Wednesday, July 14, 2021

PESUM DEIVAM



 


பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J  K SIVAN

56.   மடத்து மானேஜர்  சொன்ன சேதி.

மஹா பெரியவாளுக்கு  மலேரியா ஜுரம், ஆனால்  எந்த வைத்தியமும் மருந்தும்  அவர் எடுத்து கொள்ள வில்லை என்கிற  செய்தி  எங்கும் பரவிவிட்டது.   பாலக்காட்டு டாக்டர்  சங்கர நாராயணய்யர் வந்து விட்டார்.
மைலாப் பூர் வைத்யா விசாரதா பண்டிட்  K  G  நடேச சாஸ்திரியும்  வந்து விட்டார். இருவரும்  பெரியவளோடு முகாமில் இருந்தார்கள். தேவைப்பட்டால்  எங்களை வைத்யம் செய்ய  அனுமதியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள்.  மஹா பெரியவா  மராத்திய  சந்யாசியோடு பெரும்பாலும்  காணப்பட்டார். உடல் நலம் குணமாகியது.

1929ம் வருஷம் நவம்பர்  28 அன்று  தனது பிறந்த ஊர் விழுப்புரத்துக்கு வந்து விட்டார்  மஹா பெரியவா.  தங்கள் ஊரை சேர்ந்தவர் என்கிற  பாசத்தோடு எங்குமில்லாத அளவு  அபரிமிதமான அன்போடு பக்தர்கள்  ஊர்க்காரர்கள் சூழ்ந்து கொண்டார்கள்.   ஊரில் வயதானவர்கள், பால்ய வயதில் மஹா பெரியவாளோடு பழகிய அனுபவங்களை எல்லாம் பெருமையோடு எடுத்து சொல்லி மகிழ்ந்தார்கள்.

1930ம் வருஷம்  மே மாதம் 1ம் தேதி மஹா பெரியவா தான் படித்து வளர்ந்த ஊர்  திண்டிவனத்துக்கு  விஜயம் செய்தார்.  

தண்டலம் என்கிற  கிராமத்துக்கு  சென்றபோது  அங்கே  ஒரு  ஆடு மேய்ப்பவர் மஹா பெரியவா  வந்திருப்பதை அறிந்து ஓடி வந்தார்.  அவருக்கு மஹா பெரியவா மேல் அளவு கடந்த  பக்தி பிரியம்.  ஆனால்  அதை வெளிப்படுத்த தெரியவில்லை. பெரியவாளை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம்.  விஷயம்  பெரியவா காதுக்கு சென்றது.  

''வரச்சொல்லுங்கள் ''

'அந்த  ஆடு மேய்க்கும் பெரியவர்  வணங்கினார். மேலே ஒன்றும் சொல்ல தெரியவில்லை.''

''என்ன விஷயம்.   ஏதாவது இருந்தால் சொல்லுங்கோ''

''எனக்கு உங்களுக்கு ஏதாவது செய்யணும் னு ஆசை. என்கிட்டே ஒண்ணுமில்லை.  பரம்பரை நிலம் ஒன்னு தான் இருக்கு. அதை வித்துட்டேன். உள்ளூரிலேயே  ஒரு பணக்காரர்  விலை பேசி வாங்கிட்டார்.  அந்த பணம் கொண்டாந்தி ருக்கி றேன்.  உங்களுக்கு நல்ல காரியம் எல்லாம் செய்றீங்களாம். இதையும் சேர்த்து செய்யுங்கன்னு...''

''பெரியவரே  உங்க கிட்டேர்ந்து நான் எந்த காசும் வாங்கிக்க மாட்டேன்.  எடுத்துண்டு போய்  உங்க குடும்பத்துக்கு நல்ல படியா செலவு செய்யுங்கோ'


ஆட்டுக்காரர் பிடிவாதக்காரர்.  சொன்னால் சொன்னதுதான்.

பெரியவா  பார்த்தார்.  அந்த முதியவரை திருப்திப்படுத்த  

''சரி  மடத்துலே  ஆபிஸ்லே  கொடுங்கோ''  உங்கள் உதவிக்கு ரொம்ப சந்தோஷம்.. நான் வாங்கிக்கறேன்'' .

பரம திருப்தியோடு அந்த ஆட்டுக்காரர்   வணங்கி விட்டு  சென்றார்.  அவருடைய  பக்தியை மெச்சிய மஹா பெரியவா உடனே  உள்ளூர்   தாசில்தாரை அழைத்தார். நாலு
காணி நிலம்  அந்த  ஆட்டுக்காரர்  பெயருக்கு  பட்டயம் செய்ய  ஏற்பாடு செய்தார்.   மஹா பெரியவாளின்  தாராள  மனசு புரிந்திருக்குமே!

1929ம் வருஷம்  ஜூலை மதம் 24ம் தேதி சுப்ரமணி ய சாஸ்திரிகள் என்பவர்  காலமானார் என்கிற சேதி  பெரியவாளின் காதுக்கு சென்றது. மடத்து  நிர்வாகி  இந்த செய்தியை பெரியவாளிடம் சொன்னபோது மஹா பெரியவா ஒன்றுமே சொல்லவில்லை.    

