Thursday, May 26, 2022

sundaramurthi nayanar

 


தம்பிரான் தோழர் -  நங்கநல்லூர்  J K  SIVAN 

'எல்லோருக்கும் நான்  அடிமை.'  
 
பதினெட்டு வயதே வாழ்ந்த  சுந்தர மூர்த்தி நாயனார்  ஒரு  அதிசயப்  பிறவி. அவரைப் பற்றி படித்தேன். அதை  சில பதிவுகளாக  ''தம்பிரான் தோழர்'' என்று எழுதியது எனக்கே பிடித்திருந்தது.   இவ்வளவு சின்ன வயதில் இத்தனை பக்தியா, புலமையா,  சிவஸ்தல தரிசனமா, இத்தனை பாடல்களா  --  அவைகளில் பொதிந்து கிடைக்கும் அற்புதங்கள், அதிசயங்கள்... அடடா,  இப்படி ஒரு சிவனடியாரை தரிசிக்க எத்தனையோ ஜென்மத்தில்  புண்யம் பண்ணி இருக்க வேண்டும்

சிவபெருமானின் நெருங்கிய  தோழர் மட்டுமா,  சிவனையே  உரிமையோடு  நிந்தித்த ஒரே  வன்தொண்டர். சுந்தரரை பிடித்திருக்காவிட்டால்  சுந்தரர் சொன்னதை எல்லாம் சிரமேற் கொண்டு சிவபிரான் செயதிருப்பாரா? நிறைவேற்றியிருப்பாரா? இதற்கு காரணம்   ''சுந்தரத் தமிழ்'' அவ்வளவு சக்தி வாய்ந்தது.   இந்த சுந்தரரை படைத் ததே  அவர்  அறுபத்து நாயன்மார்களையும் பற்றி  நினைவு கூர்ந்த  திருத்தொண்ட தொகை பாடுவதற்கு தான்.
அறுபத்து மூன்று நாயன்மார்களையும்  பற்றி  படித்துவிட்டு  எழுத ஆரம்பித்து விட்டேன்.

''அத்தனை பேருக்கும் நான் அடிமை'' என்கிறாரே சுந்தரர் ..என்ன பவ்யம். எவ்வளவு  பணிவு. பக்தி.  ஒரு நாயன்மாரையும்   விடாமல் அவர்கள் பெயர்களைச்  சொன்னதால் தான் பின்னர் சேக்கிழார் பெரிய புராணத்தில் அவர்கள் சரித்ரத்தை எல்லாம் நமக்கு   பெரிய புராணமாக  அளித்திருக்கிறார்.  எத்தனை சிவன் கோவில்களுக்கு  எவ்வளவு முறை  சென்றிருக் கிறோம். பிரகாரத்தில் ஒரு ஓரமாக வரிசையாக 63 நாயன்மார்கள்  சிலை வடித்து வைத்திருக்கிறார்களே,  சில கோவில்களில் அவர்கள் பெயர்கள் கூட பொறித்து வைத்துள்ளார்கள்.  ஒரு  நாளாவது பொறுமையாக அவர்களது  பெயர்களையாவது படித்து  நாம்  தெரிந்து கொள்வதுண்டா? . அந்த நேரம் தான்   ப்ரஹாரத்தில் ஆளே இல்லாமல்  நமது நடை வேகமாக செல்கிறது. பிரசாதம் வாங்க மறப்பதில்லை. அங்கே தான் கும்பல்.

நாம்   விசித்ரமானவர்கள் தான்.  சரி இப்போது நான் உங்களை விடப்போவதில்லை.  சுந்தரரின் திருத் தொண்டதொகை   எளிமையாக இருக்கிறது. வெறும் பெயர்கள். அவர்களுக்கெல்லாம் நான் அடியேன், அடிமை என்ற வாசகம் தான்.  
அதை முழுமையாக  பதிவிடுகிறேன். இப்போதாவது அந்த பெயர்களையாவது படியுங்கள். 

சுந்தரரின் எளிமை, இதோடு நிற்கவில்லை.  இந்த அறுபத்து மூன்று நாயன்மார்களை விட ஒரு படி மேலே போய்   யார் யார் சிவபக்தர் களோ, சிவனைப் பணிபவர்களோ அவர்கள் எல்லோருக்கும் நான் அடிமை.  சிவனைப் பாடுவோர்கள்,  அதைக் கேட்டவர்களுக்கு கூட நான் அடிமை.  சிவனை யார் நினைத்தாலும் அவர்களுக்கெல்லாம்  ஒரே அடிமை நான் தான்.  சிவன் மீது மனதை வைக்காவிட்டால் கூட பரவா இல்லை.   நீங்கள்  திருவையாற்றில் பிறந்தவரா?  அப்படி யென்றால்  உங்கள் எல்லோருக்குமே  நான் அடிமை.   ஓஹோ,.  நீங்கள் பிறந்தது திருவாரூர் இல்லையா, வேறு எங்கோவா? அப்படியானால் என்ன?  விபூதி பட்டை யாக பூசுபவராக தெரிகிறதே. அது போதுமே. நான் உங்கள் அடிமை தான்.  விபூதி பூசுபவராக இல்லாவிட்டாலும்  விபூதி பூசு பவரையாவது  மதிப்பவரா, அவர் பின்,  பக்தியோடு செல்பவரா?  அப்படியானால்  என்னை உங்கள் அடிமையாகப்  பாருங்கள்''  என்கிறார் சுந்தரர். இப்படி ஒருவரைப் பற்றி பேசுவதே பாக்கியம் இல்லையா? அப்படியென்றால் எனக்கும் கைலாசம் ஒருவேளை கிடைக்கலாம் போல் இருக்கிறதே. 
    
  திருத்தொண்ட தொகை.- சுந்தரர்

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
 ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.7.39.1

இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்
 ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்
 கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.7.39.2

மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்
முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்
திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
 ஆரூரான் ஆரூரில் அம்மானுக் காளே.7.39.3

திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்
பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
 ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்
அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்
 ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.7.39.4

வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.7.39.1

வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்
கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கும் அடியேன்
கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.7.39.6

பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்
பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்
விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.7.39.7

கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த
கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
 நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
 தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.7.39.8

கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை
மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.7.39.9

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.7.39.10

மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்
திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
 ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே’’



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...