Friday, May 6, 2022

 


ஆதி சங்கர  ஜெயந்தி  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

என்  நண்பர் மரியாதைக்குரிய  ஸ்ரீ  வரகூர்  நாராயணன்  ஒரு  தேனீ என்பது உங்களுக்கு ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். தேனீ  தேனைத்தேடி பல மலர்களை நாடும்.  வரகூரான்  அப்படித்தான் எங்கெல்லாம்  மஹா பெரியவா பற்றிய செய்திகள்  கிடைக்கும் என்று தேடி அலைந்து நமக்கு அற்புதமாக தருபவர். அவர் பல்லாண்டு வாழ இன்று ஆதி சங்கர ஜெயந்தி அன்று ஆச்சார்யாளை  வேண்டிக்கொள்கிறேன்.  

ஆதி சங்கர ஜெயந்தி ரொம்ப பொருத்தமாக ஒரு கட்டுரை வேண்டாமா?  அது அவர்  தோன்றிய காலத்தை பற்றி இருந்தால் அருமையாக  இருக்குமே. இதற்கும் வரகூரான் தேடிப்பிடித்து அளித்த ஒரு கட்டுரை உதவியது. அதை கொஞ்சம் என் வழியில் சுருக்கி தருகிறேன்.

ஆதி சங்கரர் அவதாரம்  எப்போது நடந்து  என்று ஆராய்ந்தவர்கள் பல புதைபொருள் ஆராய்ச்சி நிபுணர்களாகவோ, தொல் பொருள்  கால நிர்ணயம் செய்பவர்களாகவோ இருந்தால்  அதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை, மஹா பெரியவா அது பற்றி யோசித்திருக்கிறார். அதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.

ஆதி சங்கரர் அவதாரம் செய்தது கி.மு. 509-ஆம் ஆண்டு- என்று சொல்கிறார்கள். 

இதை எப்படி  சுலபமாக  மஹா பெரியவா நிர்ணயித்தார் என்பது தான் சுவாரஸ்யமான விஷயம். 

சில  விஞ்ஞானிகள், நிபுணர்கள், கல்வியிற் சிறந்தவர்கள் ஒரு சமயம்  காஞ்சி மடத்துக்கு வந்தார்கள்.  பெரியவாளை  சந்தித்து ஆசி பெறவேண்டும் என்பது தான் அவர்கள் எண்ணம்.
வந்திருக்கிறவர்கள் யார் என்று அறிந்த மஹா பெரியவாளுக்கு  பரம உற்சாகம். எல்லோரையும் ஆலய தர்சனம் ஆகாராதிகள் எல்லாம் திருப்தியாக முடிந்தபிறகு சந்திக்க தயாராக இருந்தார். 
அவரைப்பற்றி அவர்களுக்கும் தெரியும். அவரிடம் பேசினாலே ஏதாவது புதுசு, பிரமிக்கும்படி  சொல்வார் என்று ஆவலாக காத்திருந்தார்கள்.

அவர்களில் ஒருவர்  புகழ்பெற்ற  தமிழக  புவியியலாளர் (ஜியோலஜிஸ்ட்) அவரது பூர்வீகம், குடும்பம், உத்தியோக அனுபவங்கள் பற்றி எல்லாம்  கேட்டறிந்த பெரியவா,  அரைமணி  மணி நேர சம்பாஷணை  அவரோடு  நடத்திய பின் மஹா பெரியவா திடீரென்று  அவரை ஒரு கேள்வி கேட்டார்:

 ‘‘எனக்கு நீங்க  ஒரு உபகாரம் பண்ணித் தர முடியுமா?’’
இப்படி  குழந்தை மாதிரி மஹா பெரியவா கேட்கும்போது யாராவது  ஸாரி  என்று சொல்வார்களா? சொல்லத்தான் மனசு  இடம் கொடுக்குமா?

அந்த ஸயன்டிஸ்ட்க்கு   ஆச்சர்யம். அவரால் நம்பவே முடியவில்லை. ‘ அடேயப்பா, உலகத்திலே  ன் எந்த மூலையிலும் நடக்கிற சிறு அசைவைக்  கூட  அறிந்த மஹான் இவர்,  நம்மிடம் என்ன உதவியை எதிர் பார்க்கிறார்?’  . ஸயன்டிஸ்ட்  உடல் நடுங்கி  வியர்த்து மஹா பெரியவாளை நமஸ்கரித்தார் 

 ‘‘பெரியவாளுக்கு என்னால ஏதேனும் ஒரு  சின்ன கைங்கர்யம் பண்ண சந்தர்ப்பம் கிடைச்சுதுன்னா அது என் பாக்யம். அதைவிட எனக்கு  வேறே  சந்தோஷம் கிடையாது’’ என்று  நா தழு தழுக்க  பதில் சொன்னார்.