யார் இந்த  சுப்ரமணிய சாஸ்திரி என்று ஒரு சில வார்த்தைகள் சொல்கிறேன். கொஞ்சம் பின்னோக்கி போகவேண்டும்.

காஞ்சி மடத்தின்  65 வது  பீடாதிபதி ஸ்ரீ  மஹாதேவேந்த்ர ஸரஸ்வதி  ஸ்வாமிகள் காலத்தில்  மடத்தில் அதிகாரியாக இருந்த  கணபதி சாஸ்திரிகள் ஏற்பாடு செய்திருந்த   கருப்பூர் விளைநிலம்   கும்பகோணம் மட நிர்வாகத் தின் செலவீனத்துக்கு கொஞ்சம் கைகொடுத்தது. நிலம் மடத்தின் பாத்யதைக்கு  ஆவணங்களோடு கிடைத்துவிட்டது.

கணபதி சாஸ்திரிகளுக்கு   மூன்று பிள்ளைகள், சுப்ரமணிய சாஸ்திரிகள், ராமநாத சாஸ்திரிகள், சுந்தரமூர்த்தி சாஸ்திரிகள் என்பவர்கள்.
 
மூத்த மகன் சுப்ரமணிய சாஸ்திரிகள்  1855ம் வருஷம் பிறந்து,  உபநயனம் ஆகி வேத சாஸ்தி ரங்கள்,  ஆங்கிலக்கல்வி  கற்றார்.  1872ல்  சுப்ரம ணிய சாஸ்திரிகள் கும்பகோணம்  கவர்மெண்ட் கலாசாலையில்  மெட்ரிகுலேஷன் படித்து தேறினார்.    ராவ்  பகதூர்  அப்பு சாஸ்திரிகள் நடத்திய பள்ளியில் ஆசிரியர் வேலை. அந்த பள்ளி   கும்பேஸ்வர சுவாமி கோயில் தெற்கு தெருவில் இருந்தது.   திருவாரூர்  அருகே காவளக் குடி கிராம அதிகாரி  தியாகராஜ முதலியார்  வீட்டில் கல்வி கற்பிக்க  உத்யோகம் கிடைத்தது.   பின்னர்  கவர்மெண்ட்  டிபார்ட்மெண்டில் ஆசிரிய உத்யோகம் கிடைத்தது.   விருத்தாசலத்தில் பள்ளி மேற்பார்வை  யாளராக உத்யோக உயர்வு கிடைத்தது.   அடுத்த  முப்பது வருஷங்கள்  விருத்தாச்சலம், விழுப்புரம்,  திண்டிவனம்  விக்கிரவாண்டி,  சிதம்பரம்   பரங்கிப்பேட்டை   ஆகிய  ஊர்களுக்கு  செல்ல வேண்டியதாயிற்று.

உபமன்யு கோத்ரத்தை சேர்ந்த   ராஜா  கோவிந்த தீக்ஷிதர்  மைசூர்  நாயக்க  பரம்பரையில் முதலாவதாக தஞ்சையை ஆண்ட  சேவப்ப நாயக்க ராஜாவின் மந்திரி .   இந்த  தீக்ஷிதர். நன்றாக  சாஸ்திரங்கள் அறிந்தவர். ஐயன்  என்று எல்லோராலும்  அழைக்கப்பட்டவர்.

சோழ நாட்டில்   ஐயன்குளம்,  ஐயன் வாய்க்கால்,   ஐயன் தெரு, ஐயன்கடை , --  இதெல்லாமே  தீக்ஷி தர் பெயரால்  உண்டானவை.   காவேரி  படித்து றைகள், மண்டபங்கள் எல்லாம் முக்கால்வாசி அவர் கட்டியவை.   அருணாச்சலேஸ்வரர் கோவில், மற்ற பல கோவில்கள் புனருத்தாரணம்   அவரால்   நடத்தப்பட்டவை.  நிறைய  கால்வாய்கள்,  குளங்கள் கட்டியவர்.    பட்டீஸ்வரத்தில்  குடியேறினார்.  அங்கே சிவன் கோவிலில் இன்றும் அவர் தம்பதியாக சிலை வடிவில் அங்கே காணப்படுகிறார்.  

இந்த  தீக்ஷிதர் வம்சத்தில் ஈச்சங்குடி என்னும் அழகிய  கிராமத்தில் வசித்த  நாகேஸ்வர  சாஸ்திரி களுக்கும் மீனாக்ஷிக்கும்  பிறந்த பெண்  மஹாலக்ஷ்மி.  ஈச்சங்குடி  காவேரி வடகரையில் திருவையாறிலிருந்து  கிழக்கே   4  மைல்  தூரத்தில்   உள்ளது.  நாகேஸ்வர சாஸ்திரி  வேதாந்த உபநிஷத், கற்றவர்  கும்ப கோணத் தில்   குடும்பங்களில்  ஆசார்யன்  என்று மதிக்கப்பட்டவர். அந்த குடும்பங்களில் ஒன்று  கணபதி சாஸ்திரி குடும்பம்.

