர்வமாக  ஏற்றுக்கொள்கிறேன்"

துக்காராமுக்கு தெரியாது  அந்த  ஊரின் ராஜா சத்ரபதி சிவாஜி என்று. சிவாஜி மகாராஜா துக்காராமின் பக்தர்களில் ஒருவராச்சே. விஷயம் ராஜாவிடம் போனால் ராஜாவே ஓடிவந்து  துக்காராமினால் வியாபாரிக்கு என்ன நஷ்டமோ அதற்கு மேலேயே,  தானே  பணம் கொடுத்து விடுவாரே.

"உம்மிடமோ பணமில்லை.  ராஜாவிடம் செல்லவோ வேண்டாம்  என்கிறீர் என் நஷ்டத்துக்கு என்ன வழி?. உன்னை நம்பி வேலைக்கு வைத்தால் கொஞ்சம் கூட பொறுப்பின்றி நடந்துகொண்டாயே   என்று ஒரு  பக்கம் அவர் மேல் பரிதாபமும் சேர்ந்து கோபித்தான்.  துக்காராமோ கண்களை மூடி "பாண்டுரங்க விட்டலா " என்று  கண்ணில்  நீர்  ஆறாக பெருக வேண்டிக்கொண்டார்.

"என்னடா  நினைப்பு உமக்கு?  நீர என்ன  பெரிய  பக்த துக்காராமோ எதற்கும் பாண்டுரங்கனை கூப்பிட?" என்று கோபமாக கேட்டான்  வியாபாரி "

முதலாளி, என்  பெயர் துக்காராம் தான்" என்று சொன்னார் அவர். அதிர்ந்து போனான் வியாபாரி. அவன் ஒரு விட்டல பக்தன்.  துக்காராம் மீது அளவு  கடந்த மதிப்பு  கொண்டவன்.  அவர் கால்களில் வீழ்ந்தான்.  

 "சுவாமி,  உங்களைப்  பற்றி  நிறைய காது  குளிர கேள்விப்பட்டிருக்கிறேன் பார்த்ததில்லை. உங்களை  வேலையாளாக நடத்தி அவமரியாதையாக பேசிய பாவத்துக்கு மன்னிக்க வேண்டும்.  இந்தாருங்கள் என்று  நிறைய கரும்புகளை  வெட்டி கொடுத்து. விற்று வீட்டுக்கு பணம்  கொண்டு செல்லுங்கள்"  என்றான். துக்காராம் கரும்புக்  கட்டை சுமந்து கொண்டு தேஹுவுக்கு திரும்பினார். விட்டலன் கோவில் வாசலில்  நிறைய குழந்தைகள்  அவரை பார்த்து விட்டன.  அவர் தலையில்  சுமந்த கரும்பை பார்த்து ஆசையாக  நின்றனர். மறுகணமே யோசிக்காமல் அத்தனை  கரும்பையும்  குழந்தைகளுக்கு விநியோகம் பண்ணி வெறுங்கையோடு  வீடு திரும்பினார்  துக்காராம்.  விஷயம்  தெரிந்த ஜீஜாபாய்  “கரும்பை விற்றீர்களா” என்று ஆவலுடன்  கேட்டபோது

"ஜீஜா, வழியில் நம் ஊர்  குழந்தைகள்  எல்லாம் சூழ்ந்து கொண்டு கரும்பு கேட்டதும் என்னை  அறியாமலேயே எல்லா  கரும்பும் கொடுத்து விட்டேன். இது ஒன்று தான் மிச்சம்.”

 இருந்த ஒரே கரும்பை  ஏமாற்றத்துடன் வாங்கி அவர் மீதே வீசினாள். அது  அவர் முகத்தில் பட்டு அருகே இருந்த  விட்டலன் படத்தில் விழுந்து சரி பாதியாக ஒடிந்தது.

"பார்த்தாயா  நடந்ததெல்லாம் விட்டலனும் நானும்  சேர்ந்து செய்ததில்லையா? நீ கொடுத்த தண்டனையும் சரி பாதியாக  இருவரும் பெற்றுக்கொண்டோம்." என்றார் துக்காராம்



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...