Tuesday, May 3, 2022

BAJAGOVINDAM

 


ஆதி சங்கரர் -  நங்கநல்லூர்  J K  SIVAN
பஜகோவிந்தம் 

' கும்பிடு,  கூப்பிடு  கோவிந்தனை....'-2

ஆதி சங்கரரின் பஜகோவிந்தம் அவரது எத்தனையோ அபூர்வ  சிருஷ்டிகளில் ஒன்று. பிரபலமானது. தினமும் யார்  வீட்டிலாவது  விடாமல் ஒலிப்பது. இதை பிரகரண க்ரந்தம் என்பார்கள்.  கேட்பதற்கு  பாடுவதற்கு பஜனை பாடல் மாதிரி மட்டும் இல்லாமல் அதன் வேதாந்த சாரம் சிந்திக்க வைக்கும் சக்தி கொண்டது.

முதலில் இதை எழுதும்போது நிறைய படித்த எனது நண்பர் ஒய்வு பெற்ற , டெலிபோன் டிவிஷனல் எஞ்ஜிநீயர் ஸ்ரீ R ஸ்ரீனிவாசன் வந்து பேசிக்கொண்டிருந்தபோது தெரிந்த விவரம்.

''சிவன் சார், நான் எங்கோ படித்ததில் ஒரு விஷயம். ஆதி சங்கரர் தனது குரு கோவிந்த பாதரின் மீது இருந்த பக்தியால் குருவந்தனமாக அவர் பெயரில் தான் ''பஜ ''கோவிந்தம்'' என்று இதற்கு பெயர் வைத்தார் என்று அறிந்தேன். ஆச்சர்யமாக இருந்தது'' என்கிறார்.

நான் பஜகோவிந்தம் எழுதுவது அவருக்கு தெரியாது. ஏதோ பேச்சு வாக்கில் இந்த விஷயம் என் காதில் விழ இன்று என் வீட்டிற்கு விஜயம் செய்ததும் அந்த கண்ணன் லீலையே. நீ இதையும் எழுது என்று இப்படி ஒரு தூண்டுதலா?

அடிக்கடி நமக்கு நாமே கேட்போமே, ''ஏன் பிறந்தோம்? உண்மை எது?, வாழ்க்கையின் தத்துவம் என்ன? சங்கருக்கு தெரியும் நம் யாருக்குமே இதற்கு விடை தெரியாது என்று, ஆகவே அவரே பஜகோவிந்தத்தில் '' 'கேளுங்கடா' என்று சொல்லிவிடுகிறார்.

காசியில் ஒரு குடு குடு கிழவர் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு மிகவும் ஸ்ரமத்தோடு பாணினியின்  ஸம்ஸ்க்ரித இலக்கண (வ்யாகரணத்தை) உருபோட்டு படிப்பதை  அந்தப்பகசங்கரர் கங்கை ஸ்னானத்துக்கு  சென்று கொண்டிருந்த  ஆதி சங்கரர்   ஒரு   விடியற்காலையில் பார்த்தார்.
எதுக்கு இந்த தள்ளாத வயதில் இவருக்கு இப்படி புத்தி போகிறது?. இனிமேல் பண்டிதனாக ஆசையா? இதற்கு பதில் கடவுள் மேல் பிரார்த்தனை செய்யலாமே. போகிற வேளைக்கு புண்ணியமாவது உண்டே.. இந்த கிழவர் மட்டும் அல்ல. நம் அநேகரின் வாழ்க்கையும் இவ்வாறு தானே, உலக வாழ்வின் ஆடம்பரங்கள், கவர்ச்சிகள், பண ஆசை ஆகியவற்றில் ஈடுபட்டு வாழ்க்கையை இழக்கிறோமே .  கையில் வெண்ணை போல் அந்த வெண்ணை திருடி கிருஷ்ணனே  இருக்கிறானே.   ஒரு கணம் அவனை நினைத்தாலே போதுமே என்று தோன்றியதின் விளைவு தான் பஜகோவிந்தம் 31 ஸ்லோகங்கள். மக்களின் அறியாமையை போக்கி நல்வழிப்படுத்த நமக்கு சுருக்கமாக கிடைத்த சிறந்த நல்வழிப்பாதை பஜகோவிந்தம். பாடுவதற்கு வெகு சுகமாக சந்தம் அமைந்திருக்கிறது. பாட்டிற்கு என்றே பிறந்த பாரத ரத்னம், என்றும் நினைவில் நிற்கும் திருமதி M .S . சுப்புலக்ஷ்மியின் குரலில் எங்கும் ஒலிக்கிறதே.

