Monday, May 9, 2022

BAJAGOVINDAM

 


ஆதி சங்கரர் -  நங்கநல்லூர்  J K  SIVAN
பஜகோவிந்தம்

கும்பிடு,  கூப்பிடு  கோவிந்தனை.- 6



17. कुरुते गङ्गासागरगमनं व्रतपरिपालनमथवा दानम् ।
ज्ञानविहीनः सर्वमतेन मुक्तिं न भजति जन्मशतेन ॥ १७॥ var भजति न मुक्तिं 

kurute gangasaagaragamanam vrataparipaalanamathavaa daanam
gyaanaviheenah sarvamatena bhajati na muktim janmasatena.. 

குருதே கங்கா சாகர கமனம் வ் ரத பரிபாலன மதவா தானம்
ஞான விஹீனா சர்வம தேனா முக்திம் ந பஜதி ஜன்ம சதேனா

இந்த ஸ்தோத்ரம் ஆதிசங்கரரின் சிஷ்யர் வார்த்திககாரர் எழுதியது. ஈஸ்வர ஞானம் த்யானம் இல்லையென்றால் ஒன்றுமே இல்லை என்று உணர்த்துகிறார். எப்படி ?
பாபம் தீரவேண்டும், நல்லவனாக வேண்டும் என்று பல நூறு மைல் பிரயாணம் செய்து காசிக்குப்போய் கங்கையில் முழுகினால் மட்டும் போதாது தம்பி.  அதனால் காசும் நேரமும் தான் வேஸ்ட். ஞானம், பக்தி,  த்யானம் இல்லையென்றால் இதெல்லாம் எதுவுமே  பயன் தராது. தப்பு பண்ணிவிட்டு    ''வாத்தியாரை கூப்பிடு.   அவர்  கேக்கறதிலே பேரம் பேசி பாதி குடு. அவரை மந்திரம் சொல்ல சொல்லு '' என்று பரிகாரம் தேடுபவன் முட்டாள்.

பக்தி, ஞானம், த்யானம்  இல்லாமல்  கங்கையும் கடலும் சேரும் திரிவேணி பிரயாகையில் போய்  ஸ்நானம் செய்வதால்   உடல் தான் ஈரமாகும். துணி தான் காய்வதற்கு நேரம் எடுத்துக் கொள்ளும்.  நீ மாறி விடுவாயா? தான தர்மம் எல்லாம் செய்து, விரதம் எல்லாம் இருந்தும் பயனில்லை. சரி! எப்போது பயன் கிடைக்கும்? ஆத்ம ஞானம் முதலில் தேடு, உள்ளே பகவானை நாடு. அவனை உள்ளேயே கண்டு சேவித்து, அனுபவித்து  மனதை  அங்கேயே எப்போதும் நிலையாக நிறுத்திக்கொள்.   ''கோவிந்தா,  தவறு செயது விட்டேனடா. இனிமேல் செய்ய மாட்டேன் என்று பள்ளிக்கூடத்தில் வாத்யார் எதிரே தோப்புக் கரணம் போட்டது போல் விழுந்து வணங்கு. மனதால் திருந்து. அவனை நினை. அவன் தான் உனக்கு அருகிலேயே இருந்து உன்னை காப்பாற்ற ரெடியாக இருக்கிறானே. நீ தானே தேடவில்லை. இந்த பக்தி தான் தான் உன்னை பிறவிப்  பிணியிலிருந்து காத்து, மோக்ஷம் அளிக்கும். இதற்கு தயாராக  'கோவிந்தா கோவிந்தா கோவிந்தா'  என்று அவனை ஸ்மரி. பல பிறவிகளை எடுத்தும் இன்னும் அப்படியே பழம் புளியாக இருக்காதே.

18. सुर मंदिर तरु मूल निवासः शय्या भूतल मजिनं वासः ।
सर्व परिग्रह भोग त्यागः कस्य सुखं न करोति विरागः ॥ १८॥

sura ma.ndira taru muula nivaasaH  hayyaa bhuutala majinaM vaasaH .
sarva parigraha bhoga tyaagaH kasya sukhaM na karoti viraagaH

சுர மந்திர தரு மூல நிவாஸஹா  சையா பூதல மஜினம் வாஸஹ
சர்வ பரிக்ரஹ போக த்யாகஹா கஸ்ய சுகம் ந கரோதி விராகஹ

இந்த ஸ்லோகத்தை ஆதி சங்கரரின் சிஷ்யர் நித்யானந்தர் எழுதியிருக்கிறார்.
''ஹே மானுடா, வீடு என்பது வசிக்க.   வசிக்க என்றால் முக்கால்வாசி  பேருக்கு  உண்ண உறங்க மட்டுமே என்று தான் அர்த்தம். இதற்கு எதற்கு மாளிகை? எதற்கு வீட்டு வரி.? 

