Thursday, July 8, 2021

PANCHAKSHARAM


 சிவ வாக்கியர்   -   நங்கநல்லூர்  J  K  SIVAN 


பஞ்சாக்ஷரம். 


பஞ்சாக்ஷரம் தெரியுமா  என்றால்    ''ஓ   யாரு  மிளகா மண்டி  முதலியாரா, நன்றாக தெரி யுமே'' என்கிறோம். நிறைய பஞ்சாக்ஷரம்,  நமசிவாயம் என்று பெயர் உண்டு என்ற வரை நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். அதற்கு மேல் உள்ளே போனதில்லை.  கொஞ்சம் சொல்கிறேன்

.
சிவ வாக்கியரின்  தமிழுக்கு  ஒரு தனி  ஜீவ  சக்தி உண்டு.   பொட்டில் அறைந்த மாதிரி  ஒரு சொற்கட்டு. வார்த்தை ஜாலங்கள் இல்லை.  ஆழ்ந்த ஆன்மீக  கருத்துகள் பொதிந்தவை.  எப்படித்   தான் வார்த்தைகளை பொறுக்கி  பொருத்தினாரோ தெரியவில்லை.  கூரான கருவேல முள்  நடு  உள்ளங்காலில் குத்தி னது மாதிரி மனதில் உள்ளே செல்வது.


எனக்கு நேரம்  கிடைத்தபோதெல்லாம் சிவ வாக்கியரை  கொஞ்சம் தேடுவேன்.


''அறியதோர் நமசிவாய மாதியந்த மானதும்
ஆறிரண்டு நூறுதேவ ரன்றுரைத்த மந்திரம்
சுரியதோ ரெழுத்தையுன்னி சொல்லுவேன் சிவவாக்கியம்
தோ(ஷ)டதோ(ஷ்)ட பாவமாய்கை தூரதூர வோடவே''

நமசிவாய  என்கிற ஐந்தெழுத்துக்கு  அபரிமித மான சக்தி உண்டு.  அதுவே  ஆதியும் அந்தமும் ஆனது.  மண்ணில் வாழும் எண்சாண் உடம்புடன்  அரிய பிறவியை அடைந்த மனிதர்களாகட்டும்  விண்ணில்வாழும்  முப்பத்து முக்கோடி தேவர்களாகட்டும் , எல்லோருமே  அன்றும் இன்றும் ஓதி வருவதும் அனைவருக்கும் எடுத்து ரைத்த மந்திரம்    பஞ்சாக்ஷர மந்திரமான ''ஓம்  நமசிவாய’   என்பதே.   அதுவே அனைத்தும் அடங்கிய  சக்தி. ஓம்  என்ற   ஓரெழுத்
தை தியானித்து அதன் உள்ளிருக்கும் சிவனை அறிந்து இதனை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்றே ஈசனை தியானித்து இந்த சிவ வாக்கியம் என்ற நூலை நான் அனுபவ பூர்வமாக  சொல்லுகிறேன்  என்கிறார் சிவவாக்கியர். 

இதனைப் படித்து உணர்பவர்களுக்கு எல்லா தோஷங்களும், பற்றிய பாவ வினைகளும், தொடரும் மாயைகள் யாவும் விலகி தானே வெகு தூரம் ஓடிவிடும்  என்ற  காரண்டீ    தருகிறார். இப்போது மேலே உள்ள  பாடலைப் படியுங்கள் புரியும். 


''கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்
கலைகள்நூல்கள் ஞானமுங் கருத்தில் வந்துதிக்கவே
பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி யோதிடும் பிழை பொறுக்க வேண்டுமே''

“கரியதோர் முகத்தையுற்ற கற்பகம்”   கரியதோர்  இங்கே கருப்பான ஏதோ ஒரு முகம் அல்ல. கரி என்றால் யானை.  யானை முகம் கொண்ட  என்று அர்த்தம்.  விநாயகனை கற்பகம் என்கிறார். கேட்டதெல்லாம் தரும் விருக்ஷம் கற்பகம்.  கற்பக விநாயகர்கள் கோவில் அநேகம். பிள்ளையார் பட்டியில் அவர் பெயர் அது தான்.  விநாயகனைத் தொழுது  வேண்டியதைப் பெற்ற பக்தர்களுக்கு இது புரியும். இது உபதேசத்தினால் உணர்ந்து கொள்ள வேண்டிய மெய்ப்பொருள். இந்த ஒரு பொருளை உலகோர் உணர்வதற்கே இந்த சிவவாக்கியம் முழுவதும் சொல்லி இருக்கின்றார் சிவவாக்கியர். 

கரிய என்பதை நிறமாகவும் கொள்ளலாம்.  யானை  முழு கருப்பாக இல்லாமல்  சாம்பல் கலர் கருப்பு  நிற  தும்பிக்கையை முகத்தில் உடையது   விநாயகனை  வணங்கி எடுத்த காரியம் அனைத்தும்  திருப்திகரமாக வெற்றிகரமாக முடியும் என்பதற்காக தான்  பிள்ளையார் சுழி போட்டு எழுதுவது.    கணபதி துணை என்று  முதலில் எழுதிவிட்டு  அப்புறம் மீதி எழுத்துக ளை எழுதுபவர்களை எனக்கு தெரியும். எந்த பூஜை நடத்தினாலும் முதலில் விக்னேஸ்வர பூஜை தான் துவங்கும்.


