Thursday, May 5, 2022

bajagovindam

 



ஆதி சங்கரர் -  நங்கநல்லூர்  J K  SIVAN
பஜகோவிந்தம்

''கும்பிடு,  கூப்பிடு  கோவிந்தனை''  .-3


6.  यावत्-पवनो निवसति देहे तावत्-पृच्छति कुशलं गेहे |
गतवति वायौ देहापाये  भार्या बिभ्यति तस्मिन् काये ‖ 6 ‖

yāvat-pavano nivasati dehe tāvat-pṛcchati kuśalaṃ gehe |
gatavati vāyau dehāpāye bhāryā bibhyati tasmin kāye ‖ 6 ‖

6. யாவத் -பவனோ நிவஸதி  தேஹே  த்வத்ப்ருச்சதி குசலம் கேஹே 
கதவதி வாயவ் தேஹாபாயே பார்யா பீப்யதி தஸ்மிந் காயே .

எல்லாருமே  நடிகர் திலகங்கள்  தான்.  வாழ்க்கை தான் பெரிய  முடிவில்லாத  நாடக மேடை.  எவ்வளவோ ஆசை ஆசையாக  ''உங்களுக்கு பிடிக்குமே  இந்தாருங்கள் மசாலா தோசை... என்று வாயில் ஊட்டி விட்டவள் கமலா, ஆசை மனைவி, இதோ அவனைக்கண்டு ஓடுகிறாள்.  ''ஐயோ வேண்டாம் நான் பார்க்க வில்லை, பயமா இருக்கு. அந்த முகத்தை என்கிட்டே காட்டாதீர்கள்'' என்று பயந்து ஓடுகிறாள்.. அவன் தான் இறந்து பல மணி நேரங்கள் ஆகிவிட்டதே. இனி சுற்றம் உறவு பந்து என்று எவனும் அண்ட மாட்டான்.  அவனைப் பற்றிய  பேச்சு நின்று விடும்.  இது தான் ப்ராணன்  இருக்கும் வரை நமக்குள்ள மதிப்பு. உயிரோடு இருந்தாலும் பணம் இல்லாவிட்டால் பிணம் தான்..


7. बालस्तावत्क्रीडासक्तः तरुणस्तावत्तरुणीसक्तः ।
वृद्धस्तावच्चिन्तासक्तः परमे ब्रह्मणि कोऽपि न सक्तः ॥ ७॥

Bālastāvatkrīḍāsaktaḥ truṇastāvattaruṇīsaktaḥ.
Vr̥d’dhastāvaccintāsaktaḥ paramē brahmaṇi kō̕pi na saktaḥ

7. பாலஸ்தாவத் க்ரீடா சக்தா தருணஸ்தாவத் தருணீ சக்தா
வ்ருத்தாஸ்தாவத் சிந்தாசக்தாபரமே ப்ரஹ்மணி கோபி ந சக்தா

'' ஹே மானுடா, இப்போது  எண்பது  எண்பத்தைந்து என்று திண்ணையிலே  உட்கார்ந்திருக்கிறாயே, கொஞ்சம் உன் வாழ்க்கையை திரும்பிப்பார். யாருமே சொல்லவேண்டாம். நன்றாக உனக்கே புரியும்.  நீ  மட்டும் இல்லை. எல்லோருமே..  ஒவ்வொருவரும் வாழும்போது எத்தனை வேஷம் போடுகிறோம் . முதலில் பாலகன். அப்போது மனம் பூரா விளையாட்டில் சென்று விட்டது. வளர்ந்தோம். பெண்கள் நாட்டம் மனதை வாட்டியது. கல்யாணம் பண்ணி  வைத்தார்கள். வைத்தியம் பைத்தியத்தை தீர்க்கவில்லை. வயதாகியது. இப்போது எண்ணம் பூரா வயிற்றுவலி, கண், காது, இதயம், நுரையீரல், முதுகு, கால் முட்டி வலி (இப்போது அநேகருக்கு இது தான் ஸ்மரணை) வியாதி, நிறைய கலர் கலராக சின்னதும் பெரியதுமாக மாத்திரைகள், வித வித சீசாக்கள், ஒரு நாளைக்கு ஒரு தரமாவது சித்ரவதை, அதான், ஊசி. உப்பில்லாத சர்க்கரையில்லாத ஆகாரம் ஒரு சித்ரவதை, தண்டனை. வாசலில் சங்கு ஊதும் நேரம் வரப்போகிறதே. இப்போதாவது கொஞ்சம் அந்த பரப்ரம்மத்தை நினையேன்.  இதுவரை  நீ  கோவிந்தனை நினைக்கவேண்டும் என்று கூட  நினைத்ததில்லையே.  இப்போதாவது  ''கோவிந்தா''  என்று வாய் மணக்க சொல்லேன். பாடேன். கேளேன்.

