Friday, July 9, 2021

pesum deivam

 பேசும் தெய்வம்   -   நங்கநல்லூர்  J K  SIVAN  --



52 . திரிஸ்ஸுர் யாத்திரை.


காந்திஜி  மஹா பெரியவா இருவரின் நெல்லிச்சேரி சந்திப்பு  அரசியலுக்கு  அப்பாற்பட்டது  காந்திஜி   மஹா பெரியவா நேர்காணலில் மூன்றாம் நபர் இல்லை.  குறுக்கே வந்து போய்க்  கொண்டிருந்த மடத்து தொண்டர்களைத் தவிர  வேறு யார் குறுக்கீடும் இல்லை. ஒரு மணி நேரத்துக்கு மேல் இருவரும் சம்பாஷித்தார்கள்.  என்ன பேசினார்கள் இருவரும்  என்பது  இன்றுவரை  வெளிவராத ஒரு ரஹஸ்யம்.

இது பற்றி  ஸ்டேஸ்மன்  பத்திரிகையில்  ப்ரொபசர் ஸ்வாமிநாதன் என்பவர் பல வருஷங்கள் கழித்து  ஒரு  செய்தி வெளியிட்டார்.  நாம் அதற்குள் செல்ல வேண்டிய அவசியமில்லை.

1927ம்  வருஷத்திய  சாதுர் மாஸ்ய  விரதம்  பாலக்காடு  கஞ்சிகோடில்  முடிந்த பின்னர்  மஹா பெரியவா 1928 ம் வருஷம் பெப்ரவரி 2ம் தேதி  குருவாயூர் சென்றார்.   மஹா பெரியவா வருகையை ஒட்டி  கிருஷ்ணனுக்கு  அற்புதமான அலங்காரங்கள் செய்து இருந்தார்கள்.  இதனால் மஹா பெரியவாளோடு அங்கே  தரிசனம் செய்த பக்தர்களுக்கும் ஒரு பெரும் பாக்யம் கிடைத்தது அல்லவா.  பெரியவா வருகையின் போது   குருவாயூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  கோயிலில் கிருஷ்ணன்  ஆச்சார்யர் இருவர் தரிசனத்தையும்  பெற்று  மகிழ்ந்தனர்.
மஹா பெரியவா  நாராயணீய  மஹத்வத்தை  எடுத்து பக்தர்களுக்கு உபதேசித்தார்.  குருவாயூர்  ஆலய மஹிமையை உணர்த்தினார்.

உண்ணி  கிருஷ்ணன் தரிசனம் பெற்றபின்னர்   மஹா பெரியவா அங்கிருந்து புறப்பட்டு  சித்தூர் வழியாக திரிஸ்ஸுர் சென்றடைந்தார்.  

வடக்குநாதர் ஆலயம்  பரசுராமரால் கட்டப்பட்டது. உலகப்புகழ் பெற்ற  பூரம் திருவிழா நடைபெறும் ஆலயம்.  மிகப்புராதனமான இந்த  ஆலயத்தின் சிறப்பை பற்றி  பிரம்மாண்ட புராணம் விவரிக்கிறது.  பரசுராமர்  21 முறை  க்ஷத்ரியர்களை வதம் செய்த தால் வந்த  பாபம் தீர இங்கே  சிவனை வழிபட்டார். க்ஷத்ரியர்களிடமிருந்து பெற்ற நிலங்களை பிராமணர்களுக்கு தானம் செய்தார். கடலிலிருந்து அவருக்காக  எழும்பிய நிலப்பரப்பு  தான் கேரளம். நேராக கைலாசத்துக்கு சென்று பரமேஸ்வரா நீயே வந்து இந்த புது நிலப்பரப்பில் குடியேரி  அருள் புரிய வேண்டும்  என்று கேட்டுக்கொண்டார் என்பதால், அப்படி சிவன் சோமாஸ்கந்த ராக குடியேறிய இடம் வடக்குநாத ஆலயம் என்பார்கள்.   பரமேஸ்வரன் ஒளிப்பிழம்பாக  காட்சி தந்து பின்னர் சிவலிங்கமாக அமர்ந்தது தான் ஸ்ரீ மூல ஸ்தானம்.   பெரிய ஆலமரத்தடியில் அமர்ந்துவிட்ட சிவலிங்கத்தை கொச்சி மஹாராஜா சமஸ்தானம் வேறு இடத்துக்கு மாற்றி கோவில் கட்டி  ஸ்தாபனம் செய்தது.  ஆலய  கூத்தம்பலம்   1700 வருஷங்களுக்கு முந்தியது.  ஆரம்ப காலத்தில் பரமேக்காவு பகவதி அம்மன் இங்கே  ஸ்தாபிக்கப்பட்டு இருந்தாள் .

