Friday, July 9, 2021

GITA GOVINDAM

 கீத கோவிந்தம்    --    நங்கநல்லூர் J K SIVAN ---

ஜெயதேவர்


இணைபிரியாத ஒரு ஜோடி 


சில விஷயங்களை எழுதிக்கொண்டே  இருக்கிறோம்,  சொல்லிக்கொண்டே இருக்கிறோம் , பாடிக்கொண்டே இருக்கிறோம்,  பேசிக்கொண்டே இருக்கிறோம், கேட்டுக்கொண்டே இருக்கிறோம்,   ஆனால்   அதில் அலுப்பு தட்டுவதில்லையே ஏன்  என்பதற்கு காரணம்,  அந்த விஷயத்தின்  சாரம், ருசி,  ஆனந்த அனுபவம்.  இப்படித்தான் நமது பாரத தேசத்தில் பக்தி வளர்ந்தது. இதிகாசங்கள்  மறக்கப்படவில்லை.  வார்த்தை எழுததாகி, அச்சாகும் பல யுகங்கள் முன்பிருந்தே  அவை இன்றும் ஸ்பஷ்டமாக  காதில் விழுவதற்கு காரணம். 

கிருஷ்ணன் ராதை பிரேம பாசம் அப்படி ஒன்று. 

கிருஷ்ணனை தேடவேண்டுமானால்  முதலில் ராதை எங்கிருக்கிறான் என்று அறியவேண்டும். அவளைக் கண்டுபிடித்துவிட்டால் கிருஷ்ணனைப் பிடித்த மாதிரி.

கிருஷ்ணா ராதா என்று ஒருவரும் சொல்வதில்லை.  ராதா கிருஷ்ணா என்று தானே  சொல்கிறோம்.  இன்றும்   பிருந்தாவனத்தில் கிருஷ்ணனை தரிசிக்க போகும்  பக்தர்கள், ''ராதே கோவிந்தா'', ''ராதே கிருஷ்ணா'' என்று ஸ்மரித்துக்  கொண்டே தான் செல்கிறார்கள்.

''இரவில் வெள்ளி நிலவாக ஜ்வலிக்கும் சந்திரனை   பகலில் சூரியன் ஒளியில் காண இயலாது.  பகலில் விகசிக்கும் தாமரை இரவில் சூம்பி விடுகிறது. என் சகி ராதா, நீ இரவிலும் பகலிலுமே அழகு,  அறிவு , இரண்டும் கலந்த உன் காந்த சக்தியை என் மீது அள்ளி வீசுகிறாய் '' என்று கிருஷ்ணனே வர்ணிப்பதாக ஒரு பாடல் ' விதக்த மாதவா' என்ற கீத கோர்வையில் வருகிறது. ராதா ரொம்பவே கெட்டிக்காரி, புத்திசாலி.  சுருக்கென்று கோபமும் வந்துவிடும்.


''நீ சிரித்தால், மகிழ்ச்சி அலைகள் ஒன்றின் மேல் ஒன்றாய் பொங்கி எழுந்து கன்னத்திலிருந்து பீரி வெளிக் கிளம்பி என்னைத்  தாக்குகிறது. ராதையின் அழகிய வளைந்த புருவங்கள் மன்மதனின் வில். அவள் கடை விழிப்பார்வையின் வீச்சு தேன் வண்டுகளின் ரீங்காரத்வனியை வாரி வீசும். அந்த தேன் வண்டு ''அடடா என் இதயத்தை துளைத்துவிட்டதே!''   ---  இதெல்லாம்   அட்வெர்ட்டைஸ்ட்மென்ட்.   விளம்பரம்..  மாதிரிக்கு   அல்வா துண்டு.   இது போன்ற  அற்புத ரசமான  வர்ணனைகளை  முழுதும்   படிக்க,  ரசிக்க,   ''விதக்த மாதவா''   கிடைக்குமா என்று தேடி 
படிக்கவேண்டும்.   இப்போதெல்லாம்  படிக்கும் வழக்கம் போய் விட்டதால்  புத்தகங்கள் மறைய ஆரம்பித்துவிட்டன.  பாதிக்கு மேல் காலி.

ஒரு வைகாசி விசாக பௌர்ணமி இரவு..  முன்னிரவு... இரவைப் பகலாக்கிக்   கொண்டிருந்தான் சந்திரன். அவனது குளிர்ந்த அலைகள் உலகை குளிப்பாட்டிக்கொண்டிருந்தது. மெல்லிய தென்றல் வீசி எங்கிருந்தெல்லாமோ இருந்த இனிய நறுமண மலர்களின் சுகந்தத்தை தன்னோடு சேர்த்து பரிமாறிக் கொண்டு இருந்ததோடு மட்டுமல்லாமல் வேறு ஒரு அருமையான வேலையையும் செய்தது. யமுனையின் குளிர்ச்சியையும் தாங்கி ஜில்லென்று வீசியது.

பிருந்தாவனத்தில் ஒரு அழகிய மரங்கள் அடர்ந்த இடத்திற்கு பாண்டீர வனம் என்று பெயர். அதில் யாரேனும் உலவினால் எளிதில் மற்றவர்கள் கண்களில் படமுடியாது.

''கிருஷ்ணா, இன்று என்ன விசேஷம்? எதற்காக என்னை இங்கு வரச்சொன்னாய்? ''--- ராதா.

