Tuesday, May 31, 2022

PATTINATHAR


 #பட்டினத்தார்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 


''இது தான் அம்மா  என்னால் தர முடிந்தது''

எனக்கு  தமிழில் ஆர்வமூட்டியவர்களில்   முதல் வரிசையில் ஒருவர்  பட்டினத்தார்.  அவர் பாடல்களில் மணிவாசகர் தெரிவார். திருவாசக மணம் வீசும்.  இதோ திருவாசகத்தில் சிவபுராணத்தில் மிக பிரபலமான எல்லோரும் அறிந்த ஒரு பாடல்: 
''புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்ல ஆ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்”

''புல், பூண்டு, புழு, மரம், பல் வேறு உருவங்கள், பறவை, பாம்பு கல், மனிதன், பேய், கணங்கள், அசுரன், முனிவர், தேவர், ஆஹா  இன்னும் என்ன பாக்கி?  சகல தாவர ஜங்கம  பிறவியும் எடுத்து  தேய்ந்து களைத்து, ,அலுத்து விட்டேன். எம்பெருமானே, சிவனே,  உன்னிரு  பொற்பாதங்கள் சரணடைந்தேன். எனக்கு முக்தி அருள்வாய்''  என்கிறார்  என்கிறார் மணிவாசகர்

இதோ  பட்டினத்தார்.  அதே  ரகத்தில் அற்புதமான ஒரு பாடல் தந்துள்ளார்:   
''புல்லாகிப் பூடாய்ப் புலந்தநாள் போதாதோ?
கல்லாய் மரமாய்க் கழிந்தநாள் போதாதோ?
கீரியாய்க் கீடமாய்க் கெட்டநாள் போதாதோ?
நீரியாய் ஊர்வனவாய் நின்றநாள் போதாதோ? ''

 அர்த்தம் சொல்லவேண்டிய அவசியமே இல்லை அல்லவா?  ஐயா,அம்மா மார்களே, யாருக்காவது சிறுநீரகம், குடல், ஈரலில் கல் இருந்தால் அப்பல்லோ போய் கையிலிருப்பதை எல்லாம் சேர்த்து கல்லோடு நீங்கள் இழந்து விட்டு வரலாம். இட்லி தோசையில் கல் வாயில் அகப்பட்டால் துப்பலாம். ஆனால் மனதில் நெஞ்சில் கல் இருந்தால் ஒரே வைத்தியம் நோயாளிக்கு ஒரு பட்டினத்தார் பாடல் புஸ்தகம் வாங்கி கொடுத்து ஒருநாளைக்கு ஒரு பாடலாவது படித்து புரிந்து கொள்ள சொல்ல வேண்டும். ஒரே வாரம் போதும் என்று சொல்லலாம். ஏன் என்றால் அடுத்த வாரத்தில் இருந்து அவர்களே விடாமல் படிக்க ஆரம்பித்து விடுவார்களே.

ஆதி சங்கரரின் ''மாத்ரு பஞ்சகம்'' என்ற ஐந்து தாய்ப்பாச ஸ்லோகங்களை சொன்னேனே. அதே போல் ஒருநிகழ்ச்சி பட்டினத்தார் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறதே . தாயை இழந்த சோகம். தாய் இறந்து விட்டாள். மகனோ துறவி. அவன் தான் அவளுக்கு கொள்ளியிட்டு ஈமக்கடன் செய்யவேண்டும் என்பதால் அவர் வருகிறார். பார்க்கிறார் தாயின் உடலை. பொங்குகிறது தாய்ப்பாசம். அவள் செய்த தியாகம். அவளை தான் படுத்தியும் பாடு எல்லாம் நினைவுக்கு வருகிறது.

அப்போது தன்னை அறியாமல் சில பாடல்கள் அவர் நாவிலிருந்து புறப்படுகிறது. அவற்றில் சில தான் இவை.

