Wednesday, May 25, 2022

SUNDARAMURTHY NAYANAR



 #தம்பிரான்_தோழர் -  நங்கநல்லூர்  J K  SIVAN

 சுந்தரமூர்த்தி நாயனார்.

''இரு கைலாச வாசிகள்''

ஒருவர்  கைலாச பதவி அடைந்தார், வைகுண்ட பிராப்தி கிடைத்தது  என்று சொல்கிறோமே  அதெல்லாம் அந்த 
மனிதர்கள் பூலோகத்தில் உடலை நீத்து, உயிர் பிரிந்த பிறகு தான்.   மொத்தமாக  சிலர்  படகிலோ, விமானத்தி
லோ,  வெள்ளத்திலோ,  ரயிலிலோ  விபத்தில் மரண
மடைந்தால்  நாம் அப்போது சொல்வது அவர்கள்   ''கூண்டோடு கைலாசம்'' சென்றார்கள் என்று. 

உயிரோடு ஒருவர்  கைலாசம் செல்வது ஆச்சர்யமானது. அதுவும் நண்பரோடு சேர்ந்து ஏதோ பீச்சுக்கு போவது போல் கைலாசத்துக்கு போவது என்பது உலகிலேயே தமிழில்  சைவ புராணங்களில் தான் காண்கிறோம்.   ஆம்.  சுந்தரமூர்த்தி நாயனார்,  அவிநாசியில்   அவிநாசி
லிங்கத்தின்  உதவி கேட்டு  முதலை வாயில் இருந்து ஒரு பிள்ளையை மீட்டு அவன் குடும்பத்தில் சந்தோஷத்தை  அளித்துவிட்டு  நன்றியோடு  அவிநாசிலிங்கத்தின் மேல் பதிகம் பாடிவிட்டு  அவனைப் பிரிய மனமில்லாமல்  அந்த க்ஷேத்ரத்திலிருந்து  விடைபெறுகிறார். 

சுந்தரின் நண்பர், இன்னொரு சிவ பக்தரான , சேரமான் பெருமாள் நாயனார்    ' எங்கே  சுந்தரர் சென்று வெகு நாட் களாகி விட்டதே  என்று  ஆர்வத்தோடு  ஆள் மேல் ஆள்  விட்டு  சுந்தரரை   அழைத்துக் கொண்டே இருந்தார்.  சுந்தரர் அதனால்  நேராக  கொடுங்களூர் சென்றார்.  சேரமானுக்கு   சுந்தரர் வந்ததில்  பரம சந்தோஷம். அதோடு  விஷயங்கள் கேள்விப்பட்டதில்  அதி  ஆச்சர்யம்.

'' எப்படி சுந்தரர் சொல்வதையெல்லாம்  சர்வேஸ்வரன்  சிவபெருமான்  கேட்கிறான்?.  இறந்து போன  ஒரு  பையனை   முதலையின் வயிற்றிலிருந்து  சுந்தரர்  சிவன் மேல் ஒரு பதிகம் பாடி  மீட்டாராமே. இது எப்படி சாத்தியம்? ஆச்சர்யமாக அல்லவோ இருக்கிறது? சுந்தரர்  என் நண்பர் என்பதில் நான் பெருமிதம் அடைகிறேன்'' என்கிறார்  சேரமான் .

அவிநாசியிலிருந்து  புறப்பட்ட அந்த அதிசயச் செய்தி அகில உலகமும்  பரவி விட்டதே. சுந்தரர் மீது உண்டான நட்பு இன்னும் அதிகமாகி சேரமானை  அவரோடு இணைத்தது. ஈருடல் ஓர் உயிர் சிவபக்தர்கள் ஆகிவிட்டனர் இருவரும்.

 சுந்தரர் சில காலம்  சேரமானோடு கொடுங்களூரில்  தங்கினார்.   சேரமான் அரண்மனை இருந்த  இடத்திலிருந்து  ரெண்டு மூணு கி.மீ தூரத்தில்  திருவஞ்சிக்குளம் எனும்  அமைதியான மலையாள ஊரில் ஒரு  அழகிய  மஹாதேவன் ஆலயம். அங்கே  சுந்தரர் வழக்கமாக சென்று தரிசனம் செய்வது வழக்கம்.

