Sunday, May 15, 2022

SHEERDI BABA


 #மனிதருள்_தெய்வம் -  நங்கநல்லூர்  J K  SIVAN 

ஷீர்டி பாபா 


 ''மாவு அரைத்ததின் மர்மம்'

இன்று  ஷீர்டி  என்பது ஒரு  நெரிசல் மிக்க  நகரமாக  காட்சி அளிக்கிறது. தெருவில் நடக்க இடமில்லை.  எண்ணற்ற கடைகள் இரு மருங்கிலும்.  ஷீர்டி பாபா  ஆலயம்  மிகப்பெரிய இடமாக  எங்கும் கம்பிகள் கட்டி குறுக்கும் நெடுக்குமாக  ஒருவர் பின் ஒருவராக வரிசையில் ஊர்ந்து சென்று உள்ளே  அவரை தரிசிக்க வேண்டும்.  ஆங்காங்கே முன்கூட்டியே  பணம் கட்டி ஆரத்தி போன்ற தரிசனங்களை நேரில் காண  ஒரு பெரிய கூட்டம் வரிசையாக ஒரு  தணிக்க கம்பிக்  கூட்டில் செல்கிறது.   ஜருகண்டி  என்று பிடித்துத் தள்ளும் வரிசையில் மணிக்கணக்காக  நிற்கும் பக்தர்கள்.  
நம் முன்னோர்களில் பலர் எவ்வளவு  அதிர்ஷ்ட சாலிகள்.  ஷீரடியில் காலாற நடந்து மசூதியில் பாபா  எதிரே அமர்ந்து அவரோடு பேசியவர்கள்,  அவரோடு வாழ்ந்தவர்கள், அவர் காலடி பட்ட மண்ணில் நடந்தவர்கள்.  
நாம் அவரை நேரில் தரிசிக்க முடியாவிட்டாலும் அவர் வாழ்ந்த  பூமியில்   அவர் நடந்த மண்ணில்  நாமும் வாழ்கிறோமே, அவர் வாழ்ந்த  ஸ்தலத்தையாவது நேரில் சென்று தரிசித்து வணங்கும் பாக்கியசாலிகள் என்று சந்தோஷம் அடைவோம்.  அப்படித்தானே  காஞ்சி மஹா பெரியவா பற்றியும் நினைக்கிறோம்.  
ஒரு பக்தர் ஷீர்டியில் பாபாவை நேரில் காண சென்றார். மசூதியை அடைந்தவர் தரிசனம் பெற பாபாவை தேட, அவர் எங்கோ ஒரு ஓரத்தில் என்ன செய்து  கொண்டிருக்கிறார் என்று அறிந்து ஆச்சர்யம் அடைந்தார். வாய், முகம் எல்லாம் சுத்தம் செய்து விட்டு, சாய் பாபா ஒரு பெரிய கல் இயந்திரம் முன்பு அமர்ந்தார். அவரைச்  சுற்றி பாத்திரங் களில் கோதுமை. தரையில் ஒரு கோணியை விரித்து அதன் மேல் அமர்ந்தவாறு கையால் அந்த பெரிய  கருங்கல்  இயந்திரத்தை சுற்றி கோதுமையை அரைத்தார். அரைகுறையாக அரைந்த கோதுமையை எடுத்து ஒரு பெரிய முறத்தில் போட்டு காற்றாட புடைத்து தவிடு உமி எல்லாம் நீக்கினார். நீண்ட அங்கியின் கையை மடக்கி மேலே மடித்துக்  கொண்டார். கிறுகிறு என்று அரைத்தார். ஒரு இயந்திரத்தின் மேல் பாகத்தில் உள்ள குழியில் கோதுமையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டுக்கொண்டே இன்னொரு  கையால் அரைத்தார். ''எதற்கு  பாபா இப்படி  மாவு அரைக்க வேண்டும்?'' அவருக்கு எதுவுமே என்றுமே தேவைப்பட்டதில்லையே? ''பவதி பிக்ஷாந் தேஹி''  சாமியார் அல்லவோ அவர்?   இதெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பக்தர்கள் யாருக்கும் அவரை நீங்கள் எதற்காக மாவு கஷ்டப்பட்டு அரைக்கிறீர்கள் என்று கேட்க தைர்யம் இல்லை.
பாபா கோதுமை மாவை கல்  இயந்திரத்தில் அரைக்கிறார் என்கிற சேதி எப்படியோ வாட்ஸாப்ப் செய்தி மாதிரி உடனே ஷீர்டி கிராமத்தில் எங்கும் பரவியது. மசூதிக்கு ஏராளமாக ஆணும் பெண்ணுமாக வந்தார்கள். ஆண்களை விட தைரியசாலிகள்   பெண்கள். ''பாபா என்ன இது?;;  என்று ஓடிவந்து அவர் கையை விலக்கி இயந்திரத்தின் மர கைப் பிடியை பிடித்து அரைக்க ஆரம்பித்தார்கள். பாபா நாம ஸ்மரணை பஜனை சப்தமாக ஒலித்தது. முதலில் பாபாவுக்கு கோபம் வந்தது. அந்த குற்றமற்ற பெண்களின் ஆர்வம், அன்பு, பக்தி பரவசம் அவரது கோபத்தை விலக்கி மகிழ வைத்தது.