பட்டினத்தாரின்  தாய் உடலை சிதையில் இட எவரும் விறகு கட்டை தரவில்லை. கண் எதிரே பச்சை வாழை மட்டைகள் சில தென்பட அதை எடுத்து வந்து அதன் மீது அன்னையின் உடலைக் கிடத்தி ஒரு பாடல் பாடி அக்னி மூட்டுகிறார். அக்னி எங்கிருந்து? அவர் அடிவயிற்றில் இருந்து பொங்கி எழுந்த சோகத்தில் தாபத்தில், வருத்தத்தில் தீயாக மூண்டு வாய் வழியாக பாடலாக மிதந்து பச்சை வாழை மட்டையை எரிக்கிறது.

“ஐயிரண்டு திங்களா யங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்யஇரு
கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பிற் காண்பே னினி”

'அம்மா நீ தானே என்னை பத்துமாதம் கஷ்டப்பட்டு சுமந்து,உடல் வலி எல்லாம் பொறுமையோடு தாங்கி, என் குட்டிப்பயலே என்று என்னை கொஞ்சி, என்னை உன் தங்கக்கைகளில் ஏந்தி மார்பகத்தில் அணைத்து பாலூட்டினாய். இனி உன்னை மறுபடியும் எந்த ஜென்மத்தில் அம்மா காணப்போகிறேன்''

“அரிசியோ நானிடுவே னாத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் - உருசியுள்ள
தேனே யமிர்தமே செல்வத் திரவியப்பூ
மானே யென வழைத்த வாய்க்கு”

''எனக்கு சந்தா மாமா,   நிலா காட்டி, பாடி, ஆடி, பருப்பு சாதம் நெய் மணக்க ஊட்டினாயே, என் அமிர்தமே, தேனே, மானே, ராஜாப்பயலே, என்று ஆசை ஆசையாக நீயே இட்டுக்கட்டி என்னைப்பற்றி பாடுவாயே, அந்த உன் வாய்க்கு இதோ நான் வறட்டு அரிசி போடுகிறேன் அம்மா. நிலா அல்ல, கொளுத்தும் சூரியனை காட்டுகிறேன். நீ தான் கண்மூடி கிடக்கிறாயே எப்படி பார்ப்பாய்?.

“அள்ளியிடுவ தரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் - மெள்ள
முகமேன் முகம்வைத்து முத்தாடி யென்றன்
மகனே யெனவழைத்த வாய்க்கு”

அம்மா , எனக்கு  நன்றாக ஞாபகம் இருக்கிறது. என்னை அள்ளி முகத்தோடு முகம் வைத்து அணைத்து இறுக்கி கட்டிக்கொண்டு ''அடே முத்துக்குட்டி, செல்வமே, தங்கமே'' என்று கொஞ்சினாயே உன் வாய்க்கு இதோ நான் கை நிறைய அரிசியை இடுகிறேன். என்னை கொஞ்சிய உன் முகத்துக்கு தலையில் கொள்ளி வைக்கிறேன்.

அழுது கொண்டு நிற்கும் பட்டினத்தார் முன் சவம் எரிக்கும் வெட்டியான் நிற்கிறான்:''சாமி இந்தாங்க தீ வர்த்தி, கொளுத்துங்க உங்க அம்மாவை'' என்கிறான். நெருப்பு கையில் மட்டுமா அப்போது பட்டினத்தாருக்கு?. நெஞ்சிலும் அல்லவோ மூண்டுவிட்டது: பாடலாக வெடிக்கிறதே:

“முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாள் அளவும்
அந்திபக லாச்சிவனை யாதரித்துத் – தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
வெரியத் தழல்மூட்டு வேன்”

அம்மா  உனக்கு ஒரு பிள்ளை வேண்டும் என்று கோவில் கோவிலாக சுற்றினாய்.  நான் பிறந்தேன். முன்னூறு நாள் போல உள்ளே வளர்ந்தேன். உன் வயிறு உன்னை விட பெரிதாக இருக்க நானே காரணம். உன்னை இழந்து என் மனம் எரிகிறதே. நான் குடி இருந்த அந்த உன் வயிற்றுக்கு நான் பிரதியுபகாரமாக இப்போது நெருப்பை இடுறேனே.

