Tuesday, May 31, 2022

RAMAKRISHNA PARAMAHAMSA


 #அருட்புனல்  -  நங்கநல்லூர்  J K  SIVAN

ராமகிருஷ்ண  பரமஹம்ஸர் 


''அம்மா வேணும்''


வேதத்தை அனுசரித்து நடத்தும் வாழ்க்கை தான் வைதிகம்.  சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள்  தலைமுறை தலைமுறையாக  விடாமல் பின் பற்றிவரும் குடும்பம்.  இன்னும் சில  பிராமண குடும்பங்கள் இதுபோல் இருக்கின்றன.பூஜை நெறிமுறைகள் பழக்கமான  இப்படி ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்த ராமகிருஷ்ணருக்கு பூஜா க்ரமங்கள்  எல்லாமே அத்துபடி.

நாம ரூபமில்லாத இறைவன் இறைவியை நாமங்களோடு பல வித ரூபங்களோடு ஏன் தாயாக, தந்தையாக, குழந்தையாக,  வழிபடுவதும் நமது தர்மம். நம்மைப்போல்   பகவான், பகவதி விக்ரஹங்களை குளிப்பாட்டி, அலங்கரித்து, அமுதூட்டி, தாலாட்டி, பாடி,  தூங்க வைத்து, உபசரித்து, பேசி,  ஊஞ்சலிட்டு, ஊர்வலம் எடுத்துச் சென்று நம்மோடு தெய்வத்தை இணைத்துக் கொள்கிறோம். சில பேருக்கு கல்யாணம் கூட பண்ணி வைக்கிறோம்.  இது இன்றும்  கோவில்களில்  தொடர்கிறது.

இப்போது போல் காசே தான் கடவுளடா பூஜை இல்லை ராமகிருஷ்ணர் செய்தது. தன்னை மறந்து தெய்வத் தோடு ஐக்கியமான ஒன்றிய மனதோடு கூடிய உண்மை பூஜை. அதனால் தான் காளியும் அவர் முன் தோன்றினாள் , பேசினாள்.
அணைத்தாள். தாயானாள் .
எந்த தீயசக்தியும் தன்னையும் காளியையும் நெருங்காமல் தனது குண்டலினி சக்தி தீயை உருவாக்கி சுற்றிலும் வேலியாக அமைத்துக்  கொண்டு பூஜை செய்தவர் ராமகிருஷ்ணர்.

காளிக்கு பூஜை செய்வது எளிதல்ல. வரை  முறைகள், நேம நியமங்கள், ஆசாரங்கள் வேறு. உக்கிரமான தெய்வம். ராம் குமார் தம்பிக்கு இதை  நன்றாக  கற்றுத்தர ஒரு குருவை நியமித்தார்.  அந்த குரு  ராமகிருஷ்ணரின் காதில் முதல் வார்த்தையை உபதேசிக்கும்போதே ராமகிருஷ்ணர் உயர்ந்த உன்னத சமாதி நிலைக்கு தாவி விட்டார்.

எனக்கு காளி பூஜை விசேஷ நெறி முறைகள் தெரியாதே என்று சொல்லியும் மதுர பாபு ''ராமகிருஷ்ணா, உனது பக்தி, ஆசாரம் ஒன்றே போதும் .நீ தான் பூஜை செய்யவேண்டும்'' என்று நிர்பந்தித்தார்.
அடுத்த வருஷம் அண்ணா ராம் குமார் மறைந்து விட்டார். முழுப் பொறுப்பும் இனி ராமக்ரிஷ்ண ருக்கே அல்லவா?

''தாயே, நீயே என்னை உன் அர்ச்சகனாக்கிக்  கொண்டாயா? இதுவும் உன் விருப்பமா? இதுவும் ரொம்ப சரி, எனக்கு உன்னை விட்டால்  வேறு யாரைத் தெரியும்?''

பவதாரிணியை  நெருங்கி ,தொட்டு,  அலங்கரித்து, உபசரித்து, மந்திர உச்சாடனங்கள் செய்து மனம் எப்போதும் அவளிடமே லயித்து விட்டது ராம கிருஷ்ணருக்கு.  இந்த பரந்த உலகில் ரெண்டே பேர். ஒன்று ராமகிருஷ்ணர் இன்னொன்று பவதாரிணி. அப்புறம் ரெண்டு பேருமே  ஒன்றாகி விட்டார்கள்.
பூஜை இல்லாத நேரமும் அன்னையே மனதில் நிறைந்து இருந்தாள் அவளைப்  பற்றிய தியானமே எப்போதும்.

''அம்மா, உன்னை பார்க்க வேண்டுமே?'' என்று மனம் தேடியது. உலகம் அவரை  ஈர்க்கவில்லை. ஜன நடமாட்டமில்லா தனி இடம் நாடினார். வனத்தில் ஒரு இடம் தேர்ந்தெடுத்தார். முள்ளும் புதரும் மண்டி ஒரு காலத்தில் மயான பூமி. பேய் பிசாசு இருக்கும் என்று யாரும் பகலிலேயே கூட  போக அஞ்சும் இடம்.    இரவில் ராமகிருஷ்ணர் அங்கே நிம்மதியாக தியானத்தில் இருந்தார்.

 ''அம்மா வேணும்''  என்று குழந்தை அழுமே, அது  போல் அழுது அழுது கண்கள் சிவந்து தடித்து மறுநாள் காலையில் அறைக்கு திரும்புவார்..இது தொடர்ந்தது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...