பஜகோவிந்தத்தின் முதல் 12 ஸ்லோகங்களை கடகட வென்று கடல் மடை திறந்தாற்போல சங்கரர் மொழிந்தார். இவை த்வாதச மஞ்சரிக ஸ்தோத்ரம் எனப்படும்.

அடுத்த  14 ஸ்லோகங்கள் அவருடைய ஒவ்வொரு சிஷ்யராலும் ஆளுக்கு ஒன்றாக எழுதப்பட்டது. இந்த 14 ஸ்லோகங்களுக்கும் சதுர்தச மஞ்சரிக ஸ்தோத்ரம் என்று பெயர்.

இந்த 26  ஸ்லோகங்களுக்கு பிறகு  மறுபடியும்  ஆதி சங்கரரே  கடைசி  ஐந்து ஸ்லோகங்கள் இயற்றி 31 ஐயும் பூர்த்தி செய்தார்

1. भजगोविन्दं भजगोविन्दं  गोविन्दं भजमूढमते ।
सम्प्राप्ते सन्निहिते काले नहि नहि रक्षति डुकृङ्करणे ॥ १॥

Bhaja govindam bhaja govindam  Govindam bhaja moodamathe
Sampraapthe sannihithe kaale  Nahi nahi rakshathi dhugrunnyakarane

1. பஜகோவிந்தம் பஜகோவிந்தம்  கோவிந்தம் பஜ மூட மதே
சம்ப்ராப்தே சந்நிஹிதே காலே நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே

'' ஏ, மனதே , எப்பவும் பெருமைப் பட்டுக் கொள்வாயே, நான் பெரிய பண்டிதன் சகலமும் கற்றவன் என்று. எத்தனையோ மேடைகளில் பேசினாய், கைதட்டல் வாங்கினாய். மாலைகளை, மெடல்களை சுமந்தாய். போட்டோக்களில் சிரித்தாய். உனது இலக்கண அறிவு, நீ படித்த யாப்பு, நிகண்டு, புஸ்தகங்கள், எழுதினது எதுவுமே அந்திம காலத்தில் உனக்கு கை கொடுக்காது என்பது நினைவில் கொள். விடாமல் நீ மனசார உச்சரித்த கோவிந்தா, கோவிந்தா என்ற சொல் ஒன்றே உன்னை சம்சார சாகரத்தில் இருந்து கடத்திக் கொண்டு செல்ல உதவும் ஒரே சாதனம். உன் இலக்கண அறிவு பாவம் உனக்கு உதவாது. எத்தனை காலம் அதோடு வாழ்ந்தாய்!! என்ன பிரயோசனம்? உன் எழுத்துக்கள் பழையபேப்பர் கடை பாலுவிடம் கிலோ பத்து ரூபாய்க்கு  போனால் நீ  நரிமுகத்தில்  விழித்தவன்.'' 


2 मूढ जहीहि धनागमतृष्णां  कुरु सद्बुद्धिं मनसि वितृष्णाम् ।
यल्लभसे निजकर्मोपात्तं वित्तं तेन विनोदय चित्तम् ॥ २॥

Moodajaheehi thanaagamathrishna kuru sath budhdhim manasi vithrishnaa
yellaba senija karmo paatham viththam thena vinodhaya chiththam

மூட ஜஹீஹி தனாகம த்ரிஷ்ணாம் குரு சத்புத்திம் மனசி வித்ரிஷ்ணாம்
யல்லபஸே நிஜ கர்மோ பாதம் வித்தம் தேன வினோதய சித்தம்

''ஹே, முட்டாள் மானுடா, ஏக்கர் ஏக்கராக நிலம் குறைந்த விலையில் எங்கு கிடைத்ததோ அங்கெல்லாம் வாங்கிப்போட்டாயே. அதால் கோர்ட் கேஸ் தான் மிச்சம். எவனோ ஆக்ரமித்தான். அலைந்து அலைந்து கடன் வாங்கி,   இளிச்சவாயர்களை  ஏமாற்றி,  வீடுகள் கட்டினாய்.  அதனால் உன் பிள்ளைகளும் உறவும் அடித்துக்கொண்டு சாவதை நீ போகும் போது  பார்க்கவில்லையே.  இது தான் மிச்சம். எவ்வளவு அழகாக தேவைக்கு மட்டும் சம்பாதித்து அந்த கோவிந்தனை நினைத்து சந்தோஷமாக வாழ்ந்திருக்கலாம். உழைப்பு விழலுக்கு இறைத்த நீராக கூடாது. வியர்வை ரத்தம் சிந்துவது பிறர்க்குதவ என்று வாழ். நீயே கோவிந்தனாகி விடுவாய் ''.

