Sunday, May 1, 2022

MINT STREET

 


''தங்க சாலை''-   நங்கநல்லூர்  J K  SIVAN 

தருமமிகு சென்னையில் கந்தகோட்டம் சென்றவர்களுக்கு தங்கசாலை தெரியும். கந்த கோட்டம் தான்  கந்தசாமி கோவில்.  அந்த கோவிலுக்கு போகாத சென்னைவாசிகள் கூட ஒரு தரமாவது  மின்ட் ஸ்ட்ரீட் mint street எனப்படும் தங்க  சாலைக்குள் நடந்து யார்  மேலாவது, எதன் மீதாவது இடிபடாமல் நடந்திருக்க முடியாது. கஜகஜ வென்று கட்டைவண்டி, கை ரிக்ஷா வாய்  நிறைய ரத்தக்கலரில் பான் சுபாரி  மெல்பவர்கள்,  நீள ஜிப்பா போட்ட வடக்கத்தியர் , சட்டையில்லாத, காலில் செருப்பில்லாத நமது லுங்கி, டப்பா கட்டு, கலர் துண்டு  தலைப்பாகை அணிந்த   மூட்டை தூக்கும் கூலி  ஆட்கள், பல பொருள்களை விற்கும் வாங்கும்,  வியாபாரிகள் கூடும் இடம்.

சென்னை நகரத்தின் முக்ய  சாலைகளில் ஒன்று  தங்கசாலை.   (Mint Street). எத்தனையோ பேருக்கு வாழ்வளிக்கும் வீதி.  மிக நீளமான  வீதி. பல நூறு வருஷங்களாக  பல மொழி பேசும்  மக்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் பிரதான சாலை.  அது இருக்கும் பகுதி  சென்னையில்  ஜார்ஜ் டவுன். வணிக முக்கியத்துவம் கொண்ட வீதி.  அங்கு கிடைக்காத வஸ்துவே இல்லை.  இது சென்னையின் பழைமையான வீதிகளில் ஒன்று  என்பதைத் தவிர  இதுவே  சென்னையின்  மிக நீளமான தெரு என கருதப்படுகிறது. வடக்குத் தெற்காக உள்ள இந்தச் சாலை தெற்கில் பூங்கா நகரில், பூந்தமல்லி நெடுஞ்சாலையையும் வடக்கில் வண்ணாரப்பேட்டையின், வடக்கு வால்  சாலை - பழைய சிறைச் சாலை சந்திப்பு ஆகியவற்றை இணைக்கிறது.   மிக  நெரிசலான வழித்தடம்.   எப்போதும் எந்நேரமும் மக்கள் சுறுசுறுப்பாக  உலவிக்  கொண்டே இருக்கும் பரபரப்பான தெருக்களில் ஒன்றாகவும் உள்ளது.

17 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசிய யூத வணிகர் ஜாக்வெஸ் டி பைவியா என்பவர் இங்கு யூதர்களுக்கான  மயான பூமியை  உருவாக்கினார். பிறகு, இந்த இடுகாடு லாயிட்ஸ் சாலைக்கு மாற்றப்பட்டு விட்டது.

18 ஆம் நூற்றாண்டில், கிழக்கிந்திய கம்பெனியினர் தங்களது துணி வணிகத்தை வளர்க்கும் நோக்கில் சலவைத் தொழிலாளிகளை இங்கே குடியமர்த்தினர். இதற்கு வாஷர்ஸ் ஸ்ட்ரீட்   வண்ணாரத் தெரு, வண்ணாரப்பேட்டை,  என்று பெயர் அதால் வந்தது.   இங்கு குடியமர்த்தப்பட்ட சலவைத் தொழிலாளிகளில் பெரும்பாலானோர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். சில ஆண்டுகளில் துபாஷி என்று அழைக்கப்பட்ட இரண்டு மொழி பேசும் இடைத்தரகர்களும் முக்கியமாக தெலுங்கு பேசும் கோமுட்டி மற்றும்  பேரி செட்டியார்கள் போன்றோரும், குஜராத்தின் சவுராஷ்ட்ரா பகுதியைச் சேர்ந்த துணி வியாபாரிகளும் இங்கே குடியேறினர். இவர்களைத் தொடர்ந்து அடகு வியாபாரத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் மார்வாரிகளும் இங்கே குடியேறினர். இதன் மூலம் தொடக்கம் முதலே இந்தத் தெரு பல மொழி பேசுபவர்கள் வசிக்கும் பகுதியாக இருந்துவருகிறது.

