Monday, May 2, 2022

LIFE LESSON

 மனதில் பதியட்டும்  - 14  -  நங்கநல்லூர்  J  K  SIVAN


எல்லா மதங்களும் அதை பின்பற்றுபவர்களை நல்வழிப்படுத்தவே  அமைந்தவை.  நல்லவர்கள் நன்மையே அடைவார்கள் என தான் மத நூல்கள் அறிவுரை சொல்கிறது. ஆனால் நடைமுறையில், பாவம் செய்பவர்கள் நல்ல நிலையிலும், புண்ணியம் செய்பவர்கள் துன்ப நிலையிலும் வாழ்வதைக் காண்கிறோம். அதற்காக மதங்கள் சொல்வதைப் பொய் என்று எண்ணக்கூடாது. ஒரு பிறவியில் பாவம் செய்வதன் கர்ம  பலனுக்கு ஏற்ற வாழ்க்கை, அந்த பிறவியிலேயே கிடைத்துவிடும் என்பதில்லை. அதற்கான பலன் மறுபிறவியிலும் கிடைக்கலாம். பாவம் செய்பவன் நன்றாக இருக்கி றான் என்றால், அவன் முற்பிறவியில்  அதிகம் புண்ணியம் செய்தவனாக இருந்திருக்கலாம். இதைப் போலவே, இப்போது  புண்ணியம்  நிறைய   செய்பவன் முற்பிறவியில் செய்த பாவத்திற்கேற்ப பாவத்தை அனுபவிக்கிறான். இது   தவிர்க்கமுடியாத  இயற்கை. உண்மையும் ஆகும்.

எந்த செயலையும்    அடாடா, இதை நம்மால் செய்ய முடியாது,  அல்லது சரியாக செய்ய முடியாது, அல்லது வெற்றி காண முடியாது என்று எண்ணத்தோடு  துவங்கினால் அது அப்படியே  தான் முடியும். அது மனதில்  விளையும்  எதிர்மறை சக்தியின் பலம்.  மனதில் ஆக்க பூர்வ  நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.  எடுத்த செயலில் வெற்றி  நிச்சயம் என்று  மன உறுதியுடன் ஈடுபட்டால்,  அந்த  லக்ஷியத்தை  அடைய  உழைத்தால், அதனை அடைவதற்கான வழிகள் தானே  முன் வரும்.

யமன் ஒரு நொடி நேரத்தைக் கூட வீணாகக் கழிப்பதில்லை.  அவனுக்கு வேண்டியவர், வேண்டாதவர், பணக்காரன்  ஏழை  என்ற பாகுபாடு,  உயர்குலம்  தாழ்குலம் என்ற  பேதமோ,  ஆண், பெண்,   சிறியவன், பெரியவன் என்ற  வித்த்யாசமெல்லாம் இல்லை.   ஒவ்வொரு வினாடியும் நம்  எல்லோரையும்  நெருங்கி வந்து கொண்டிருபவன்.  அதனால் தான் அவன் பெயர்  காலன். எப்போது நம்மை பிடித்துக் கொள்வானோ தெரியாது.  எப்போது வேண்டுமானாலும்  நோட்டீஸ் இல்லாமல் அவன் வருவான் என்று தெரியுமாதலால், அவன் வருவதற்குள் கடவுளின் பாதங்களைப் பற்றிக் கொண்டால் நமக்குப் பயமில்லை. 

கோபம் கொண்டவனோடு பழகினால் நமக்கும் கோபம் வந்து விடுகிறது. தீயவனோடு பழகினால் நாமும் கெட்ட எண்ணம் கொண்டவனாக மாறி விடுகிறோம். யாரோடு பழகுகிறோமோ அவர்களுடைய  குணங்கள் நம்முள் உருவாகி விடுகிறது.  அதனால் நல்லவர்களுடன் மட்டும் பழக்கம் கொள்வது அவசிய மானதாகும்.  இதை தான் சத் சங்கம் என்பது.

நாம் எதிர்கொள்ளும், அனுபவிக்கும்  கஷ்டங்களைக்  எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.  கேட்பவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ  என்று சிந்தித்து மேலும் கஷ்டப்படவும் வேண்டாம்.  கஷ்டத்தை பிறரிடம் சொல்வது என்று முடிவெடுத்தால், அதை கடவுளிடம் மட்டும் சொல்லுவோம்.  நிச்சயம் வழி பிறக்கும். 