‘‘கேரளால இருக்கிற காலடி க்ஷேத்திரம் பத்திக் கேள்விப்பட்டிருக்கியோ?’’ 
‘‘தெரியும் பெரியவா. ஆதி சங்கரரோட அவதார பூமி ஆச்சே…’’
‘‘ஆமா… அங்கே பூர்ணா நதி ஓடறது. ஆதி சங்கரரோட தாயார் ஆர்யாம்பாள் அதுலதான் தெனோமும் ஸ்நானம் பண்ணுவா.’’
''ஆமாம்  கேள்விப்பட்டிருக்கேன்  பெரியவா''
‘‘பூர்ணா நதிலேர்ந்து நான் சொல்ற ரெண்டு எடத்துல மண்ணு சாம்பிள் எடுத்துக்கோ. அது ரெண்டையும் டெஸ்ட் பண்ணி, எத்தனை காலத்துக்கு முந்தைய மண்ணுன்னு சொல்லணும்.’’
‘‘உத்தரவு பெரியவா.’’
‘‘பூர்ணா நதி கேரளாவில் காலடி க்ஷேத்திரத்துக்குள்ள பாய ஆரம்பிக்கறது இல்லியா? அது காலடிக்குள்ள நுழையற எடத்துக்கு முன்னாடி இருக்கிற ஊர்லேர்ந்து கொஞ்சம் மண்ணு எடுத்துக்கோ.
ரெண்டு எடத்துலேர்ந்து மண்ணு எடுக்கணும்னு சொன்னேன் இல்லியா? ரெண்டாவது மண்ணை எங்கே எடுக்கணும்னா, இந்த நதி காலடி ஊருக்குள்ள பாய ஆரம்பிக்கும். காலடிக்குள்ள பூர்ணா வந்த ஒடனே ஒரு சின்ன யூ டர்ன் போட்ட மாதிரி சங்கர பகவத் பாதாள்  வாழ்ந்த க்ரஹம் வரை வந்துட்டு, திரும்ப பழைய மாதிரி தனக்கு உண்டான பாதைல இந்த நதி பாய ஆரம்பிச்சிடும், பார்த்திருக்கியோ… அந்த எடத்துலேர்ந்து மண்ணு எடுத்துக்கோ.    நான் சொன்ன இந்த ரெண்டு எடத்துலேர்ந்து மண் எடுத்துக்கோ. ‘கார்பன் டேட்டிங்’ (பழங்காலப் பொருட்களின் வயதைக் கண்டுபிடிப்பது) முறைப்படி ரெண்டு மண்ணோட வயசையும் கண்டுபிடிச்சு எனக்குச் சொல்லு’’ 

ரொம்ப  தெளிவாக  என்ன செய்யவேண்டும் என்று சொல்லி நிறுத்தினார் மஹா  பெரியவா.

இந்த  கார்பன்  டேட்டிங்   பரிசோதனைகள்  செய்வது அவர் வழக்கமாக பண்ணுவது என்பதால்,
தன் துறை சார்ந்த பணி என்பதால், மகா பெரியவாளே ஓர் உத்தரவு போல் சொன்னதால்  மிகவும் சந்தோஷத்துடன், ‘‘நிச்சயம் பெரியவா. உடனே பண்றேன்’’ என்று சொல்லி, மகா பெரியவாளுக்கு மீண்டும் ஒரு நமஸ்காரம் செய்து விட்டு  விடை பெற்றார்  ஸயன்டிஸ்ட் .

மஹா பெரியவா சொல்லியபடியே  காலடிக்கு முன்னால் பூர்ணா நதி பாய்கின்ற ஊரிலும், காலடிக்குள் நுழைந்த பிறகு உள்ள இடத்திலும் மண் சேகரித்து தேவையான  பரிசோதனைகள்  செயது, ரிசல்ட் ரிப்போர்ட்களை  எடுத்துக்கொண்டு பெரியவாளிடம் சமர்ப்பிக்க காஞ்சிபுரம் வந்தார் ஸயன்டிஸ்ட் .

ஏதோ அந்த ரிசல்ட் என்ன என்பது முன்னதாகவே தெரிந்தவர் போல  ஒரு   புன்னகையுடன் அவரை மஹா பெரியவா வரவேற்றார்.

‘‘பெரியவா… ரெண்டு எடத்துலயும் மண்ணு எடுத்து, ‘கார்பன் டேட்டிங்’ முறைப்படி வயசைக் கண்டுபிடிச்சுட்டேன். கேரளாவில் காலடிக்குள்  பூர்ணா நதி நுழைவதற்கு முன் உள்ள மண் சுமார் ஒரு லட்சம் வருடம் ஆனது. அதாவது, இந்த நதியின் வயது ஒரு லட்சம் வருஷம். அடுத்தது – காலடிக்குள் சங்கரர் க்ரஹம் இருந்த இடம் அருகே இருந்த மண், சுமார் 2500 வருட பழமை கொண்டது.’’