1841-42 களில் கிழக்கிந்திய கம்பெனி,   அரசாங்கத்தின்  அங்கீகார  செலாவணிக்கு   தங்கம், செப்பு, வெள்ளி, தாமிர  நாணயம் தயாரிக்கும் தொழிற்சாலையை இங்கு மாற்றியதிலிருந்து இந்தத் தெரு ‘மிண்ட் தெரு’ என்ற பெயரைப் பெற்றது. எனவே, தமிழில் இந்தத் தெரு நாணயச் சாலை என்றும் தங்க சாலை என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலேயர்களின் நாணயத் தொழிற்சாலை இருந்த கட்டிடம் பிறகு அரசின் அச்சகமாக மாற்றப்பட்டது.  GOVERNMENT PRESS .  இதைத் தொடர்ந்து தெருவில் பல அச்சகங்கள் தொடங்கப்பட்டன. திரைப்பட ஊடகம் தமிழர்களிடையே பரவிய புதிதிலேயே இங்கு சில திரையரங்குகள் தொடங்கப்பட்டன. நகரின் பல்வேறு பகுதிகளில் கெயிட்டி மற்றும் குளோப் போன்ற திரையரங்குகளை உருவாக்கிய ரகுபதி வெங்கய்யா என்ற ஒளிப்படக் கலைஞரால் கட்டப்பட்ட நகரின் பழைய திரையரங்குகளில் ஒன்றான கிரீன் டாக்கீஸ் துவக்கப் பட்டது.   மேலும் இங்கு இருந்த கிரவுன் டாக்கிஸ் மற்றும் முருகன் திரையரங்குகளே மிகப் பழமை யானவை. முருகன் திரையரங்கில்தான் 1931-ல் வெளியான தமிழின் முதல் பேசும்படமான ‘காளிதாஸ்’ வெளியிடப்பட்டது.

1880-களில் இங்கிருந்த தொண்டை மண்டலம் துளுவ வெள்ளாளர் பள்ளியில் மகா வைத்தியநாத சிவன் என்பவரால் நடத்தப்பட்ட கச்சேரிதான் சென்னையில் முதல் முறையாக நுழைவுச்சீட்டு விற்பனை செய்து நடத்தப்பட்ட கர்னாடக இசைக் கச்சேரி.

1889 இல் இங்கு இந்து இறையியல் பள்ளி  HINDU THEOLOGICAL  ஸ்கூல் நிறுவப்பட்டது, 1909 இல் இங்கு இந்தப் பள்ளியில் சி. சரஸ்வதி பாய் என்பவர் தனது முதல் ஹரிகதை நிகழ்ச்சியை நடத்தினார். ஒரு பெண் ஹரிகதை நடத்தியது இதுவே முதன்முறை என்பதால் கடுமையான எதிர்ப்பு இருந்திருந்தது. 1896 இல் இந்தப் பள்ளிக்கு மகாத்மா காந்தி வருகை  புரிந்தார்.  பாலகிருஷ்ண ஜோஷி  பள்ளித் தலைமை ஆசிரியர்.

தொன்றுதொட்டு இங்கு குஜராத்தியர்களும் ராஜஸ்தான் மார்வாரிகளும் வசித்துவருவதால் ராஜஸ்தானிய உணவு வகைகளின் மையமாக அறியப்படுகிறது.

அருட்பெருஞ்சோதி  வடலூர்  வள்ளலார், ராமலிங்க அடிகளின் நினைவில்லமானது இந்தத் தெருவின் வடக்கு முனைக்கு அருகில் அமைந்துள்ள, வீராசாமி தெருவில் அமைந்துள்ளது.

1854 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தொண்டை மண்டலம் துளுவ வெள்ளாளர் பள்ளி (TTV) , மற்றும் 1889 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்து இறையியல் பள்ளி ஆகியவை இத்தெருவின் இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளிகளாகும். தொண்டை மண்டலம் துளுவ வெள்ளாளர் பள்ளி வளாகத்தில் சென்னையின் பழமையான சங்கீத சபாவான தொண்டை மண்டல சபா இயங்கிவந்தது. 1905 ம் ஆண்டு இந்த இந்த சபாவில் நடந்த கூட்டத்தில் திருவையாரில்  பெரிய அளவில் தியாகராஜ ஆராதனை விழாவைக் கொண்டாட முடிவெடுத்தனர்.

