Thursday, May 19, 2022

 தெலுங்கு பக்தை  சூரி நாகம்மா  


ரமண மஹரிஷியைப் பற்றி தூங்கிக் கொண்டிருந்த நமது பாரத தேசமும் உலகின் பல பாகங்களில் வாழ்பவர்களும் அறிந்து கொண்டு விட்டார்கள். கூட்டம் திருவண்ணாமலையை நோக்கி வர ஆரம்பித்துவிட்டது.

சூரி நாகம்மாள் என்ற தெலுங்கு பக்தை  அவரைப் பற்றி கேள்விப்பட்டு  வந்துவிட்டாள். ரமணாஸ் ரமத்திலேயே தூங்கிவிட்டாள் .  அவள் வாழ்க்கையை  பகவான் வாழ்ந்த காலத்தில் அவருடன்  கூடவே  இருந்து அற்புதமாக கழிக்கும்  பாக்யசாலி யாகிவிட்டாள் . அதுமட்டுமா.  அவள் ஒரு உன்னத பிறவி.  பிறர் செய்யாத ஒரு காரியத்தை செய்த்திருக்கிறாள்.  ஒரு டயரி மாதிரி தினமும்  ரமணாஸ்ரமத்தில்  பகவான் பேசியது, மற்றவர்கள் பேசியது, நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும்  ரிப்போர்ட்டர்  மாதிரி தெலுங்கில்  குறிப்பு எடுத்து எழுதி அதை உறவினருக்கு அனுப்புவாள்.   அவள் எழுதிய பகவான் ரமணர் பற்றிய விஷயங்கள்  பிற்காலத்தில் உலகப் ப்ரஸித்தியாகும் என்று  லெட்டர் எழுதிய  அவளுக்கோ அந்த லெட்டர்களைப் பெற்றவருக்கோ தெரியாது.

அந்த குறிப்புகள் தான்  ஆங்கிலத்தில் ரமணாஸ்ரமத்தில் கிடைத்து  அதை படித்து ரசித்து  இப்போது உங்களுக்கு சுருக்கமாக தந்து கொண்டிருக்கிறேன்.

தெலுங்கு அம்மா எழுதுகிறாள்:
''இன்றைக்கு  நிறைய பேர் பகவானை தரிசிக்க வந்தார்கள். வெயில் சுள்ளென்று உரைத்தது. மரங்கள் நிறைய சூழ்ந்திருந்ததால் சூரிய உஷ்ணம் அவ்வளவாக தெரியவில்லை. காற்று கலைத்தது. மற்ற பக்தர்கள் அருகே விஸ்வநாதனும் அமர்ந்து இருந்தார். பகவான் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தவருக்கு அவருக்கு தெரிந்த  ஒரு கிழ விதவை ஞாபகம் வந்தது போல் இருக்கிறது.

''...கீழூர் அக்ரஹாரத்திலே (முத்து கிருஷ்ண பாகவதர் தங்கை) .. .... அந்த வயசானவள் எனக்கு திருப்தியா அன்போடு சாதம் போட்டாள் . பகவானுக்கு நைவேத்தியம் பண்ணின பக்ஷணங்களைக் கட்டிக் கொடுத்தாள்
''இந்தாடா குழந்தே, வச்சுக்கோ, ஜாக்கிரதை. வழியிலே தின்னுண்டே போ '' என்றாள் . அப்புறம் நான் விருபாக்ஷ குகையிலே இருந்தப்போ ரெண்டு தடவை வந்து பார்த்தாள் '

' என்னடா பயலே, தங்க விக்ரஹமாட்டம் இருக்கியே. உடம்பிலே   இடுப்பை சுத்தக்கூட  துணி இல்லையே'' அப்படின்னு  சொன்னாள் '.

பகவான் இதை சொல்லும் போது அந்த  வயசானவளின் தாய்ப்பாசம் அவர்  குரலில்  த்வணித்தது.  பகவானின் குரல் தழுதழுத்தது.  