என்றும் போல்  அன்றும் ஒருநாள் திருவஞ்சிக்குள   ஆலயத்தில் மகா தேவனை தரிசித்தார். மனம் கட்டவிழ்ந்து  பாடியது.  ஏனோ அன்று  மனம் ரொம்ப  இறுகியது போல் உணர்ந்தார்.  உடல் ஏன் பாரமாகி விட்டது?    இறைவன் மீதுள்ள அன்பும்  பாசமும்  நெகிழ்ச்சி தந்தது. அவருக்கு சிவனோடு இணைய வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி யது.  ஆலயத்தில் அன்பு  மேலீட்டால்  தரையில் புரண்டார்.  ஆனந்தக்  கண்ணீர்  வடித்தார். இறைவனை விட்டு வெளிவர மனமே இல்லை. நேரம் ஓடியது.  உடல் சிலிர்த்தது. மயிர்க்கூச்செரிந்தது. தன்னை மறந்த நிலையில்  மயங்கினார்.  எவ்வளவு நேரம் சிலையாக அமர்ந் தாரோ.   நினைவு திரும்பியது.  உலகம் தெரிந்தது.    மனம் வெடித்து வார்த்தைகள் சிதறியது.  

''போதும் போதும் பரமசிவா இந்த பூலோக வாழ்க்கை எனக்கு.   ரொம்பவே  அதிகம் இது.   பதினெட்டு வருஷங்கள் இங்கே வாழ்ந்து அலுத்து விட்டேன். மீண்டும் உன்னோடு கைலாசத்தில் இருக்க மனம் வாடுகிறதே. என்று பதிகம் பாடுகிறார். பதினெட்டே வருஷங்கள் வாழ்ந்தாலும் பதினேழு யுகங்களிலும் மறக்கமுடியாத சிவனோடு  இணைந்த ஒரு பக்தரை,  தோழனை பார்க்க முடியாது. 

‘’வெறுத்தேன்மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன்
    விளங்குங்குழைக் காதுடை வேதியனே
இறுத்தாய்இலங் கைக்கிறை யாயவனைத்
    தலைபத்தொடு தோள்பல இற்றுவிழக்
கறுத்தாய்கடல் நஞ்சமு துண்டுகண்டங்
    கடுகப்பிர மன்தலை யைந்திலும்ஒன்
றறுத்தாய்கட லங்கரை மேல்மகோதை
    அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே’’.

 பிடிக்குக்களி றேஒத்தி யால்எம்பிரான்
    பிரமற்கும் பிரான்மற்றை மாற்கும்பிரான்
நொடிக்கும்மள விற்புரம் மூன்றெரியச்
    சிலைதொட்டவ னேஉனை நான்மறவேன்
வடிக்கின்றன போற்சில வன்றிரைகள்
    வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண்
டடிக்குங்கட லங்கரை மேல்மகோதை
    அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே’’.  

  பரமேஸ்வரனுக்கும்  சுந்தரனை அருகில் அழைக்க விருப்பம் தோன்றியது.  

வெள்ளை யானை ஒன்று விண்ணிலிருந்து  சுந்தரரை  ஏற்றிச் செல்ல சேரமான் தேசத்தில்  திருவஞ்சிக்குளம்  வந்தது.  சுந்தரர்  அங்கே  மனத்தாலும் நாவில்  சிவமணம்  ததும்பும்  தேவார  பதிகத்தாலும்  நமசிவாயனொடு   இரண்டறக் கலந்து  லயித்து இருந்த நேரம் அது. தேவர்கள் சகிதம் ஐராவதம் வந்து இறங்கியது. சுந்தரருக்கு தேவ லோகத்திலிருந்து  ராஜமரியாதையோடு  கைலாச வாசத்துக்கு அழைப்பு.  

''சுந்தரா,  என்னிடம் வா'' என்று  சிவபிரானும் செய்தி அனுப்பினார்.  சுந்தரருக்கு  ஆனந்தம்  தாங்கவில்லை.  

''ஆஹா,  என் நண்பன் சேராமானும் என்னோடு வரலாமே'' என்று மனம் விரும்பியது.  இதோ நான் புறப்பட வேண்டும்.  சிவன் காத்திருக்கிறான் எனக்காக. என் நண்பனை எங்கே இப்போது தேடுவது.?   அவன்  அரசன்.  ராஜரீக பொறுப்பில்  கொடுங்களூரில் அல்லவா  இருக்கி றான்.''

''நான் இந்த தேஹத்துடனேயா சிவனை நோக்கி கைலாசம் போகிறேன்?. அல்லவே அல்ல. இது அங்கே வராது.  என்  சூக்ஷ்ம சரீரம் ஆத்மா அல்லவோ அங்கே செல்கிறது?   எங்கிருந்து வந்ததோ அந்த ஐம்பூதங்களை இந்த தேகம் சேரவேண்டாமா?  என்று சுந்தரர்  நினைத்திருப்பாரோ?