8.  का ते कान्ता कस्ते पुत्रः संसारोऽयमतीव विचित्रः |
कस्य त्वं वा कुत आयातः तत्वं चिन्तय तदिह भ्रातः ‖ 8 ‖

Kaa the kanthaa kasthe puthra, Samsoroya matheeva vichitra,
Kasya twam ka kutha aayatha, Sthathwam chinthya yadhidham braatha.  


8. காதே காந்தா கஸ்தே புத்ரா சம்சாரோய மதீவ விசித்ர
கஸ்ய தவம் கா குத ஆயாதா தத்வம் சிந்தய ததிஹ ப்ராத

''ஹே மனசே, கொஞ்சம் யோசிக்கிறாயா? உன் மனைவி யார்? உன்னைக் காட்டிலும் உன் மணி பரிசின் மேல் காதல் கொண்டு இருந்தாளே  கமலா, அவளா? பிள்ளை குட்டி யார்? நீ வளர்த்து படிக்க வைத்து, அவன் வெளியூர் சென்று ஒரு பெண்ணை மணந்து கொண்டு அங்கேயே சாஸ்வதம் என நினைத்து தங்கி, உன்னை ஒரு ''இல்லத்தில்'' சேர்த்தானே அவனா? இந்த வாழ்க்கையின் வினோதத்தை என்னவென்று விவரிப்பது? புதிரான வாழ்க்கையை  நீ ஒரு  புதிய கோணத்தில்  புதிதாகப் பார். நீ யார்? எங்கிருந்து வந்தாய்? எங்கே போகிறாய்? இதைத் தான் ஆத்ம சிந்தனை என்பார்கள். யோசி. ஒரே ஒரு  விடை தான் உள்ளது. அது தானாகவே கிடைக்கும். எல்லாம் அவன் செயல். ஆட்டுவிக்கிறான், ஆடுகிறேன். ஹே ,கோவிந்தா நீயே கதி. வழி காட்டு வைகுந்தா! மனமுருகி வேண்டினால்  கட்டாயம் மனம் நிம்மதி பெற வைப்பான். அது தான் அவன் வேலையே.

9. सत्सङ्गत्वे निस्सङ्गत्वं  निस्सङ्गत्वे निर्मोहत्वम् ।
निर्मोहत्वे निश्चलतत्त्वं निश्चलतत्त्वे जीवन्मुक्तिः ॥ ९॥

Satsangathwe nissangathwam, Nissangathwe nirmohathwam, 
Nirmohathwe nischala thatwam, Nischala tathwe jeevan mukthi. 

9.  சத் சங்கத்வே நிச் சங்கத்வம் நிச் சங்கத்வே நிர் மோஹத்வம்
நிர்மோஹத்வே நிச்சல தத்வம் நிச் சலதத்வே ஜீவன் முக்தி :  