3. नारीस्तनभर नाभीदेशं दृष्ट्वा मागामोहावेशम् ।
एतन्मांसवसादि विकारं मनसि विचिन्तय वारं वारम् ॥ ३॥

Naree sthana bhara nabee dhesam Dhrushtwa maaga mohaavesam (naree)
Ethan maamsavathaathi vikaaram Manassi vichinthaya vaaram vaaram

நாரீ ஸ்தனபர நாபீ தேசம் த்ரிஷ்ட்வா மா கா மோஹாவேசம்
ஏதன் மாம்ச வசாதி விகாரம் மனஸி விசிந்தய வாரம் வாரம்

''மனசே, நினைவில் கொள். ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே. மூன்று பேராசை களில் முக்கியமானது, பல பேரை விழுங்கியது பெண்ணாசை. மற்ற மண்ணாசை, பொன்னாசை எல்லோருக்கும் இருப்பதில்லை. காசு அதிகம் தேவைப்படும் விஷயம் அவை. பெண்ணால் பல சாம்ராஜ்யங்களே வீழ்ந்திருக்கின்றன. சம்யுக்தையால் இந்த நாட்டிற்கே முகலாய ஆட்சி வந்தது என்று பள்ளிக்கூடத்தில் படித்தது ஞாபகம் இருக்கிறதா? .

ரொம்ப அழகாகவோ வேறு எந்த கவர்ச்சியாலோ ஒரு பெண் உன்னை அடிமையாக்கும் நேரத்தில் உன்னுடைய எக்ஸ்ரே படம் கையில் வைத்துக்கொண்டு அடிக்கடி பார்த்துக் கொள். அதில் உள்ள உன் திவ்ய ஸ்வரூப எலும்பு படம் உன்னை சம நிலைக்கு கொண்டு வரும். பெண் பெயரளவில் தான் ஒரு காந்த சக்தி . மற்றபடி அவளும் சதை, ரத்தம், எலும்பு மட்டுமே. ஆனால் ரொம்ப தொந்தரவு. இதை மறவாதே. கோவிந்தன் மேல் மனதைச் செலுத்து. அவனைப் பார்த்துக் கொண்டே இரு. அந்த கவர்ச்சிக்கு எது ஈடு?

4. नलिनीदलगत जलमतितरलं  तद्वज्जीवितमतिशयचपलम् ।
विद्धि व्याध्यभिमानग्रस्तं लोकं शोकहतं च समस्तम् ॥ ४॥

Nalinee dhala gatha jala mathi tharalam  Thathwa jeevitham athishaya chapalam (nalinee)
Vidhi vyadhyabi maana grastham  Lokam shoka hatham chasamastham.

நளினி தள கத ஜலமதி தரளம்  தத்வா ஜீவித மதிசய சபலம்
வித்தி வ்யாத்யாபிமான க்ரஸ்தம் லோகம் சோகஹதம் ச சமஸ்தம்