“வட்டிலிலுந் தொட்டிலிலும் மார்மேலுந் தோன் மேலுங்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டுந் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்”

''புள்ளைக்கு நல்ல தொட்டில் வாங்கிட்டு வாங்க. மெத்துமெத்துன்னு இலவம்பஞ்சிலே படுக்கை வேண்டும்'' என்று அப்பாவை துளைத்து வாங்கி என்னை சுகமாக கிடத்தி, கொஞ்சி சுகப்படுத்திய அம்மா உனக்கு நான் எரியும் கட்டையில் எண்ணெய் ஊற்றி கொளுத்துகிறேனே''

“முன்னை யிட்ட தீ முப்புரத்திலே
பின்னை யிட்ட தீ தென் னிலங்கையில்
அன்னை யிட்ட தீ அடிவயிற்றிலே
யானு மிட்ட தீ மூள்க மூள்கவே”

அம்மா உனக்கு நான் இடுகிறேனே, இந்த தீ பற்றி உனக்கு தெரியாது அல்லவா? சொல்கிறேன் கேள். காது கேட்குமா உனக்கு இப்போது?

''முதலில் ஏதோ ஒரு யுகத்தில் திரிபுரத்தில் சிவன் நெற்றிக் கண் திறந்து அதை தீக்கிரையாக்கினானே அதே நெருப்பு, பின்னர் ஆஞ்சநேயனாக அவதரித்து ராவணேஸ்வரன் ஊரில் இலங்கையில் எங்கும் அக்னி யை பரப்பினானே அந்த நெருப்பு, இதோ அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் அதே ஜ்வாலையுடன் நீ என் அடிவயிற்றில் மூட்டினாயே பாசத்தீ, சோகத்தீ, அதை நான் எடுத்து உன்னை எரிக்கிறேன். அதே வேகத்தோடு ஜ்வாலையோடு உஷ்ணத்தோடு நான் உனக்கு இடும் இந்த நெருப்பும் உன்னை எரித்து சாம்பலாக்கட்டும்''

“வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல்
ஆகுதே பாவியே னையகோ – மாகக்
குருவி பறவாமற் கோதாட்டி யென்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை”

ஏதோ பட்டினத்தார் சொல்வதற்காக காத்திருந்தால் போல் அவரிட்ட தீ அந்த பச்சை வாழைமட்டையோடு அவர் தாயை வெகு உக்கிரமாக எரித்து கபளீகரம் செயது அவள் சாம்பலானாள்.

''இதோ இந்த சாம்பல் குவியல் தான் என் அம்மாவா? என்னை வாரி அணைத்து ஒரு குருவி நிழல் கூட என் மீது படாமல் அணைத்த கையா, முகமா, உடலா, இந்த சாம்பல் குவியல்?  கண்ணீர் வழிய  பட்டினத்தார்  பாடுகிறார் கேளுங்கள்: .

“வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ - சந்ததமு
முன்னையே நோக்கி யுகந்துவரங் கிடந்துஎன்
றன்னையே யீன்றெடுத்த தாய்”

''சரி அம்மா நீ  இப்போது  ஒரு கைப்பிடி சாம்பலாகி விட்டாயா? சிவனே, உன்னிடம் என் அம்மா வந்துவிட்டாளா? இனி அவளுக்கு என் ஞாபகம் இருக்குமா? நான் பிறக்கவேண்டும் என்று உன்னையே இரவு பகலாக விரதமிருந்து என்னை பெற்றவளாயிற்றே அவள். உன் ஞாபகம் தான் இருக்கும். நல்லது தான்.

சங்கரருக்கு பட்டினத்தார் இளைத்தவரில்லை என்று மேலே சொன்ன பாடல்கள் நிரூபிக்க வில்லையா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...