மனிதன் மிருக நிலையில் இருக்கிறான். முதலில் மிருக நிலை யிலிருந்து மனிதனாக மாற வேண்டும். தர்மம், ஒழுக்கம், பக்தி முதலியவற்றை பின்பற்றினால் மட்டுமே மனிதனாக மாறமுடியும். பின்னரே மனிதன் தன்னை தெய்வநிலைக்கு உயர்த்திக் கொள்ள  முடியும்.

எத்தனை  மாமரங்கள் பார்க்கிறோம்.  அவற்றில் நூற்றுக்கணக்கான கனிகள் விளைகிறது. ஒவ்வொரு கனியிலும் விதை (கொட்டை) இருக்கிறது. இவை மீண்டும் மாமரம் வளர வேண்டும் என்பதற்காக இயற்கை தந்த வரப்பிரசாதம்.   பழத்திலிருந்து  பூமியில்  விழுந்த அத்தனை விதைகளும்  மாம்பழக்  கொட்டைகளும்  மாமரமாக உருவாகி விடுவதில்லையே.   ஒரு சில விதைகள் மட்டுமே மரமாகிறது.   இது தான்  உலக நியதி.    மற்ற விதைகள் எல்லாம் வீணாக போவதாக தெரிந்தாலும், மரமாகிய ஒரு விதையினால் மேலும் பல கனிகள் கிடைத்து அதன் மூலம் வழி  வழியாக பல மரங்கள் வளரும். இதைப்போலவே உலகில் கோடானு கோடி  மக்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே நல்லவர்களாகவும், இறை பக்தி கொண்டு முழுமை  யடைந்தவர் களாகவும் இருப்பவர்கள் என்று சொல்ல முடியாது.  ஏதாவது, ஒரு சிலர் தான் அத்தகைய மேன்மை நிலையை அடைகிறார்கள். அதுவே போதும் .ஒரு விதையால் பல மாமரங்கள் உருவாவதைப்போல, அந்த   ஒருவரால், பல நல்ல ஆன்மா உடையவர்கள் உருவாவார்கள்.

கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி   கோலாகலமாக  கொண்டாடும்போது பல  இடங்களில் உறியடி உற்சவம் நடக்கும்.  வழுக்கும்படியான  எண்ணெய்  தடவிய  கம்பங்களில் ஏறி  மேலே  கயிற்றில் கட்டி தொங்கும்  பானைகளை கையினாலோ, குச்சியாலோ  உடைத்து  அதில் உள்ள பரிசுப்பொருள்களை அடையலாம். இதில் பங்கேற்பவர்களை  அவ்வாறு  பானைகளை உடைக்க விடாமல் அவர்கல் மீது  தண்ணீரை பீச்சுவார்கள்,  பானைகள்  தொங்கும்  கயிற்றை அசைத்து அதை ஒரு நிலையில் இல்லாத படி  இடம் மாற்றி மாற்றி அலைக்கழிப்பார்கள்.  உறியடியில் பங்கேற்பவர்களோ  அத்தனையையும்  எதிர் கொண்டு  விடாமல் தங்களது லக்ஷியத்திலேயே  குறியாக இருப்பார்கள்.  வழுக்கு கம்பங்களில் ஏறும்போது வழுக்கி விழுவார்கள்.  கடைசியில் யாராவது  ஒருவர் மட்டுமே அத்தனை இடையூறுகளையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக   காம்பின் உச்சிக்கு தாவி ஏறுவார்கள்.   பானையை உடைத்து பரிசை பெறுவார்கள்.  அவரது வெற்றியின் மகிழ்ச்சி  ஜெயித்தவருக்கு மட்டும் இல்லை.  அவரை சுற்றியிருந்து வேடிக்கை பார்த்தவர்களுக்கும்  ஏற்படுகிறது.   அது மாதிரிதான்  நம்மில் பூரணத்வம் பெற்ற  சிறந்த மனிதர்  ஒருவர் அடையும் நன்மையும் சமூகத்தில் எல்லோருக்கும்  பயன்படுகிறது.  மகிழ்ச்சி தருகிறது.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...