Monday, May 2, 2022

 



ஒரு ஏழு மாடிக்  கோவில்.  --  நங்கநல்லூர் J K  SIVAN 

பம்பாயில்  ஜூஹூ என்று ஒரு இடம். நவநாகரீக  உலகம் அது.  அநேக  காரியாலயங்கள், வர்த்தக நிறுவனங்கள்  தவிர, ஆலயங்களும் அங்கே சில உண்டு.  ஆஸ்பத்திரிகள் இத்யாதி இத்யாதி... 
 பெட்டிக்கடையிலிருந்து  குபேரர்களின்  நிறுவனங்கள் வரை  அனைத்தும் அங்கே காணலாம். 

 கிருஷ்ணன் அங்கே  இஸ்க்க்கோன் ISKCON  வளாகத்தில் அற்புதமாக இருந்ததைக்  கண்டு மகிழ்ந்து  ஏற்கனவே  அந்த ஆலயம் பற்றி எழுதியது நினைவிருக்கலாம். ஜூஹூ ஒரு அழகான கடற்கரைப்  பட்டினம்.    ஹிந்தி படவுலகில் நக்ஷத்திரங்கள் வாழுமிடம். 

மேற்கு பக்கம்  அரபிக்கடல், வடக்கே  வெர்சோவா, சண்டைக்ரூஸ்  விமான நிலையம்,  கிழக்கே  விலே பார்லே ஊர்,  தெற்கே  கார் KHAR  என்கிற ஊர். பஸ் நிறைய ஓடுகிறது. மேலே ரயில், பக்கத்திலேயே ரயில். 

ஒரு காலத்தில் குட்டி தீவாக  மணல் மேடாக  நூறாண்டுகளுக்கு முன்   இருந்த இடம்.  கடல் நீர் வெற்றியபோது மணலில் நடந்து போன  இடம்.   ஒரு காலத்தில் இங்கே விவசாயிகள், உப்பு விற்பவர்கள், கள்  இறங்குபவர்கள், மீன் பிடிப்பவர்கள் வாழ்ந்தார்கள்...

1890ல்  ஜாம்ஷெட்ஜி டாடா இந்த இடத்தை வாங்கி பங்களா கட்டிக்கொண்டார். காலாற  காந்தி நடந்த இடம் அவர் சிலையோடு காந்திகிராம்  தெரு  என்ற பெயரோடு உள்ளது.

1970ல்  பக்தி வேதாந்த சுவாமி  இங்கே தான் ISKCON  துவங்கினார்.  எங்கு பார்த்தாலும் பானி பூரி, பேல் பூரி, சேவ் பூரி  வடா பாவ்.     நான் இட்லி வடை  பொங்கல் தோசை ஆள். அந்த பக்கமே  என் பார்வை  போகவில்லை. ஒரு உல்லாச  பொழுது போக்கு இடம்.

ISKCON  கிருஷ்ணன்  கோவில் எதிரே ஒரு கோவில் என் கண்ணைக் கவர்ந்தது.  ஸ்ரீ முக்தேஸ்வர் தேவாலயம்.   வாசலில் கஜலக்ஷ்மி படம் போல் ரெண்டு பக்கம் ரெண்டு தும்பிக்கை தூக்கிய யானைகளுக்கு இடையே   கோபுர  மணி போல் ஒரு  விதானம். 
.
400 வருஷ கோவில் என்கிறார்கள். சனீஸ்வரன் பரிகார ஸ்தலம். அங்கே என்ன விசேஷம் என்றால் சின்ன இடம் என்பதால் பல மாடிகளில் பல சந்நிதிகள்.  7 மாடிக்கு போக  லிப்ட் இருந்தது.  ஐந்து ரூபாய் கேட்டார்கள். ஐநூறு ரூபாய் நோட்டு தான் ஒன்று இருந்தது.  சில்லறையைக்  காணோம்.  காலையில் சில்லறை யார் கொடுப்பார்கள்?

என் அவஸ்தையை பார்த்து விட்டு அங்கிருந்த டிக்கெட் விற்பவர்  ஹிந்தியில் லிப்ட் ஓட்டுபவரிடம் என்னை இலவசமாக ஏழு மாடி தூக்கிச் செல்ல  உத்தரவிட்டார்.  

