Thursday, July 1, 2021

RAMA KRISHNA PARAMA HAMSA

 அருட்புனல் - நங்கநல்லூர் J K SIVAN

பார்போற்றும் பரம ஹம்சர்:

3.' தாயே எனக்கு எல்லாம் நீயே''

தெருக்கூத்து பார்த்திருக்கிறீர்களா? இரவெல்லாம் பாட்டு. பலர் பல குரல்களில் பல ஸ்ருதிகளில் ஒரே மாதிரியான தாளத்தோடு மைக் இல்லாமல் பாடுவார்கள். ராத்திரி தான் ஆரம்பிக்கும், எட்டு மணிக்கு ஆரம்பித்தால் நள்ளிரவு தாண்டிவிடும், சூளைமேட்டில் சக்கரியா காலனி வருவதற்கு முன்பு சூளை மேடு தெருவுக்கு கிழக்கே ரயில் பாதை வரை எங்கும் பனை மரத் தோப்பு கள் விவசாய நிலங்கள் தான். பனைமரத்தோப்பில் தான் தெருக்கூத்து நடைபெறும். மின்சாரம் பெட்ரோமாக்ஸ் வெளிச்சம் இல்லாமல் வெறும் தீவட்டி வெளிச்சத்தில் ஒரு வட்டத்தில் தெருக்கூத்து நடக்க, அந்த வட்டத்தைச் சுற்றி ரசிகர்கள் அமர்ந்திருப்பார்கள். எல்லோருமே பாடு வார்கள். ஒருவன் உடுக்கு மாதிரி, மத்தளம் ஒன்றை வாசிப்பான். ஒருவன் ஹார் மோனியம் வாசித்துக்கொண்டு கூட பாடுவான். ஜாலரா. எல்லோருமே உரத்த குரலில் பேசுவார்கள், பாடுவார்கள்.

'' அதாகப் பட்டது'' ஓஹோ அப்படியா, பிள்ளாய் எழுந்திரு... போன்ற வார்த்தைகள் டயலாக்கில் அடிக்கடி வரும். பேச்சுக்கு நடுவே பாட்டும் வரும். பதில் பாட்டு பாடுவார்கள்.
வட்டத்திற்குள்ளே, கூத்து வேஷதாரிகள் ஆடுவார்கள் பாடுவது என் போன்ற சிறுவர் களுக்கு ஆறு வயதில் கண்கொள்ளாக் காட்சி. சுற்றி உள்ள ரசிகர்கள் தரையில் உட்கார்ந்த கை தட்டுவார்கள்.
ஆண்களே பெண் வேஷம் தரிப்பார்கள். நடனம் ஆடுவார்கள். அவர்கள் போடும் நாடகங்கள் எல்லாம் புராணம், இதிகாச சம்பவங்களாகவே இருக்கும். ஒன்ஸ் மோர் கத்தினால் மீண்டும் அதை பாடி நடித்துக் காட்டுவார்கள் .இரவெல்லாம் தெருக்கூத்து நடக்கும். கிராம மக்களுக்கு ரொம்ப பிடித்த பொழுதுபோக்கு. பொறி கடலை, வெல்லத்தில் செய்த மிட்டாய்கள், கமர்கட், முறுக்கு, மசால் வடை, அரை நெல்லிக்காய், கொடுக்காப்புளி பழம், வெள்ளரி பத்தை.சீசன் இருந்தால் மாங்காய் பத்தை, இத்யாதி தின்பண்டங்கள் நன்றாக விற்பனையாகும். எல்லாம் அரை யணா, ஓரணாவுக்கு மேல் இல்லை.

