Thursday, May 26, 2022

SURI NAGAMMA

 

#ரமண_மஹரிஷி   -  நங்கநல்லூர்  J K  SIVAN
சூரி நாகம்மா

 ' எனக்கு எதற்கு மருந்து?''

ரமணரின் ஆஸ்ரமத்தில்  பக்தர்கள் எந்நேரமும் இருந்து கொண்டே இருப்பார்கள்.  வருவோர்  போவோர்  அதிகம்.  அமைதியான  சூழ்நிலை யில் அன்றும்  காலை  வழக்கம் போல்  எல்லோரும்  அமர்ந்திருந்தோம்.  எந்த நேரமும் பகவான்   வருவார்  என்று சொல்லும்போதே  பகவான் வந்து அமர்ந்தார்.   அப்போது அங்கு வந்த நாகனார் என தமிழ் கவிஞரான  பக்தர்  பகவானை வணங்கினார்.''

''எப்போ வந்தீர்கள்?''   என்று  பகவான் அவரை கேட்டார்.

''இப்போது தான்''  என்ற  நாகனாரிடம்   ''அதோ அங்கே தான் அழகம்மா நிர்வாணம் எய்தினாள் '.
பகவான் ஒரு சமாதியை  கை  நீட்டி  காட்டினார்.
''அதோ அங்கே  தான் உட்கார்த்தி வைத்தோம். முகத்தில் மரண சாயை  கொஞ்சம் கூட தெரியவில்லை. நீண்ட சமாதியில் இருப்பது போல முகம் தோன்றியது. ''
ஏதோ தனக்கு சம்பந்தம் இல்லாத  ஒன்றைப் பற்றி சொல்வது போல் இருந்தது மஹரிஷியின் பேச்சும் குரலும்.

பகவானின் தாயார் அழகம்மாவுக்கு  சமாதியை எழுப்பி அதன் மேல் மாத்ருபூதேஸ்வரர் லிங்கம் பிரதிஷ்டை பண்ணியாகி விட்டது. இன்றும்  ரமணாஸ்ரமம் செல்லும்போதெல்லாம்  அந்த  சமாதி  ஆலயத்தை தரிசிக்கும்போது மனதில் ஒரு வித சொல்ல இயலாத அமைதி பரவுகிறது.

பகவான் அருகில் நாள் கணக்கில் பேசாமல் அமர்ந்திருந்தால் ரமணராகி விட முடியுமா? ஆத்ம ஞானம் அடைய பாடுபட வேண்டாமா?

ஆஸ்ரமத்தில் மஹரிஷிக்கு   எண்ணெய் தடவி காலை பிடித்து விடும் கைங்கர்யம் சிலர் செய்தார்கள். அவர் எதையுமே லக்ஷியம் செய்யவில்லை.

 ''நானும் கொஞ்சம்  உங்களைப் 
போல புண்யம் செய்கிறேனே'' என்று சொல்லி  பிறருக்கு  ஏதோ உதவுவது போல  மஹரிஷியே தனது கால்களை பிடித்து விட்டுக்  கொண்டார். அவரைப் பொறுத்தவரை தனது உடலுக்கு செய்யும் பணி யாருக்கோ செய்வது போல.   தேஹ நினைப்பே இல்லாதவர் அல்லவா?  

 ஒரு 70 வயதான ஜட்ஜ்   ''நான் சிறிது நேரம் உங்கள் காலைபிடித்து விடட்டுமா? என்று  கேட்டார்..
''முதலில் உங்களுக்கு நீங்கள் உதவி செய்து கொள்ளுங்கள். உங்களில் இருக்கும் அமைதியை தேடி அடையுங்கள்''
 இதற்கு மேல் என்ன உபதேசம் தேவை?
காலம்  ஓடிக்கொண்டே இருக்கிறதே.  எப்படியும்  ஒரு  வருஷம் இருக்கலாம்.  