சேரமான் விஷயம் கேள்விப் படுகிறான்.

 ''ஆஹா,   என் தோழர் சுந்தரர் என்னை விட்டு  கைலாசம் சென்று விட்டாரா?. என்னை விட்டு தனியே சென்றுவிட்டாரே. இனி எனக்கும் இங்கே வேலை எதுவும் இல்லையே.   எங்கே  என் குதிரை?''

பரிமேல் பறக்கிறார்  சேரமான் பெருமாள் திருவஞ்சிக்குளம் நோக்கி.   சரியான நேரம் சேரன் வந்து சேர்ந்தது.   சேரமான் பெருமாள் வந்து   சேர்வதற்கும்  ஐராவதம் புறப்படுவதும் ஒன்றாக நேர்ந்தது.  சேரமான் தனது குதிரையின் காதில்  ''ஓம் நமசிவாய''  எனும் பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜெபிக்கிறார்.  என்ன ஆச்சர்யம்!  குதிரை விண்ணில் பறந்தது ஐராவதம் அருகில் நெருங்கியது.  சுந்தரர்  நண்பனைப்  பார்க்கிறார்.  ''நினைத்தேன் வந்தாய்,   நண்பா'' .சேரமான்  சுந்தரரை தரிசிக்கிறான். இரு சிறந்த சிவனடியார்களும் கைலாசம் சேர்ந்து போகிறார்கள். ஆம்  இருவருமே  சூக்ஷ்ம சரீரத்தோடு கைலாசம் அடைகிறார்கள்.  
 
கைலாச வாசலில்  சுந்தரர் நுழைகிறார்.  சேரமான் உள்ளே செல்ல இயலவில்லையே.

''மகாதேவா, உன்னை நான் வந்தடைந்தேன். கைலாச  வாசா,   என் ஆருயிர் நண்பன் உன்னை மறவாத நெஞ்சத்தான் சேரமான் வாயிலில் நிற்கிறான். அவனையும் அல்லவா இங்கு அழைத்து அருளவேண்டும்.'' என பாடுகிறார் சுந்தரர்.  

''ஆஹா, சுந்தரா, உன் ஆசை நிறைவேறட்டும்.  நந்திகேஸ்வரா, நீ சென்று சேரமானை எம்மிடம் அழைத்துவா''

''சேரமான் பெருமாள்,   நீ   என் அழைப்பு இல்லாமல் இங்கே  எவ்விதம் வர இயலும்?''  என்கிறார் பரமேஸ்வரன்.

''ஈஸா,  சுந்தரர் செல்வதைக்  கண்டேன். சுந்தரர் இன்றி என்னால்  பூமியில் வாழ முடியாதே  என் செய்வேன்?. அவரை அதனால் தொடர்ந்தேன். சுந்தரரால்  எனக்கு  கைலாசநாதரே, தங்கள் தேவ தர்சனம் கிடைத்ததே சுவாமி.நான் பாக்கியவான்''  என நா தழு தழுக்கிறார் சேரமான்.  

ஒரு  சிறந்த சிவனடியாரை பணிந்து தொழுவதால்  கைலாஸ பதவியும் தேடாமல் கிடைக்கும் என்பது சுந்தரர் சரித்திரம்  விளக்குகிறது அல்லவா?  இனியாவது நாம்  ‘’ஓம் நமசிவாய ‘’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை சிறிதாவது உச்சரிப்போமா?. மனதில் சிவனை நிறுத்திக் கொள்வோமா.? பேரின்பம் பெறுவோமா?  தினமும்  ஒரு முறையாவது ஓம் நமசிவாய என்று சொல்வோமா?

சுந்தரர் எனும்  ஹாலஹால  சுந்தரர் மீண்டும்   கைலாசத்தில் பரமேஸ்வரனுக்கு நந்தவன மலர்மாலை கைங்கர்யம் தொடர்கிறார்.   சிறிது காலத்தில் சங்கிலியும்  பரவையும்  பூலோக வாழ்க்கை முடித்து கைலாசத்தில் உமா தேவிக்கு  உதவியாக பழையபடி பணி புரிகிறார்கள்.  நாமும்    தம்பிரான் தோழர் என்ற  சுந்தரர் சரித்ரத்தை இத்துடன் முடித்தோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...