வங்காளத்திலும் இது போல் தான் அந்த கிராமத்தில் இப்படி தெருக்கூத்து நடத்தும் ஒரு குழு வந்தது. உள்ளூரில் ஒரு அழகான பையன் இருக்கவே கதாதரனை சிவன் வேஷம் போட அழைத்தார்கள். அவன் என்ன செய்ய வேண் டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள். அவனும் சந்தோஷமாக வேஷம் போட்டுக்கொண்டு நடுவே நின்றான். இடுப்பில் புலித்தோல், தலையில் ஜடாமகுடம், உடலெல்லாம் விபூதி, தலையில் கழுத்தில் கையில் ருத்ராக்ஷமாலை. கையில் ஒரு சூலம்.
''மகாதேவா'' என்று பாடிக்கொண்டு ஒரு வேஷதாரி அவனை சுற்றி சுற்றி வந்து ஆடினான். அவ்வளவு தான். சிவன் வேஷதாரி பையன் கதாதர் சிலையாக நின்றான். ஒரு பேச்சும் பேசவில்லை. கண்களில் தாரை தாரையாக நீர். ஆனந்த மயம். பார்ப்போர்கள் அசந்து விட்டார்கள். ஏனோ அழுகிறான் என்றுதான் நினைத்தார்கள். அவன் தான் சிவனாகிவிட்டானே.
16வயதானதும் அண்ணா ராம் குமார் கததரனை காளிகோயில் பூஜைக்கு உதவி செய்ய அழைத்துச் சென்றுவிட்டார்.
கங்கைக்கரையில் அமைதியான ஒரு அழகிய காளி கோவில். அந்த பகுதிக்கு தக்ஷிணேஸ் வரம் என்று பெயர். அண்ணா ராம்குமார் தான் பூசாரி. தம்பி கதாதர் தான் எடுபிடி உதவியாள் . சின்ன பட்டாச்சார்யர் வேலை அவனுக்கு. அந்த கோவில் மூல விக்ரஹத் துக்கு பூஜை செய்ய அல்ல .
அந்த கோவிலில் இருந்த ராதா கிருஷ்ணனுக்கு அலங்கரித்து பூஜை செய்ய நியமனம் ஆனான். . ராதாக்ரிஷ்ணனுக்கு உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள் அவன் உடல் பூரா பளிச்சென்று எழுத்தில் உதயமானது. இதை தாந்த்ரீக நூல்களில் காணலாம். மந்திரம் உச்சரிக் கும்போது தன்னைச் சுற்றி ஜலத்தை ப்ரோக்ஷனம் பண்ணுவது அக்னியின் பாதுகாப்புக்காக. ஆனால் உண்மையில் இந்தமாதிரி தீர்த்தம் ப்ரோக்ஷணம் பண்ணும்போது அக்னியின் நீண்ட சிவப்பு நாக்குகள் தன்னை சுற்றி சூழ்ந்திருந்ததை கதாதரன் கண்டான். தன்னுள் குண்டலினி சக்தி நாகமாக சுருண்டிருந்தது மெதுவாக மேலெழும்பி மேலே உச்சிமண்டையில் ஸஹஸ்ராரத்தை நோக்கி நகர்வதை உணர்ந்தான். அந்த சக்தியைத் தவிர மற்ற உடலின் பாகங்கள் கட்டையாகி விடுவதையும் அறிந்தான். அவன் பூஜை செய்யும்போது இந்த அனுபவங்கள் உண்டாயிற்று. அருகில் யார் வந்தது, பேசினது, போனது ஒன்றும் அந்த நேரத்தில் அவனுக்கு தெரியாது. கோவிலுக்கு வந்தவர்களுக்கு இது தெரியுமா? பையன் பூஜை பண்ணாமல் பேசாமல் நிற்கும் ஒன்றும் தெரியாத மடையன் என்று தானே நினைப் பார்கள்.
சில நாட்களில் அண்ணன் பூஜை செய்த காளி மூல விக்ரஹத்துக்கு கதாதர் பூஜை செய்ய நியமிக்கப் பட்டான். அந்த காளி , பவதாரிணி, அவனை ஈர்த்துவிட்டாள் . முழு மனதும் அவள் மேலேயே அவனுக்கு இப்போ தெல்லாம் லயித்து விட்டது. அவளோடு பேசுவான்.
