Thursday, May 12, 2022

life lessons

 மனதில் பதியட்டும்  - 17  -  நங்கநல்லூர்  J  K  SIVAN



கொரோனா என்கிற  பீதி, பயம்  மனதை விட்டு அநேககமாக  விலகி, மீண்டும்  பழைய வாழ்க்கை துவங்க ஆரம்பித்துவிட்டது. என்றாலும்  சூடு கண்ட பூனையாக நாம் ரொம்ப ஜாக்கிரதையாக சில பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமாக  வெளியே சென்றால் வீடு வந்து கால் கை  முகம்  கழுவ வேண்டும்.  ஹாய்  ஷேக்   ஹேண்ட்ஸ்  வேண்டாம்  வணக்கம்  நமஸ்காரம் என்று நமது கைகளை நாமே  சேர்த்து கூப்பி வைத்துக்கொண்டால் போதும், இன்னொருவரிடம் கொடுக்கவேண்டாம்.  வெளியே எங்கும் அனாவசியமாக  சாப்பிடவேண்டாம்.  கட்டித் தழுவ வேண்டாம்.  மடியாகவே  இருப்போம்.   பொது இடங்களில், கும்பலில்,   இருக்கும்போது  முக கவசம் அணிவோம்.
 
இயந்திரங்கள் தொடர்ந்து வேலை செய்தால் கெட்டுப் போய் விடுகின்றன என்று அவ்வப்போது ஓய்வு கொடுக்கிறோம். அதேபோல் விரத  முறைகள் வயிற்றுக்கும்  சற்று,ஓய்வு கொடுத்தால் தான், உடலுக்கு ஆரோக்கியம் உண்டாகும்.  மாதம் இருமுறையோ ஒருமுறையோ  உபவாசம் அவசியம்.

ஓவராக  சாப்பிடுவது தப்பு.  இலவசமாக கிடைத்தால்  அதிகம் உண்பது  அறிவீனம். பட்டினி கிடப்பதும் கூடாது. எப்போதும் தூங்கி வழியக் கூடாது. தூக்கமே இல்லாமல் விழிப்பதும் கூடாது. சாப்பாடு, பிரயாணம், உழைப்பு எல்லாவற்றையுமே   ஒரே சீராக, அளவாக  கையாளவேண்டும். .

தன் உடம்பு கொழுக்க  மற்ற ஒரு உயிரின் உடம்பைக் கொன்று திண்பவனிடம் இரக்கம் எப்படி  இருக்கும்?  நான் கேட்கவில்லை. இதோ திருவள்ளுவர் கேட்கிறார்.

''தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.    251

அருமையான சத்துள்ள   தாவர  கீரை உணவு இருக்க  புலால் எதற்கு? ஒவ்வொருவரும் வீட்டிலேயே குட்டி குட்டி தாவரங்களை வளர்த்து சந்தோஷப்படுங்கள். 

என் இளமைக்காலத்தில்  மாரிக்காலம் வந்தால்  அதிகம் துன்பப்படுவது அம்மா தான்.  பாவம் இப்போது தான் எனக்கு மண்டையில் உறைக்கிறது .  எல்லோரும் எட்டுமணிக்குள் சாப்பிட்டு கையில் எடுத்துக்கொண்டு பள்ளிக்கூடம் போகவேண்டும். அதற்குள் சமையல் ஆகவேண்டும்.  ஈர விறகு. புகை தான் அதிகம் தரும். நெருப்பு சிவப்பாக பார்ப்பதே கஷ்டம்.  ஊதாங்குழல் என்று இரும்பில் ஒரு  ட்யூப் வைத்திருப்பாள். அதால் ஊதி ஊதி மார்வலி தான் வரும்.  ரொம்ப  நோயாளி பெண்மணி.  நாங்கள் சீக்கிரம் சாதம்  போடு என்று கத்துவோம்.  பிரெஸ்டிஜ் குக்கரா இருந்தது அவளிடம். காஸ் ஸ்டவ் பார்த்ததில்லை அவள்.   சோறு வெண்கலப்பானையில் கொதிக்கவேண்டாமா? இறக்கி கஞ்சி  வடிக்கவேண்டாமா, சாதம் உலைப்பூர வேண்டாமா. அப்புறம் தானே தட்டில் விழும்.கெரோசின் எண்ணையை ஈர விறகின் மேல் ஊற்றி உஷ்ணம் உண்டாக்குவாள்.   பனை ஓலை விசிறி கை வலிக்க விசிறி அடுப்பெரிப்பாள் .

அடுப்புக்குள்  நெருப்பு பரவியது  போல, தர்மத்தையும், ஒழுக்கத்தையும் எல்லோரிடத்தும் பரவச் செய்ய வேண்டும். மனம் வேதாளம் போன்றது. வேதாளம் கட்டுப்பட்ட பின்பு எவ்வளவு காரியங்களை செய்ததோ, அதைப் போலவே மனமும் செய்யும்.  விக்ரமாதித்தன் போல்  மேலே மேலே  வேலை கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும். அலாவுத்தின் அதைத்தானே பூதத்துக்கும்  செய்தான். 

 நம் மனம் தான்  வேதாளம், அலாவுதீன் பூதம்.   மனத்தை நம் வசப்படுத்துவதே யோகம் என்பதாகும். நாள்தோறும் மனம், வாக்கு, உடம்பு மற்றும் பணத்தால்  எதாவது சின்னதாகவாவது ஒரு  தர்மம்செய்யவேண்டும். தர்மம் என்பது நாள்தோறும் செய்யும்  செலவில் ஒன்றாக இருக்கட்டுமே.   இந்த உடம்பு போனவுடன் நம்முடையதெல்லாம் நம்முடன் துணைக்கு வராது. ஆனால், இந்த பணத்தையெல்லாம் தர்மக்கணக்கில் வரவு வைத்தால் அது எங்கேயும் நம் கூட வரும். ராமன் காட்டுக்கு செல்லும்முன் தாய் கோசலையிடம் விடைபெற்றான். ஊருக்குப் போகும் பிள்ளையிடம் தாயார் பட்சணம் கட்டிக் கொடுப்பது வழக்கமல்லவா? பதினான்கு ஆண்டுக்கும் கெடாத பட்சணத்தை அவள் கொடுத்தனுப்பினாள். அது தான் தர்மம். தைரியமாகவும், நீதியாகவும் எந்த தர்மத்தை காத்தாயோ அந்த தர்மம் தலை காக்கும். அது ஒன்று தான் உன்னை என்றும் பாதுகாக்கும் என்று ஆசீர்வதித்தாள்.

தொடரும்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...