எல்லா நண்பர்கள் உறவினர்கள் கூடும்  விழாக் கள் பண்டிகைகளில் தான்  கல்யாண சம்பந்தங் கள் நிச்சயமாகும்.  ஒரு  குடும்ப  நிகழ்ச்சிக்கு   நாகேஸ்வர சாஸ்திரி  கணபதி சாஸ்திரி  வீட்டுக் கு சென்றபோது தனது பெண் மஹாலக்ஷ்மியை  கணபதி சாஸ்திரி மகன் சுப்ரமணிய சாஸ்திரிக் கு  விவாகம் செயது  கொள்ள விருப்பமா என்று கேட்டார். இப்படிப்பட்ட  ஒரு திவ்ய சம்பந்தத்தை, வீடு  தேடி வரும்  மஹாலக்ஷ்மியை   வேண்டாம் என்று யாராவது சொல்வார்களா?   அதுவும்  குடும்ப  வாத்யார்  தனது பெண்ணைத் தருகி றேன் எனும்போது மறுக்க முடியுமா?

17வயசு  சுப்பிரமணியனுக்கு  7 வயது மஹா லக்ஷ்மி  ஈச்சங்குடியில் மனைவியானாள்.   ஸ்தோத்திரங்கள், தமிழ் தெலுங்கு,  சமஸ்க்ருத 5  பிரார்த்தனை  பாடல்கள்   நன்றாக  மகாலக்ஷ் மிக்கு தெரியும்.  பூஜைகள் விரதங்கள் எல்லாம்  அத்துபடி .  ஐந்து குழந்தைகளுக்கு தாயானாள்.   நான்கு பிள்ளைகள். ஒரு பெண். பிள்ளைகள் ,கணபதி, ஸ்வாமிநாதன்,  சாம்பமூர்த்தி, சதாசிவன். கிருஷ்ணமுர்த்தி.   பெண்  லலிதாம் பாள்.

சாலிவாஹன  சகாப்தம் 1817,  ஜய  வருஷம்  வைகாசி மாதம், அஷ்டமி,   20.5.1894ல்   ரெண்டா வது மகனாக சுப்ரமணிய சாஸ்திரி  மஹாலக்ஷ்மி தம்பதிக்கு  நமது மஹா பெரியவா பிறந்தார்.   குல  தெய்வம்    சுவாமிமலை சுவாமிநாத சுவாமி,  அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா.   ஆகவே   மஹா பெரியவாளுக்கு பிறந்த  போது இட்ட பெயர்  ஸ்வாமிநாதன்.    அப்போது சுப்ரமணிய சாஸ்திரிகள் விழுப்புரத்தில்  அரசாங்க பள்ளிகளில் மேற்பார்வையாளர்.

எனவே  மேலே சொன்ன சுப்ரமணிய சாஸ்திரிகள் மஹா பெரியவாளின் பூர்வாஸ்ரம  தந்தையார். அவர் இறந்து விட்டார் என்ற சேதி எல்லாவற் றையும் துறந்த  மஹா பெரியவாளுக்கு அதிர்ச்சி யை அளித்திருந்தாலும் வெளியே  தெரியவில்லை.  மனம் மறக்குமா??

1994 ஜனவரி 8 அன்று நடந்த சம்பவத்தை நினை வூட்டி இந்த  பதிவை நிறைவு செய்கிறேன்.

பெங்க ளுர்  ஹரி என்ற பக்தர்  பெரியவாளை காஞ்சி மடத்தில்  பார்க்கிறார். கையில் வெள்ளிப்  பாதுகைகள்.  அதோடு  மஹா பெரியவாளின் அப்பா அம்மா படம்.  பாதுகைகளில் பாதங்களை நுழைத்தார்.  பெரியவாளால்  படத்தில் இருக்கும் பெற்றோரை அடையாளம் காண இயலவில்லை..  படிக்கும் கண்ணாடி யை கழற்றி விட்டு வழக்க மான பார்வை கண்ணாடியை அணிவித்தார்கள். பெற்றோர் படத்தை கண்ணருகே வைத்து தரிசித்தார். தன்னோடு அணைத்துக் கொண்டார்.

''பாதுகை  எங்கே''

''பெரியவா பாதங்களிலேயே இருக்கு ''

கால்விரல்களால்  பாதுகையை கெட்டியாக இறுக்கிக்கொண்டார்.  ஹரி நமஸ்கரித்து  விடை பெறுகிறார்.

பெரியவா தனது கைகளால்  பாதுகையை கழற்றி  அவர் கைகளில் அளிக்கிறார். பெற்றோர் போட்டோவையும் அவரிடமே திரும்ப தருகிறார்.  அவை  இரண்டுமே  பெரியவா ஜென்ம ஸ்தலமா கிய   ஈச்சங்குடிக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கே  பூஜா கிரகத்தில்  ஸ்தாபிதம் செய்யப்பட்டது பின்னால் நடந்த விஷயம்.

தொடரும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...