Saturday, July 10, 2021

SRIMAN NARAYANEEYAM

 ஸ்ரீமந்  நாராயணீயம் -  நங்கநல்லூர்  J  K  SIVAN

22வது தசகம்.


''நாராயணா என்னா  நாவென்ன நாவே.''


நன்றாக  வேதம் பயின்ற அமைதியான  நற்குணங்கள் கொண்ட ஒரு பிராமணன் பெயர்  அஜாமிளன்.  வழக்கம்போல் காட்டிற்கு சென்று பழங்கள், காய்கறிகள்,  தர்ப்பைப்புல் சேகரிக்கப் போனவன், திரும்பி  வரும் வழியில் துரதிர்ஷ்ட வசமாகவோ, விதி வசமாகவோ  ஒரு பரத்தையின்  நட்புக்கு பாத்திரமாகிறான்.  அவளை மணந்து கொள்கிறான்,  அவளோடு  சேர்ந்தபின் மொத்தமாக  மாறி விட்டான்.  தீயோர் நட்பு அவ்வளவு சக்தி வாய்ந்தது.

 வேதங்கள் நேமம் நியமம் நித்ய கர்மாநுஷ்டானம்  எல்லாம் மறந்து, துறந்து,   தீய வழிகள் அவனை எளிதில் அடைகிறது.அவன் இப்போது  திருடன், பொய்  சொல்பவன், சூதாடுபவன், இன்னும் என்னென்னவோ.    அவனுக்கு அவள் மூலம்  பத்து பிள்ளைகள்  மகன்களாக பிறக்கிறார்கள்.  எல்லோரும்  பிரயோஜனம் இல்லாத பிறவிகள்.   கடைசி பையனுக்கு அவனது நல்லகாலம், நாராயணன்   என்று பெயர் சூட்டுகிறான்.. அவன் மீது அளவு கடந்த பாசம். செல்லமகன். 

அஜாமிளன் இப்போது 88 வயது கிழவன். எதற்கெடுத்தாலும் அவன் நாராயணனை அழைத்து தனக்கு தேவையானவைகளை அடைகிறவன்.   அவன் பாபங்கள் பலனாக  மரணம் அவனை நெருங்கியது.  பயங்கர உருவத்தோடு எமதூதர்கள் அவன் முன்னே நின்றார்கள்.   அஜாமிளன் அவர்களைக் கண்டு  பயந்து ஆபத்துக்கு உதவ  மகனை அழைத்தான்  ''நாராயணா  நாராயணா'.  ' தெரிந்தோ தெரியாமலோ அஜாமிளன் பரமாத்மா நாராயணன் பெயரை சொன்னதால் வைகுண்டத்திலிருந்து விஷ்ணு தூதர்கள் வந்து விட்டார்கள். யமதூதர்கள்  அஜாமிளன் உயிரைப்  பற்றுகையில் விஷ்ணு தூதர்கள் அதை அவர்களிடமிருந்து பிடுங்க, கோபமுற்ற  எமதூதர்கள் 

''இவன்  மஹா பாவி, செய்யாத  பாபச்செயலே  கிடையாது. எமதர்மராஜா இவனை இழுத்து வர சொல்லி நாங்கள் வந்தோம். நீங்கள் எதற்கு  குறுக்கிட்டு  இவன் உயிரை நாங்கள் பறிக்காம  தடுக்கிறீர்கள். அவனைக்  காப்பாற்றுகிறீர்கள்?''

''எமதூதர்களே,  மனப்பூர்வமாக எவன்  நாராயணா என்று  பரந்தாமன் பெயரைச் சொல்கிறா னோ அவனை காப்பாற்றுவது எங்கள் கடமை. நாராயணன் பக்தனுக்கு கெடுதல் செய்தால்  எம தர்மராஜனையே கூட நாங்கள் எதிர்த்து  தண்டனை விதிப்போம்.''

''விஷ்ணு தூதர்களே ,  நீங்கள் இந்த அஜாமிளனை  சரியாக புரிந்துகொள்ளவில்லை.  விஷயம் தெரியாமல் குறுக்கிடுகிறீர்கள். இவன்  செய்த பாபங்கள் லிஸ்ட் தரட்டுமா'' இவன் அதற்காக வெல்லாம் வருந்தவே இல்லை.  அதிக பக்ஷ தண்டனை இவனுக்கு தர  அழைத்துப் போகிறோம் ''

''எமதூதர்களே , நாங்கள் சொல்வதையும் கேளுங்கள்.   நீங்கள் சொல்வதெல்லாம் சரியாகவே இருந்து விட்டு போகட்டும்.    இவன் இந்த ஜென்மத்தில் மட்டும் அல்ல, இதற்கு முன் எடுத்த பல  லக்ஷம்  பிறவிகளிலும் செய்த சகல பாபங்களும்  இவன் விடாமல் ''நாராயணா   நாராயணா, என்று முழு மனதாக  எங்கள் பிரபுவை  நினைத்து அழைத்ததால்  அந்த பாபங்கள்  முற்றிலும்  பைசல் ஆகி   தீர்ந்து விட்டன.  இப்போது இவனுக்கு மரணம் கிடையாது.  இனி  இவன்  வைகுண்ட வாசி. நீங்கள் உங்கள் வழியைப் பார்த்துக்கொண்டு போகலாம்.''  என்றனர்  விஷ்ணு தூதர்கள்.