உனது வாசஸ்தலம் மரத்தடி, ஆலய மண்டபமாகவே இருக்கட்டுமே. உடுக்க பரிசுத்த மான் தோல் இருந்தால் நீ ஒருத்தன் தான் தனவந்தன். கிடக்க மண் தரையைப்போல் ஒரு ஆனந்தமான படுக்கை உண்டா? ஒரு விஷயம் தெரியுமா? எவ்வளவு தான் விலை உயர்ந்த படுக்கையாக இருந்தாலும் இன்னும் பலர் இடதோ வலதோ கையை தலைக்கு வைத்து தான் அதன் மேல் சுகமாக படுக்கிறார்கள்! படுத்த உடனே  சுகமாக  ரம்பத்தால்  மரம் அறுப்பது போல் சத்தம்.  குறட்டை.  இரவெல்லாம் சுகம் சங்கீத்!

மிகப்பெரிய பணக்காரன் கூட டாக்டர் சொன்னபடி தலையணை இல்லாமல் வறட்டு பெஞ்சில், தரையில் பாயில் தான் படுக்கிறான். முதுகு எலும்புக்கு சுகமாக அது தான் அனுகூலமாம். சொந்த பந்தத்தை எல்லாம் விட்டு ஒழி. வசதிகள் என்று எதை நீ தேடினாயோ வரும் துன்பம் அத்தனையும் அதால் தான். 

உனக்கு திட சிந்தனை இப்படி இருந்தால்  நீ தான் ஐயா யோகி. நீ தான் பரமானந்தன். விடாதே இதை அடைய உனக்கு குறுக்கு வழி அந்த கோவிந்தனைப் பஜிப்பதே .  ஆசை தானே ஆசாமியை அலைக்கழிக்கிறது. அதனால் தானே திருமூலர் என்ற கெட்டிக்கார ரிஷி ''ஆசையை விட விட ஆனந்தமாமே'' என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். கெட்டியாக கோவிந்தனை பிடித்துக் கொள்வோம். அவன் மற்றவை நம்மை நெருங்காமல் பிடித்துக் கொள்வான்.

19  .योगरतो वाभोगरतोवा  सङ्गरतो वा सङ्गविहीनः ।
यस्य ब्रह्मणि रमते चित्तं नन्दति नन्दति नन्दत्येव ॥ १९॥

Yoga ratho vaa bhogaratho vaa, Sanga ratho vaa sanga viheena,
Yasya brahmani ramathe chittam, Nandathi nandathi nandathyeva. 

யோகரதோவா போகர தோவா சங்கர தோ வா சங்க விஹீன
யஸ்ய பிரம்மணி ரமதே சித்தம் நந்ததி நந்ததி நந்தத் யேவ:

இந்த ஸ்லோகத்தை ஆதிசங்கரரின் சிஷ்ய கோடிகளில் ஒருவரான  ஆனந்தகிரி என்பவர் இயற்றியுள்ளார். பேரே ''ஆனந்த'' மயமாக   இருக்கிறதே.   சங்கரரின் ஒவ்வொரு சிஷ்யருமே மணி மணியாகத் தான் இருந்திருக்கிறார்கள், எழுதியுமிருக் கிறார்கள். இல்லையா பின்னே? குரு யார் ? எப்படிப்பட்டவர்?

''அப்பா, மானிடா, சந்தோஷம் உனக்கு பல வழிகளில் வரும். ஒன்று த்யானத்தில், அல்லது உலக கேளிக்கைகளில் ஈடுபாடுகளில், அல்லது நாலு பேரின் கூட்டத்திலோ, சங்கத்திலோ, பல விஷயங்களை,  பலபேரிடம் பல பேரைப்பற்றியும்  கூட,  அவதூறாக கேலியாக பேசி, சிரித்து, அதில் சுகம் காண்பது, அல்லது,  தனிமையில் சுகம் காண்பது. இது எதுவுமே சாஸ்வதம் இல்லையே தம்பி! .  நன்றாக அறிந்துகொள். தன்னில் ‘தன்னை' த்தேடி, ‘தானே’ யாகும் சுகம் தான் பாமரன் பரமனோடு சேர்ந்து திளைக்கும் சுகம்.

 மனம் ஒன்றே அனைத்து மாகும் இன்பம். இது தான் திருமூலர் ''அன்பே சிவமாய் அமர்ந்தி ருந்தாரே' என்று சொன்ன  நிலைப்பாடு.      அதே பரமானந்தம். இது கிடைக்க முதல் படிக்கட்டு கோவிந்தன் நாமத்தை மனமார  உச்சரித்தல்.

‘ கோவிந்தா’’ என்று அடிவயிற்றிலிருந்து உணர்ச்சி பூர்வமாகச் சொல். உனக்கே அந்த இன்ப அனுபவம் புரியும். 

தொடரும்  



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...