ஸயன்டிஸ்ட்டையும் மடத்தில் அவரைச்  சூழ்ந்து  நின்று கொண்டிருந்த   
 பக்தர்களையும்
பார்த்து மஹா பெரியவா புன்னகை பூத்தபடி  சொன்னார்: 

‘‘இவர் கொண்டு வந்த ரிசல்ட் படி ஆதி சங்கரரோட அவதார காலம்  ஊர்ஜிதமாயிடுறது. ஆதி ச
ங்கரர் அவதாரம் செய்தது கி.மு. 509-ஆம்  வருஷம்.  அவர் ஸித்தி ஆனது கி.மு. 477-ஆம் ஆண்டு, அதாவது 32 வருஷத்துக்கு அப்புறம்'' என்று   பிரகடனப்படுத்தினார்.

ஆதி சங்கரரின் அவதார தினம் மற்றும் ஸித்தி தின ஸ்லோகங்களை வைத்து, அவர் வாழ்ந்த காலத்தை மகா பெரியவா வெளியிட்டார். ஆதி சங்கரர் வாழ்ந்த காலம் குறித்துப் பல்வேறு விதமான கருத்து வேறுபாடுகள் இருந்தன. இவற்றை எல்லாம் மனதில் கொண்டு, ஒரு புவியியலாளரை வைத்து மண்ணின் வயதைக் கணக்கிடச் சொன்னமைக்கும் ஒரு காரணம் உண்டு.

காலடியில் ஆதி சங்கரர் வசித்த இல்லத்தில் இருந்து சிறிது தொலைவில் பூர்ணா நதி ஓடிக் கொண்டிருந்தது . சங்கரரின் தாயாரான ஆர்யாம்பாள் நித்தமும் பூர்ணா சென்று நீராடித் திரும்புவது வழக்கம். ஒரு நாள் ஆற்றில் நீராடி விட்டு இல்லம் திரும்பும்போது தள்ளாமையின் காரணமாக வழியில் மயங்கி விழுந்து விட்டார் ஆர்யாம்பாள். இதை அறிந்த சங்கரர் கவலைப்பட்டார்.

‘இனி பூர்ணா செல்ல வேண்டாம். இல்லத்தில் இருக்கிற கிணற்றிலேயே நீராடுங்கள்’ என்று தன் தாயாரிடம் சொன்னார் ஆதி சங்கரர்.

ஆனால், ‘என்ன சிரமப்பட்டாலும், நான் இருக்கின்ற வரை பூர்ணாவில்தான் நீராடுவேன்… அது எத்தனை பெரிய பாக்கியம்’ என்று மகனை சமாதானப்படுத்தினார் தாயார்.

அப்போதுதான் ஆதி சங்கரர் கங்காதேவியைப் பிரார்த்தித்துப் பாடல் பாடி, அந்தப் பூர்ணாவையே தனது இல்லம் இருக்கும் பக்கத்துக்குத் திருப்பினார்.

ஆதி சங்கரரின் அவதாரப் பெருமையை நிரூபிக்கும் விதமாகவும், அவரது சந்நியாச தர்மத்துக்கும் கட்டுப்பட்டு பூர்ணா நதியே தன் பாதையைச் சற்று மாற்றிக் கொண்டு பாய ஆரம்பித்தது.

திடீரென தன் வீடு அருகிலேயே பூர்ணா ஓடத் துவங்கியதும், ஆர்யாம்பாளுக்கு சந்தோஷமான சந்தோஷம்.

ஆதி சங்கரர் வாழ்ந்த காலத்தில்தான் பூர்ணா, அவரது இல்லம் அருகே பாய்ந்தது. ஆக, இங்கே பாய்கின்ற பூர்ணாவின் மண்ணை சோதித்துப் பார்த்தால், ஆதி சங்கரர் வாழ்ந்த காலம் உறுதியாகத் தெரிந்து விடும் என்று தீர்மானித்து, புவியியலாளரிடம் இந்தப் பொறுப்பைக் கொடுத்து, உலகத்துக்கு ஒரு உண்மையை வெளியிட்டார் மகா பெரியவா.
காலடிக்குள் 
 பூர்ணா நுழைவதற்கு முன் அந்த நதியின் வயது ஒரு லட்சம் வருடம்.



காலடிக்குள் நுழைந்த பின் சங்கரர் இல்லம் அருகே எடுத்த மண்ணுக்கு 2,500 வருடம்.
எனவே, ஆதி சங்கரர் அவதாரம் செய்து 2,500 ஆண்டுகள் என்பது  ஊர்ஜிதம் ஆகி விட்டது அல்லவா??

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...