''அமைதியான விடியற்காலை சூழ்நிலையிலே, மந்த மாருத மயக்கத்தில் கிருஷ்ணன் கோவில் அருகில் பழைய தாமரைக்குளம் ஒன்று இருக்கிறதே, அதில் நிறைய வாத்துகள் உலவுமே. எத்தனை பச்சை பசேலென்று அகன்ற வட்ட வட்டமான தாமரை இலைகள். அவற்றில் கண்ணைக் கூசும் நீர் முத்துக்கள். அவற்றின் மேல் சூரியனின் கதிர்கள் மோதி சுக்கல் சுக்கலாக சிதறி வர்ண ஜாலங்களை ஏழு வண் ணங்களில் வாரித் தெளிக்குமே. பார்த்திருப்பாயே, அந்த நீர் முத்துக்கள் இலையில் ஒட்டாமல் பாதரசம் போல் அங்கு மிங்கும் நகருமே. எந்த கணமும் அந்த முத்துத் துளிகள் நீரின் மேல் ஆடிநிற்கும் தாமரை இலையிலிருந்து வழிந்து உருண்டு மறைந்து விடுமே. சாஸ்வதமில்லாதது.
இந்த அழகிய தாமரை இலை நீரை ரசிக்கும்போது ஒரு பேருண்மை நினைவுக்கு வந்தாக வேண்டும். நமது உலக வாழ்க்கையை சுட்டிக்காட்டுகிறது இது. அது தான் இந்த உடம்பும். எந்த நிமிஷமும் நாலு பேர் தூக்க வேண்டியது. இந்த தாமரை நீர் முத்து, உலகில் ஒட்டியும் ஒட்டாமலும் வாழ் என்று சொல்லிக் கொடுக்கிறது. ஆங்கிலத்தில் DETACHED ATTACHMENT என்பது. உலக வாழ்வில் ஈடுபடும்போது நாம் செய்வது எதுவும் நமது கடமையே தவிர பரோபகாரத்துக்கு இந்த சரீரம் என்ற நினைப்போடு தான் கர்மாவைச் செய்வதற்கு . அதுவே ஆத்ம திருப்தியை அளிக்கும். இந்த உலக வாழ்க்கையும் தாமரை இலைத் தண்ணீரல்லவா? அநித்யமானது. எப்போது முடியும் என்பதே ரகசியம். அந்த குறுகிய வாழ்க்கையிலும் எத்தனை துக்கம், வருத்தம், ஏமாற்றம், கோபம், சோகம், வியாதி. மன வியாகூலம். 'கோவிந்தா இதை உணர உன்னை நினைத்து பலன் எதிர் நோக்காது பிறர்க்கு சேவை புரிய எனக்கருள்வாயாக. நீ சொன்னது தானே இது. கோவிந்தா கிருஷ்ண பரமாத்மா.''

5. यावद्वित्तोपार्जन सक्त- स्तावन्निज परिवारो रक्तः ।
पश्चाज्जीवति जर्जर देहे वार्तां कोऽपि न पृच्छति गेहे ॥ ५॥

yaavadh veetho paarjana saktha dhaavan nija parivaro raktha
paschaath jeevathi jarjara thehe vaarththaam ko abi prichchadhi gehe

யாவத் வீத்தோ பார்ஜன சக்தா ஸ்தாவன் நிஜ பரிவாரோ ரக்தா
பஸ்சாத் ஜீவதி ஜ ர்ஜர தேஹே வார்த்தாம் கோபி ந ப்ரிச்சதி கேஹே

''ஏ, மனிதா, அந்த ஒளவைக்கிழவி நமக்காகத்தான் அப்பவே சொல்லிவிட்டுப்போய்விட்டாள் . ஒரு குளத்தில் நீர் நிரம்பியிருந்தால் அதில் இருக்கும் மீன்கள் வளரும். அதை உண்ண நிறைய பறவைகள் வரும். அதில் குளிக்க (துணி துவைக்க கூட! ) எல்லோரும் வருவார்கள். அதில் மலரும் பூக்களின் தேனை ருசிக்க வண்டுகளும் வரும். நீர் வற்றிப்போனால் இவை யாவுமே அந்த குளத்தை அநாதையாக்கிவிடும். உண்மை நண்பனாக அந்த வரண்ட குளத்தில் அடியில் இருக்கும் கொட்டி, ஆம்பல் , நெய்தல் போன்ற பூண்டுகள் தாவரங்கள் தான் கடைசி வரை நிற்கும்'' என்று.

உன்னிடம் பணமோ பதவியோ, அந்தது, கௌரவம் இல்லையென்றால், உன்னை நோய் வாட்டி வதைத்து  மூலையில் படுக்க வைத்தால் , உன்னையே சுற்றிக்கொண்டிருந்த உன் நெருங்கிய உறவு கழட்டிக்  கொள்ளும். இதுவரை ''நட்பாக'' இருந்தவர்கள் இனி காணாமல் போவார்கள். உனக்கு என்றும் துணை கோவிந்தன் தான். இன்றே இப்பவே அவனை நினை. கோவிந்தா, காருண்ய மூர்த்தி கோவிந்தா நீயே கதி.

மீண்டும் கோவிந்தனை அணுகுவோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...