Tuesday, May 31, 2022

 ஜீவாத்மா....  -  நங்கநல்லூர்   J K  SIVAN 



சுப்பிரமணி ஆபிசில் கோள் சொல்பவன்.  அவனோடு  யாரும் சரியாக பேசமாட்டோம்.  அவன் எதிரில் ஆபிஸ் பற்றி, உயர் அதிகாரிகள் பற்றி வாயை திறக்க மாட்டோம்.  கேட்டுக்கொண்டே  நம்மோடு  சேர்ந்து சாப்பிட்டுவிட்டு  உடனே  உள்ளே போய் வத்தி வைத்துவிடுவான்.  ES   என்று தான் அவனை குறிப்பிடுவோம். ( எட்டப்பன் சுப்பிரமணி)
தமிழ் பேப்பரில் பைன் ஆப்பிள்  சுற்றி  இருந்தது..  அந்த பேப்பரை அகற்றும்போது ஒரு போட்டோ கண்ணில் பட்டது..  ஒரு மதத்துக்கு முந்திய பேப்பர்.   சுப்ரமணியன், 77 வயது. மாரடைப்பால் காலமானதாக  அவன் பிள்ளையோ பெண்ணோ ஒரு  பழைய போட்டோ போட்டு  அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள்.  போட்டோவில் அவன் முகம் அடையாளம் நன்றாக தெரிந்தது.  பழைய  மின்சார இலாக்கா  தலைமை கணக்கர்  என்று உத்யோகம்.  ES  தான் சந்தேகமே இல்லை.  மூக்கின்  வலதுபக்கம் ஒரு ஆழமான வடு அவனை அடையாளம் காட்டியது.

மரணம்  எவ்வளவு  சோகமானது என்று ஒரு கணம் சிந்தனை. ஆன்மா  உடம்புக்  கூட்டிலிருந்து  பிரிகிறது.. அப்புறம் அதற்கு புது உடம்பு. புது வாழ்வு.  மரணம் குணத்தை மாற்றுவதில்லை.  இனியாவது புது உடம்பில்,  ஒரு நல்லவனாக வாழ  ஒரு வழி காட்டி.   வாழ்வின் எல்லை மரணம் இல்லை.  ரயில் மாறும்  ஒரு ட்ரான்சிட் பாயிண்ட். உண்மையில் மரணம் ஒரு தேவதை, பழைய  வீட்டிலிருந்து  அழைத்து போய் புது வீட்டின் கதவை திறந்து உள்ளே அனுப்பும் சாவி.

ஆன்மா ஒரு வட்டம். அதன் சுற்றளவு எங்கேயென அறியமுடியாது.  அதன் நடு பாகம்  உடம்பு. ஆகவே மரணம் என்பது உடலுக்கு உடல் தாவும் மாறுதல். பரமாத்மனுக்கு முடிவே இல்லை. அழிவற்றது. காரணமில்லாதது.  தனியான இடம் கிடையாது. உடம்பு, மனம், உலகம் அனைத்தும்  இயங்க உதவும் ஆதார சக்தி.   ஓசை, உணர்வு, உருவம் பஞ்சகோசத்துக்கு அப்பாற்பட்ட இத்தகைய  ஆன்மாவை புரிந்து கொண்டவன் மரணம் அணுகாதவன்.

நாம் எல்லாம்  கடல் மணல் பரப்பில் வீடு கட்டி விளையாடுபவர்கள். ஒவ்வொரு வீடாக கட்டி புகுந்து வாழ்ந்து அடுத்த வீட்டிலும் இவ்வாறே  ....சுப்ரமணியும் அப்படித்தான் எங்கேயோ? இப்போது அவனால் எத்தனை பேருக்கு தொந்தரவோ?
விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்க முடியாத புதிர் இது. 
ஆன்மா  உடலோடு இருக்கும்போது  தான்  நாம்  ஜீவன்கள். உள்ளே இருக்கும்  பிராண சக்தி அகன்றால் பிரேதம்.  ஜீவனிலிருந்து பிரிந்த  பல சுப்ரமணியன்களின்  ப்ராணன்கள்  வெளியே அண்டத்தில்  எங்கும் கண்ணுக்கு தெரியாமல்  பரவி உள்ளன. அவற்றின் பழைய  ஜீவானுபவம் தான் வாசனை எனப்படுவது.  புது உடம்புக்குள்ளும் அது செல்கிறது. இன்னொரு சுப்ரமணியன் உருவாகிறான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...