Friday, May 27, 2022

life lesson

மனதில் பதியட்டும்  - 19  -  நங்கநல்லூர்  J  K  SIVAN

இந்த  உலகில் பிறந்த  எவரும்  எந்த  நாட்டிலும், எந்த மொழி பேசினாலும், ஏழையோ பணக்காரனோ, படித்தவனோ படிக்காதவனோ,  ஆணோ பெண்ணோ,  யாராக இருந்தாலும்  கஷ்டங்கள்  ஏதாவது அனுபவிக்காதவர் எவரும் இல்லை.  கஷ்டங்களைச் சொல்லிக் கொள்ளாமல் யாராலும் இருக்க முடியாது.  மற்றொரு ஜீவனிடம்  வெளிப்படச் சொன்னாலே அதில் ஒரு நிம்மதி பிறக்கிறது.  இது மனித ஸ்வபாவம் மட்டும் இல்லை, உலக நியதி. 

பாரத தேசம், அதிலும் குறிப்பாக  நமது தமிழ்நாடு ஒரு குளிர்சாதன பெட்டி மாதிரி. அதில் எதை வைத்தாலும் குளிர்ச்சியாக்கி  கெடாமல் பாதுகாத்து தரும்.  அது  போல எல்லா பாஷைகளையும், எல்லா நாகரீகங்களையும் கெடாமல் குளிர்ச்சியுடன் மனா நிறைவோடு  காத்துத் தந்து வந்திருக்கிறது. தமிழ்நாட்டில்  எது  நிறைந்திருக்கிறது? பாரதியார் தான் ஏற்கனவே சொல்லி விட்டாரே, '' வேதம் நிறைந்த தமிழ்நாடு'' என்று. அது உண்மை..

வியாதி வந்த பின்பு மருந்து சாப்பிட்டுப் போக்கிக் கொள்ளுவதைக் காட்டிலும் வராமலே தடுத்துக் கொள்வது தான்  வருமுன் காப்பது.   உபவாசம் விரதம்  எல்லாம்  ஒரு பத்தியம் மருந்து மாதிரி..  

மனது ஈரக் களிமண்  மாதிரி,  பிசைந்தால்  உருட்டினால் எந்த  உருவமும்  பண்ண முடியும்.  மிகவும்  மோசமான இடத்தில் மனதை வைத்தால் கீழான எண்ணங்கள், செயல்கள்  உண்டாகிறது. மேலான இடத்தில் மனதை வைத்தால் மேலான பிரம்ம  வித்தாக ஆகமுடியும்.  ஈசுவர சரணாரவிந்தத்தில் மனது லயித்தால்,  அப்படிப்பட்ட ஒரு  உயர்ந்த நிலையை எவரும் பெறலாம்.

குழந்தைகளால் சொல்லப்படும் ஒரு விஷயத்துக்குப் பெருமை அதிகம். குழந்தைதான் தெய்வம். அவர்களிடத்தில் காமக்  குரோதங்கள் இல்லை. 'குழந்தையாக இரு' என்று உபநிஷத் சொல்லுகிறது.

'சிவ' என்ற இரண்டு அக்ஷரங்களை எப்பொழுது சந்தர்ப்பம் நேர்ந்தாலும் உச்சாடனம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டும். மஹா பெரியவா  எப்போதும்  எதை சொல்லும்போதும் முதலில் சிவ சிவா  என்று சொல்லு  என்பார்.   எந்த ஜென்மம் வந்தாலும் அதை மறக்காமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் ஜென்மமே இல்லாத பரம சாந்த நிலை உண்டாகும்.

ஏற்கனவே  சொன்ன ஒரு குட்டிக்கதை இன்னொரு தரம் சொல்கிறேன்.  ஒரு  பிரபு எஜமானிடம்   ரெண்டு வேலைக்காரர்கள்.. ஒருவன் எப்பொழுதும் எதிரில் நின்று கொண்டு பிரபுவை  புகழ்ச்சியாக பேசிக்கொண்டே  இருப்பவன் . இன்னொருவன்  பேசவே மாட்டான். எஜமான்  எந்தக் காரியத்தைச் செய்ய வேண்டுமென்று நினைக்கிறாரோ அதைச்  செய்து முடிப்பவன்.  வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு,  எஜமான் எதிரே  நின்று வணங்கிக் கொண்டு ற்பவன் மீது தான் பிரபு அதிக பிரியம் வைத்துள்ளார் என்று தோன்றும்.  ஆனால்,  தான் சொல்லாமலேயே  எல்லா  வேலையும்  கச்சிதமாக  செய்கிறவனிடத்தில் தான் எஜமானுக்கு  பிரியம்அதிகம்  இருக்கும். இது போல் தான் ஈஸ்வரன் என்கிற நமது எஜமானுக்கு.   வெறும் ஸ்தோத்திரம் செய்தால் மட்டும்  நம் மீது அதிகப் பிரியமாக இருப்பான் என்று நினைத்து விட வேண்டாம்.   இதய பூர்வமாக கடமையைச் செய்தால்  ரொம்ப பிடிக்கும் 

'' குரு'' என்றால் கனமான, பெரிய  என்று ஒரு அர்த்தம்.  அதாவது பெருமை உடையவர். மகிமை பொருந்தியவர் என்று பொருள். பெரியவர்களை 'மஹா  கனம் பொருந்திய' என்று சொல்கிறோம். கனமென்றால் வெயிட் அதிகமென்றா அர்த்தம்? உள்ளுக்குள்ளேயே அறிவாலோ, அனுபவத்தாலோ, அருளாலோ பெருமை பெற்றவர் என்று அர்த்தம். ஆசிரியர் என்பவர் படிப்பிலே பெரியவர். நடத்தையால் வழிகாட்டுவதில் சிறந்தவர். குரு என்றால் இருட்டைப் போக்குபவர் என்று சொல்கி றார்கள். குருவிடமிருந்து புறப்பட்டுப்  போய், சீடனுக்குள்ளே புகுந்து, அவனை ஒரு மார்க்கத்தில் தீவிரமாகத் தூண்டிச் செல்லுவதை     'தீக்ஷை ' என்கிறோம். 

மீனாக்ஷி என்ற பெயரிலேயே மீன் இருக்கிறது. இதனால் அவளை கடாக்ஷத்தாலேயே ஞான தீட்சை தந்துவிடும் குருவாகச் சொல்லியிருக்கிறார்கள். இது மத்ஸ்ய தீக்ஷை.   காமாக்ஷி  பக்தனை ஸ்பரிசித்து, அவன் தலையிலே பாதத்தை வைத்து ஞானியாக்குபவள். . ஞானகுரு ரூபிணியாகவே அம்பாளைப் பாவித்துத் திருவடி தீக்ஷை பெரும் மஹான்கள் நம்மில் பலர்  வெளியே தெரியாமல்  சாதாரணர்கள் போலவே  வாழ்ந்து கொண்டு  இருக்கிறார்கள். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...