Saturday, May 7, 2022

life lessons

 மனதில் பதியட்டும்  - 15  -  நங்கநல்லூர்  J  K  SIVAN



அறிவுரை கூறினால்  எல்லோருக்கும்  கோபம் வருகிறது.  சொன்னதையே  திருப்பி திருப்பி சொன்னால் கோபம் வராமல் என்ன செய்யும்?  ஆனால் ஏன் சொன்னதையே திருப்பி சொல்கிறோம் என்றால் அங்கே தான் விஷயம் இருக்கிறது.  யாருமே சொல்வதைக் கேட்பதில்லையே. மனிதர்கள் செய்யும் பல தவறுகளுக்கு ஆசையே அடிப்படை காரணம்.  ஆசையினால் ஒன்றை அடைய  சிலர் தர்ம வழியை விட்டுவிட்டு  அதர்ம, தப்பான,  வழியைக்கடைப்பிடிக்கிறார்கள். எப்படியாவது ஆசையை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற உந்துதல் தான் எல்லா தவறுகளுக்கும்  அம்மா.  ஆசையை விட்டொழிக்க வேண்டும் என்று சொன்னால் கோபம் வராமலா இருக்கும்?


அக்னியில் நெய்யை  ஊற்றி  அணைக்கவா முடியும்?  அது மேலும் கொழுந்து விட்டு எரியாதா?,  அது மாதிரி தான் ஆசை சமாச்சாரமும்.  ஒன்று திருப்தியானால் உடனே இன்னொண்ணு. நம்மை நாமே  உணர்ந்து இதை  நிறுத்திக் கொள்ளும்வரையில் ஆசைகள் வந்து கொண்டே தான் இருக்கும். இதற்கு  ஒரே வழி   ஆசையை பேசாமல்  இறைவன் மேல் வைக்க வேண்டும்.

ஆசைகள் மனிதர்களை பாவச்செயல்களில் ஈடுபட  தூண்டுகிறது.  மனதில் ஆசைகள்  பெருகிக்கொண்டே தான் இருக்கும். குறையாது.  அதன் விளைவு?   இன்பத்தை காட்டிலும், துன்பமே அதிகமாகும். இப்போது புரிகிறதா ஏன்  ஆசையிலிருந்து விடுபடவேண்டும் என்று. 

ஆசைகளை  படலாம்.  தப்பில்லை  ஆனால்  அது  லோக க்ஷேமத்துக்காக   பிறருக்கு  உதவ பலன் தருவதாக  இருக்கவேண்டும். அதனை நிறைவேற்ற முனைப்புடன் செயல் படுவோம்.  இவ்வாறு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, மாயையான ஆசைகள் எல்லாம்  நம்மை 
விட்டு விலகிவிடும். பாவங்களும் குறைந்து, புண்ணியம் கிடைக்கும்

"நியாயம்' என்றால் "முறை' என்று  ஒரு அர்த்தம். எந்தக்  காரியத்தையும்  ஒரு சரியான  முறையுடன் க்ரமமாக செய்ய வேண்டும். முறை  தவறினால்  அது தான் அக்ரமம். அப்படி செய்வதால் துன்பம் தான் உண்டாகும். ஒரே செயல் ஒருவருக்கு நியாயமாகவும், மற்றொருவருக்கு அநியாயமாகவும் தோன்றும். ஆனால், அந்த மாதிரி சமயங்களில்  சுயநல மில்லாமல்   எல்லோருக்கும் பொதுவான நியாயத்தைப் பின்பற்றுவது சந்தோஷம் தரும். 

நம்மால் பல பக்தர்கள்  குரங்கைப் போல  என்று சொன்னால்  கோபம் வேண்டாம்.  என்ன சொல்லவருகிறேன்  என்றால்   அவர்கள்  பகவானை  கெட்டியாக   இறுக்கிப்  பிடித்துக்  கொள்பவர்கள்.  அது தான் "குரங்குப்பிடி'.   கிருஷ்ணனே  போடா என்று உதறித் தள்ளினாலும்  விடாமல்  அவனைக் கவ்விப் பிடித்துக் கொள்கிற பக்தர்கள். திருவாசகத்தில் மாணிக்கவாசகர் "சிக்கெனப் பிடித்தேன்' என்று  இதைத்தானே சொல்கிறார். 

அஹிம்சை  என்கிறோமே  அது  உடலால் பிறருக்கு கஷ்டம் தருவது மட்டுமில்லை.  மனதால், பேச்சால், பார்வையால்  கூட   எந்த  காரணம் கொண்டும் இன்னொருவருக்கு   துன்பம் விளைவித்தாலும் அது ஹிம்சை தான்.   நமக்கு யாரவது கஷ்டம், துன்பம் விளைவித்தாலும்  திருப்பி அவருக்கு கஷ்டம்  துன்பம் தராமல் அவரிடமும் அன்பு காட்டும்போது அது தான் அஹிம்சை. 

மனதை அடக்குவதற்கு ரெண்டு வழி.  ஒன்று  வெளிப்படையாய் செய்வது. அதற்கு பெயர்  பஹிரங்கம்.  அடுத்தது  உள்ளூர செய்வது.   அது  அந்தரங்கம். தானதர்மங்கள் செய்வது, பூஜிப்பது, யாகம் நடத்துவது போன்ற செயல்கள் பகிரங்கமாக  எல்லோருக்கும்  தெரியும்படியாக செய்வது.  தனக்குள் தானே  செய்வது  அந்தரங்க  சாதனம். தியானம்  ஜபம் செய்வது.  தியானம்  செய்ய  து ஐந்து குணங்கள்  உதவுகிறது.  அஹிம்ஸை ,
 சத்யம், தூய்மை, புலனடக்கம், திருடாமை ஆகியவை, இந்த ஐந்து நற்குணங்களால் மனதை அடக்கினால் தியானம் சுலபமாக  கைகூடும்.

அஹிம்சை என்றாள்   எல்லாவுயிர்களையும் அன்போடு  பாவிப்பது.  மனம் வாக்கு காயம் என்று சொல்கிறோமே,  எண்ணம், சொல், செயல் இம்மூன்றாலும் உண்மைவழியில் நடப்பது  தான் சத்யம். தூய்மை என்றால் உள்ளே  பரிசுத்தமாகிட்ட இருப்பது. அகத்தூய்மை, புறத்தூய்மை  ரெண்டும் சேர்த்து தான்.  புலனடக்கம் என்பது  நம்மை அடக்கி ஆளும் ஐம்புலன்களை  கட்டுப்பாட்டில் வைப்பதாகும்.   கண், காது, வாய், உடம்பு, போன்றவற்றை   ஒழுக்க  நெறியில் இயக்குவது. ஹஸ்தேயம்  என்கிறோமே  அது தான்  திருடாமை.  மற்றவர்  பொருள் மீது ஆசை  வைக்காமல் இருப்பது. 
ஸார் ,  இந்த குணங்கள் எல்லாம்  நம் ஒவ்வொருவருக்கும் ரொம்ப  அவசியம் ஸார் . 
 இச்சாதனைகளைச் செய்வதற்காக தான் பகவான் நமக்கு உடல் எனும்  சரீரம்  கொடுத்திருக்கிறார். 
மேலே சொன்ன ஐந்து  ஒழுக்கத்தை தான்  ''சாமான்ய தர்மங்கள்'  என்று ஸாஸ்த்ரங்கள்  சொல்கிறது. இப்போது சாமான்ய தர்மம் புரிகிறதா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...