சென்னையில் கர்னாடக இசையின் பஜனை வடிவத்தை வளர்க்கும் நோக்கில் இந்தத் தெருவில் பல பஜனை மடங்கள் தொடங்கப்பட்டன. நுற்றாண்டைக் கடந்த இரண்டு மடங்கள் இப்போதும் இயங்கி வருகின்றன. தற்போது இந்தத் தெருவில் இருக்கும் சுமைதாங்கி.  ராமர் கோவில், முன்பு பஜனை மடமாக இருந்தது. இங்கு விநாயகருக்கு கட்டப்பட்ட பல கோவில்கள் உள்ளன.  வள்ளலாரால்  பாடப்பட்ட கந்தகோட்டம் முருகன் கோயில், இச்சாலையில் உள்ள  ராசப்ப  செட்டி தெருவில் அமைந்துள்ளது. இன்றும் அநேக பக்தர்கள்  சென்று கந்தசாமியை வழிபடுகிறார்கள்.

 தங்கசாலை 17ம் நூற்றாண்டில் உருவான  நீளமான தெரு. தெலுங்கு பேசும் ,கோமுட்டி, பேரி செட்டியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்தார்கள். இன்றும் அந்த வம்சத்தினர் வியாபாரம் செய்கிறார்கள். இரும்பு சாமான், துணி, பாத்திர வியாபாரிகள் நிறைந்து இப்போது மார்வாரிகள், குஜராத்திகள், மற்றவர்களும் அவர்களோடு வாசம் செய்கிறார்கள். பக்தி குன்றவில்லை. 

1841–1842 வாக்கில் கிழக்கிந்திய கம்பெனியார் அவர்கள் ஆட்சி நாணயம் செய்யும் இடம் இங்கே உருவானது. உலோகங்களை உருக்கி நாணயம் வார்ப்படம் செய்யும் இடம் என்பதால் மின்ட் ஸ்ட்ரீட், தங்க சாலை என்ற பெயர் நிலைத்தது. அது அப்புறம் govt press , அரசாங்க அச்சகம் ஆயிற்று. இந்த தெருவின் வடகோடியில் வீராசாமி தெருவில் ராமலிங்க வள்ளலார் வாழ்ந்து , தினமும் கந்தசாமி கோவில் நடந்து வருவார். மேலே சொன்னது தான் தங்கசாலை பற்றிய சரித்திர தகவல்.

 இனி மஹாபெரியவா பக்கம் வருவோம். காஞ்சி மடத்தில் நல்ல கும்பல். ஸ்வாமிகள் மௌன விரதம் அனுஷ்டிக்காத நாள் என்பதால்  எல்லோருடனும் பேசுவார். எல்லோரும் அவர் எதிரே வணங்கி நின்று தங்களை, தங்கள் குடும்பத்தில் சிலரை பற்றி அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். வரிசையில் வந்த ஒரு இளம் வாலிபன் வணங்கி ''பெரியவா நான் வள்ளலார் நகரிலிருந்து வருகிறேன்'' என்றான்..
"வள்ளலார் நகரா?" 
"ஆமாம் பெரியவா, தங்கசாலைக்குத்தான் அப்படி பெயர் மாறியிருக்கிறது. 
''ஓஹோ வள்ளல் என்றால் பணத்தை வாரிக் கொடுக்க வேண்டும். பணம் நிறைய வெள்ளைக்கார அரசாங்கம் அச்சுப் போட்ட சாலை இப்போது வள்ளலாரின் ஊராகிவிட்டதோ!" 
" ஆமாம்  பெரியவா தங்கசாலைக்கு இப்போது அது தான் பெயர் ''
 ''அதுசரி, தங்கசாலை என்றாயே, அப்படியென்றால் அங்கே பணம் அச்சுப் போடுகிற இடம் என்பது உனக்கு தெரியுமோ?"
 "தெரியாது பெரியவா " 
"தங்க சாலை என்றால் தங்கத்தினால் போட்ட ரோடு இருந்தது என்று நினைத்தாயோ?" 
"தெரியாது பெரியவா. இப்போ தான் அங்கே தங்கக்காசு தயாரித்ததால் அந்த இடம் தங்கசாலை என்று பேர் கொண்டது என்று தெரிஞ்சுண்டேன்.'' 
''அதுவும் தப்பு, தங்கசாலை என்று சொல்வதும்  தப்பு '' 
மஹா பெரியவா சொல்லிவிட்டு புன்னகைத்தார்.
 " நீ சப்த விடங்க க்ஷேத்திரம்'' என்று பெயர் கேள்விப்பட்டதுண்டா?''
 ''..........................''
கைகட்டி வாய் பொத்தி ''தெரியாது' என அந்த வாலிபர் உணர்த்த தலை ஆட்டுகிறார். 
"டங்கம் என்றால் செதுக்கும் உளி . கற்சிலை அடிக்கிற உளி மட்டுமில்லை. தங்கத்திலும், வெள்ளியிலும் விகிரஹங்கள், நகைகள் செய்ய உபயோகிக்கும் கருவி. உளி மாதிரி. டங்கம் என்று பெயர்.
''தேவதச்சனான விஸ்வகர்மா டங்கம் எல்லாம் இல்லாமலேயே, மனது சங்கல்பத்தால் நினைத்த எதையும் உருவாக்கி விடுவான். டங்கமில்லாமல் செய்வது விடங்கமாக செய்வது. என்று பொருள்படும்.
விஸ்வகர்மா செய்த ப்ரதிமைகள், பிம்பங்கள், விக்கிரஹங்கள் விடங்கமாக செய்ததால், திருவையாறு அதன் பக்கத்தில் ஆறு க்ஷேத்ரங்களில் கோவிலில் உள்ள மூர்த்திகளுக்கு சப்த விடங்க மூர்த்திகள் என்று பெயர். வருஷா வருஷம் சப்த ஸ்தானம் உத்ஸவம் நடக்கும்.''

கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் நிசப்தமாக பெரியவா சொல்லும் விஷயங்களை சிரத்தையாக கேட்டுக்கொண்டிருக்க மேலே தொடர்கிறார். 
''உன்னை தங்கசாலை பற்றி கேட்டுட்டு ஏன் விடங்கம் பற்றி பேச்சு மாற்றினேன் தெரியுமா?"
ஒரு நிமிஷம் நிறுத்தி எல்லோரையும் சுற்றி பார்க்கிறார். அனைவரும் ஆவலாக சிலையாக நிற்கிறார்கள்.
"நாணயம் பண்ணுமிடத்தில் தங்கக்காசு செய்வதால் அதற்குத் தங்கசாலை என்று பெயரென்று நினைத்தால் அது தப்பு. வெள்ளைக்காரனின் காலத்திலே இப்போது போல் தங்கம் அதிக விலை இல்லாவிட்டாலும் கூட தங்கக் காசை விட வெள்ளி, தாமிரம் முதலான மற்ற உலோகக் காசுதான் அதிகம் அச்சடித்து போட்டார்கள். அதனால் தங்கசாலை என்பதற்குக் காரணம் வேறே.

காசுகளில் சித்திரம்,எழுத்து இவற்றைப் பொறிப்பதற்கும், அதன் மாற்று,எடை எல்லாம் சுத்தமாய் இருக்கிறதா என்று பரிசோதனை பண்ண காசைத்  தட்டிப் பார்த்தே தெரிந்து கொண்டார்கள். உளி போன்ற ஒரு கருவி யை நாணயங்களை தட்டி பார்க்க உபயோகித்தார்கள். "டங்கம்" என்றே அதற்கும் பெயர். காசு உலோகத்தில் உருக்கி வார்த்து அச்சடிக்கும் கிடங்கில் இப்படி நிறைய பேர் உட்கார்ந்து கொண்டு, காசுகளை டங்கத்தால் தட்டிச் சோதிப்பார்கள். அந்த ஓசை  ''ஜல் ஜல்'' என்று வெளியிலே ஓயாமல் கேட்டுக் கொண்டிருக்கும்.அதனால் நாணயம் செய்யும் அந்த இடத்துக்கே 
"டங்கசாலா" என்று பெயர் வந்தது. ஸம்ஸ்கிருதப் பெயர், வடக்கத்தி சொல். நம்ம தமிழில் அதை தங்க சாலை ஆக்கி விட்டோம்.

"பொருட் செல்வத்தை வாரி வாரி அள்ளி கொடுத்தவர்கள் வள்ளல்கள்..அருள் செல்வத்தைத் தந்தவர் திரு அருட்பா பாடின ராமலிங்க ஸ்வாமிகள். அருட்செல்வம் கொடுத்த ராமலிங்க ''வள்ள"லுக்கு மரியாதை "ஆர்'' சேர்த்து ''வள்ளலார்" என்கிறோம். தங்கசாலைப் பெயரும் அநித்யமாகப் போய் நித்தியமான அருளைக் குறிக்கிற வள்ளலார் பெயர் அதற்கு வந்திருக்கிறது"
 
இதுதான் மஹா பெரியவா சிந்தனைக்கும் மற்றவர்கள் சிந்தனைக்கும் உள்ள வித்யாசம். என்ன ஞானம், எல்லையற்ற சமுத்திரம் அவர்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...