''உனக்கே தெரியுமே, நான் ஏன் எதற்கு என்று உனக்கு தனியாக வேறு நான்  சொல்ல வேண்டுமா?

''என்ன பெரிய ரகசியம்? நீயே சொல்லேன். ஏதோ உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகப் போகி றதா என்ன?''

''எப்படி ராதா   நீ சரியாகவே சொல்லிவிட்டாய்?  நீ ரொம்ப கெட்டிக்காரி, புத்திசாலி என்பதால் தான் உன்னை எனக்கு பிடிக்கிறது. ''

''என்ன சொல்கிறாய் கிருஷ்ணா, விளையாடுகிறாயா? தீராத விளையாட்டுப் பிள்ளை என்று நிரூபிக்கிறாயே?''

'' ஆமாம்,, ஆமாம்... இன்றே,   இங்கேயே,   இப்போதே,   உனக்கும் எனக்கும் கல்யாணம். நடத்தி வைப்பவர் ஜெயதேவர். போதுமா?''

ஒரு இடத்தில் படித்தேன் ரசித்தேன். அது இது:

''அந்த பாண்டிர வனத்தின் ஆல மரத்தின் கீழ் ராதா கிருஷ்ண திருமணம் நடந்ததாம். ஸ்ரீ மத் பாகவதம் கூறாத ராதையை- ராதா- கிருஷ்ண திருமணத்தை கீத கோவிந்தம் என்னும் சிருங்கார ரச காவியம் கூறுகிறது. இதனை இயற்றியவர் ஜெயதேவர். அதனை மிகவும் ரசிப்பார் காஞ்சிப் பெரியவர். ஒரு சந்நியாசி சிருங்கார ரசம் கலந்த கீத கோவிந்தத்தை ரசிக்கிறாரென்றால் அது சாதாரண சிருங்கார ரசமா? அந்த ஜெகந்நாதரே ரசித்த கீதமல்லவா!

விசாக-அனுஷ நட்சத்திரங்களுக்கு வேதத்தில் "ராதா' என்று பெயராம். வட மொழியில் அனுஷத்திற்கு அனுராதா என்று பெயர். விசாகத்துக்கு அடுத்த நக்ஷத்ரம்  அனுஷம். எனவே விசாகன் ராதையுமானான். சிவனே ராதையாகப் பிறந்து கண்ணனுடன் ராச லீலை புரிந்தான் என்று தேவி புராணம் கூறுகிறது. 

சிவனே கந்தனாக அவதரித்தான் என்று கந்தபுராணம் கூறுகிறது. ஆகவே,, கந்தனே ராதையானான் என்றும் சொல்லலாம். ராதையின் மகிமையை கர்க சம்ஹிதை, பிரம்ம வைவர்த்தம், தேவி பாகவதம் போன்ற நூல்கள் கூறுகின்றன. அதன்படி ராதா- மாதவன் திருமணம் நடந்த தினம் விசாக பௌர்ணமியே. எனவேதான் மஹா பெரிய வருக்கு ராதா- கிருஷ்ண வைபவத்தில் விருப்பம் உண்டாயிற்று எனலாம்.

கிருஷ்ண சைதன்ய மகாபிரபுவும்   ஒரு சந்நியாசி. அவரது சீடன் ஒருவன்  ஒருநாள்  தனக்கு பிச்சையிட்ட பெண்மணியின் முகத்தைப் பார்த்தான் என்பதை அறிந்து அவனை விலக்கினார். அதனால் அந்த சீடன் தன் உயிரையே மாய்த்துக் கொண்டான். அத்தகைய சைதன்ய மகாபிரபு ராதா கிருஷ்ண இயக்க சந்நியாசி. அவர் 12 ஆண்டுகள் பூரி ஜெகந் நாதர் கோவிலிலேயே வாழ்ந்து, தனது 50-ஆவது வயதில் ஜெகந்நாதரின் திருவடியில் கலந்தார். எனவே சந்நியாசிகளின் ராதா- கிருஷ்ண பிரேமை என்பது மிகவும் உயர்ந்த நிலை.

ஜெயதேவரின் கீத கோவிந்தம் ராதா- கிருஷ்ண விரக பிதற்றல்களை விவரிப்பது. 24 பாடல்களே கொண்டது; அஷ்டபதி எனப்படுவது. பூரி ஜெகந்நாதரே உவந்தது- எழுதியது என்று பூரியிலும் காசியிலும் பறைசாற்றப்பட்டது. (இதில் 19-ஆவது அஷ்டபதியை எழுதும்போது ஜெயதேவர் குழப்பமாகி எழுதாமல் எழுந்து சென்றுவிட, அவர் உருவில் ஜெகந்நாதரே அந்த அஷ்டபதியை எழுதினார் என்பர்.) ராதா என்பது ஜீவாத்மா; கிருஷ்ணன் என்பது பரமாத்மா. ஜீவாத்மா- பரமாத்மா ஐக்கியத்தை- முக்தி நிலையை விளக்குபவையே இந்தப் பாடல்கள்.'' இவற்றைப் பற்றி தான் இந்த  தொடரில் ஏதாவது ஒன்றை  எப்போதாவது எழுதிக்கொண்டு வருகிறேன்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...