Friday, July 23, 2021

PESUM DEIVAM

 பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J  K SIVAN


60.  செங்கல்பட்டு விஜயம் 

1930ம் வருஷ  வ்யாஸ பூஜை  சாதுர்மாஸ்ய விரதம்  ரெண்டுமே  பூசமலைக் குப்பத்தில் நடந்தது.  அங்கே மடத்து யானைக்கு தீ விபத்து நேர்ந்து மஹா பெரியவா குணப்படுத்தி அழைத்து வந்தார் என்று பார்த்தோமல்லவா?.

அப்புறம்  மஹா பெரியவா காவேரிப்பாக்கம், ராணிப்பேட்டை, வாலாஜாபாத், ஆற்காட்,
திருவள்ளூர் , பூந்தமல்லி, கோயம்பேடு ஆகியும் பிரதேசங்களுக்கு விஜயம் செய்தார்.    அந்த வருஷ கடைசியில் செங்கல்பட்டு பிரயாணம்.  அங்கிருந்து பக்ஷி தீர்த்தம்  என்கிற  திருக் கழுக்குன்றம்.செங்கல்பட்டு வரை வந்தாயிற்று.

திருக்கழுக்குன்றம் ஆலயம் பற்றி ஒரு சிறு குறிப்பு தருகிறேன்.   வேதகிரீஸ்வரர் (மலைமேல் இருப்பவர்). பக்தவசலேஸ்வரர் (தாழக்கோயிலில் இருப்பவர்).  மலை மேலிருக்கும் அம்பாள் பெயர் சொக்கநாயகி .  மலையடிவாரத்தில் இருக்கும் அம்பாள்: திரிபுரசுந்தரி .வாழை இங்கு ஸ்தல விருக்ஷம். சங்குத் தீர்த்தம். பக்ஷி தீர்த்தம் இரண்டும் தீர்த்தங்கள். 
மார்க்கண்டேயர்
, சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேரமான் பெருமாள் நாயனார், சேக்கிழார் தரிசித்த  பழம் பெரும் ஆலயம்.  வேதமே  மலையாக இருந்ததால் 'வேதகிரி ' எனப் பெயர். மற்ற பெயர்கள்  வேதாசலம், கதலிவனம், கழுக்குன்றம்.

நான் இளம் வயதில் திருக்கழுக்குன்றத்தில்  மத்தியானம் உச்சி வேளையில்  ரெண்டு கழுகுகள் வந்து அர்ச்சகர் வைக்கும் பிரசாதத்தை சாப்பிடுவதை  பார்த்திருக்கிறேன்.  பிரசாத  பாத்திரத்தை  லொட்டு லொட்டு என்று கல்லின் மேல் தட்டுவார். அந்த சப்தத்தைக் கேட்டு  அந்த கழுகுகள் அவர் அருகே வந்து  அவர் அளிக்கும்  பிரசாதத்தை சாப்பிடும்.  

500 அடி உயர மலை.  கழுகுகள் வருவதால் கழுகு குன்றம்.  பக்ஷி தீர்த்தம்.  நாளடைவில் கழுக்குன்றம் ஆகி  கழுகும் இல்லாமல் ஆகிவிட்டது.

1930ம் வருஷம்  டிசம்பர் மாதம் 25. கிரிஸ்மஸ் அன்று  மஹா பெரியவா வேதகிரீஸ்வரரை
 தரிசித்தார்.   அகில இந்திய  சாதுக்கள் சங்கம் அவரை வரவேற்று உபசரித்தது.   அவர்கள் வரவேற்புரையை சொல்லிய வாசகம்  அவர்களுக்கு மஹா பெரியவா மேல் இருந்த  மதிப்பு மரியாதையை வெளிப்படுத்துகிறது.

“ ஜகத்குருநாதா,  இந்த  பாரத தேசத்தை உங்கள் ஞான தீப ஒளியால் பிரகாசிக்க செய்கிறீர்கள். ஆதி சங்கரரின்  எண்ணங்களை  செயலாக்குகிறீர்கள் . எங்கள் ஆத்மாவை  உணர்ந்து  மகிழச்  செய்கிறீர்கள்.  எங்கள்  புண்ய பலனாக  உங்களைப்போன்ற கருணை தெய்வம்,  சதகுருவாக
 அவதரித்து லோக க்ஷேமத்தை பரிபாலித்து வருகிறீர்கள்.

தங்களது திருப்பாதங்கள் பட்ட இடமெல்லாம் இந்த பூமியில்  புனிதம் பெறும் . ஆகவே தான் சென்ற இடமெல்லாம் உங்கள் பாதங்கள் பூஜை பெறுகின்றன.  அபிஷேகம் பெறுகிறது. அங்கெல்லாம் ஆத்மாக்கள்  மேன்மேலும்  சத் காரியங்களில்  ஈடுபட்டு லோக க்ஷேமம் வ்ருத்தி அடைகிறது.   இந்த மண்டபம் மஹா பெரியவா திருவடி பட்டு  மேலும்  புனிதமடைந்து  நற்பணியில் சிறக்கும். மஹாபெரியவாளைப் போன்ற ஞான சத்குரு  சத்தியத்தின் திருவுரு.தெய்வீகத்தை சனாதன தர்மத்தை ஒங்கச் செய்யும்  உபதேசம் செய்யும்  ஞானகுரு.
தங்கள் திருவடிகளுக்கு எங்கள் நமஸ்காரங்கள்.   அத்வைத உபதேசங்கள் பெற விழைகிறோம். எங்களை பேரானந்தம் பெறச்செய்யுங்கள். எங்கள் ஆத்மபலம் அதிகரிக்கட்டும். சரணம் சரணம்  ஜகத்குரு சங்கர பகவத் பாதா சரணம். ''

மஹா பெரியவா அவர்கள் அளித்த வரவேற்புரைஹ்யை ஏற்று  அந்த சாதுக்களுக்கு மோக்ஷ மார்க்கம் சித்திக்க  வழிமுறைகளை உபதேசித்தார்.  சென்ற இடத்திலெல்லாம்  மக்களுக்கு நல்வழி புகட்ட வேண்டும் என்ற அறிவுரை அளித்தார்.

1931ல்  மஹா பெரியவா செங்கல்பட்டுக்கு விஜயம் செய்தார்.   செங்கல்பட்டு வாசிகளுக்கு, முக்யமாக  பக்தர்களுக்கு  பெரியவா விஜயம் வரப்பிரசாதமாக அமைந்தது. வெகுகாலமாக காத்திருந்தவர்கள்.  ஒவ்வொருநாளும்  ஆயிரக்கணக்கானவர்கள், வயது ,ஜாதி மத வித்யாசம் இன்றி, சமூக அந்தஸ்து, பணகாரன் ஏழை பாகுபாடு இன்றி ஆண்  பெண் இருபாலரும்  மஹா பெரியவா தரிசனத்துக்குக் காத்திருந்து  அவரது அருளாசி பெற்றார்கள் .

ஒவ்வொரு இரவும்  மஹா பெரியவாவின் உபன்யாசம் நடைபெற்றபோது வெகு ஆர்வமாக மக்கள் வந்திருந்து பயனடைந்தனர்  என்று சொன்னால் மிகையாகாது.

தொடரும்  



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...