''பாபாவுக்கு பெண்டாட்டி, பிள்ளை, வீடு, வாசல், உற்றார், உறவினர், சமையல், எதுவும் கிடையாது. பிக்ஷையில் வாழ்பவர். எதற்காக இத்தனை கோதுமை மாவு? ரொட்டி சுடவா ? யாருக்கு? ஏகாங்கியான பாபாவுக்கு ஏன் இத்தனை மாவு? பாபா தாராள மனது கொண்டவராயிற்றே. தான தர்மத்துக்கா? நமக்கெல்லாம் கொடுக்கவா?'' என்று அந்த பெண்கள் நினைத்தனர். மனது இப்படி நினைத்தாலும் வாய் அவர் புகழ் பாடிக்கொண்டே இருந்தது. மாவெல்லாம் அரைத்து முடித்து இயந்திரத்தை நன்றாக கழுவி துடைத்து ஓரமாக நகர்த்தினார்கள். அரைத்த  மாவை எல்லாம்  நான்கு கோணிச் சாக்குகளை நிறைத்தது. தலையில் மூட்டைகளை ஏற்றி சுமந்து நகரத் துவங்க, அமைதியாக பார்த்துக்  கொண்டே இருந்த பாபா, திடீரென்று கோபமாக கத்தினார்.
"பெண்களே, நீங்கள் என்ன பைத்தியமா? அப்பன் வீட்டு சொத்து பாழா போகுதா? மாவை எடுத்துக்கொண்டு நகர்கிறீர்களே, உங்க கிட்டேயிருந்தா கோதுமை யாசகம் வாங்கினேன், மாவை உங்களுக்கு கொடுக்க? ''   பாபா கத்தினார்.    பெண்கள் திகைத்து நின்றபோது பாபா,
''நீங்க என்ன செய்யணும் தெரியுமா? இந்த மாவெல்லாம் தூக்கிக் கொண்டு போய் நம்ம ஷீர்டி கிராம எல்லையில் போடுங்கள். ஜல்தி.'' என்று கட்டளையிட்டார்.

பெண்களுக்கு வெட்கமாகவும் அவர் செய்கையும்  கட்டளையும்  புதிராகவும் இருந்தது. தங்களுக்குள்ளே கசமுச  வென்று ஏதோ பேச்சு. பிறகு எல்லோரும் பாபா சொன்னபடி மாவு மூட்டைகளை சுமந்து ஊர் எல்லையில் வீசினார்கள். .

பாபாவை காண சென்ற பக்தர் சிலரிடம் ''ஏன் பாபா இப்படி நடந்துகொண்டார்?'' என்று கேட்க விஷயம் புரிந்தது.

ஷீர்டி அருகே கிராமங்களில் காலரா என்ற கொள்ளை  நோய் பரவி இருந்தது. அது கிராமத்தில் நுழையக்கூடாது என்று பாபாவின் செய்கை இது.

''பாபா அரைத்தது கோதுமை இல்லை. காலரா நோயை. அதை துவைத்து அழித்து கிராமத்துக்கு வெளியே கொண்டு எறிந்து  விட்டார் என்ற நம்பிக்கை பரவியது. எங்கும் காலரா பரவி உயிர்கள் மாண்டபோதும் ஷீர்டியில் ஒருவருக்கும் அந்த நோய் பாதிப்பு எல்லை என்பது ஆச்சர்யமான உண்மை. கிராம மக்களுக்கு சந்தோஷமாக இருக்குமா இல்லையா ?

பக்தர் மனதில் ஒரு சம்சயம். கோதுமைக்கும் காலராவிற்கும் என்ன சம்பந்தம்? புரிபடாத உண்மை இது. பாபாவின் லீலை என்று தான் சொல்ல தோன்றுகிறது. சாய் சத் சரித்திரம் எழுதிய தபோல்கர் இவ்வாறு  நேரில் பார்த்து  அதிசயித்தவர்.

ஏறத்தாழ 60 வருஷங்கள் பாபா ஷிர்டியில் வாழ்ந்தவர். ஒவ்வொருநாளும் இயந்திரத்தில் மாவு அரைத்திருக்கிறார். கோதுமை மட்டும் அல்ல. எல்லோருடைய பாபங்களையும், உடல் உள்ள நோய்கள் அனைத்தையும் சேர்த்து தான்'' என்று பக்தர்கள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நம்புகிறார்கள். அவர் உபயோகித்த அந்த கல் இயந்திரத்தின் கீழ் மேல் பாதி இரண்டும்  கர்மமும் பக்தியும். கர்மம் கீழே, பக்தி மேலே  அதை அரைத்தது. கல் இயந்திரத்தின் மர கைப்பிடி தான் ஞானம்.

ஆத்ம ஞானம் அடைவது என்பது நம்முடைய உணர்ச்சிகள், எண்ண ஓட்டங்கள், ஆசா பாசங்கள், பாபங்கள், முக் குணங்கள், அஹங்காரம், எல்லாவற்றையும் நைசாக பொடித்து அழிக்கவேண்டும் என்பது தான் பாபா   மாவு அரைத்த தத்துவம்.

இப்படித்தான் ஒரு முறை கபீர் தாசர் ஒரு பெண் தானியத்தை அரைக்கும்போது பார்த்து கண்ணீர் விட்டார். அவரது குரு, நிபதி ரஞ்சனா இதை பார்த்துவிட்டு ''கபீர் என் கண்ணீர் சிந்துகிறாய்? என்று கேட்டபோது இந்த உலக வாதனைகள் என்னும் இயந்திர சக்கரத்தில் மாட்டிக்கொண்டு அந்த தானியம் மாதிரி நசுங்குகிறேனே என்று தோன்றியது.  கண்ணீர் வந்தது'' என்றார்.

''அட அசடே, மனம் கலங்காதே. அந்த தானியம் அரைக்கும் கைப்பிடி எனும் ஞானத்தை விடாமல் கெட்டியாக பிடித்துக்  கொள். மனதை அலைய விடாதே உள்ளே நோக்கி மத்தியில் செலுத்து. நீ தப்பித்துக் கொள்வாய். '' என்கிறார் குரு நிபதிரஞ்சனா.  
இன்னும் வரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...