ஞானிகளின் மனம் வெண்ணை போல் உருகக்கூடியது. பக்தியிலிருந்து தான் ஞானம் பிறக்கிறது. பகவான் அருணாசல புராணம் சொல்லும்  போது அம்பாளைப்  பற்றி கௌதமர் புகழ்ந்து சொல்லும்  இடம் வந்தது. ஆஹா, இதை சொல்லும்போது  பகவான் ரமணரின்   கண்களில் ஆறாக கண்ணீர் பெருகியது. நா குழறியது. புராணத்தை கீழே வைத்துவிட்டார். மௌனம். பிரேமை, அன்பு, பக்தி நிறைந்த விஷயங்களை பற்றி பேசும்போது பகவான் உணர்ச்சி வசமாகி  விடுவார். ப்ரேமையும் பக்தியும் தான் ஞானம்.  பேசாமல் மௌனமாகிவிடுவார்.

ஒரு வாரத்திற்கு முன்பு ஹிந்து ''சுந்தரி'' என்கிற பத்திரிகையில் ஒரு கதை. ''தாயக்கட்டை ''என்று அதற்கு பெயர். அதில்  ஸ்கந்த புராணத்தில் ஒரு சம்பவம் பற்றி வருகிறது.    கலக மூட்டும் நாரதரிடம் சிவனும் பார்வதியும் கூட மாட்டிக்  கொள்வது பற்றிய  கதை.   அமைதியாக இருந்த சிவன் உமையிடம் நாரதர்

''என்ன நீங்கள் இருவரும் சும்மா இருக்கிறீர்கள். அங்கே வைகுண்டத்தில் நாராயணனும் லக்ஷ்மியும் எவ்வளவு ஆனந்தமாக தாயகட்டம் ஆடுகிறார்கள். நீங்களும் விளையாடலாமே?'' என்று  பற்றவைக்கிறார்.

''ஆஹா, உன்  யோசனை  ரொம்ப  நல்ல யோசனை நாரதா''  என்று சிவன் சிரிக்கிறார். அப்புறம்  சிவனும் உமையும் தாயக் கட்டை ஆடுகிறார்கள். சிவன் தோற்றுவிட பார்வதி பெருமிதம் அடைகிறாள். சிவன் மனம் புண்பட பேசுகிறாள்  என்று  அந்த கதையில் வருகிறது.

''இது புராணத்தில் இருக்கிறதாமே. இங்கே திருவண்ணாமலையில்  தை மாசம் சங்கராந்தி உத்சவம் நடக்குமே . அதுவே உமைக்கும் மஹேஸ்வரனுக்கும் நிகழும் சண்டை சம்பந்தமானது தான்.  நீ இந்த கதை படிச்சிருக்கியா உனக்கு தெரியுமா ? என்று பக்தி  கலந்த குரலில்  பகவான் ரமணர்  என்னை (சூரி நாகம்மாவிடம்)   கேட்டார்.

''ஆமாம் சுவாமி,  சங்கராந்தி அப்பா அம்மா கல்யாண உத்சவம் தான்''   என்றாள்  நாகம்மா.

மகாத்மாக்கள் வாழ்வில் எண்ணற்ற அபூர்வ நிகழ்ச்சிகள் நிறைந்திருக்கும். அவர்கள் முகம் அந்தந்த சந்தர்ப்பத்திற்கேற்ப உணர்ச்சிகளை பிரதிபலிக்கும். பகவானின் முகத்தில் சகல ரசங்களையும் ஒன்று சேர்க்கும் விஞ்ஞான ரஸ உணர்வைப்பற்றி என்ன சொல்வேன்? எப்படி எழுதுவேன்?

அவ்வப்போது புது திருமண தம்பதிகளை ஆசிர்வாதம் பெற அழைத்து வருவார்கள். முகமலர்ச்சியோடு அவர்களை ஆசீர்வதிப்பார். கல்யாண விஷயங்கள் கேட்பார். ஆனந்த மய குழந்தை சிரிப்பு முகத்தில் மலரும். நாம் குழந்தைகள் விளையாடும் பொம்மை கல்யாணம் பார்த்தால் சிரிப்போம் அந்தமாதிரி ஒரு சிரிப்பு ஞாபகத்துக்கு வரும்.