பிற்காலத்தில் அம்பாளுக்கு என்று ஒரு தனி ஆலயம்  கட்டப்பட்டு அங்கே  அவளை ஸ்தாபனம் செய்ததாக தெரிகிறது.

கொடுங்களூர்  பகவதி, கூடமாணிக்யம்  ஆலயம், அம்மா திருவடி  ஆலயம், ஊரகம் , எல்லாம் வடக்கு நாதர் ஆலயத்தை விட பழமையானவை.  இந்த ஆலயத்தில்  ஆர்யாம்பா, சிவகுரு தம்பதியர்  ஒரு மண்டலம்  விரதம் இருந்து  வடக்குநாதர்  திருவருளால் ஆதி சங்கரர் தோன்றினார்.   ஆதி சங்கரர்  விதேக முக்தி அடைந்ததும்  இந்த ஆலயத்தில் தான் என்பார்கள்.
ஆதி சங்கரர் திரிஸ்ஸூரில் தோற்றுவித்த  நான்கு மடங்கள்,  இடையில் மடம் , நடுவில் மடம் , தெக்கே மடம் , வடக்கேமடம் ஆகும்.  திரிஸ்ஸுர்  ஜில்லாவில் பல  ஆலயங்களை அழித்த  திப்பு சுல்தான் படை வீரர்கள்  வடக்கு நாதர் ஆலயத்தை நெருங்கவில்லை.  அவனது படைக்கு  ஆகாரம் சமைக்க  இந்த ஆலயத்திலிருந்து பெரிய  பாத்திரங்கள் அளிக்கப்பட்டன.  திப்பு சுல்தான்,  அவற்றை திருப்பிக் கொடுத்ததோடல்லாமல்  ஒரு பெரிய  வெண்கல விளக்கை  காணிக்கையாக அளித்து விட்டு சென்றான்.

வடக்கு நாதர் ஆலய விசேஷம். இங்கே லிங்கத்தை பார்க்க முடியாது.  பல நூறு வருஷங்களாக  சமர்ப்பிக்கப்பட்ட நெய்யபிஷேக  மலையாக,    (16 அடி  உயரம்)  பதிமூன்று  படிப்படியான தங்க பிறைகளை, மூன்று  படமெடுத்தாடும்  நாகங்களை மட்டும் காணலாம்.  இத்தனை வருஷங்களாக தேங்கிய நெய்  எந்த வித துர்கந்தத்தையும் அளிப்பதில்லை.

இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த  வடக்கு நாத சுவாமி ஆலயத்தை மஹா பெரியவா  தர்சனம் செய்தார்.  அங்கே  மேலே சொன்ன  நான்கு சங்கர மடங்களில்   ரெண்டு மடங்களில் நம்பூதிரி சந்யாசிகள் இருந்தனர்.  அங்கே சென்று அவர்களது நலனை விசாரித்தறிந்தார். ஆதி சங்கரர் சரித்திர ஆராய்ச்சி பொருட்காட்சி ஒன்று அங்கே இருந்தது. அதில்  ஆர்வத்தோடு  விவரங்களை  மனதில் சேகரித்துக் கொண்டார். அவரது  ஞாபக சக்தி  ஈடு இணையற்றது என்று முன்பே  சொல்லியிருக்கிறேன்.

ப்ரம்மஸ்வ  மடம் என்ற ஒன்றில்  புதிதாக  சேர்ந்த ஸமஸ்க்ரித  வேதங்கள் மந்திரங்கள்  கற்கும்  மாணவர்களை சந்தித்தார்.  அங்கே குருகுலம் போன்று கல்வி போதிக்கப்பட்டது.

மேற்கு கடற்கரை ஓரத்தில்  ஒரு   கிராமம் கிரங்கனுர். அந்த ஊர்  ராஜா  மகா பெரியவாளை வரவேற்று உபசரித்தான். பகவதி அம்மன் ஆலயத்தில்  அம்பாள் தரிசனம் கிடைத்தது.

தொடரும் 



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...