ஒருநாள்   ராமச்சந்திர ராவ்  என்ற ஒரு  ஆயுர்வேத டாக்டர் வந்திருந்தார் . ரொம்ப பேருக்கு அவரை பிடிக்கும்.  பிரபலமானவர்.  நல்ல கை ராசி டாக்டர் என்று பேர்.  பகவானின் எண்ணற்ற பக்தர்களில் அவரும் ஒருவர்.  பகவானை தரிசித்தவர் மெதுவாக அவர் எதிரில் வணங்கி நின்று 

'சுவாமி  உங்கள் உடல் நல  ஆரோக்கியத்துக்கு  சில மூலிகைகள்  மருந்துகள் பெயர்,   தேவையான அதன் அளவு   எல்லாம் எழுதிக் கொண்டு வந்திருக்கிறேன். இவை கிடைத்தவுடன்  உங்கள் கால் வலிக்கு மருந்து தயார் செய்து  விடுவேன்''  என்று  சுவாமியிடம்  ஒரு நீள  பட்டியலை பவ்யமாக  நீட்டினார்.

நல்ல பிள்ளையாக  பகவான் அந்த பட்டியலை பொறுமையாக படித்தார்.
''நல்ல சக்தி வாய்ந்த மூலிகைகள் போல  இருக்கிறதே. அது சரி, யாருக்கு இதெல்லாம்?''
''பகவானின் உடல் நலம் பெற''
''ஓ  அப்படியா, ரொம்ப பெரிய  பட்டியலாக இருக்கிறதே.  இதெல்லாம் வாங்க பத்து ரூபாய்க்கு மேல்  தேவைப்படும் போல இருக்கே!  யாரிடம் கேட்பது?

அருகில் இருந்தவர்  ஆஸ்ரமத்தை சுற்றிலும் நோக்கினார்.   
''சுவாமி  இந்த   ஆஸ்ரமம் யாருடையது?''
''ஓ,  இந்த  ஆஸ்ரமம் இருக்கே  என்கிறாயா. என்னிடம் என்ன இருக்கிறது?   ஒரு ஓட்டைக் காலணா வேண்டுமானால் கூட ஆஸ்ரம  சர்வாதிகாரியை தான் கேட்க  வேண்டும். இவ்வளவு பெரிய  மூலிகை ஜாபிதாவுக்கு எப்படி அவர்களிடம் பணம் கேட்க  முடியும்.   எனக்கு ஏதோ கொஞ்சம்  ஆகாரம் அளிக்கிறார்கள்.போஜன கூடத்தில் மணி அடித்தால் போய் எல்லோருடனும் அமர்ந்து  நானும் சாப்பிடுவதோடு சரி. லேட்டாக போனால்  எனக்கு அன்றைக்கு   சாப்பாடு கூட கிடைக்காது. நான் எப்படியும் கடைசியாகத்  தான் போய் நிற்பேன். சாப்பிடுவேன்.

ராவ்  நடுங்கினார்.  கையெடுத்து மஹரிஷியைக்  கும்பிட்டார்.
 ''பகவானே,  நான் உங்களிடம் அந்த மூலிகை பட்டியலை தான் காட்டினேன்.  பணம் கேட்கவில்லை. நானே  அந்த  மூலிகைகளை மருந்துகளை சேகரித்துக் கொண்டு வருகிறேன். வெகு சீக்கிரத்தில் மருந்து தயாரிக்கிறேன் ''  என்றார்

'அப்படியா,  நீயே  தேவையான  மருந்து மூலிகைகளை தேடி சேகரித்துக் கொள்வாயா?  அந்த மருந்து எனக்கு நல்லது செய்யும் என்றால் இங்கு எல்லோருக்குமே  கூட நல்லது தானே செய்யும். எனக்கும் இங்கு இருக்கும் எல்லோருக்கும் கூட  தர முடியுமா?''  என்று கேட்டார்  அந்த டாக்டரிடம் பகவான்.

அதற்குள் ஆஸ்ரமத்தில் ஒருவர்  ''எங்களுக்கு எதற்கு  சுவாமி மருந்து?''  என்றார்.

''ஓஹோ  காலையிலிருந்து இரவு வரை உழைக்கும் உங்களுக்கு மருந்து தேவையில்லை என்றால்  பேசாமல்  உட்கார்ந்து கொண்டு சாப்பிடும் எனக்கு எதற்கு மருந்து?  எனக்கும்  மருந்து மாத்திரை ஒன்றும் வேண்டாம்'' என்றார் பகவான்.

சூரி நாகம்மாவின்  கண்களில்  இருந்து எந்த விஷயமும் தப்பவில்லை என்று தெரிகிறது.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...