Saturday, May 28, 2022

TAMIL POETS

 #இரட்டை_புலவர்கள்  -  நங்கநல்லூர்   J K  SIVAN 


ரொம்ப நாள் கழித்து மறுபடியும் ரெட்டை புலவர்கள் பற்றி கொஞ்சம் சொல்கிறேன்.
ரெட்டை புலவர்கள்  ரெட்டையர்கள் அல்ல. ஒரு தாயின்  இரு குழந்தைகள் அல்ல.  14-ஆம் நூற்றாண்டில்  தமிழகத்தில் வாழ்ந்த ரெண்டு புலவர்கள்.  சோழ நாட்டில் ஆலந்துறை எனும் ஊரில் வாழ்ந்த ஒரு  செங்குந்தர் மரபில் அத்தை மகன் மாமன் மகனாகப் பிறந்தவர்கள். ரெண்டு பெரும்  கவிஞர்கள்.  ஒரு பாடல் இதைப் பற்றி சொல்கிறது. 

"அத்தை மகன்  குருடு  அம்மான் மகன்முட மாகிக்கீழ்மேல்  
ஒத்துறைந் தேகூறு பாடோ(டு) அணிகொள் உலப்பில்கவி  
முத்தரில் ஓதியே கம்பர் உலாமுன்  மொழிந்தவரும்  
சித்தம் உவப்பத் திரிந்தோர் செங்குந்த சிலாக்கியரே"  

என்ன அர்த்தம்? 
அத்தை மகன் கண் தெரியாத குருடன், மாமன் மகன்  நடக்கமுடியாத முடவன்.  ஊனமிருந்தாலும் இருவருமே  ஞானம் பிரகாசிக்க  சூரியன் ஒளி போல்  மதிக்கப்பட்டவர்கள்  என்பதால்   குருடர் பெயர்  முது சூரியன்,  முடவர் பெயர்  இளஞ் குரியர் .

இருவரும் ஒன்று சேர்ந்து பயணம் செய்ய தீர்மானித்து,  குருடன் தன் தோளில் முடவனைத் தூக்கி நடக்க,  முடவன் குருடனை வழி நடத்த, இருவரும் ஒற்றுமையாக வாழ்ந்து, ஒரு பாடலின் முன்பகுதி ரெண்டடியை  முடவன் பாட,  அதைக்கேட்டு  பாடலின் பின்பகுதி  ரெண்டடியை யைக் குருடன் முடித்துப் பாடுவது என்ற பாகு  பாட்டுடன் பாடல்களைத் திருவேகம்பப் பெருமான்   மீது பாடி இருக்கிறார்கள்.  'ஏகம்பர் நாதருலா” இயற்றினார்கள். புகழ் மிக்க  இந்த  இரட்டையர்கள்  செங்குந்தர்களுக்குள்ளே உயர்ந்த  ரெட்டைப்புலவர்கள் என பேர் பெற்றவர்கள்.  இவர்கள் வாழ்ந்த காலத்தில் தமிழ் தெரிந்த சேர நாட்டு  ராஜா  பெயர்  வரபதியாட்கொண்டான்.   கலம்பகம், அம்மானை, சிலேடை    என்று பல  பாடல்கள் பாடியவர்கள். 

கலம்பகம்  என்பது தமிழ் இலக்கண வகைப்படி கதம்ப மலர் மாலை போன்று பதினெட்டு  அயிட்டங்கள், உறுப்புகள் அமையப் பல்வகைப் பா   விகற்பங்களைப் பாடப் பெறுவது ஆகும்.  ஒரு  கலம்பக பாடல்  உதாரணம் சொன்னால் நன்றாக புரியும்: 

சிதம்பரம்  நடந்து சென்றபோது  இந்த  ரெண்டு  புலவர்களும்  சிதம்பரம் நடராசர் மீது அதீதப் பற்று கொண்டு பாடிய தில்லைக் கலம்பகத்தில் வரும் இந்த    பாடலில் “இரண்டு” எனும்   வார்த்தை  தொடர்ந்து வருவதை பாருங்கள்: 

"காதில் இரண்டு பேர், கண்டோர் இரண்டு பேர்,  
ஏதிலராய்க் காணோர் இரண்டு பேர்,  
பேதைமுலை உண்ணார் இரண்டு பேர்,  
ஓங்கு புலியூரர்க்குபெண்ணான பேர் இரண்டு பேர்"  

என்ன அர்த்தம் தெரியுமா?

