Sunday, July 4, 2021

RAMAKRISHNA PARAMAHAMSA



 


அருட்புனல்  -   நங்கநல்லூர் J K  SIVAN --
பார்  போற்றும் பரமஹம்சர்.
 
4.  ''நீயே  கதி  ஈஸ்வரி...''

தக்ஷிணேஸ்வரம்  பவதாரிணியின்   கோயில்  தரை சலவைக் கல்லாலானது.   ராணி ராஸமணி  பணத்தை வாரி இறைத்ததுமட்டுமல்ல. அதனால் பெறப்பட்ட  உழைப்பு  காலமெல்லாம் நம்மை  மனம் களிக்கும் வண்ணம் இருக்க  செய்த  ஏற்பாடு.  கருப்பு கல்லில் செதுக்கப்பட்ட உருவ காளிக்கு. தங்க ஆபரணம். வெள்ளை சலவைக்  கல்லால் ஆன சிவன் படுத்துகொண்டு இருக்க, அவர் மேல் நிற்கும் காளி. சிவனின் சக்தியே பராசக்தி என்பதாலா?

அம்பாளின் கால்களில் தங்க கொலுசு, தண்டை. கைகளில் தங்க  ஆபரணங்கள். கழுத்தில் நவ ரத்ன மாலை. இது தவிர மனித சிரங்கள் கோர்த்த மாலை, தங்க கிரீடம், தங்க காதணிகள். தங்க மூக்குத்தி, தங்க ஒட்டியாணம். முத்து புல்லாக்கு . தோடு. நான்கு கரங்கள். இடது கரம்  ஒன்றில்  அப்போது பலியிடப்பட்ட  ரத்தம் சொட்டும்  வெட்டப்பட்ட மனித தலை. உயர்த்திய வலது கரம் ஒன்றில் வெட்டிய ரத்தம் சொட்டும் கூர் வாள் . ஒரு வலக்கரம் அபய ஹஸ்தம்.  இன்னொன்று  வரத ஹஸ்தம். தொங்கும் நீண்ட நாக்கு. பராசக்தியை வர்ணிக்க இயலாது.  அம்பாள்  கெட்டவளே அல்ல கொடியவளே அல்ல.  நம்மிடம் காசு  நிறைய  கை  கொள்ளாமல் வாங்கிக் கொண்டு கொடுத்த கையை வெட்டி  கட்டுப் போட்டு  அனுப்பும் டாக்டர் இரக்கமில்லா த வரா? கொடியவரா.   டாக்டர் நீங்கள் தான் என் கடவுள் என்று  வாழ்த்தி விட்டு  வீடு திரும்புகிறோம். 

அம்பாள் கொடியவர்களை  ஒழிப்பவள். தீய சக்தியை அழிப்பவள். தீனர்களை, நிர்கதியாக அண்டியவர்களை ஆதரித்து அணைப்பவள். அந்த சர்வ சக்தியை சாதாரண எழுத்தில் எப்படி கொண்டு வருவது. அதற்குண்டான சக்தி   இல்லையே என்னிடம் .  அந்த காளியிடம்  தான் உண்மையிலேயே ''பய'' பக்தி உண்டாகிறது.
ஆக்க அழிவு சக்தி இரண்டும் நிறைந்தவள். துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலினி.

என்ன நேர்த்தியான அமைப்பு இந்த ஆலயத்தில். ஒரு பக்கம் அருளும் தாய். காளி தேவி. இன்னொரு பக்கம் சர்வ வியாபி சிவன். இன்னொரு இடத்தில் அன்பே உருவான ராதா கிருஷ்ணன். விண்ணும் மண்ணும் ஒன்றாக கலந்து காட்சி அளிக்கும் இடம். சர்வ சக்திகள் ஒன்றாக பரிமளிக்கும் ஸ்தலம்.

''என் அம்மா'' என்று வாய் மணக்க எப்போதும் ராமகிருஷ்ண பரமஹம்சரால் போற்றப்பட்ட அம்பிகை.

தன் சொத்துக்களை வாரி இறைத்து ராணி ராஸமணி இழைத்து கட்டிய திருக்கோவில்.
இந்த கோயில் கட்டி 266 வருஷங்கள்  முன்பு கட்டியது என்றாலும் நேற்று பூர்த்தியான கோவில் மாதிரி இருக்கிறது பூர்த்தி ஆகிறது. 

ராமகிருஷ்ணர் தமையன் ராம்குமாருடன் இந்த ஆலயத்துக்கு வந்து சேர்ந்தார். அண்ணா காளி கோவில் பூஜாரி. ராமகிருஷ்ணர் ராதாகிருஷ் ணனுக்கு அர்ச்சகர். 