அஜாமிளன் உண்மையில்  பரமாத்மா நாராயணனை நினைக்கவில்லை, தனது ஆசைமகனை விட்டுப் போகிறோமே  அவனைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் ''நாராயணா''  என்று பல முறை  ஏக்கத்தோடு   மனமுவந்து கூப்பிட்டான்.  எண்ணம் எப்படி இருந்தாலும் செயல்  தேவையான  பலனைத் தந்து விட்டது. 

நமது  குடும்பங்களில்   குழந்தைகளுக்கு  கடவுள்களின் பெயரை வைக்கும் பழக்கம் தொன்று தொட்ட  காலமாக இருந்து வருகிறது.   அவர்களை அழைப்பதன் மூலம்  இறைவனை, இறைவி நாமத்தை பல முறை சொல்கிறோமே அதன் புண்யம் வீண் போகாதே.  இப்போது  வைக்கும்   குழந்தைகளின் பெயர்கள் கடவுள்  சம்பந்தமே இல்லாமல் போய் விட்டது வருந்த வேண்டிய விஷயம்.

எமதர்மனிடம் சென்று முறையிட்ட எமதூதர்களிடம்  எமதர்மன்  இதைத்  தான் சொல்கிறான்.  

''ஆம்  எனக்கும் தெரியும்.  எவன் ஒருவன்  என்ன தான் தவறுகள் இழைத்திருந்தாலும்  கடைசி நேரத்தில்  நாராயணன்  பெயரை, சிவன் பெயரை கடைசி நேரத்திலாவது   ஒருமுறையாவது சொல்கிறானோ அது பாராயணத்துக்கு சமம். அவன் செய்த பாபங்கள் அவனை விட்டு விலகிவிடுகிறது.  அஜாமிளன் நம்மிடம் வரவேண்டியவன் கடைசி நேரத்தில் வைகுண்ட வாசியாகி விட்டான் என்றான்.  

வியாதியஸ்தன் ஒருவன் இது தனக்கு என்ன விளைவைத்தரும் என்று கூட தெரியாமல் ஒரு  சக்தி வாய்ந்த மாத்திரையையோ, மருந்தையோ விழுங்குகிறான். அவனையறிமால் அவன் செய்த இந்த காரியம்  அவன் வியாதியை நீக்கி அவன் உயிர் தப்புகிறான்.  இது நாம் கண்கூடாக பார்க்கிறோமே.  தெரிந்தோ தெரியாமலோ பகவன் நாமாவை சொல்கிறனுக்கு அவ்வளவு புண்யம் கிடைக்கிறது.  

வியாதியஸ்தர்கள்  படுக்கைக்கு அருகே  விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வதன் அர்த்தம் இது தான். அவர்கள் காதாலாவது விஷ்ணுவின் நாமத்தை  . பருகட்டும் , பலன் பெறட்டும் என்பதற்காக.


அஜாமிளன் கதையில் என்ன திருப்பம் என்றால் அவன் உயிரைப் பறிக்க வந்த எமதூதர்க ளிடமிருந்து அவன் உயிரை விஷ்ணு தூதர்கள் காப்பாற்றியதில் அவன் பிழைத்து விட்டான்.  எமதூதர்களும் விஷ்ணு தூதர்களும் பேசியது அவனுக்குள்ளே ஒரு பெரிய மாற்றத்தை விளைவித்தது. அவன்  உண்மையாகவே நாராயணன்  நாமத்தை சொல்வதால் கிடைக்கும் பலனை உணர்ந்துவிட்டான்.  சிறந்த  விஷ்ணு பக்தன் ஆகிவிட்டான்.  மீண்டும் அவன்  மரணமடையும் தருணத்தில் விஷ்ணு தூதர்கள் வருகிறார்கள் . ஏற்கனவே பார்த்த முகம் தானே . அவர்களை பக்தியோடு வணங்கி வரவேற்கிறான்..

அவனை  அவன் பக்திக்கு  பலனாக விஷ்ணு லோகம் தங்கவிமானத்தில் அழைத்துச் செல்கிறார்கள்..


ஸ்ரீமத் பாகவத புராணத்தில்   6 வது காண்டத்தில் அஜாமிளோபாக்யானம் வருகிறது. 
நாம் வழக்கமாக  படித்து வரும்  ஸ்ரீமன்   நாராயணீயத்திலும் 22வது தசகமாக  அஜாமிளோ  பாக்யானம் வருகிறது.

இதை ஞாபகம் வைத்துக்  கொண்டு  அவன் செய்த  உதவியை மனதில் கொண்டு குருவாயூரில்  மேல்பத்தூர் நாராயண நம்பூதிரி குருவாயூரப்பன் எதிரே அமர்ந்து கொண்டு   அவனுக்கே   அஜாமிளன் கதையை ஞாபகப்  படுத்துவதை  அடுத்த பதிவில் பார்ப்போம்.

தொடரும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...