காதில் இரண்டு பேர்.       கம்பளன்,  அசுவதரன்  என்ற பெயர் கொண்ட  ரெண்டு  நாகர்கள் சரஸ்வதி அருளால் இசை ஞானம் பெற்றவர்கள்.  அவர்கள் இருவரும் தமது புலமையை சிவபிரானிடம் மட்டுமே சமர்ப்பணம் செய்யத் தவம் இருந்தனர். அவர்கள்  தவத்தை மெச்சி சிவபெருமான் அவர்களைத் தன் இரு காதுகளில் தோடாக அணிந்து கொண்டார்.

கண்டோர் இரண்டு பேர்-      தில்லை நடராசப் பெருமானின் தாண்டவத்தைக் கண்டு பேறு பெற்றவர்கள் பதஞ்சலி மற்றும்
வியாக்ரபாத முனிவர்கள் ஆகிய ரெண்டு ரிஷிகள்  முனிவர்கள்  மட்டுமே. .

ஏதிலராய்க் காணோர் இரண்டு பேர்-    பரமேஸ்வரன்  ஸ்தாணுவாய்  ஒளிப்பிழம்பாய்  அடி முடி காண இயலாத உருவெடுத்த    போது  தேடி தோல்வியுற்று  திகைத்த பிரம்மாவும் விஷ்ணுவும் தான் இந்த  ரெண்டு பேர். 

பேதைமுலை உண்ணார் இரண்டு பேர்-    தாய்ப்பால்  குடிக்காமலேயே  பிள்ளைகளாக  பார்வதி தேவிக்கு மகன்களாக வாய்த்த  ரெண்டு பேர்  விநாயகர்    சுப்பிரமணியர். 

ஓங்கு புலியூரர்க்குப் பெண்ணான பேர் இரண்டு பேர்-    பரமேஸ்வரனின் சிரத்தில் உள்ள  கங்காதேவி,  அவரது தேகத்தில் ஒரு பாதியான உமா தேவியும்  அந்த ரெண்டு பேர். 

சிலேடை என்பது ரெண்டு அர்த்தங்களை தரும் பாடல். ரெட்டை புலவர்கள்  ஆளுக்கு ரெண்டு அடி  பாடி முடித்தது. ஒரு சிலேடை பாடல் உதாரணம். ஏற்கனவே இது பற்றி எழுதி இருக்கிறேன்.

"அப்பிலே தோய்த்திட்டு அடுத்தடுத்து நாமதனைத்  
தப்பினால் நம்மையது தப்பாதோ -இப்புவியில்  
இக்கலிங்கம் போனாலென் னேகலிங்க மாமதுரைச்  
சொக்கலிங்கம் தானிருக்கச் சொல்"

மதுரையில் சொக்கநாதர்  மீனாட்சி தரிசனம் செய்ய வைகையில் குளிக்கும்போது கண் பார்வை இல்லாதவரின் வேஷ்டி நீரோடு போய்விட்டது. கரையில் படியில் உட்கார்ந்திருந்த முடவரால் என்ன செய்யமுடியும்.   வேஷ்டி போனது தெரியாமல் குருடர்  படித்துறையில் நீரில் நின்று இருவர் வேஷ்டியையும் அடித்து துவைக்கிறார். 

முடவர் பாடுகிறார்:  
தண்ணீரிலே  முழுதுமாக நனைத்து,மீண்டும் மீண்டும், நாம்  வேஷ்டியை  அடித்துத் துவைத்தால், அது நம்மை விட்டு ஓடிப்போய் விலகி செல்லாதோ, அதோ  ஆற்றில் மிதந்து போய் விட்டதே. விலகிச் செல்லாதோ.
 
குருடர் பதில்:
இந்த  (கலிங்கம்) ஆடை  நம்மை விட்டுப் போனாலென்ன, ஏகலிங்க சொரூபமாக மதுரையில் வீற்றிருக்கும்,
சொக்கலிங்கம்  துணையாக இருந்து வேறு வேஷ்டி தரமாட்டாரா? .