ராமகிருஷ்ணர்  அந்த  அழகிய  சூழ்நிலையில் தன்னை மறந்தார். ஆஹா  எவ்வளவு  நேர்த்தி யான அழகிய கோவில்,  அதைத் தொட்டுக் கொண்டு ஓடும்  கண்ணைக்கவரும் புனித கங்கை ஆறு,    கங்கை நீர்வளம் என்றால் கேட்க வேண்டுமா? பச்சை பசேலென்று  பரந்த சோலை வனம் , அன்பும் ஆதரவும் தந்த ராணி ராஸ மணி, அவள் மருமகன் மதுர்பாபு.-- ஆஹா எல்லாமே ராமகிருஷ்ணருக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தந்தது. இடம் பிடித்து விட்டது.  இதைத்தான் இத்தனை வருஷம்  மனது தேடியதா?

மதுர் பாபுவுக்கு ராமகிருஷ்ணரைப்  பிடித்து விட்டது. அவரது பரிசுத்தமான பக்தி  பாபுவை கவர்ந்தது.  ''ராமக்ரிஷ்ணன்   நீங்களே இனிமேல் காளிக்கும் பூஜை செய்யவேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.

ராமக்ரிஷ்ணரைப் பொறுத்த வரை ஆரம்பத்தில் , பணக்கார பெண்ணுக்கு வேலை செய்ய வேண்டாமே என்று தோன்றியது. மேலும் இந்த காளியின் விலை உயர்ந்த நகைகளுக்கு நாம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டாம் என்றும் தோன்றியது. மதுர பாபுவுக்கு பிடி கொடுத்து ஒப்புக் கொள்ளவில்லை ராமகிருஷ்ணர். பாபுவும் தக்க தருணத்துக்கு காத்திருந்தார். அது ஹ்ரிதய் ரூபத்தில் வந்தது.

ராமகிருஷ்ணரின் பால்ய சிநேகிதன்.உறவினன், ஹ்ரிதய். அவரது நிழல்.   ரொம்ப கெட்டிக் காரன். அவர் ஊர் கமார்புகூருக்கு அடுத்த சிஹோர்  என்ற க்ராமத்தைச்  ஊரை சேர்ந்தவன். தக்ஷிணேஸ்வரத்திற்கு வேலை தேடி அவனும் வந்தான்.

நண்பனுக்கும் உதவலாமே என்று மதுர் பாபுவிடம் சென்றார் 

 'மதுர் பாபுஜி,  இவன்  என் நண்பன் ஹ்ரிதய். பக்கத்து ஊர் காரன்.  எனக்கு உதவியாக  இவன்  இருந்தால் நான் காளி கோவில் பூஜை  ஏற்றுக் கொள்ள  சௌகர்யமாக இருக்கும் ' .

காளியை அலங்கரித்து ஆபரணங்களை சூட்டும் வேலை ராமகிருஷ்ணருக்கு கிடைத்தது.

ஒருநாள் ராதாகிருஷ்ணன் விக்ரஹத்தை அங்குள்ள ஒரு அர்ச்சகர் கீழே கை  தவறி போட்டு விட்டதால் விக்ரஹத்தின் கால் பின்னமாகி விட்டது. ராணியிடம் வேறு புது விிக்ரஹம் வேண்டும், சிதிலமான விக்ரஹ வழிபாடு கூடாது என்று முறையிட்டார்கள். ராணி ராமகிருஷ்ணரை அபிப்ராயம் கேட்டாள். அவள் ஆசையாக தேர்ந்தெடுத்து நிர்மாணித்த விக்ரஹம் ராதா காந்தன். யோசிக்கவே இல்லை ராமகிருஷ்ணர்.

''அம்மா, நீங்களே சொல்லுங்கள், உங்கள் மருமகன் மதுர பாபுவுக்கு கால் உடைந்தால் அவரை தூர எறிந்து விடுவீர்களா? காலை குணப்படுத்த முயல மாட்டீர்களா?''

இதிலே எல்லா பதிலும் உள்ளது. சிற்பிகளை வரவழைத்து எப்படியோ ராதா காந்தனின் கால் சரி செய்யப் பட்டு மீண்டும் பூஜை தொடர்ந்தது. கவனக்குறைவோடு பணியாற்றிய அர்ச்சகர் விலக்கப் பட்டு ராதா காந்தனின் பூஜை வழிபாடும் ராமக்ரிஷ்ணரிடமே சேர்ந்தது.

