Wednesday, May 18, 2022

LIFE LESSON

 #மனதில்_பதியட்டும் - 18 - நங்கநல்லூர் J K SIVAN

ஜீவகாருண்யம் என்பதை தான் நாம் எல்லா உயிர்களிடத்திலும் அஹிம்சை, கருணை, அன்பு என்று அறிகிறோம். கருணை காட்டுவது என்றால் ஏதோ சில உதவி செய்யும்போது நாம் ஒரு படி மேலே போய் நிற்பது போலவும், நம்மிடம் உதவியைப் பெறுபவர் நம்மை விட தாழ்ந்த நிலையில் இருப்பது போலவும் எண்ணுவது மனித ஸ்வபாவம். பிறருக்கு உதவி செய்வதால் நமக்கு எளிமை, அடக்கம், அஹங்காரம் இல்லாத குணம் போல சில நல்ல விஷயங்கள் உண்டாக வேண்டும். . அதை விட்டு விட்டு இது நம்மை விட்டு போனால் போகட்டும். நம்மிடம் வீணாக இருப்பது தானே, பிறருக்கு உபயோகமாக இருக்கட்டும்' என்ற எண்ணத்துடன் செய்வது தப்பு. இதனால் நமக்கு தீமை தான் விளையும். ஒருவருக்கு உதவி பண்ணும்போது கருணை, காருண்யம் என்று சொல்வதை விட ''அன்பு'' என்று சொல்லிவிட்டால் இந்த ஏற்றத்தாழ்வு இருக்காது. அன்பு என்பது இயல்பாகவே ஒவ்வொருவருக்கும் உண்டாவது. ஆகவே பிறருக்கு உதவி செய்கிறோம் என்ற எண்ணத்துக்கு அங்கே இடமில்லை. அம்மாவின் அன்பு அப்படிப்பட்டது. அன்புக்கு நாம் வேறு மற்றவர் வேறு என்ற வித்யாசமே இல்லை. நமக்கு முதலில் இதெல்லாம் முடியாது, சாத்தியம் இல்லை என்று தோணும். வள்ளலாருக்கு வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் நெஞ்சம் அதனால் தான் வாடியது. திருவள்ளுவர் அன்பு, அருள் என்று இரு பதங்களைப் பிரித்து சொல்கிறார். அருள் என்பது அன்பின் குழந்தை என்கிறார்.
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு. ( குறள் எண் : 757 )
அன்பு என்ற தாய் பெற்ற குழந்தை தான் அருள். பொருள் என்னும் வசதியான வளர்ப்புத் தாயிடம் வளர்கிறது. பாவிகளை நாம் வெறுப்பதாலும், அவர்களை கோபிப்பதாலும் பயனில்லை. அவர்களுடைய மனசும் நல்ல வழியில் திரும்பவேண்டும் என்று பிரார்த்திப்பது ஒன்றே நாம் செய்ய வேண்டியது. நமது பாரத தேசத்தில் அக்காலத்தில் வித்யா எனும் கல்வி குருவிடம் கற்பது மன அமைதி கிடைக்க மட்டும் தான் இருந்தது. ஆத்ம ஞானம், 'பர வித்யை' என்று அதற்கு பெயர். மற்றதெல்லாம் 'அபரவித்யை' .
நாம் பாபம் செய்ய காரணம் ஆசை. நம் கஷ்டம் அனைத்திற்கும் மூலகாரணம் ஆசை. அதை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கி விட்டால் சாஸ்வதமான, நிரந்தரமான துக்க நிவாரணம் பெறலாம். திருமூலர் இதனால் தான்
''ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்,
ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்,
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசையை விட்டுவிட ஆனந்தமாமே'' என்கிறார்.. ஒன்று கவனித்தீர்களா? கடவுள் என்று யாரோ ஒருவர் இருக்கிறார் என்று சொல்வதோடு மற்ற மதங்கள் இருந்து விடுகின்றன. நமது ஹிந்து சனாதன தர்ம நெறிமுறை அப்படியல்ல. இந்துமதத்தில் அந்த ஒரே கடவுளை அவரவர் மனோபாவப்படி அன்போடு வழிபட பலப்பல தெய்வ வடிவங்களை நமக்குக் காட்டுகிறது.அதனால் தான் நமக்கு ராமன் கிருஷ்ணன், சிவன், அம்பாள், பிள்ளையார், முருகன், கருப்பண்ண சாமி என்று பல தெய்வங்கள். எல்லாம் நமது சௌகர்யத்துக்காவே தான்.
தர்ம மார்க்கத்தில் ஒருவன் இருந்தால் பிராணிகள் கூட அவனை ஆதரிக்கும். அதர்மத்தில் விழுந்தால் உடன் பிறந்தவனும் எதிரியாகி விடுவான்.
அக்னியில் நெய்யை விட்டால் அது அணைந்தா போகிறது? மேலும் பெரிதாக வளர்கிறது. இப்படியே ஓர் ஆசை பூர்த்தியானவுடன் இன்னொரு ஆசை மூள்கிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...