''ஆனவஞ் செழுத்துளே யண்டமும் மகண்டமும்
ஆனவஞ் செழுத்துளே யாதியான மூவரும்
ஆனவஞ் செழுத்துளே யகாரமும் மகாரமும்
ஆனவஞ் செழுத்துளே யடங்கலாவ லுற்றே''

நமசிவாய  என்ற ஐந்தெழுத்து மந்திரத்துக் குள்ளே  அண்ட பகிரண்டமும் அடக்கம். இந்த பஞ்சாக்ஷர மந்திரத்துக்குள்ளே  தான்  த்ரிமூர்த்திகளான  ப்ரம்மா விஷ்ணு சிவன்  உள்ளார்கள்.   பரந்த ஆகாய வெளியும் அதற்குள்ளே தான் இருக்கிறது. ஓம்  எனும் பிரணவ மந்திரம்  அ  உ ம  என்ற  எழுத்துக்களால்  குறிக்கப்படுகிறது.  இவை அந்த ஐந்தெழுத்து மந்திரத்தில் உருவாகிறவை. ஓம்  என்று சொல்லி ஆரம்பிக்காமல் எந்த  மந்திரமும்  இல்லை. சர்வ சக்திகளும், சகல தத்துவங்களும் அடங்கிய மிக அற்புதமான  மந்திரம்  ஓம் நமசிவாய. தினமும் ஒரு ஐந்து முறையாவது சொல்லலாம். நல்லது தானே.

''ஓடியோடி யோடியோடி யுட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களுங் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி யெண்ணிறந்த கோடியே.''

கடவுளை எங்கே காணலாம்?   பல ஊர்களுக்கு சென்று பல கோவில்களில்  வணங்குகிறோம். நான் அங்கே  காண்பவை  விக்ரஹங்கள்.   நாம்  வெண்ணையைக் கையில் வைத்துக்கொண்டு நெய்க்காக  எங்கெங்கேயோ ஓடுபவர்கள்.   அருட்பெருஞ் சோதியான  பகவான் நம்மோடு நமக்குள்ளேயே இருக்கிறானே.   அவனை அறிய முடிவதும்  சுலபம்.  உண்மையான பக்தியும் தேடலும் வேண்டும்.  அவனை நாடி  தேடி ஓடி   அலைந்தும் காண முடியாமல் ஆயுள் நாட்கள் கழிந்து  மாண்டவர்கள் தான் ஜாஸ்தி.   அவனை ஞான நாட்டத்துடன் நாடி கண்மூடி  ஓரிடத்தில் அமர்ந்து  மனதை உள்ளே செலுத்தி தேடினால் பளிச்சென்று தெரிவானே  என்று அவனை உணர்ந்தவர்கள் சொல்கிறார்கள்.  தேடி  நாடி, ஓடி காணாமல்  மறைந்தவர்கள் கோடி கோடி.
''உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருத்தினால் இருத்தியே கபாலமேற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவர் மேனியுஞ் சிவந்திடும்
அருட்டரித்த நாதர்பாத மம்மைபாதம் உண்மையே''

இந்த  பாடலில் சிவவாக்கியர்  குண்டலினி யோக தத்வம் சொல்கிறார்.   சுழும்னா  எனும் கழுமுனை நாடி  முதுகுத்தண்டு உள்ளே   குண்டலினி சக்தியாக சுருண்டு கிடக்கும்.அதை எழுப்பி மேலே  உச்சந்தலை வரை கொண்டு செல்வது தான் குண்டலினி யோகம். எளிதல்ல.  மூலாதாரத்தில் தனஞ்செயன் எனும் பத்தாவது வாயு  ஒடுங்கி பாம்பைப் போல் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கின்றது. இதையே யோகிகள் குண்டலினி சக்தி என்பர். தாயின் கர்ப்பத்திலிருந்து முழு உருவமாய் வெளிவரும் போது  இந்த  தனஞ்செயன் என்ற வாயுவின் செயலால் தான் பிண்டம்  உருவம் பெறுகிறது.   அதன் பிறகு எச்செயலும் இன்றி மூலா தாரத்திலேயே ஒடுங்கி உள்ளது. உயிர் உடம்பை விட்டு போன பிறகு மூன்று நாட்கள் இருந்து இவ்வுடம்பை அழுகச் செய்தபின் கபாலத்தைப் பிளந்து வெளியேறும். .ஆதலால் இதனை நன்கு அறிந்து வாசியோகம் எனும் யோக தந்திரத்தால் கருத்தோடு இருத்தி அதனை எழுப்பி சுழு முனையினால் முதுகுத் தண்டின் வழியாக மேலே ஏற்றி கபாலம் எனும் உச்சியில் உள்ள சகஸ்ரதளத்தில் கொண்டு சேர்த்து தியானம் செய்து வரவேண்டும். .

இதனை முழுமுயற்சியுடன் பயிற்சி செய்து தொடர்ச்சியாக தியானத்தில் இருந்து வருபவர்கள் கிழவனாக இருந்தாலும் இளமை பெற்று மெய்பரவசத்தால் குழந்தையைப் போல் மாறுவர். அவர்கள் உடல் பொன் நிறமாக மாறும். இந்த யோக தந்திரத்தை முறையாக அனுசரித்து செய்து வந்தால் இறையருள் கிடைக்கப் பெற்று இன்புறலாம்.  நம் உடம்பிலேயே சிவசக்தி எனும்   மெய்ப்பொருள்  இருப்பதுவே உண்மை  என்கிறார்  சிவவாக்கியர். 

நம்மால்  ஏன் காண முடியவில்லை என்றால் அதற்கு  தேவையான   கடும்  பயிற்சி,  உறுதியான திட சித்தம்  எல்லாம்  இன்னும்  நம்மிடம் காணோமே. 

தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...