வைதிக குடும்பம். பூஜை நெறிமுறைகள் பழக்கமான பிராமண குடும்பம். எனவே ராம கிருஷ்ணருக்கு பூஜா க்ரமங்கள்  எல்லாமே அத்துபடி.

நாம ரூபமில்லாத இறைவன் இறைவியை நாமங்களோடு பல வித ரூபங்களோடு ஏன் தாயாக, தந்தையாக, குழந்தையாக,  வழிபடுவதும் நமது தர்மம். நம்மைப்போல் குளிப்பாட்டி, அலங்கரித்து, அமுதூட்டி, தாலாட்டி, பாடி,  தூங்க வைத்து, உபசரித்து, பேசி,  ஊஞ்ச லிட்டு, ஊர்வலம் எடுத்துச் சென்று நம்மோடு தெய்வத்தை இணைத்துக் கொள் கிறோம். சில பேருக்கு கல்யாணம் கூட பண்ணி வைக்கிறோம்.

இப்போது போல் காசே தான் கடவுளடா பூஜை இல்லை ராமகிருஷ்ணர் செய்தது. தன்னை மறந்து தெய்வத் தோடு ஐக்கியமான ஒன்றிய மனதோடு கூடிய உண்மை பூஜை. அதனால் தான் காளியும் தோன்றினாள் , பேசினாள்.

எந்த தீயசக்தியும் தன்னையும் காளியையும் நெருங்காமல் தனது குண்டலினி சக்தி தீயை உருவாக்கி சுற்றிலும் வேலியாக அமைத்துக்  கொண்டு பூஜை செய்தவர் ராமகிருஷ்ணர்.

காளிக்கு பூஜை செய்வது எளிதல்ல. வரை  முறைகள், நேம நியமங்கள், ஆசாரங்கள் வேறு. உக்கிரமான தெய்வம். ராம்  குமார் தம்பிக்கு இதை கற்றுத்தர ஒரு குருவை நியமித்தார். அவர் ராமகிருஷ்ணரின் காதில் முதல் வார்த்தையை உபதேசிக்கும்போதே ராமகிருஷ்ணர் உயர்ந்த உன்னத சமாதி நிலைக்கு தாவி விட்டார்.

எனக்கு காளி பூஜை விசேஷ நெறி முறைகள் தெரியாதே என்று சொல்லியும் மதுர பாபு ''உனது பக்தி, ஆசாரம் ஒன்றே போதும் .நீ தான் பூஜை செய்யவேண்டும்'' என்று நிர்பந்தித்தார்.

அடுத்த வருஷம் அண்ணா ராம் குமார் மறைந்து விட்டார். முழுப் பொறுப்பும் இனி ராமக்ரிஷ்ண ருக்கே அல்லவா?

''தாயே, நீயே என்னை உன் அர்ச்சகனாக் கினா யா? இதுவும் உன் விருப்பமா? இதுவும் ரொம்ப சரி, எனக்கு உன்னை விட்டால்  வேறு யாரைத் தெரியும்?''

அவளை நெருங்கி தொட்டு அலங்கரித்து, உபசரித்து, மந்திர உச்சாடனங்கள் செய்து மனம் எப்போதும் அவளிடமே லயித்து விட்டது ராம கிருஷ்ணருக்கு.  இந்த பரந்த உலகில் ரெண்டே பேர். ஒன்று ராமகிருஷ்ணர் இன்னொன்று  பவதாரிணி. அப்புறம் ரெண்டு பேருமே  ஒன்றாகி விட்டார்கள். 

பூஜை இல்லாத நேரமும் அன்னையே மனதில் நிறைந்து இருந்தாள் அவளைப்  பற்றிய தியானமே எப்போதும்.

''அம்மா, உன்னை பார்க்க வேண்டுமே?'' என்று மனம் தேடியது. ஜன நடமாட்டமில்லா தனி இடம் நாடினார். வனத்தில் ஒரு இடம் தேர்ந்தெடுத்தார். முள்ளும் புதரும் மண்டி ஒரு காலத்தில் மயான பூமி. பேய் பிசாசு இருக்கும் என்று யாரும் பகலிலே யே போக அஞ்சும் இடம்.    இரவில் ராமகிருஷ்ணர் அங்கே நிம்மதியாக தியானத்தில் இருந்தார்.

 ''அம்மா வேணும்''  என்று குழந்தை அழுமே, அது  போல் அழுது அழுது கண்கள் சிவந்து தடித்து மறுநாள் காலையில் அறைக்கு திரும்புவார்...இது தொடர்ந்தது

நானும்  ''தொடரும்'' போடுகிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...