சமீபத்தில் ப்ரபாவதிக்கு கல்யாணம் ஆச்சு. ஒரு வருஷத்துக்கு முந்தி. அதுக்கு முன்னால் ரெண்டு வருஷம் இங்கே தான் இருந்தாள் .மஹாராஷ்ட்ரா தேசம். அடக்க ஒடுக்கமான அழகான பெண். மீராபாய் மாதிரி ஆக வேண்டும் என்று சொல்வாள். கல்யாணம் எல்லாம் கிடையாது.  நான் காவி உடை தரிப்பேன்'' என்று பகவானிடம் சொன்னவள்.   பார்வதி  ஒரு  துடுக்கு பெண். கல்யாணம் ஆகி கணவன் மனைவி உறவினரோடு, பிரசாதம் எடுத்துக்  கொண்டு பகவானை பார்க்க  ரமணாஸ்ரமம்  வந்தார்கள். ரெண்டு மூன்று நாள் ஆஸ்ரமத்தில் தங்கி அடுத்த நாள் காலை எட்டுமணி இருக்கும். கணவனோடு பகவானை அணுகி ஆசிர்வாதம் பெற வந்தாள் . எதிரே போட்டிருந்த ஓலைத் தட்டி வழியே சூரியன் ஒளி உள்ளே விழுந்தது. வழக்கமாக பகவான் உட்காரும் சோபாவில் சில அணில்கள் ஏறி இறங்கி குதித்து விளையாடின. ஆசிரமத்தில் அதிகம் பேர் இல்லை. அங்கும் இங்குமாக மயில்கள் உலாவிக்கொண்டிருந்தன.

 மாப்பிள்ளை பையன்,  பய பக்தியோடு பகவானை வணங்கினான். சற்று தள்ளி வாயில் அருகே நின்றான். ஆஸ்ரமத்தில் செல்லப்  பெண்ணான பிரபா வெட்கத்தோடு, தலை குனிந்தவாறு, நாணத்தோடும் பக்தியோடும் பகவான் முன்னே அவர் அனுமதி பெற்று செல்ல தயாராக நின்றாள். சகுந்தலா துஷ்யந்தனிடம் செல்ல கண்வரிடம் அனுமதி ஆசி பெறுவதை ஞாபகப்படுத்தியது . பகவான் அவளை நோக்கி தலை ஆட்டினார். அனுமதி கொடுத்துவிட்டார்.  அவள் மீண்டும் நமஸ்கரித்தாள். வாசலைக் கூட தாண்டவில்லை.

''இப்போ  தான் நேத்திக்கு நடந்த மாதிரி இருக்கு. சுந்தரேச அய்யர் கிட்ட இருந்து க்ரிஷ்ணாவதாரம் அத்தியாயத்தை பாகவதத்திலிருந்து   ப்ரபா   காப்பி பண்ணிண்டு வந்தா. அடுத்த தடவை வரும்போது கையில் குழந்தையோடு வருவா '' என்றார் பகவான்.

பிரபா போகுமுன் அந்த கூடத்தை ப்ரதக்ஷிணம் செய்தாள். கணீரென்று குயில் போல் பாடினாள் .
''முகுந்த மாலை பாடுகிறாளே கேட்டீர்களா ?'' என்று என பகவான் அருகில் இருந்தவர்களை நோக்கி  கேட்டார்.
பிறகு பிரபா தம்பதிக்கு  முக மலர்ச்சியோடு விடை கொடுத்தார் பகவான் ரமணர். அவள் திரும்பிப்
போகவே மனசில்லாமல்   மீண்டும் மீண்டும் பகவானை வணங்கினாள். சென்றாள் . என் கண்கள் பனித்தன. ஆஸ்ரமம் வாசல் வரை சென்று அவளை வழிஅனுப்பினேன்.

நண்பர்களே,  மேலே சூரி நாகம்மா சொன்ன விஷயத்தை படித்தீர்கள்.  சூரி நாகம்மா சிறந்த எழுத்தாளராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மனதில் பட்டதை, கண் பார்த்ததை, அப்படியே எழுத்தில் வடிக்க முடிந்தால் அதுவே காவியம்...இல்லையா???  நான்  அப்படித்தான் சொல்ல எழுத முயற்சிப்பவன்.  என் எழுத்து பிடித்திருந்தால்  அது ஸ்ரீ கிருஷ்ணனின்  அனுக்ரஹம் என்று தான் சொல்வேன். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...