கீழே  தர்பார் மண்டபம். நவகிரஹங்கள். மொத்தம்  105 அழகிய  விக்ரஹங்கள்  உள்ள கோவில்.  ஏழு மாடிக்கு தனித்தனி பூசாரிகள்.  70க்கு மேல்  வெவ்வேறு பணியில் ஈடுபடுபவர்கள் இருக்கிறார்கள்.

ஒரு தளத்தில்  12 ஜோதிர் லிங்கங்களை  அற்புதமாக  இங்கே தரிசிக்கலாம்.  ஒன்றில் தசமுக விநாயகர் மற்றும் பல சிகப்பு சிந்தூர விநாயகர்கள்.  இன்னொன்றில் அம்பாள், பல  பைரவிகளாக தோற்றங்கள், மற்றொன்றில் தசாவதாரம், விஷ்ணு  பரிமாணங்கள். இன்னொன்றில்   பாண்டுரங்கன் ருக்மா பாய்,  அவர்களைச்  சுற்றி  பாண்டுரங்க பக்தர்கள்  துக்காராம், நாமதேவர்,  ஏக்நாத், ஞானாநந்தர்  போன்றவர்களைப் பார்க்கலாம்.  ஒரு தளத்தில்  திருப்பதி வெங்கடாசலபதி கண்ணைக் கவர்கிறார். ஒன்றில்  ஷீர்டி சாயிபாபா அபூர்வ  விகிரஹம்.  அடுத்த ஒன்றில் ராம லக்ஷ்மணர் சீதா  ஹனுமான் தரிசனம். 

பம்பாய்  செல்வம் கொழிக்கும் குபேர பட்டணம் என்றாலும் கொடுக்க, தான தர்மம் செய்ய மனம் வேண்டுமே, அது அங்கே அபரிமிதமாக இருப்பதால் தான் யாரும் காசு பிடுங்கவில்லை. ஒரு ஸ்லோகம் சொல்லி முக்தேஸ்வர் முன் கண்ணை மூடி  ருத்ரம் பாராயணம் பண்ணிக்கொண்டிருந்த என் கழுத்தில் ஒரு மாலை, கையில் பையோடு தேங்காய், ஒரு வஸ்திரம், வெற்றிலை  வாழைப்பழம், பிரசாதங்கள்.  ஆச்சர்யமாக இருந்தது எனக்கு. நான் இதை நம் தமிழ் கோவில் எதிலாவது எதிர்பார்க்க முடியுமா?
 
 தர்மிஷ்டர்கள் நிறையபேர்  நிதி உதவி செய்து ரொம்ப சிறப்பாக இந்த  ஆலயம் பராமரிக்கப்பட்டு வருகிறது.  நுழைவு வாயில் கடந்தால் எதிரே  முக்தேஸ்வர் தரிசனம்.  ஒருகாலத்தில் மரத்தால்  3 கதவுகளோடு,  மண் தரையோடு  இருந்த   முக்தேஷ்வர் சிவாலயம் இது.  அது  மராத்தி பேஷ்வாக்கள் காலத்தில். அப்புறம் நிறைய பிராமணர்கள் குடியேறி கோவில் வளர்ந்தது. 

வெள்ளை வெளேரென்று சலவைக்கல்லில்  அழகிய  சிலைகள், ஏழு தளங்களிலும் ஒவ்வொரு  சநதனதர்ம  விக்ரஹம்  பரிவாரங்களுடன். ஒவ்வொரு படியாக இறங்கி ஒவ்வொரு தளத்திலும் நுழைந்து பார்த்து அதிசயித்தேன். முக்தேஸ்வரும் ஹநுமானும் அடித்தளத்தில் அருள் பாலிக்கிறார்கள். மொத்தத்தில் கோவில்  நேற்று தான் கட்டி முடித்தது போல் துல்லியமாக  ஒரு குப்பை கூளம்  இல்லாமல் பளிச்சென்று  மன நிறைவைக் கொடுத்தது. அங்கிருந்து வெளியே வர மனமே இல்லை. வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டியிருந்ததால்  என்னை நானே இழுத்துக்கொண்டு வெளியே நிறுத்தியிருந்த காருக்கு சென்றேன்.   

நான் எடுத்த படங்களை  விட ஒரு  வீடியோ இணைத்திருக்கிறேன். அங்கு இதுவரை செல்லாதவர்களுக்கு  இருக்கும் இடத்திலிருந்தே முக்தேஸ்வர் தேவாலயம் செய்ய இயலும்     

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...