ஆங்கிலத்தில் ஒரு பொன் மொழி உண்டு. ''உன் நண்பன் யாரென்று காட்டு, நீ எப்படிப்பட்டவன் என்று நான் புட்டு புட்டு வைக்கிறேன்'' என்று. நல்லவர்களோடு பழகி சேர்ந்து நல்ல பழக்கங்கள் வந்து  விட்டால் தானாகவே கெட்ட பழக்கங்கள்,  கெட்ட சகவாசம்,  எல்லாம் மறைந்து விடும். காட்டில் ஆட்டுக்  கூட்டத்தில் வளர்ந்த சிங்கக் குட்டி ''மே மே'' என்று கத்தி புல் தின்றது. பிறகு மற்றொரு சிங்கம் அதை பார்த்து அதன் பூர்வோத்தரம் புரிந்தபோது, தெரிந்தபோது,  ஆடாக இதுவரை இருந்த சிங்கம் கர்ஜித்தது. இதை எதற்காகச்  சொல்கிறோம்? சகவாச தோஷம்  என்றால் என்ன என்று புரிய. ஆகவே தீய எண்ணங்கள், பழக்கங்கள் இதுவரை தனது சகவாசத்தால் இருந்த ஒருவன் அது நீங்கும் பட்சத்தில், நாட்டம் எதன் மேல் செல்லும் ? மண், பெண், பொன் மீதா? இல்லையே. கண் மீது, அதான், கண்ணன் மீது. பிறகு என்ன? கோவிந்தா உன் திவ்ய நாமத்தில், ஸ்மரணையில்,  மனம் களித்தால், எனக்கு கிடைப்பது மோக்ஷ சாம்ராஜ்யம் தானே! சத் சங்கத்தால் கிடைக்கும் ஜீவன் முக்தியை பற்றி சங்கரர் எவ்வளவு அழகாக படிப்படியாக எடுத்துரைக்கிறார்.

10. वयसिगते कः कामविकारः शुष्के नीरे कः कासारः ।
क्षीणेवित्ते कः परिवारः ज्ञाते तत्त्वे कः संसारः ॥ १०॥

வயசி கதே க: காம விகாரா: ஷுஷ்கே நிரே க: காசாரா :
நாஸ்தே த்ரவ்யே க: பரிவாரோ: ஞானே தத்வே க: சம்சார:

Vayasi gathe ka kama vikara, Shushke neere ka kaasaara,
Nashte dravye ka parivaara, Gnathe tathwe ka samasaara. (Bhaja Govindam…)

''ஹே மானுடா, உன் வயதென்ன? கவனித்தாயா காலம் ஓடிவிட்டதை?  தலை நரைத்து விட்டது, 
ஆழமான வளைந்த கோடுகள் கன்னத்தில் நெற்றியில் முகத்தில் எப்படி இந்த சுருக்கங்கள் வந்தது? இனி யாரேனும், உன்னையும் சேர்த்து தான் சொல்கிறேன், அழகன் என்று நினைப்பார்களோ?  இனி காமமோ மோகமோ கொண்டு எவரேனும் உன் அருகில் நெருங்குவரா? யார் சீண்டுவார் உன்னை? இந்த நிலையில் உனக்கு எதற்கடா ஆசையும், நேசமும்  காமமும், மோகமும்?  அதோ பார்,  அந்த நீர் நிலையை. பேருக்கு மட்டும் தான் அது நீர் நிலை. உன்னைப்போல் தான் அதுவும். அதில் ஒரு  காலத்தில் நிறைந்து இருந்த நீர் எல்லாம் இப்போது எங்கே?  காணோமே? வரண்டிருக்கும் அதை எந்த பறவை, தாவரம் ஜீவராசி அண்டும்?    கையில் இருப்பு கரைந்து விட்டதே. எல்லா ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்களும் மருந்து கடைகளும்  நீ பாடு பட்டு சேர்த்து வைத்து, உன்னிடம்  இருந்த ஆஸ்தி பாஸ்தியை பங்கு போட்டுக் கொண்டார்களே, உன்னை சுற்றி இருந்த பரிவாரங்கள், அதான், உன் உறவுகள் எங்கே அட்ரஸ் ? இதெல்லாம் எதற்கு ஞாபகமூட்டினேன் தெரியுமா?. ஞானம் வந்துவிட்டால், உண்மை புரிந்துவிட்டால், எது சாஸ்வதம் என்று அறிந்து விட்டால், இப்போதே எந்த ஆபத்தும் வரும் முன்னரே, உனது சம்சார பந்தங்கள், கவலைகள், பயங்கள், எதிர்பார்ப்புகள் எல்லாமே மேலே சொன்னவைகளை போல  தானாகவே விலகிவிடும். இதற்கு மந்திரக்கோல் எது தெரியுமா?, அந்த மூங்கில் கோல், புல்லாங்குழல் வெண்ணை திருடன் உன்னை பார்க்கிறான் பார் எதிரே சுவற்றில்  சிரிக்கிறானே, அவன் தான். ''கோவிந்தா, உன் நாமம் ஒன்றே சர்வ வியாதி நிவாரணி. சர்வ உபத்ரவ நாசினி.''

தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...