அம்மானை:  மூன்று பெண்கள் கூடி விளையாடுவது. அம்மானைக் காய்களை(மரத்தாலான சிறிய பந்து போன்ற உருண்டைகள்) மேலே  எறிந்து கீழே விழுங்கால் பிடிப்பதாக அமைந்த பாட்டு. இருபது முதல் இருபத்தைந்து வயதுடைய அரிவையர்கள் விளையாடுவது.   மூவரில் ஒருவர் தெய்வத்தைப் பற்றிப் புகழ்ந்து கூறுவது. அடுத்தப் பெண் கேள்வி கேட்பது. மூன்றாவது பெண் பதில் சொல்வது.    நிறைய  பிள்ளைத்தமிழ்  பாடல்கள் இவ்வாறு உள்ளன. முடிந்தால் ஒரு முறை இதை பற்றி எழுதுகிறேன்>

அம்மானை  விளையாடும்போது  காய்கள் கீழே விழக்கூடாது.  அவுட்.   செய்யுள்  நடையம் அது போல் துளியும்  மாறக்கூடாது.  கேள்விக்கு தக்க  பதிலும்  பாட்டில்  இருக்க வேண்டும்.  ரொம்ப கஷ்டமான வேலை இது.  ரெட்டைப்புலவர்கள் அதிசயமானவர்கள். இதை ஜம்மென்று செய்தவர்கள். 

ஒரு  அம்மானைப் பாடல்   மாடலுக்கு:   சிலேடை நயத்துடன் இரு பொருள் தருமாறு பாடியது:

"தென்புலியூர் அம்பலவர் தில்லைச் சிதம்பரத்தே  
வெம்புலியொன் றெந்நாளும்  மேவுகான் அம்மானை  
வெம்புலியொன் றெந்நாளும்  மேவுமே ஆமாகில்    
அம்பலத்தைவிட்டே அகலாதோ அம்மானை  
ஆட்டைவிட்டு வேங்கை அகலுமோ அம்மானை"

முன்னிரண்டு அடிகளை முதற் பெண்ணும், அடுத்த இரண்டடிகளை இரண்டாவது பெண்ணும்,  கடைசி அடியை 
மூன்றாவது பெண்ணும்  பாடுவது மாதிரி  இயற்றியிருக்கிறார்கள் .
பாடியுள்ளவாறு அமைந்துள்ள பாடல்.

அர்த்தம்: 
முதற் பெண்: தென்புலியூர் எனும் தில்லையில் புலி ஒன்று காக்கின்றது.
இரண்டாம் பெண்:  ஓஹோ அப்படியா,  அங்கே இருக்கிற புலி  அங்கிருந்து எப்போது வேறே இடம் செல்லும், அகலும்?.
மூன்றாம் பெண்:  ரொம்ப நன்றாக இருக்கிறதே உன் கேள்வி.  ஆடு இருக்கும்போது புலி விலகிப் போகுமா?

தில்லை நடராஜன் வீற்றிருக்கும் சிதம்பரத்தில்(தென்புலியூர்) முனிவர் வியாக்ரபாதர் (புலியின் காலை உடையவர்) எந்நாளும் வாசம் செய்கிறார். 
இரண்டாம் பெண்: அவர் தில்லையை விட்டு எப்போது விலகிச் செல்வார்.
மூன்றாம் பெண்: சிதம்பரம் நடராஜா வின் ஆட்டத்தில் நாட்டம் கொண்ட   புலிக்கால் முனிவர்(வியாக்ரபாதர்) கொஞ்சமாவது அந்த இடத்தை  விட்டு அசைவாரா?எந்நாளும்  விலக மாட்டார்.

முடிந்தபோது  இரட்டைப்  புலவர்கள்  இயற்றிய  தில்லைக் கலம்பகம், திரு ஆமாத்தூர் கலம்பகம், மூவர் அம்மானைப் பாடல்கள்,  கச்சிக் கலம்பகம் மற்றும் கச்சி உலா முதலிய பிரபந்தங்கள் மற்றும் பல தனிப் பாடல் திரட்டுகளை  முடிந்தால் தேடி படியுங்கள். குஷியாக இருக்கும். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...