''எனக்கு நீ வேண்டும். என்னோடு பேசவேண்டும். உன்னைக் காண வில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன்'' என்று கூட பவதாரிணியிடம் முறையிட்டான். அவள் பேசவில்லை. எண்ணம் தீவிரமாயிற்று. அந்த காளி கோவிலில் ஒரு வாள் சுவற்றில் தொங்கியது.
''அடடா என்ன அதிருஷ்டம். சொன்னதை செய்வோம்'' என்று அந்த வாளை எடுத்து தன்னை மாய்த்துக்கொள்ள விரைந்தான். யாரோ தடுத்தார்கள். திரும்பினான். புன்னகையுடன் தாய் நின்றாள் . கண்கள் மலர்ந்தன. இதயம் ஒடுங்கியது. மனம் நிறைந்தது. கண்களில் வழக்கம் போல பிரவாகம் பெருகியது. உடல் இறுகியது, மறக்கட்டையானது. கீழே சாய்ந்தது. ஜீவ சக்தி மட்டும் உள்ளே இருந்தது.
ராமகிருஷ்ண பரமஹம்சர் இதைப் பற்றி பின்னர் சொன்னது:
''அப்போது எனக்கு வீடு வாசல், தெரு, கோவில் எல்லாம் மறைந்தது. என் பார்வையில் எங்கும் ஒரு ஒளி வெள்ளம், அடுக்கடுக்காக, அலை அலையாக,எல்லா பக்கமும் சூழ படுவேகமாக நகர்ந்தது. என்னை அலாக்காக தூக்கி சுருட்டி யாரோ வெட்டவெளியில் கிடத்தினார்கள். அதில் நான் மிதந்து எங்கோ போய் கொண்டி ருந்தேன். ஆஹா இந்த பிரவாஹத்தில் சிக்கி அணுவித்த இன்பத்தில் எனக்கு மூச்சு வாங்கியது. என்னை இழந்தேன். இந்த இன்பம் போத வில்லையே . இன்னும் இன்னும் வேண்டுமே என்று மனம் தேடியது.''
கடவுளைப் பற்றி கதை கதையாக பல வருஷங்கள் பேசுவோர் அவனைக் காணாதவர்கள். கண்டவரோ என்ன சொல்வது எப்படி சொல்வது என்று தடுமாறுவார்கள். இதைத் தான் நாம் ''கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் '' என்கிறோம்.
பல நாள் தொடர்ந்து இந்த ஸ்மரணையில் கிடந்து கதாதரனால் பூஜை சரிவர செய்ய முடியவில்லை. ''தாயே கடைக்கண் அருள் அம்மா'' என்ற ஒரே எதிர்பார்ப்பு. எதிரே யார் இருக்கிறார்கள், கோயிலு


க்கு யார் வந்தார்கள் போனார்கள். ஒன்றுமே தெரியாத நிலை அல்லவா?

''தாயே, நான் ஒரு முட்டாள், கல்வியறி வில்லாதவன். எனக்கு நீ வேதம், புராணம், தந்த்ரம் மந்த்ரம் எல்லாம் கற்றுக்கொடு.''
அந்த தாயும் பதிலளித்தாள்
'' மகனே, இந்த உலகமே மாயை, வேதாந்த சாரம் பிரம்மம்'' என்று உபதேசித்தாள். வேறு யாருக்காவது இப்படி ஒரு குரு கிடைப்பார் களா? ஒரு சிறு பூவை கையில் எடுத்து ''அம்மா, இது நீ கொடுத்த ஞானம், இது என் அக்ஞானம்'' எல்லாமே நீ. எனக்கு உன் அன்பை,மட்டுமே தா. எனக்கு ஒன்றும் தெரியவில்லையே. நீ தானே எனக்கு எது வேண்டும் என்று பார்த்துப் பார்த்து அருள்பவள். நான்தான் ஒரு ஜடம் ஆயிற்றே'' என்கிறார் ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சர்.

தொடரும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...